வேட்பாளர்கள் தெரிவில் போட்டியும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை மீளவொரு தேர்தல் களத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் (2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் (2024) பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, எதிர்வரும் மே-06 (2025) அன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முன்னைய தேர்தல் நிலவரங்களிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் இயல்பு வேறுபட்டதாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்ற போதிலும், முழுமையாக கடந்த தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கக்கூடியவையாக அமையப் போவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்திய காரணிகளிலிருந்து வேறுபட்டதொரு அரசியல் நடத்தையே உள்ளூராட்சி சபைகளில் பிரதிபலிக்கக்கூடியதாகும். கடந்த கால தேர்தல்களில் அத்தகையதொரு போக்கினையே அவதானிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஈழத்தமிழர் எதார்த்தங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளத...