ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா! -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கான நீதிக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அரங்கிலேயே உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. நீதிப் பொறிமுறை என்பது அதிகார போட்டியினுள் அரசியல் பலத்துடன் இணைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தாத போது நிதிப் போராட்டத்தின் சாதகமான பக்கங்களை அடைய முடியாது என்பதுவே எதார்த்தமானதாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் களத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக் கோரிக்கையின் ஏற்ற-இறக்கங்கள் மைய அரசுகளின் நலன்களுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஈழத்தமிழர்கள் மைய அரசுகளுடன் எத்தகைய அரசியல் ஊடாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் தேடலுக்குரியதாகும். இக்கட்டுரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடர் பெப்ரவரி-24அன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் மார்ச்-03அன்று, 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலவரம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்டது. இதின் அறிமுக உரையாடல்களும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மென்மையான அணுகுமுறைகளாலும், ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கை வலுவிழக்கப்படுகின்றது எனும் எதிரான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளது. எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்வான அழுத்தம் அறிக்கையிடல் தான் என்பதை கடந்த 13ஆண்டு கால அணுகுமுறைகளில் ஈழத்தமிழர்கள் அனுபவரீதியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனினும் பிறிதொரு சர்வதேச களத்தை ஏற்படுத்திக்கொள்ளாது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தும் ஈழத்தமிழர் நீதிப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதுவே யதார்த்தமானதாகும். ஏதொவொரு வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை இலங்கையின் தேசிய கௌரவத்துக்கு சவாலானதாகவே அமைகின்றது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கங்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாள்வதனை முதன்மையானதொரு செயற்பாடாக நெறிப்படுத்தி வருகின்றார்கள். அத்தகையதொரு தொடர்ச்சித் தன்மையை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் கூட பேணுவதில்லை. ஈழத்தமிழர் அரசியல் தரப்பினர், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு ஆரம்ப காலங்களில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை சமீபகாலங்களில் வழங்குவதில்லை. ஒரு தொய்வான நிலைக்கு சென்றுள்ளனர்.
இஸ்ரேல் உருவாக்கத்துக்கான யூதர்களின் முயற்சி பல ஏற்ற-இறக்கங்களுடன் 1000 ஆண்டுகளுக்கு மேலான ஏக்கத்தையும் நூற்றாண்டுகால தோல்விகளையும் கொண்டதாகும். எனினும் தொடர்ச்சித் தன்மை காணப்பட்டது. பல தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கிடைக்கின்ற வாய்ப்புக்கள் யாவற்றையும் பயன்படுத்திக் கொண்டார்கள். உலகப் போர்களில் வெற்றி பெறும் தரப்பினூடான தமது இலக்கினை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இரு தரப்பிலும் தமது ஈடுபாட்டை வழங்கியிருந்தார்கள். தமது இனக்குழுவினருடனேயே மோதிக் கொண்டார்கள். எனினும் இரு தரப்பினதும் இறுதி இலக்கு யூதர்களுக்கான அரசாகவே காணப்பட்டது. இத்தகையதொரு அணுகுமுறையை சமகாலத்தில் மேற்காசியாவின் குர்து இனக்குழம விடுதலைப் போராட்டத்திலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் ஈழத்தமிழர்களிடையே 15 ஆண்டு கால ஏற்ற இறக்கங்கள் தொய்வினை ஏற்படுத்துவது, விடுதலை சார்ந்த ஆத்மாத்த எண்ணங்களை சந்தேகத்திற்குரியதாக்கின்றது. கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை தமக்குரியதாக்குவதே அரசியலின் இருப்புக்கு அவசியமானதாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை நுணுக்கமாக முதன்மைப்படுத்துவது அவசியமாகும்.
முதலாவது, வலிந்து காணமாலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் சர்வதேச கவனிப்புக்குள் காணப்படுகின்றது. உண்மை மற்றும் நீதிக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவர்களுக்கான தீர்வை வழங்கக்கூடியவகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர்களின் நீதிப்போராட்டம் கடந்த 15 ஆண்டுகளில் காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்குள்ளேயே சுருங்கியுள்ளது. ஏறத்தாழ 2000 நாட்களைக் கடந்து சோர்வற்று நிலைபெறுகின்றது. காணமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக் கோரி போராடி வரும் பல அம்மாக்கள் இறந்துள்ள நிலையிலும், போராட்டம் தொடர்ச்சியான உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. இவ்தொடர்ச்சித்தன்மையும் தளராத போராட்டமுமே வலிந்து காணமாலாக்கப்பட்டோருக்கான நீதிசார் உரையாடல்கள் சர்வதேச கவனத்திற்குள் நிலையாகி உள்ளது. தவிர்க்க முடியாததாக அமைகின்றது. ஆணையாளரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்றிறன் என்பது, காணாமாலாக்கப்பட்டோரின் உறவினர்களின் கோரிக்கையை பூரணப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இலங்கை அரசாங்கங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை முன்னிறுத்தியே தமது உள்ளக விசாரணை பொறிமுறைக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றது. இந்நிலையில் 'காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிற்கு தீர்வை வழங்கக்கூடியவகையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்க வேண்டும்' என்ற வலியுறுத்தல் காணமாலாக்கப்பட்ட உறவினர்களையே முன்னிலைப்படுத்துகிறது. காணமாலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்' மீதே நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளார்கள். எனவே அதன் செயற்றிறனான இயக்கம் சாத்தியமற்றது. அல்லது காணமாலாக்கப்பட்டோரின் உறவினர்களின் கோரிக்கைகள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் உள்வாங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
இரண்டாவது, சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அரச இயந்திரத்தின் அழுத்தங்கள் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அறிக்கையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புக்கள் தொடர்வதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. ஈழத்தமிழர்களின் அரசியல் செயற்பாட்டில் சிவில் சமுக செயற்பாடு பூரணத்துவ நிலையில் இல்லாத போதிலும், தனியன்களான சில சிவில் செயற்பாட்டாளர்கள் தற்துணிவுடன் தமிழ்த் தேசிய அரசியலை நெறிப்படுத்துவது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகவே அமைகின்றது. அதன் வெளிப்பாடாகவே கடந்த 15 ஆண்டுகளில் எழுக தமிழ்களுக்கான களமாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபயணப் போராட்டம் மற்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களை ஒன்றிணைத்து தமிழ் மக்கள் பொதுச்சபை எனும் களத்தினூடாக தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தியமை எனும் தமிழ் மக்களை தேசியத்தின்பால் திரட்டக்கூடிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் காலத்துக்கு காலம் தமிழ் மக்களின் தேசிய திரட்சிக்கு அரசியல் கட்சிகளிடையே கூட்டிணைவு தேவை என்பதை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டிணைவுக்கான முயற்சிகளும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கிடையிலான உறவில் நம்பிக்கைக்குரிய இணைப்புப் பாளமாகவும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களே காணப்படுகின்றார்கள். இவர்கள் சர்வதேச அரங்குகளிலும் சில அறிக்கையிடலூடாகவும், சந்திப்புக்களூடாகவும் தமது நிலைகளை முன்னிறுத்திவருகின்றார்கள். அதன் வெளிப்பாடே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையில் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மீதான அரச இயந்திரத்தின் நெருக்கடி தொடர்பான கரிசணை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் உயிர்ப்பில் அரிதாக தனியன்களாக செயற்படும் சிவில் சமுக செயற்பாடு அவசியமானது. அது தொடர்பான கரிசனையை ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்துவது ஈழத்தமிழருக்கான சாதாகமான சூழலுக்கான வாய்ப்பு உள்ளமையையே உறுதி செய்கின்றது.
மூன்றாவது, தமிழ் மக்களின் போராட்டங்களை மற்றும் செயற்பாட்டாளர்களை முடக்குவதற்கு இலங்கை அரச இயந்திரத்தால் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான கவனத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை உள்வாங்கியுள்ளது. அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக எதிர்த்திருந்தது. தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மீதும் குறித்த சட்டங்கள் இலங்கை அரசாங்கங்களால் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் பரிந்துரைத்திருந்தார்கள். எனினும் அரசாங்க உருவாக்கத்தின் பின்னர் தமது எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பாதுகாக்கும் நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. இது பொதுவெளியில் பலத்த எதிர்ப்பை பெற்று வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மீது தொடர்ச்சியாக பொதுவெளியில் அழுத்தங்கள் காணப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பே ஆணையாளரின் அறிக்கையிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நான்காவது, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள காணமாலாக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதிக்கோரிக்கை, சிவில் செயற்பாட்டாளர்கள் மீதூன அரச இயந்திரத்தின் நெருக்கடி மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் - நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டங்களின் மறுசீராய்வு என்பன தொடர்ச்சியாக பொதுஉரையாடலை பெற்றுள்ள விடயங்களாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிடல் என்பது குடிமக்கள் சமுகங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அறிக்கைகள் மற்றும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களின் குடிமக்கள் சந்திப்புக்களின் திரட்சியான அறிக்கைகளின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இலங்கை குடிமக்கள் வழங்குவதிலிருந்தே, 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' நிலைமைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் அறிக்கை செய்கின்றது. ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான உயிர்ப்பான போராட்டம் காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தினுள்ளேயே சுருங்கியுள்ளது. குறைந்த பட்சம் தமிழ் மக்களின் நாளாந்த ஏனைய பிரச்சினைகளான காணி ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் என்பது பருவகால போராட்டங்களாகவே அமைகின்றது. தையிட்டியில் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பங்குபற்றுதலே குறைவான நிலைமையிலேயே காணப்பட்டது. இது போதிய ஊடக வெளிச்சத்தை பெற்றிருக்கவில்லை. ஈழத்தமிழர்கள் தமது அரசியல் பலவீனமான நிலைமைகளை ஒடுக்குமுறைகளை சர்வதேச வீச்சுக்கு கொண்டு செல்லும் நிலைமைகள் குறைவாகவே காணப்படுகின்றது. கொண்டு செல்லப்படுபவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை பெற்றுள்ளமையையே அறிக்கை வெளிப்படுத்துகிறது.
எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் களத்தை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தக்கூடிய சூழலை புரிந்துகொள்வதே அவசியமானதாகும். 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காணப்படுகின்ற போதிலும், அதன் செயலொழுங்கை சரியான புரிந்து கொள்ளாமை, ஈழத்தமிழர்களின் பலவீனமாகவே காணப்படுகின்றது. கடந்த 13 ஆண்டுகளிலும் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களின் நீதிப் போராட்டத்தின் ஏற்ற இறக்கம் முழுமையாக மைய நாடுகளின் தேசிய நலனுக்குள்ளேயே இயங்கி வருகின்றது. புலம்பெயர் தமிழர்கள் பகுதியளவில் மைய நாடுகளின் தேசிய நலனிற்குள் ஈழத்தமிழர்களின் ஆர்வத்தை இணைத்துள்ள போதிலும், தாயகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டிற்குள் தமது ஆர்வத்தை உள்ளிணைக்க தவறியுள்ளார்கள் என்பதுவே நிதர்சனமாகும். தாயக அரசியல் என்பது, யோகர் சுவாமிகளின் 'சும்மா இரு சுகப்படுவாய்' என்பதன் வெளிப்பார்வையிலேயே காணப்படுகின்றார்கள். யோகர் சுவாமிகளின் 'சும்மா இரு' எனும் தத்துவ வாக்கியம், 'உன்னுடைய வேலையை செய் பதட்டப்படாதே' எனும் ஆழமான செய்தியை காவுகின்றது. இங்கு தாயக அரசியல் எவ்வித வேலையும் செய்யாமலிருக்க சுகப்பட வேண்டுமென அடம்பிடிக்கும் நிலையிலேயே உள்ளார்கள்.
Comments
Post a Comment