ஈரான் - அமெரிக்க மோதலின் வரலாற்று சுவடு -ஐ.வி.மகாசேனன்-
T20 கிரிக்கெட்டில் மாத்திரமின்றி ஆண்டாகவும் திரில்லர் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே உலகை கொதிநிலைக்கு தள்ளியுள்ளது அமெரிக்கா - ஈரான் மோதல். சனவரி 3ஆம் திகதி ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்காவின் விமான தாக்குதல் மூலம் ஈரானின் பிரதான இராணுவதி தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஈரானில் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடு உக்கிரமடைந்துள்ளது. ஈரான் பாரளுமன்றில் அமெரிக்க இராணுவத்தினரை பயங்கரவாதிகளென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடாத்தி உள்ளது. மறுபுறம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற செல்வதற்கான ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப்பின் விசா அமெரிக்காவால் மறுக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் ஈரான் தாக்குதல் நிகழ்த்துமாயின் ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான அமெரிக்க - ஈரான் மோதல் திடீர் நிகழ்வன்று. 1953ஆம் ஆண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மொசாடக்கை அமெரிக்க உளவுத்துறையின் திட்டத்தால் கிளர்ச்சி மூலம் பதவி நீக்கியது முதல் அதன் பின்னரான பொம்மை அரசாங்கம் நிறுவி செயற்படுத்தியதென தொடர்ந்து, இன்று 2020 சனவரி 3ஆம் திகதி ஈரானின் மக்கள் மனங்களில் நாயகனாய் காணப்பட்ட ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானின் கொலை வரையென ஏறத்தாழ 67வருடங்களாய் மோதல் நிலை இருந்து வந்துள்ளது. இவ்வரலாற்று மோதலூடாக இன்றைய மோதலின் உக்கிரத்தை நோக்குவோம்.
1953ஆம் ஆண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஈரான் பிரதமர் முகமது மொசாடெக் ஈரானின் எண்ணெய்வளத்தை தேசியமயமாக்கும் நடவடிக்கையூடாக ஈரானை பொருளாதாரரீதயில் வளர்த்தெடுக்க முற்பட்டார். உலக ஏகாதிபத்திய கனவிலிருந்த அமெரிக்காவிற்கு மொசாடெக்கின் முயற்சி சலனத்தை ஏற்படுத்தவே அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவுத்துறையின் கூட்டுச்சதியில் கிளர்ச்சி மூலம் மொசாடெக் பதவி நீக்கப்பட்டார். தொடர்ந்து தமக்கு சாதகமான ஆட்சியாளரான முகமது ரெசா ஷாவை பிரதமராக்கினர். 1979ஆம் ஆண்டு புரட்சியூடாக ஷாவின் ஆட்சி கவிழ்க்கப்படும் வரை ஷாவிற்கு ஆதரவாக அமெரிக்காவும் அமெரிக்காவின் விருப்புகளுக்கு இசைவாக ஷாவின் ஆட்சியுமென ஈரான் அரசாங்கம் காணப்பட்டது. ஷாவிற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதன் பேரில் 1964ஆம் ஆண்டு இஸ்லாமிய தலைவர் அயதுல்லா கொமெனி நாடுகடத்தப்பட்டார். எனிலும் 15 ஆண்டுகள் கழித்து ஈரானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தினால் 1979ஆம் ஆண்டு சனவரி 16ஆம் திகதி அமெரிக்க சார்பு ஷா நாட்டை விட்டு வெளியேறினார். நாடு கடத்தப்பட்ட இஸ்லாமிய தலைவர் அயதுல்லா கொமெனி 1979ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி நாடு திரும்பி ஈரானை இஸ்லாமிய குடியரசாக அறிவித்தார்.
ஈரானை விட்டு வெளியேறிய முகமது ரெசா ஷா 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த வேளை, ஈரானில் ஆட்சி காலத்தில் செய்த குற்றங்களுக்காக ஷாவை ஈரானிடம் ஒப்படைக்குமாறு ஈரான் அரசு கேட்டுக்கொண்டது. எனிலும் ஷா அமெரிக்காவிலிருந்து எகிப்துக்கு சென்றதனால், ஈரானின் கோரிக்கையை அமெரிக்க நிறைவேற்றவில்லை என்ற சினத்தில் ஈரான் மாணவர் படை 1979 நவம்பர் ஈரானில் இருந்த அமெரிக்க தூதரத்தை சுற்றி வளைத்து தூதரத்தில் இருந்த 52பேரை தொடர்ச்சியாக 444 நாட்கள் பிணைக்கைதிகளாக சிறைப்படுத்தினார்கள். இதனை நினைவில் அமெரிக்கா இன்றும் பேணுகின்றது என்பதனை வெளிக்காட்டும் வகையில் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தனது ருவிட்டர் தளத்தில், ஈரான் அமெரிக்க மீது தாக்குதல் நடத்துமாயின் ஈரானின் 52 இடங்களின் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுமெனவும் வரலாற்று சம்பவத்தை நினைவில் கொண்டு பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஈரானிய அதிபர் ஹாசன் றொஹானி, 1988ஆம் ஆண்டு ஈரானிய பயணிகள் கொண்ட விமானம் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டு 290 பேர் கொலை செய்யப்பட்டமையை நினைவு கூறி நாங்களும் இலக்கம் 290ஜ மறக்கவில்லை என கூறியுள்ளார். 1988ஆம் ஆண்டு வளைகுடா பகுதியில் பயணம் செய்த ஈரானிய விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. பின்னர் அமெரிக்க அதனை போர் விமானம் எனக்கருதியே சுட்டதாக பதிலளித்தார்களே தவிர எவ்வித மன்னிப்பையும் அத்தவறுக்கு கோரவில்லை.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஈரான் அணுஆயுத பரிசோதனைகளில் ஈடுபடுவதாக கூறி ஈரான் மீது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்த செயற்பட்டார். அணுஆயுத பரிசோதனையை மையப்படுத்தி ஈரான், ஈராக் மற்றும் வடகொரியா ஆகிய மூன்று தேசங்களும் இணைந்து தீமையின் அச்சாய் உருவாகியிருப்பதாக பிரச்சாரமும் செய்தார். எனிலும் மறுதலையாய் 1979ஆம் ஆண்டு புரட்சி வரை ஆட்சியிலிருந்த தம் சார்பான ஷா அரசாங்சம் மேற்கொண்ட அணுசக்தி ஆய்வுகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1979 ஈரான் புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவில் ஆட்சிப்பீடமேறிய அமெரிக்க அதிபர் ரீகனே அணுசக்தி தொண்டு புரிவதை நிறுத்தி கொண்டதோடு பிறநாடுகளையும் அவ்வாறே நடக்க பணித்தது. எனிலும் அன்றைய பனிப்போர் சூழலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணிக்கு எதிராக செயற்பட்ட ரஷ்யா தலைமையிலான வோர்ஸோ அணியினை சேர்ந்த சீனாவின் உதவியுடன் 1984ஆம் ஆண்டு; இஷாபன் எனுமிடத்தில் அணுக்கரு ஆராய்ச்சி நிலையத்தை ஈரான் நிறுவி கொண்டது. அமெரிக்க கடும் எதிர்ப்பினை தொடர்ச்சியாய் காட்டியும் ஈரான் அசராது தொடர்ந்து செயற்பட்டது. 2007ஆம் ஆண்டில் சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA) ஈரானை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் ஈரானின் அணுஉலையைச் சுற்றியுள்ள இடங்களில் செறிவூட்டப்பட்ட யூரேனியம்235 சட்ட அளவிற்கும்(3.67%) அதிகமாக(27%) இருப்பதாக கூறியதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரான் மீது பலமுறை பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ஈரானின் நாணய மதிப்பும் குறுகிய காலத்தில் பெரும் சரிவை கண்டது.
2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஈரானின் புதிய அதிபர் ஹாசன் ரொஹானி ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க முயற்சிகளை மேற்கொண்டார். பதவியேற்று ஒரு மாதத்தில் அப்போதைய அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமாவுடன் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டார். 30ஆண்டுகள் கழித்து அரசியல் அரங்கில் ஈரான்-அமெரிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தையாக அது அமைந்தது. மேலும் ஈரானும் Qok மாநிலத்தில் ரகசியமாக நிறுவிய அணுஉலையை பார்வையிட IAEAஇற்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய உலக சக்திகளின் கூட்டு ஈரானுடன் 2015இல் P5+1 எனப்படும் ஓர் ணுஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதில் பிரதானமாக
• ஈரான் தன்னிடமுள்ள அணுஆயுத மூலங்களை அழித்து விட வேண்டும். சட்டவிதிமுறைகளுக்கு அதிகமான யூரேனியத்தை ஹெக்ஸா புளுரைடாக மாற்றிவிட வேண்டும். அல்லது பிற நாடுகளுக்கு விற்று விட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற ஆராய்ச்சியில் ஈடுபடவே கூடாது. என்று நிபந்தனை விதிக்கப்பட்டது
• சர்தேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பட வேண்டும்.
• பதிலாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படுவதுடன் மேற்கூறிய நாடுகள் ஈரானில் முதலீடு செய்யத்துவங்கும்.
இவ்உடன்படிக்கைக்கு ஈரான் உண்மையாக செயற்பட்டது. ஈரான் தனது அணுசக்தி உபகரணங்களையூம்இ யூரேனியம் மூலப்பொருட்களையும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்தது. IAEA அதிகாரிகள் ஈரானுக்கு நன்னடத்தை பத்திரம் அளித்தனர். பொருளாதார தடைகள் நீங்கியதும் 28நாடுகளில் உறைந்திருந்த ஈரானுக்கு சொந்தமான 100 பில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களை ஈரான் வங்கி கையாள தொடங்கின. ஐரோப்பிய நிறுவனங்கள் பலதும் ஈரானில் தங்கள் முதலீட்டை துவங்கின. எனிலும் மேற்காசிய பிராந்தியத்தில் காணப்பட்ட ஈரானின் மீது எதிர்ப்பும் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடுகளான சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு அணுஒப்பந்தம் தொடர்பிலே பெரும் விசனப்போக்கே காணப்படலாயிற்று.
ஒபாமாவை தொடர்ந்து அமெரிக்காவின் சனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்திலேயே ஈரானுடனான ஒப்பந்தம் தொடர்பிலே தன் எதிர்ப்பை காட்டியிருந்தார். அதிபரானதும் 2018ஆம் ஆண்டு மே மாதம் ஈரானுடனான P5+1 அணுஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஈரான் மற்றும் ஈரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகள் மீதும் பொருளாதார தடை விதித்தார். ட்ரம்பின் செயற்பாட்டை P5+1 அணுஒப்பந்தத்தில் கூட்டாய் கையெழுத்திட்ட ஏனைய நாடுகள் கடுமையாய எதிர்த்தது. ஆயினும் ட்ரம்ப் தனது முடிவில் தளரவில்லை. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா கொமேனி “அமெரிக்கா வரலாற்று தவறொன்றை செய்து விட்டது இது அமெரிக்காவை பொறுத்தவரை புதியதொரு நடவடிக்கை இல்லை. மாறாக அமெரிக்காவை நம்ப ஈரானிய மக்கள் விரும்பாமைக்கு சிறந்த எடுத்தக்காட்டே அமெரிக்க சனாதிபதியின் விபரீதமான இந்த முடிவாகும்.” என அமெரிக்காவின் நீண்ட முரண்பாட்டு வரலாற்றை குறிப்பால் உணர்த்தினார். 2015இல் சற்று சுமுகமாக பயணத்தை ஆரம்பித்த அமெரிக்க - ஈரான் உறவு ட்ரம்ப் வருகைக்கு பின்னர் மீள பழைய வடிவம் எடுத்திட்டு. 2019ஆம் ஆண்டு மே, யூன் மாதங்களில் அமெரிக்க செல்லவிருந்த 6 எண்ணெய் டேங்கர்கள் ஓமன் வளைகுடாவில் வெடித்து சிதறின. இதற்கு அமெரிக்க ஈரான் மீதே குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் தங்கள் நாட்டு பிராந்தியத்தில் பறந்ததாக கூறி ஹார்மாஸ் நீரிணைக்கு மேல் ஒரு ஆளில்லா அமெரிக்க விமானத்தை யூன் 20 அன்று சுட்டு வீழ்தியது. எனிலும் அமெரிக்கா அது சர்வதேச பரப்பாக கூறியது.
நீண்டகாலமாக காணப்படும் அமெரிக்க - ஈரான் முரண்பாடானது ட்ரம்பின் வருகைக்கு பின்னர் ஓர் சீண்டல் ரீதியா உக்கிர நிலை பெற்ற போதிலும் சுலைமானின் கொலைக்கு பின்ர் அது இரு நாடுகளையும் நேரடி போருக்கு தயார்ப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் மைக் பாம்பியோ ஈரான் புரட்சிகர இராணுவபடையையும் அதன் பிரிவையும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டார். தற்போது அமெரிக்க இராணுவத்தை ஈரான் பாரளுமன்றம் தீவிரவாத அமைப்பாய் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் பின்னர் சுலைமானின் இறுதிச்சடங்கு இடம்பெற்று குறுகிய நேரத்தில் ஈராக்கில் அல்ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் நிறுவியுள்ள அமெரிக்காவின் இராணுவத்தளங்கள் மீது மாவீரன் ஜெனரல் சுலைமான் என்ற பெயரிட்டு 12க்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை நடாத்தியது. தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவம் இறந்தாக சுலைமானின் சொந்த இடத்தில் வைத்து ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. எனிலும் அமெரிக்க எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லையென கூறியுள்ளது. இவற்றுக்கு அப்பால் அமெரிக்க தரப்பிலிருந்தும் ஈரான் தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக கடுமையாக எதிர்க்கருத்துக்கள் அடுக்கப்பட்டு கொண்டே செல்கின்றது. இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையிலேயே அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் ஈரானின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் செய்யப்போவதில்லை எனவும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் காலங்களே ஈரான் - அமெரிக்கா முரண்பாட்டின் தன்மையை தீர்மானிக்கும்.
Comments
Post a Comment