வரவு-செலவுத்திட்டத்தின் ஜனரஞ்சகம் ஈழத்தமிழர்களின் இருப்பை சிதைக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது முழுமையான வரவு-செலவுத்திட்ட அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிதியமைச்சராகிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்து பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி செலுத்துவதால் இந்த வரவு - செலவு திட்டம் சிறப்புமிக்கதாக மாறும்' என்றவாறு தெரிவித்தார். பொதுவான பார்வையில் சுகாதாரம், கல்வி என்ற வரிசையில் வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை மக்களை கவரக் கூடியதாகவே அமைகின்றது. மாறாக ஆட்சி மாற்றத்தின் தாக்கம் வரவு-செலவுத் திட்டத்தில் முழுமையான பிரதிபலிப்பை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நியமங்களின் வரைபுக்குள்ளேயே வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்கள் காணப்படுவதனை சுட்டிக்காட்டியுள்ளனர். வரவு-செலவுத்திட்டம் மீதான ஒருங்கிணைந்த பார்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் விருப்புக்களை அடையாளப்படுத்துகிறது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவுத்திட்டம் ஈழத்தமிழர் சார்ந்து வெளிப்படுத்தும் அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்பராமாயணத்தின் பிரதிமைகளை கடந்த ஒரு சில வருடங்களாக இலங்கை அரசியலில் தெளிவாக இனங்காணக்கூடியதாக உள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அதனை இலகுவாக விமர்சித்திருந்த தேசிய மக்கள் சக்தி, 159 ஆசனங்களுடன் விசேட பெரும்பான்மையை பெற்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியும் கடந்த காலத்தின் தொடர்ச்சியையே பேணி வருகின்றார்கள். 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டமும், 'கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதையாகவே' அமைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடு செலவீனங்களை குறைக்கவும், வருமான அதிகரிப்புக்கும் தூண்டுகிறது. இவ்வழிகாட்டுதல்களால் அரசாங்க வருவாயில் ஏற்படும் மேம்பாடுகள், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கோ பொருளாதார மீட்சிக்கோ பயன்படுத்தப்படாது. மாறாக கடன் மீளச் செலுத்தலுக்கே பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் அரசாங்க வருவாயோடு ஒப்பிடுகையில் கடனுக்காக மீள் செலுத்தபடும் தொகை 202மூ ஆகும். அரசாங்க வருவாயில் கடன் மீள் செலுத்தலுக்காக ஒதுக்கப்படும் பங்கானது, சமூகப் பாதுகாப்பு, பொது சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்திற்காக செய்யப்படும் முதலீடுகள் போன்ற செலவுகளை விட அதிகமாகும். 2024ஆம் ஆண்டில் கடன் மீளச் செலுத்துவது பற்றி 145 நாடுகளை முன்வைத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வு, உலகில் வருவாய்க்கும் கடன் மீள் செலுத்தலுக்கு செலவிடும் தொகைக்குமிடையிலான விகிதத்தின் அடிப்படையில் நாடுகளைப் பட்டியலிட்டவிடத்து இலங்கை 2வது இடத்தைப் பிடித்தது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மக்கள் நலன்சார் திட்டங்களின் அறிவிப்பும், தமிழர்கள் மீதான அக்கறை அதிக கவனக்குவிப்பை பெற்றுள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் வரவு-செரவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குவது விமர்சனத்தை பெறுவதுண்டு. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுகாதாரம், கல்வி என்ற வரிசையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க மாற்றமாகும். எனினும் இம்மாற்றம் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யக்கூடியதா என்பதிலேயே பொருளாதார நிபுணர்கள் மத்தியில் விமர்சனங்கள் காணப்படுகின்றது. எனினும் அரசியல்-சமுக-பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த பார்வையை வழங்க தவறியுள்ளார்கள். ஒருங்கிணைந்த அணுகுமுறை வரவு-செலவு திட்டத்தின் நுணுக்கமான விளைவுகளை வெளிப்படுத்தக் கூடியதாகும்.
முதலாவது, 2025ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தி, வடக்கை கொழும்புடன் இணைக்க முற்படுகின்றது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கணிசமான வாக்கினைப் பெற்று ஆசனங்களை பெற்றிருந்தது. இந்த பின்னணியில் வடக்கு, கொழும்புடன் இணைந்து செல்வது தொடர்பான உரையாடல்கள் மேலெழுந்தது. எனினும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள் தமிழ்த்தேசிய அரசியல் அலையில் வடக்கு தொடர்ச்சியாக கொழும்பிலிருந்து வேறாக உள்ள செய்திகளையே வெளிப்படுத்தியது. எனினும் வடக்கினை கொழும்புடன் இணைப்பது, தென்னிலங்கையின் அரசியல் ஸ்திரத்துக்கு அவசியமானதாகும். வடக்கின் புவியியல்ரீதியான குடா அமைப்பும் பாக்கு நீரினையுடனான எல்லைப் பகிர்வும் தமிழ்த்தேசியத்தின் அரணாக அமைகின்றது. இப்புவியல் அமைப்பு ஈழத்தமிழர்களை தனித்துவமாக பேணுவதுடன், ஈழத்தமிழர்களுக்கான அரண்களையும் பிணைத்துள்ளது. குறிப்பாக ஈழத்தமிழர்களுடான இந்தியாவின் பிணைப்பு பாக்குநீரிணையூடாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் வடக்கை கொழும்புடன் இணைப்பதனூடாக ஈழத்தமிழர்களின் சுயாதீனமும் அரணும் உடைக்கப்படுகின்றது. இதனூடாக இலங்கைக்குள் ஈழத்தமிழர்கள் கரைக்கப்படுவார்கள். கிழக்கை பொறுத்தவரையில் தமிழ்-சிங்கள-முஸ்லீம் மூவின மக்களும் சமஅளவில் வாழும் பிரதேசமாகும். ஒப்பீட்டளவில் மட்டக்களப்பிலேயே தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்றார்கள். கிழக்கில் சிங்களவர்கள்-முஸ்லீமை பலப்படுத்துவதனூடாக தமிழர்களை பலவீனப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகின்றது. எனினும் அவ்வாறானதொரு பொறிமுறையை வடக்கில் செயற்படுத்த முடியாத நிலையிலேயே வடக்கின் சுயத்தை அழித்து கொழும்புடன் கரைக்கும் பொறிமுறையையே 2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொதுநூலகத்தின் அபிவிருத்திக்கான நிதியிடல் மற்றும் முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் திருத்தத்திற்கான நிதியிடலும் அதுசார் கட்டமைக்கப்படும் பிரச்சாரமும் அவ்வாறானதாகவே அமைகின்றது. குறிப்பாக வட்டுவாகால் பாலம் திருத்துவதற்கான நிதி ஒதுக்கீடு அவசியமானதாகும். இது முல்லைத்தீவு மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால வளர்ச்சிகளை குறிவைக்காது மக்கள் பார்வையை குவிக்கும் அபிவிருத்தி நிதி ஒதுக்கீடும் பிரச்சாரமும் வடக்கு மக்களை தென்னிலங்கை கவரும் முயற்சி என்பதே வெளிப்படையானதாகும்.
இரண்டாவது, நுணுக்கமான பார்வையில் வடக்கிற்கு நிதி ஒதுக்கப்படுவதாக பிரச்சாரம் செய்யும் பிரதான இரு தளங்களும் இனப்படுகொலையுடன் தொடர்புபட்டவையாகும். ஏற்கனவே யாழ்ப்பாண நூலக புனரமைப்பில் எரிக்கப்பட்ட நூலக தோற்றம் வெறும் புகைப்படமாக மாற்றப்பட்டு விட்டது. தற்போது யாழ்ப்பாண பொது நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடும் அதுதொடர்பான உரையில் ஐக்கிய தேசியக்கட்சியால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட வரலாற்று செய்தி மீட்பும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போட்டி அரசியல் நலனையே பிரதிபலிக்கிறது. வட்டுவாகல் பாலம் இறுதிப்போரின் மக்கள் துயரின் எஞ்சிய சாட்சியமாக அமைகின்றது. தற்போது வட்டுவாகல் பாலம் திருத்தத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பாலம் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பாலம் உருவாக்கப்படுவதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றது. வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது அவசியமானதாகும். எனினும் முழமையாக பழைய பாலத்தை அகற்றுவதன் மூலம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை துயரின் ஒரு முக்கிய பகுதியின் சாட்சியத்தை அழிக்கும் அபாயமும் உள்ளது. சிதைந்துள்ள வட்டுவாகல் பாலம் தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் தாங்கிய துயரத்தின் சாட்சியமாகவும் அமைகின்றது. சர்வதேச பரப்பில் வரலாற்று சாட்சியங்களை பேணுவதும் கண்காட்சிக்கு உட்படுத்தும் மரபும் காணப்படுகின்றது. ஜேர்மனியில் பேர்லின் சுவரின் எச்சம், தென்னாபிரிக்காவில் ஒடுக்குமுறை நினைவு அருங்காட்சியகம் என்பவற்றில் வரலாறு பாதுகாக்கப்படுகின்றது. எனினும் இலங்கையை பொறுத்தவரை தென்னிலங்கை போரின் குற்றவாளி என்ற அடிப்படையில் போரின் நினைவகங்களையும், சாட்சிகளையும் அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றது. வேறுபல இடங்களிலும் புதிய பாலங்கள் உருவாக்கப்படுகையில், பழைய பாலங்கள் மக்களின் தற்காலிக செயற்பாட்டுக்குரியதாக ஒதுக்கப்படுவதுண்டு. எனினும் வட்டுவாகல் பாலத்தை முழுமையாக அகற்றுவது தொடர்பிலேயே பொறியியலாளர்களின் திட்டத்தில் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நுணுக்கமாக அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்டு இனப்படுகொலையின் சாட்சியத்தையும் நினைவுகளையும் அழிக்கும் செயலாகவே அமைகின்றது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து, சிதைந்த வட்டுவாகல் பாலத்தினை சாட்சியமாக பாதுகாப்பதோடு புதிய பாலம் உருவாக்க பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்.
மூன்றாவது, வடக்கில் வீதி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடும் பிரதான பேசுபொருளாக அமைகின்றது. இவ்வீதி அபிவிருத்தி என்பதும் குறுகிய எண்ணங்களுடனேயே திட்டமிடப்படுகின்றது. மாவட்டங்களிற்குள், நகரங்களிற்குள் மற்றும் கிராமங்களிற்குள் உட்பட்ட குறுந்தூர வீதி அபிவிருத்திகளை மையப்படுத்தியே 2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக நீண்ட தூர வீதி அபிவிருத்திகளை உள்வாங்க தவறியுள்ளது. மாகாணங்களை இணைப்பதுவே வர்த்தகத்தை மையப்படுத்திய வளர்ச்சிக்கு வழிகோலக்கூடியதாகும். அதேவேளை வடக்கு-கிழக்கு பிரயாணத்தை துரிதப்படுத்துவது, தமிழ் மக்களின் உள்ளகப் பிணைப்பை வலுப்படுத்தக்கூடியதாகும். இரண்டாம் காரணத்தை தவிர்க்கும் முனைப்புடனேயே குறுகிய இலக்குடன் வீதி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படுகின்றது. வீதி அபிவிருத்தி என்பது வளர்ச்சியை மையப்படுத்தியதாக அமைவதே சிறப்பானதாகும். தமிழ் மக்களின் வளர்ச்சியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்திக்குமாயின் மாகாணங்களுக்கிடையிலான அதிவேக பாதைகளை அமைப்பதை உள்ளடக்கமாய் கொண்டே வடக்கிற்கான வீதி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்கியிருக்க வேண்டும். தெற்கில் பயனற்றதாய் போயுள்ள போதிலும், ஹம்பாந்தோட்ட அபிவிருத்தியை மையப்படுத்திய நிதி ஒதுக்கீடு அதிவேக நெடுஞ்சாலைகளையே இலக்காக கொண்டதாக காணப்பட்டது. எனினும் வடக்கிற்கு வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளக போக்குவரத்துக்குள் சுருக்கப்படுகின்றது.
நான்காவது, வரவு-செலவுத்திட்டத்தின் ஈழத்தமிழர் சார்ந்ததாக பிரச்சாரப்படுத்தப்படும் உள்ளடக்கங்கள் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதாக அமையவில்லை. வெறுமனவே ஜனரஞ்சன அரசியல் இயல்புகளை மாத்திரமே கொண்டுள்ளது. தமிழ் மக்களின் நிலையான பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் ஏற்கனவே இயங்குநிலையில் காணப்படும், வடக்கில் இந்திய தலையீட்டில் குத்துயிராய் இயங்கும் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான எவ்வித வினைத்திறனான உள்ளடக்கங்களையும் கொண்டிருக்கவில்லை. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்;தை பொறுத்தவரை அதற்கான பயணிகள் எதிர்பார்க்கை அதிகமாகவே காணப்படுகின்றது. எனினும் பொதிகளின் மட்டுப்பாடும், பயணச்சீட்டு விலை உயர்வுமே பிரயாணிகள் பின்வாங்க காரணமாகின்றது. இதற்கு விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பிலேயே குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றை சீர்செய்வதனூடாக தமிழ் மக்களின் பொருளாதார வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய வினைத்திறனான திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டமும் உள்வாங்க தவறியுள்ளது.
நான்காவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவீனத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது தொடர்பில், தமிழ் மக்களிடையே வெகுவான பிரச்சாரங்கள் மேலோங்குகின்றது. பாதுகாப்பு செலவீனக்குறைப்பு இராணுவ தளபாட கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீட்டினூடாகவே குறைக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தமிழ் மக்களின் கோரிக்கையான இராணுவ துருப்புக்கள் குறைக்கப்படவில்லை. இராணுவத்தினருக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படவில்லை. இராணுவத்திற்கு வழங்கப்படும் நிதிகளினூடாகவே நாட்டிற்கு பாதுகாப்பு கடமையாற்ற வேண்டியவர்கள், பௌத்த சங்கங்களின் பணியை பொறுப்பேற்று விகாரைகளை பராமரித்து வருகின்றார்கள். மேலும், இராணுவத்தினரால் நடாத்தப்படும் உணவகங்கள், விடுதிகள், தொழில் முயற்சிகளை மேலும் அதிகரிப்பதற்கான திட்டமிடல்களை காணப்படுவதாகவே அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் நிலங்களிலேயே இராணுவத்தின் தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள தல்சவேன விடுதியின் வாகன தரிப்பிடம், தமிழ் மக்களிற்கான அறப்பணியை மேற்கொள்ளும் சிவபூமி அமைப்பின் காணியாகும். சிவபூமி அமைப்பு தமிழ்-சமய பணிகளுக்கு முகாந்தரமாக வலுக்குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை மற்றும் தொழில் முயற்சியான்மைகளை மேற்கொண்டு வருகின்றது. காங்கேசன்துறையில் இராணுவம் ஆக்கிரமித்து தொழில் செய்யும் காணி ஒருவகையில் வலுக்குறைந்த மாணவர்களின் தொழில் முயற்சியாண்மையை பாதிக்கிறது. இவ்வாறான இராணுவ ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை தடுக்காத வகையிலும் மற்றும் பலப்படுத்தும் வகையிலேயே பாதுகாப்பு செலவீன நிதி ஒதுக்கீடு அமையப்பெற்றுள்ளது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்ட அறிக்கை பொதுப்புத்தியில் மக்களை கவரக்கூடிய ஜனரஞ்சக யுக்தியிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறாக மக்களை நிலையான வளர்ச்சியில் நகர்த்தக்கூடிய செயற்பாட்டு உள்ளடக்கங்களை வலுப்படுத்த தவறியுள்ளது. ஜனரஞ்சக அரசியல் மூலமாக விசேட பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதன்வழியிலேயே நகர்த்தப்படுகின்றது. மக்கள் விழிப்படைய தவறும் வரை செயற்பாடற்ற ஜனரஞ்சகத்தினுள்ளேயே தேசிய மக்கள் சக்தி வீரியமாக பயணிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஜனரஞ்சக அரசியலில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்த அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றிலேயே காணப்படுகின்றார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதசாவின் வீட்டுத்திட்டமும் ஜனரஞ்சக அரசிய வெளிப்பாடாகவே அமைகின்றது. எனினும் நிலைக்களத்தையும், வீட்டு சுதந்திரத்தையும் வழங்குவதனூடான அது நிலையான வளர்ச்சிக்குரிய படிமங்களை கொண்டிருந்தது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியல் வெறுமனவே கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் இலக்குகளுக்குள்ளேயே சுருங்குகின்றது. நிலையான வடிவத்தை பெறத் தவறுகின்றது. நிலையான வளர்ச்சியின்மை என்பதற்கு அப்பால் தமிழ் மக்களை பொறுத்தவரை எதிர்வினையாக இருப்பை சிதைக்கும் பொறிமுறையையும் உள்ளார்ந்த ரீதியில் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் இலங்கை அரசு வழங்கும் நலன்களை அனுபவிப்பதுடன், ஈழத்தமிழர்களின் இருப்பு சார்ந்த தெளிவான சிந்தனையுடனும் பயணிப்பது அவசியமானதாகும்.
Comments
Post a Comment