இனப்பிரச்சினை தீர்வுக்கான கூட்டு முயற்சியும் அரசியல் சமூகமயப்படுத்தலின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர் அரசியலில் அரசியல் கட்சிகளின் கூட்டு என்பது பிரதான உரையாடலை பெற்று வருகின்றது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டு எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபை அடிப்படையாய் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தியிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க பின்வாங்கியுள்ள நிலையில், கூட்டுச் செயற்பாட்டு முயற்சி நீர்த்து போய் உள்ளது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக கூட்டுச் செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விட்டிருந்தனர். இக்கூட்டுச் செயற்பாட்டு முயற்சி, வெறுமனவே அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்த உரையாடலாகவே அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியதாகும். எனினும் அரசியல் சமுகமயப்படுத்துவதில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகாவே பின்னடிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த கருத்தியல் தமிழ் மக்களின் திரளான கருத்தாக உருவாக்க வேண்டிய பொறுப்பை சுட்டிக்காட்டுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது தேர்தல் பிரச்சாரத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவது தொடர்பில் உரையாடியிருந்தனர். எனினும் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்தில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து வெளிப்படையான கருத்துக்களை தவிர்த்திருந்தனர். அதேவேளை வரலாறு முழுக்க சமஷ்டியை நிராகரிக்கும் தரப்பினராகவே தேசிய மக்கள் சக்தியின் மூலமான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) செயற்பட்டு வந்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே புதிய பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட பிரதிநிதிகளிடையே அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டில் கூட்டு நிலைப்பாட்டை உருவாக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தன்னார்வ அழைப்பை விடுத்திருந்தது. அதுதொடர்பில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதனுடனும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதற்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். சிவஞானம் சிறிதரன் இச்செயற்பாட்டுக்கு தனிப்பட்ட இணக்கத்தை வழங்கிய போதிலும், தமிழரசுக் கட்சி தீர்மானத்தை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் பாரப்படுத்தினார். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானத்தையும் சந்தித்து கூட்டு முயற்சிக்கான தேவையை பரிந்துரைத்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் சி.வி.கே. சிவஞானமும் இணக்கமான பதிலையே வழங்கியிருந்தார். குறிப்பாக 2015ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு காலாவதியானது என்பதையும், சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பை கோருவதையும் வலியுறுத்தியிருந்தார். எனினும் மத்திய செயற்குழுவின் முடிவாக, “புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தாலும் அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது” என்பதைக் குறிப்பிட்டு காலத்தை இழுத்தடித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவானது அபத்தமான அரசியலையே வெளிப்படுத்துகின்றது. மீளவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் தமிழ் மக்களை தென்னிலங்கையின் அடிமைகளாக சித்தரிப்பதாக அமைகின்றது. குறிப்பாக தமிழ் மக்களை தென்னிலங்கையின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு எதிர்வினை ஆற்றும் சக்தியாக திசை திருப்புவதாகவே காணப்படுகின்றது. தேசிய இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்களும் பிரதானமானதொரு பங்காளிகளாகும். தமிழ் மக்கள் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் தமது நிலைப்பாட்டை முன்வைப்பதும் பேசுபொருளாக்குவதும் அவசியமானதாகும். காலனித்துவ விடுதலைக்கு பின்னரான இலங்கையின் கடந்த 77 வருடங்களும் தென்னிலங்கையின் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாகவே அமைந்துள்ளது. அதற்கு எதிர்வினையாற்றுவோராகவே தமிழ் மக்களும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் நெறிப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்ஆபத்தான பாரம்பரிய சகதிக்குள் தமிழ் மக்களை தொடர்ச்சியாக பேணுவதாகவே பாரம்பரிய கட்சியின் முடிவும் அமைகின்றது. தென்னிலங்கை அரசாங்கத்தின் முடிவுகளைப் பொறுத்து எதிர்வினையாற்றும் தீர்மானம் என்பது, ஒருவகையில் தென்னிலங்கையின் தீர்மானங்களுடன் இணங்கிப் போவதற்கான முன்னாயர்த்தமாகவும் சந்தேகம் கொள்ள வைக்கக்கூடியதாகவே காணப்படுகின்றது.

தமிழரசு கட்சியின் கூட்டாக செயற்படுவதற்கான மறுப்பு தீர்மானத்தின் ஆதிக்கம் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்ட தரப்பிடம் இருந்தே எழுந்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுவில் காணப்படுகிறது. மறுதளத்தில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாத வகையிலேயே கருத்துரைத்துள்ளார். “தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம். பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்? உணவை வைத்திருப்பவன், பசியுடன் இருப்பவனைப் பார்த்து உனக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. எனவே, எம்முடைய பசிக்குரிய உணவு எதுவென்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” என சிறிதரன் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானம் தொடர்பிலான ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சிவஞானம் சிறிதரன் அவர்கள் மாத்திரமே யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்றார். தேர்தல் காலப் பகுதியில் சிறிதரன் தனித்தே தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தார். தனது வாக்குறுதிகளை தனது தனிப்பட்ட கருத்துக்களாகவே அதிகம் முதன்மைப்படுத்தி இருந்தார். அவ்வாக்குறுதிகளுக்கே தமிழ் மக்களும் ஆதரவளித்து வாக்களித்து ஆணை வழங்கியுள்ளார்கள். எனினும் தேர்தலின் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மக்கள் ஆணையூடாக வலுப்படுத்தப்பட்ட தனது கருத்துக்களை வெறுமனவே கருத்துக்களாகவும், செயற்பாடுகளை கட்சியிடம் பாரப்படுத்தி, கட்சியினால் நிராகரிக்கப்படும் சூழலில் கடந்து செல்லும் போக்கையே கடைப்பிடிக்கின்றார். மக்கள் ஆணையூடாக வலுப்படுத்தப்பட்டுள்ள அரசியல் கருத்தை, கட்சியினுடைய தீர்மானமாக மாற்ற முடியாமை சிறிதரனின் ஆளுமை குறைபாட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது. மக்களால் தோற்கடிக்கப்பவர் தொடர்ச்சியாக கட்சி அதிகாரத்தை கைப்பற்றி, மக்கள் ஆணை பெற்ற அரசியல் பிரதிநிதிகளை கட்டுப்படுத்துவது மக்கள் ஆட்சியை வலுவிழக்க செய்கிறது. சிறிதரனுக்கான மக்கள் ஆணை என்பது கருத்தை செயற்படுத்துவதற்கானதேயன்றி, தமிழரசுக்கட்சிக்குள் அவரது இருப்பை பாதுகாப்பதற்கானதல்ல. கட்சிக்குள் சுருங்கி மக்கள் ஆணையை சிறிதரன் செயற்படுத்த தவறுவாராயின், அவரது அரசியல் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தோற்கடிக்கப்படும் நிலைமைகளே உருவாகும். கட்சிக்கு வெளியே மக்களுடன் இணைந்து மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதே சமகாலத்தின் தேவைப்பாடாக அமைகின்றது.

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள், ‘தமிழ் மக்களிடம் போலித் தேசிய அடையாளங்களுடன் உலாவி செயற்பாடற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பிம்பங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ என்பதையே வெளிப்படுத்தி உள்ளது. வடக்கு-கிழக்கில் பாராளுமன்ற ஆசனங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை மையப்படுத்தியே கிடைக்கப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கான ஆசனமும் அனுரா குமார திசநாயக்கவின் விம்பத்தில், அதுசார்ந்த அலையில் கட்டவைக்கப்பட்டது என்பதே நிதர்சனமானதாகும். அதனையே தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக பாதுகாத்து வருகின்றனர். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமது தோல்களிலிருந்து படிப்பினையை பெறத் தவறியுள்ளார்கள். மிகவும் வேடிக்கையானது தமிழரசுக்கட்சி தமது தோல்வியையே ஏற்றுக் கொள்ளாத நிலைமைகளே காணப்படுகின்றது. மாறாக தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தோல்விக்கான காரணத்தை புரிந்து கொண்டுள்ள போதிலும், அதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறைகளை பேணத்தவறுகின்றனர். தமிழ் அரசியல் கட்சிகளின் தோல்வி, ‘தேர்தல் காலத்திற்கு அப்பால் தமிழ் மக்களிடம் செல்லாமையும், ஈழத்தமிழர்களை அரசியல் சமூகமயப்படுத்தாமையின்’ விளைவுகளுமே ஆகும். எனினும் தோல்விகளின் பின்னரும் தொடர்ச்சியாக கடந்தகால தவறுகளை தொடரும் நிலைமைகளே காணப்படுகிறது. குறிப்பாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப் பிரச்சினை தீர்வு சார்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுச் செயற்பாடு, மக்கள் நம்பிக்கையிழந்த அரசியல் கட்சி முறைமைகளுக்குள்ளே சுருங்குவதாகவே அமைகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலோ, தேசிய இன பிரச்சனைக்கான தீர்வு தொடர்பிலோ தமிழ் மக்களுக்கு அறிவூட்டுவதனூடாக, தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்களை ஒன்று திரட்டுவதனூடாக, தமிழ் மக்களின் கோரிக்கையை தமிழ் மக்களூடாகவே பலப்படுத்தும் வழிமுறைகளை கையாளத் தவறுகின்றார்கள். ஆதலாலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் கட்சி அரசியல் ஊடாக மக்கள் ஆணை பெற்றோர்களின் மக்கள் நலன் சார்ந்த அரசியலை புறக்கணிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது.

சர்வதேசரீதியாக அரசியல் கட்சிகளின் தோல்வி பொது உரையாடலை உருவாக்கியுள்ளது. ஜனநாயக அரசியலின் தன்மை மற்றும் அது செயல்படும் சமூக-அரசியல் சூழல் கடந்த தசாப்தத்தில் கூர்மையாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் போட்டியின் மூலம், கட்சிகள் அரசாங்க அதிகாரத்தை அணுகுகின்றன. பின்னர் குடிமக்களின் விருப்பங்களை பொதுக் கொள்கைகளாக மாற்றுகின்றன. கட்சிகளின் பிரதிநிதித்துவ உத்திகள் குடிமக்களை அரசியலுடன் இணைக்கும் மற்றும் குடிமக்கள் விரும்பும் கொள்கைகளை உருவாக்கும் ‘பதிலளிப்புச் சங்கிலியை’ உருவாக்குகின்றன. இச்சங்கிலி செயற்பாடு பலவீனப்படுயில் அரசியல் கட்சிகளும் மக்கள் ஆட்சியும் பலவீனப்படுகிறது. இது சவால் செய்யும் கட்சிகளின் எழுச்சி, வழக்கத்திற்கு மாறான அரசியல்வாதிகளின் தேர்தல் மற்றும் மக்கள் ஆட்சியின் நெருக்கடி அல்லது மரணம் அல்லது முடிவு பற்றிய பரவலான கவலையை பிரதிபலிக்கிறது. இத்தகைய பிரதிபலிப்புக்களை ஈழத்தமிழர் அரசியலிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்வதென்பது குடிமக்கள் விரும்பும் கொள்கைகளை உருவாக்கும் ‘பதிலளிப்புச் சங்கிலியை’ உருவாக்குவதாகும். இதனை செய்யும் தரப்பு ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடியதாக காணப்படுகின்றது.

அரசியல் சமூகமயமாக்கல் என்பது குடிமக்கள் தங்கள் பிற்கால வாழ்க்கை முழுவதும் ஒப்பீட்டளவில் நிலைத்திருக்கும் அரசியல் அடையாளங்கள், மதிப்புகள் மற்றும் நடத்தையை படிகமாக்கும் செயல்முறையை விவரிக்கிறது. இத்தகைய படிகமாக்கும் செயற்பாடு சமுகத்தின் அரசியல் இருப்பையும் பாதுகாப்பதாக அமைகின்றது. இது அரசியல் கட்சிகளின் சுயநல அரசியல்களுக்கு எதிர்வினையானதாகும். இத்தகைய பின்னணியிலேயே தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் சமூகமயப்படுத்துவதனூடாக தமிழ்த்தேசியத்தை பலப்படுத்துவதற்கு மாறாக தமக்குள் கூட்டுக்களை உருவாக்குவதனூடாக தமது அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்ளவே செயற்படுகின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கான அரசியலை செய்பவர்களாயின், கூட்டுக்களால் தமது ஆசனங்களை உறுதிப்படுத்துவதில் காட்டும் அக்கறையை மக்களுக்கு அரசியல் அறிவூட்டுவதிலும், மக்களை நோக்கி செல்வதிலும் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை அணுகுவது இன்றைய தேவைப்பாடாகும். தமிழ் மக்களை அணுகி அவர்களை அரசியல் சமூகமயப்படுத்தி, அவர்களிடமிருந்து அரசியல் கருத்துக்களை ஒன்று திரட்டுவதனூடாக தமிழ்த் தேசிய எழுச்சியை பலப்படுத்தக் கூடியதாக அமையும். ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் விளைவானதாகவே அமைகின்றது. அத்தகையதோர் அரசியலை பொதுத்தேர்தல் காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப் பகுதிகளில் வடக்கு-கிழக்கு நோக்கியும் தேசிய மக்கள் சக்தி வலுவாக அதிகரித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கிராமங்களை மையப்படுத்திய விஜயங்களும் மக்கள் சந்திப்புக்களும் அதனையே உணர்த்துகின்றது. தென்னிலங்கையின் முடிவுகளுக்காக காத்திருக்கும் தரப்புகள், தென்னிலங்கையின் செயற்பாடுகளிலிருந்தாவது கற்றுக்கொள்ள முயல வேண்டும்.

(நன்றி: தினக்குரல்)

Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-