வரவு-செலவுத்திட்டத்தின் ஜனரஞ்சகம் ஈழத்தமிழர்களின் இருப்பை சிதைக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது முழுமையான வரவு-செலவுத்திட்ட அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிதியமைச்சராகிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்து பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி செலுத்துவதால் இந்த வரவு - செலவு திட்டம் சிறப்புமிக்கதாக மாறும்' என்றவாறு தெரிவித்தார். பொதுவான பார்வையில் சுகாதாரம், கல்வி என்ற வரிசையில் வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை மக்களை கவரக் கூடியதாகவே அமைகின்றது. மாறாக ஆட்சி மாற்றத்தின் தாக்கம் வரவு-செலவுத் திட்டத்தில் முழுமையான பிரதிபலிப்பை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நியமங்களின் வரைபுக்குள்ளேயே வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்கள் காணப்படுவதனை சுட்டிக்காட்டியுள்ளனர். வரவு-செலவுத்திட்டம் மீதான ஒருங்கிணைந்த பார்வை தேசிய மக்கள்...