மேற்காசிய போர் இலங்கையின் விவசாய பொருளாதாரத்தின் குறைகளை பரிசோதிக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-
மேற்காசியா போர் உலகளவில் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் நெருக்கடியின் விளைவுகளை இலங்கைத் தீவும் எதிர்கொண்டு வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அரசாங்கத்தின் அரசியல் என்பது மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கீட்டுக்கு மாற்று வழிகளை தேடுவதாகவே அமைந்துள்ளது. அவ்வாறே எதிர்க்கட்சிகளின் அரசியல் என்பது எரிபொருள் நெருக்கடியில் அரசாங்கத்தின் பலவீனங்களை விமர்சிப்பதுவாகவுமே அமைந்தது. இடையிடையே நிலக்கரி ஊழல் மற்றும் அண்மையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றியும் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த குரல் வெளிப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசியலின் முதன்மையான விவாதப் பொருளாக மேற்காசிய போரின் தாக்கங்களே காணப்பட்டது. எரிபொருள் நெருக்கடி மேற்காசிய போர் ஏற்படுத்தக்கூடிய உடனடி பிரச்சினையாகும். அது மாத்திரம் பிரச்சினையாய் அமைந்து விடப்போவதில்லை. மேற்காசியாவில் போர் நீடிக்கையில் எரிபொருளுடன் சார்ந்து ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து பொருட்களின் விலையேற்றம் என்று நெருக்கீடுகள் நீளும் அபாயங்கள் காணப்படுகின்றது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலையேற்றம...