ட்ரம்பின் ஆட்சி தொடருமா! -ஐ.வி.மகாசேனன்-

உலக எஜமானாய் வலம்பெறும் அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையே சமகால சர்வதேச அரசியலின் பிரதான தீனியாக ஈரான்-அமெரிக்க விவகாரத்தில் இருந்து உருமாறி வருகின்றது. அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையானது அமெரிக்கா சனாதிபதி பதவி நீக்க விசாரணை வரலாற்றின் தொடராக அமையுமா என்பது தொடர்பிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது சனாதிபதித்தேர்தலில் இதன் தாக்கம் எத்தகையதாய் காணப்பட போகின்றது என்பது தொடர்பிலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் அவதானம் பதவி நீக்க விசாரணையில் குவிந்துள்ளது. இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க சனாதிபதி மீதான விசாரணையின் வரலாற்று தொடர்ச்சி தன்மையின் அடிப்படையில் ட்ரம்ப்க்கு எதிராக பதவி நீக்க போக்கின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவே அமைய உள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரை தேசத்துரோகம், ஊழல் அல்லது பெரிய குற்றங்களில் ஈடுபட்டால் சனாதிபதியாக இருப்பவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். சனாதிபதி பதவி நீக்கத்துக்கான குற்றச்சாட்டு முதலில் விசாரணை நடத்தப்பட்டு உறுதியானால் பிரதிநிதிகள் சபையில் சனாதிபதிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும். பெரும்பான்மை ஆதரவு தெரிவித்தால், தொடர்ந்து 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபைக்கு கொண்டு செல்லப்படும் அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு சனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க விசாரணை 2/3 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்றால் சனாதிபதி பதவி விலக வேண்டும். இதுதான் அங்கு உள்ள நடைமுறை. அமெரிக்க வரலாற்றில் சனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க விசாரணை பொறிமுறை டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக மூன்றாவது முறையாக இடம்பெறுகின்றது. முன்னதாக 1868ஆம் ஆண்டு அன்ட்ரூ ஜான்சன் மற்றும் 1998ஆம் ஆண்டு பில் கிளின்டன் ஆகியோர் சனாதிபதி பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆயினும் இதுவரை அமெரிக்காவின் எந்த ஒரு ஜனாதிபதியும் குற்றச்சாட்டின் விளைவாக பதவியிலிருந்து நீக்கப்படவில்லை.

அமெரிக்காவின் 17ஆவது சனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜான்சனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சனாதிபதி பதவி நீக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுவே அமெரிக்க வரலாற்றின் முதலாவது சனாதிபதி பதவி நீக்க விசாரணையாக அமைகின்றது. ஜான்சன் 1867ஆம் ஆண்டு காங்கிரஸில் உருவாக்கப்பட்ட சுவாதீன உடன்படிக்கை அலுவலக சட்டத்தை மீறியதாகவும் குறிப்பாக போரின் செயலாளரான எட்வின் எம். ஸ்டான்டனை பதவி நீக்கியமை சட்டத்திற்கு மீறிய செயலென்பதே பிரதான குற்றமாக முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான விசாரணையில் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 47 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று செனட் சபையின் விசாரணைக்கு அனுப்பப்பட்டு விசாரணை முடிவில் 35 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 19 வாக்குகளும் பெற்று பெரும்பான்மையாய் வெற்றி பெற்றது. எனிலும் செனட் சபையில் 2/3 பெரும்பான்மையை பெற 1 வாக்கு போதாமையால் ஜான்சனுக்கு எதிரான பதவி நீக்க விசாரணை தோல்வியுற்றது. எனிலும் பதவி நீக்க விசாரணையின் அரசியல் தாக்கம் அடுத்த சனாதிபதி தேர்தலில் ஜான்சனால் களமிறங்க முடியவில்லை.

1998ஆம் ஆண்டு அமெரிக்காவின் 42ஆவது ஜனாதிபதியான பில்கிளிண்டனுக்கு எதிராக பதவி நீக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணை பில்கிளின்டனுக்கு எதிராக பௌலா ஜோன்ஸ் என்ற பெண்ணால் தாக்கல் செய்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் வெள்ளை மாளிகை பயிற்சியாளரான மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனடிப்படையில் பில்கிளின்டன் சத்தியம் மற்றும் நீதிக்கு எதிராக இருந்தார் எனக்கூறி காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் நான்கு தடவை பதவி நீக்க விசாரணை கொண்டுவரப்பட்டது. அதில் இரண்டு தடவை பதவி நீக்க விசாரணை பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை வெற்றி பெற்று செனட் சபையின் விசாரணைக்கு கொண்டு செல்ல்பட்டது. செனட் சபையில் முதல் முறை பதவி நீக்க விசாரணைக்கு ஆதரவாய் 45வாக்கும் எதிராய் 55வாக்கும் பெற்று சாதாரண பெரும்பான்மையே இன்றி விசாரணை தோற்கடிக்கப்பட்டது. செனட்டில் இரண்டாம் முறை ஆதரவு, எதிராக 50:50 என்ற வாக்குகள் கிடைக்கப்பட்டு மீள விசாரணை தோற்கடிக்கப்பட்ட நிலையில் பில்கிளின்டன் பதவி நீக்க விசாரணையிலிருந்து காப்பற்றப்பட்டார். தொடர்ந்து 2001ஆம் ஆண்டு வரை சனாதிபதியாய் பில்கிளின்டன் இருந்த போதிலும் தொடர்ந்து வந்த 54ஆவது சனாதிபதி தேர்தலில் பில்கிளின்டனின் சனநாயக கட்சியால் தொடர்ச்சியாக ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. 

இதுவரை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சனாதிபதி பதவி நீக்க விசாரணை முடிவுகள் யாவும், கட்சி செல்வாக்கிலேயே காணப்படுவதனை உறுதி செய்கின்றது. மேலும் இருகட்சி முறைமை உள்ள அமெரிக்காவில் செனட்டில் 2/3 பெரும்பான்மையை குறித்த ஓர் கட்சி பெற முடியாது என்ற யதார்த்தத்தில் அமெரிக்காவில் சனாதிபதி பதவி நீக்கம் என்பது காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை வரையான ஓர் வெற்றிகரமான செயல்முறை என்பதே யதார்த்தம் என்பதை வரலாறு சுட்டுகின்றது. மாறாக சனாதிபதி பதவி நீங்க வேண்டுமாயின் குற்றஞ்சாட்டப்படும் சனாதிபதி சனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் போன்று தனது தார்மீக பொறுப்பை உணர்ந்து பதவி விலக வேண்டும்.  1964ஆம் ஆண்டு அமெரிக்காவின் 37ஆவது சனாதிபதி ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக வாட்டர்கேட் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து 38பேர் கொண்ட நீதித்துறை குழு பதவி நீக்க விசாரணை நகர்வுகளை மேற்கொள்கையிலேயே நிக்சன் சனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார்.

இவ்வரலாற்றுப்பின்னனியோடு ட்ரம்பின் அரசியல் பயணத்தையும் பகுப்பாய்வு செய்தே சமகால ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையையும் அணுக வேண்டியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க விசாரணை பொறிமுறைக்குள் உட்படுத்தப்படும் மூன்றாவது சனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் காணப்படுகின்றார். அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற காலத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளதுடன் 2016ஆம் ஆண்டு நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்று சனவரி பதவியேற்பதற்கு முன்பாகவே பதவி நீக்க விசாரணை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்னாயர்த்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக ட்ரம்ப் சனாதிபதி தேர்தலுக்கு முன் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனிலும் வழக்கு கைவிடப்பட்டது. மேலும் ட்ரம்ப் பல்கலைக்கழகத்தில் ட்ரம்ப் மோசடி செய்துள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சுமத்திய நிலையில் தற்காப்புக்காக பல்கலைக்கழகத்தையே மூடினார். என குற்றச்சாட்டுக்கள் நிறைந்த மனிதனாகவே தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றார். உட்டா பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் கிறிஸ்டோபர் லூயிஸ் பீட்டர்சன் ட்ரம்பை குற்றச்சாட்டுக்கு உட்படுத்துவது காங்கிரஸிற்கு ஏன் சரியானது என பகுப்பாய்வு செய்து 23 பக்க கட்டுரையொன்றையே 2016இல் சமர்ப்பித்திருந்தார். யாவற்றையும் கடந்தே ட்ரம்ப் தனது முதல் ஆட்சி காலப்பகுதியின் இறுதிக்கு வந்துள்ளார் என்பது அவரின் அரசியல் பயண எடுத்துக்காட்டாகும்.

2020 நவம்பர் நடைபெறவுள்ள 59ஆவது சனாதிபதித் தேர்தலினை மையப்படுத்தியே ட்ரம்பிற்கு எதிரான பதவி நீக்க விசாரணை சமகாலத்தில் பிரதானப்படுகின்றது. குடியரசு கட்சியின் வேட்பாளராக இரண்டாம் முறை களமிறங்க உள்ள இவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை சனாதிபதி; ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ட்ரம்ப் தனது தேர்தல் வெற்றிக்காக ஜனநாயக கட்சியின் போட்டியாளர் ஜோ பிடன் உக்ரேனில் செய்துவரும் தொழில் தொடர்பாக அவரையும் அவரது மகனையும் ஊழல் விசாரணை மேற்கொள்ள உக்ரைன் அரசு மீது அழுத்தம் கொடுத்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதுதொடர்பான விசாரணையில் நாடாளுமன்றத்திற்கு இடையூறு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பபட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மறைமுக விசாரணைகளை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையிலானா விசாரணையில் உக்ரைன் தூதர் வில்லியம் டெய்லர், ஜோன் பிடன் மீதான ஊழல் விசாரணை குறித்து ட்ரம்ப் நேரடியாகக் கேட்டார் எனக் கூறியது. ட்ரம்ப் பதவி நீக்க விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எனிலும் ட்ரம்ப் தொடந்து தான் குற்றமற்றவர் என்றும் சனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற கூடாது என்பதற்காக சனநாயக கட்சியினரின் சூழ்ச்சி தான் தன் மீதான பதவி நீக்க தீர்மானம் என கூறியூள்ளார்.

கடந்த வாரம் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும் எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த தீர்மானத்தை சபாநாயர் நான்ஸி பெலோஸி கையெழுத்திட்டு செனட் சபையின் விசாரணைக்கு அனுப்பி உள்ளார். செனட் சபை விசாரணை மேற்கொள்ள செனட் சபை உறுப்பினர்கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் பாரபட்சமில்லாத நீதியே வழங்குவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். செனட் சபையின் விசாரணை பொறிமுறை ஜனவரி 21ஆம் தேதி ஆரம்பிக்கின்றது. செனட் சபையில் தற்போது ஆளும் குடியரசு கட்சியின் சார்பில் 53 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் 47 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் வரலாற்றின் தொடர்ச்சியாக முதல் இரண்டு பதவிநீக்க பொறிமுறையின் முடிவினை போன்றே ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையும் செனட் சபையால் கட்சி அடிப்படையல் தோற்கடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. எனிலும் விசாரணையின் திருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாய் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-