டெல்லியில் ஈழத்தமிழர் ஆய்வு மாநாடு ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை விரிவுபடுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம், ஓர் அரசின் புவியியல் எல்லைக்குள் மாத்திரம் சுருக்கி விடக்கூடியதில்லை. பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நலன்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தில் இராஜீக தொடர்பு தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெறுகின்றது. அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கீசிங்கர், 'இராஜதந்திரம் என்பது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் கலை' என்கின்றார். இத்தகைய கலை ஈழத்தமிழரசியலில் வெகு குறைவாகவே அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழரசியலின் இராஜதந்திர செயற்பாடுகளும், தனியன்களாக செயற்பட்டுள்ள போதிலும் நிறுவனமயமாக்கப்பட்டதாவோ அல்லது தொடர்ச்சித் தன்மையுடையதாகவோ அமைந்திருக்கவில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அறிவியல் தளம் போதிய பங்களிப்பை வழங்க தவறியுள்ளது. இக்கட்டுரை அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை இனங்காண்பதாவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி-27 (2025)அன்று இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தில், 'துன்பம் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய மெட்டா-கதைகள்: இலங்கை தமிழர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்களிடமிருந்து பாலினக் கண்ணோட்டங்கள்' (Meta-Narratives of Suffering and Survival: Gendered Perspectives from Sri Lankan Tamils and Kashmiri Pandits) எனும் தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாடு இடம்பெற்றிருந்தது. இம்மாநாடு அவுஸ்ரேலியா தமிழ் தமிழ் காங்கிரஸின் ஒத்துழைப்புடன் டெல்லி பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. மாநாட்டில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் அமிதாப் சக்ரவர்த்தி மற்றும் டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அவுஸ்ரேலியா தமிழ் தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப்பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆய்வு மாநாட்டினை அறிமுகப்படுத்தி உரையாற்றிய பேராசிரியர் D.உமாதேவி, '49 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டிருந்தமையை' சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், 'ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இந்திய பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவால் சான்றளிக்கப்பட்ட ஆய்வு இதழாகவும் வெளியிடப்பட்ட உள்ளதாகவும்' தெரிவித்திருந்தார். ஆய்வுக்கட்டுரைகள் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் அதன் விளைவுகள் வேறுபட்ட கோணங்களில் ஆராயப்பட்டுள்ளது. இரண்டு இலங்கை மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை தவிர மிகுதி நாற்பத்தேழு ஆய்வு கட்டுரைகளும் இந்திய மாணவர்களின் தேடுதலிலேயே உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஆய்வு மாநாட்டில் பிரதிநிதிகள் உரையை வழங்கிய அவுஸ்ரேலியா தமிழ் தமிழ் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர், 'இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் சாட்சியங்கள் திரட்டும் ஆணையத்திடம் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவையை' குறிப்பிட்டிருந்தார்கள்.

இப்பத்தி எழுத்தாளர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் பங்கேற்பாளனாய், அங்கு பார்த்தவற்றை பகிர்வதும் தொடர்ச்சியான வாசிப்புக்கும் ஆய்வு மாநாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்கும் பயனுடையதாக அமையும். இலங்கையின் பிராந்திய அரசாகிய இந்தியாவில் தமிழகத்திற்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் வினைத்திறனான தொடர்பை பேணத் தவறியுள்ளது. மொழி பெரும் தடையாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தவறாக சித்தரிக்கும் அல்லது வேறுபட்ட பார்வையிலான கருத்துக்கள் வட இந்தியாவை நிரப்பியுள்ளது. அண்மையில் இந்தி மொழியில் திரைக்கு வந்த மெட்ராஸ் கபே, பேமிலி மேன் போன்ற திரைப்படங்களுக்குள்ளாலேயே சமகால இளைஞர்களிடம் ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய பார்வை காணப்படுகின்றது. எனினும் டெல்லி பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் வடஇந்திய ஆய்வு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்குபற்றலும் அவர்களது ஆய்வு கட்டுரைகளும், மாநாட்டில் பங்கேற்றிருந்த மாணவர்களின் கேள்விகளும் ஈழத்தமிழர்களின் வரலாற்றை சரியான திசையில் நகர்த்துவதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக ஆய்வு மாநாட்டில் தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களின் அனுபவங்கள் கள ஆய்வினூடாக ஒரு மாணவியால் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கேள்வி-பதில் நேரத்தில் பஞ்சாப் சீக் சமுகத்தை சேர்ந்த மாணவன் ஒருவனால், தமிழகத்தின் அகதிகள் மீள இலங்கை திரும்புவதிலா அல்லது இந்தியாவில் தங்குவதிலா ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆய்வுக்கட்டுரையாளர், 'இலங்கையில் இன ஒடுக்குமுறை பிரச்சினையால் தமிழகத்திற்கு வந்த ஈழத்தமிழர்கள், தீண்டத்தகாதவர்களாக அகதி முகாம்களில் ஒரு வகையில் சிறை வாழ்க்கையையே வாழ்கின்றார்கள்' என்பதை குறிப்பிட்டிருந்தார். மேலும், 'இந்திய ஒன்றிய அரசினால் அண்மையில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் ஈழத்தமிழ் அகதிகள் உள்வாங்கப்படாமையின் பாரபட்சம்' தொடர்பில் மாநாட்டில் பங்குபற்றியிருந்த வோறொரு மாணவன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆய்வுக்கட்டுரைகளும் பரந்த அளவில் ஊடகங்களூடாக தவறாக காட்சிப்படுத்தப்படும் ஈழத்தமிழர்களின் போராட்டம், பெண்கள் மீதான வன்முறை, இடம்பெயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரம் மீதான தாக்குதல் என்பன பற்றி ஆராயப்பட்டிருந்தது.

சமகால யுகம் அறிவியல் தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அறிவின்றி அணுவும் அசையா என்ற அறிவியல் யுகத்தில் அறிவின் வழியாகவே விடுதலை என்ற மகுடத்துடன் ஈழத் தமிழருக்கான விடுதலையை வடிவமைக்க வேண்டும். சமகாலத்தில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களும் அறிவியல் தளத்தை முதன்மையான ஆயுதமாக கொண்டே செயற்படுகின்றது. மேற்காசியாவில் விடுதலைக்காக போராடும் 'குர்திஸ்' தேசிய இனம் குர்திஸ்தான் தனியரசு உருவாக்கத்தினை மையப்படுத்தி அறிவியல் தளத்தில் ஆய்வு மாநாடுகளை ஒருங்கிணைத்து தாயகம், புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு புலமையாளர்களின் சிந்தனைகளை உள்வாங்குகின்றனர். 2006ஆம் ஆண்டு ஈராக் குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்தியத்தின் எர்பில் நகரிலும் மற்றும் 2011ஆம் ஆண்டு டுஹோக் நகரிலும் 2019ஆம் ஆண்டு ஜாஹோ மற்றும் கோயா நகரங்களும் நடைபெற்றது. இதில் குர்திஸ் வரலாறு, மொழி மற்றும் இலக்கியம் குறித்து பணியாற்றும் பரந்த அளவிலான அறிஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். இதில் குர்திஸ் மக்களின் சமகால வாழ்வியல் நெருக்கடிகள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் சூழலில் நடைபெறும் இயக்கவியல் மற்றும் அவற்றின் தாக்கங்கள் ஆகியவற்றை வௌ;வேறு கண்ணோட்டங்களில் இருந்து நிவர்த்தி செய்ய மாநாடு முயல்கிறது. மேலும் மாநாட்டின் நோக்கம் தொடர்பில் மாநாட்டு குழு விபரிக்கையில், 'மாநாட்டின் முக்கிய நோக்கம் பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் குர்திஸ்தானிலும் குர்திஷ் ஆய்வுகளின் கலை நிலையை முன்வைப்பதாகும்' எனக்குறிப்பிட்டுள்ளனர். 

இத்தகைய அறிவியல் தளத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கைகளையும் கொண்டு சேர்ப்பது அவசியமானதாகும். 2009களுக்கு முன்னர் ஏதொவொரு வகையில் வடக்கு-கிழக்கில் நிழல் அரசாங்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பட்ட நிலையில் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களில் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உயரளவில் பல்கலைக்கழக சமுகமாக தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான கருத்தியல் பலத்தை ஆழமாக வழங்கி இருந்தது. மறுமலர்ச்சி கழக பதிப்பகத்தின் வெளியீடுகளும், பொங்குதமிழ் பிரகடனங்களும் அவற்றின் சான்றுகளாகவே அமைகின்றது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய பரந்த உரையாடல், இலங்கை அரசுக்கு எதிரானது என்ற சுலோகத்துடன் அரச இயந்திரத்தால் முடக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஆதலால் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக சமுகத்தின் அறிவியல் தளச் செயற்பாடும் ஈழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெகுவாக பின்வாங்கப்பட்டுள்ள நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது. மாணவர் ஒன்றியங்களின் போராட்டங்கள் காலத்துக்கு காலம் இடம்பெறுகின்ற போதிலும் அறிவியல் தளச் செயற்பாடுகள் வெகுவாக குறைவடைந்தே காணப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு மாணவர் ஒன்றியம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில், 'இராஜதந்திரம்' பற்றிய கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தார்கள். 2022-2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையினரால் 'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்' தொடர் கருத்தரங்கினை ஒழுங்கமைத்திருந்தார்கள். மேலும் அடையாளம் அமைப்புடன் இணைந்து சட்டத்துறை கடந்த காலங்களில் புலமைசார் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்திருந்தது. இவ்வாறாக விரல் எண்ணிக்கைக்குள்ளான செயற்பாடுகளே காணப்படுகின்றது. இதன் பின்னணியில் பல்கலைக்கழகம் அரச நிறுவனம் என்ற அடிப்படையில் தடைகள் காணப்படலாம்.

ஈழத்தமிழர்களின் வலு தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் தளத்திலும் உயர்வான நிலையிலேயே காணப்படுகின்றது. அதிலும் தாயக களநிலையிலிருந்து வேறுபட்டு புலம்பெயர் தளத்தில் ஓர் சுதந்திர வெளியும் காணப்படுகின்றது. 80களில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் பரிமாணத்துக்கு நகர்த்தப்படுகையில், பல புலமையாளர்கள் முன்னிலை செயற்பாட்டாளர்களாக சென்றிருந்தனர். மேலும் பலர் புலம்பெயர்ந்து ஐரோப்பிய தேசங்களில் அடைக்கலமாகி உள்ளனர். அப்புலம்பெயர் சமுகம் அறிவியல் தளத்திலும் முதன்மையான நிலையை பெற்றுள்ளனர். ஈழத்தமிழ் புலம்பெயர் சமுகத்தில் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக வளாக இயக்குநர்கள், பேராசிரியர்கள் என பலதரப்பட்டோர் காணப்படுகின்றார்கள். அதுமட்டுமன்றி ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் புலம்பெயர் சமுகத்தின் புதிய தலைமுறையினர் பெருந்திரளான மாணவ சமுகமாக வளர்ச்சியடைந்துள்ளனர். மேலும், புலம்பெயர் தளத்தில் வலுவான பொருளாதார பலமுடைய அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன. எனினும் இவற்றினிடையே ஒருங்கிணைந்த செயற்பாடுகள் காணப்படுவதில்லை. அனைத்தும் தனியன்களாகவே உள்ளது. 'தீமை செய்பவர்களால் அல்ல, மாறாக எதையும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களால்தான் உலகம் ஒரு ஆபத்தான இடமாக இருக்கிறது' என்ற ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் நிதர்சனமானதாகும். வலுவான பொருளாதார பலமுடைய புலம்பெயர் அமைப்புக்களும், புலமைசார் நிபுணர்களும் ஒன்றிணைந்து ஈழத்தமிழ் போராட்டத்திற்கான அறிவியல் தளத்தை சர்வதேச சூழலில் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும். அத்தகையதொரு பெறுமதியான செயற்பாட்டையே அவுஸ்ரேலிய தமிழ்ச் சங்கம் டெல்லி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டும் அவுஸ்ரேலிய தமிழ்ச் சங்கம் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருந்தது. அது வெறுமனவே ஈழத்தமிழ் பாராளுமன்ற மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்தரங்கு ஒன்றின மேற்கொண்டிருந்தார்கள். எனினும் 2025ஆம் ஆண்டு மேற்கொண்டுள்ள ஆய்வு மாநாடு ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான அறிவியல் தளத்திற்கு புதிய பாதையை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, ஈழத்தமிழ் அரசியலை அறிவியல் தளத்திற்கு நகர்த்துவதனூடாகவே சர்வதேச ஆதரவை மக்களின் உந்துதலால் பெறக்கூடியதாக அமையும். காசாப் போரில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் என்பது, அறிவியல் தளத்தில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றிய தகவல்கள் குவிக்கப்பட்டுள்ளமையையே ஆகும். திறன்களும் அறிவும் உள்ள ஒருவர் இந்த வகையான பொறுப்பைச் சுமந்து, தனது ஆழ்ந்த ஞானத்தின் பலன்களை உலகிற்கு அனுபவிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். கடந்த கால தவறான முயற்சிகளுக்கு மட்டுமல்ல, தற்போதைய மற்றும் எதிர்கால பொருத்தமற்ற முயற்சிகளுக்கும், சமூகத்தை எதிர்மறையாக பாதிக்கும் விளைவுகளிலிருந்து விலக்கி வைப்பதற்கு புலமையாளர்கள் தங்கள் திறனைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான சூழமைவை புலம்பெயர் அமைப்புக்களும் உறுதி செய்ய வேண்டும். வெறுமனவே ஈழத்தமிழர்களிடம் குவிக்கப்படும் போராட்டங்களால் மாத்திரம் தேசிய விடுதலைகள் சாத்தியப்படப் போவதில்லை. அது பிராந்திய சர்வதேச பிணைப்பை கொண்டுள்ளது. பிராந்திய சர்வதேச அரசுகளை நகர்த்துவதற்கு இராஜீக உறவும் அதற்கு அறிவியல் அடித்தளமும் அவசியமாகின்றது. ஈழத்தமிழரிடம் குவிந்துள்ள தூய்மை வாதங்களும், கற்பனா வாதங்களும், கடும்போக்கு  வாதங்களும் பார்வைக்கு கவர்ச்சிகரமானவை. பேச இனிமையானவை. ஆனால் அவை நடைமுறையில் எதிரிகளின் சேவகர்களாகவே அமையக்கூடியது. ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது எனும் முதுமொழிக்கிணங்க நடைமுறைக்குப் பொருத்தமான அறிவு எதுவோ அதுவே சரியானது. சாக்ரடீஸ், 'உன்னதமானவன் தத்துவ ஞானத்தை பற்றி பேசுவான். சாமானியன் சம்பவங்களைப் பற்றி பேசுவான். அற்பன் அடுத்தவனைப் பற்றி பேசுவான்' என்கின்றார். ஈழத்தமிழர்களும் உன்னதமானவர்களாய் இருக்கையிலேயே விடுதலைக்கான பாதையையும் கண்டறிய முடியும்.

Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-