ட்ரம்பின் ஆட்சி தொடருமா! -ஐ.வி.மகாசேனன்-

உலக எஜமானாய் வலம்பெறும் அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையே சமகால சர்வதேச அரசியலின் பிரதான தீனியாக ஈரான்-அமெரிக்க விவகாரத்தில் இருந்து உருமாறி வருகின்றது. அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையானது அமெரிக்கா சனாதிபதி பதவி நீக்க விசாரணை வரலாற்றின் தொடராக அமையுமா என்பது தொடர்பிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது சனாதிபதித்தேர்தலில் இதன் தாக்கம் எத்தகையதாய் காணப்பட போகின்றது என்பது தொடர்பிலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் அவதானம் பதவி நீக்க விசாரணையில் குவிந்துள்ளது. இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க சனாதிபதி மீதான விசாரணையின் வரலாற்று தொடர்ச்சி தன்மையின் அடிப்படையில் ட்ரம்ப்க்கு எதிராக பதவி நீக்க போக்கின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவே அமைய உள்ளது. அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரை தேசத்துரோகம், ஊழல் அல்லது பெரிய குற்றங்களில் ஈடுபட்டால் சனாதிபதியாக இருப்பவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். சனாதிபதி பதவி நீக்கத்துக்கான குற்றச்சாட்டு முதலில் விசாரணை நடத்தப்பட்டு உறுதியானால் பிரதிநிதிகள் சபையில் சனாதிபதிக்கு எதிரான தீர்ம...