மேற்காசிய போர் இலங்கையின் விவசாய பொருளாதாரத்தின் குறைகளை பரிசோதிக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

மேற்காசியா போர் உலகளவில் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் நெருக்கடியின் விளைவுகளை இலங்கைத் தீவும் எதிர்கொண்டு வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அரசாங்கத்தின் அரசியல் என்பது மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கீட்டுக்கு மாற்று வழிகளை தேடுவதாகவே அமைந்துள்ளது. அவ்வாறே எதிர்க்கட்சிகளின் அரசியல் என்பது எரிபொருள் நெருக்கடியில் அரசாங்கத்தின் பலவீனங்களை விமர்சிப்பதுவாகவுமே அமைந்தது. இடையிடையே நிலக்கரி ஊழல் மற்றும் அண்மையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றியும் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த குரல் வெளிப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசியலின் முதன்மையான விவாதப் பொருளாக மேற்காசிய போரின் தாக்கங்களே காணப்பட்டது. எரிபொருள் நெருக்கடி மேற்காசிய போர் ஏற்படுத்தக்கூடிய உடனடி பிரச்சினையாகும். அது மாத்திரம் பிரச்சினையாய் அமைந்து விடப்போவதில்லை. மேற்காசியாவில் போர் நீடிக்கையில் எரிபொருளுடன் சார்ந்து ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து பொருட்களின் விலையேற்றம் என்று நெருக்கீடுகள் நீளும் அபாயங்கள் காணப்படுகின்றது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலையேற்றம் பற்றிய சந்தேகங்கள் மக்களினை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. இக்கட்டுரை மேற்காசிய போரின் ஒரு மாத நீட்சியில் இலங்கை மக்கள் தம்மை தயார்ப்படுத்த வேண்டிய தேவையை அடையாளப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி கடந்து, எதிர்வரும் காலங்களில் மேற்காசிய போரின் விளைவாக உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கை முதல் நிலையில் காணப்படுகின்றது.  கீல் உலகப் பொருளாதார நிறுவனம் மார்ச் 2026இல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹார்முஸ் நீரிணை திடீரென மூடப்பட்டால், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 'ஹார்முஸ் நீரிணையை மூடுவதன் செலவு: எரிசக்தித் தடைகள் மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, குறுகிய கால நீரிணை மூடல் சூழ்நிலையில், உலகளவில் உணவு விலைகளில் இரண்டாவது மிகக் கடுமையான உயர்வை எதிர்கொள்ளும் நாடாக இலங்கையை அடையாளம் காட்டுகிறது. ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவது இலங்கைக்கு ஒரு பேரழிவுகரமான உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், உணவுப் பொருட்களின் விலைகள் 15மூக்கும் மேல் உயரும் எனவும் அது எச்சரிக்கிறது.

கீல் உலகப் பொருளாதார அறிக்கை மேற்காசிய போர் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலான இன்னொரு பரிணாமத்திற்கான பார்வையை திறந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை நெருக்கடியானது, எரிசக்திப் பாதுகாப்பை விட ஆழமான ஒரு பாதிப்புக்குள்ளாகும் தன்மையை வெளிப்படுத்துகிறது. கீல் உலகப் பொருளாதார ஆய்வின் மையத்தில் உள்ள, எரிசக்தியிலிருந்து இரசாயனங்கள், உரங்கள், உணவு வரையிலான தடைப் பாதை அமைப்பு, ஒரு முக்கிய வழித்தடம் மூடப்படுவது ஒரே நேரத்தில் ஒரு எரிசக்தி அதிர்ச்சி, ஒரு உற்பத்தி அதிர்ச்சி மற்றும் ஒரு உணவுப் பாதுகாப்பு அவசரநிலை என்பதைக் குறிக்கிறது. இவற்றைத் தனித்தனி அபாயங்களாகக் கருதும் கொள்கை வகுப்பாளர்கள், ஒவ்வொன்றையும் குறைத்து மதிப்பிடுவார்கள் என்ற எச்சரிக்கையையும் அறிக்கை வழங்குகின்றது. மிகவும் அவசரமான பாடம் உலகின் ஏழ்மையான நாடுகளைப் பற்றியது. தெற்காசியா, சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகள் கடுமையான நல இழப்புகளை எதிர்கொள்வதாக அiடாளப்படுத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் அவை அதிக எரிசக்தியைப் பயன்படுத்துகின்றன என்பதல்ல, மாறாக அவற்றின் உணவு அமைப்புகள் வளைகுடா வாயுவிலிருந்து தயாரிக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களைச் சார்ந்துள்ளன. இந்த நாடுகளுக்கு, மூலோபாய உர இருப்புக்கள், மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களைப் போலவே தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். 

பில் மெக்ரா குறிப்பிட்டது போல, 'நெருக்கடி ஏற்பட்ட பிறகு ஒரு நெருக்கடித் திட்டத்தைக் கொண்டு வரக் காத்திருக்காதீர்கள்.' இது அபாத்தமானதாகும். வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படும் இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க, சிறிய நாடுகளுக்கான பாதுகாப்பை சர்வதேச கட்டமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். முக்கிய எரிசக்தி விநியோகப் பாதைகள் தடைபடும்போது, விரைவான உரம் மற்றும் உணவு உதவி விநியோகத்திற்கான மாற்று ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இந்த மூடல் நிகழ்ந்த நேரம், உரப் பரிமாணத்தை குறிப்பாகக் கடுமையாக்குகிறது. வட அரைக்கோளத்தின் வசந்தகால நடவுப் பருவத்திற்கு இப்போது நைட்ரஜன் உரம் தேவைப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள், முழுப் பயிர் பருவத்திற்கான விளைச்சலைத் தீர்மானிக்கும் பயிர் உள்ளீடுகளுக்கான அதிகபட்ச தேவை உள்ள மாதங்கள் ஆகும். உரம் வெறுமனே மூன்று மாதங்கள் தாமதமாக வந்து சேர முடியாது. தாமதமாகப் பயன்படுத்துவது என்பது குறைந்த விளைச்சலையோ அல்லது நடவு முற்றிலும் தோல்வியடைவதையோ குறிக்கும். இந்த பருவகால அம்சம், ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய கால மூடல் கூட ஒரு முழுப் பயிர் பருவத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. 

மேலும், நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் உணவுப் பாதுகாப்பு விளைவுகளையும் இது ஏற்படுத்தும். பரந்த அளவில் எரிசக்தி இறக்குமதி செய்யும் பொருளாதாரங்களுக்கு, இந்த நெருக்கடி பல்வகைப்படுத்தலின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாடு, வளைகுடா அல்லாத விநியோகஸ்தர்களுடன் இணைக்கப்பட்ட LNG இறக்குமதி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திறனில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வளைகுடா ஹைட்ரோகார்பன்கள் மீதான சார்பைக் குறைப்பதே மிகவும் பயனுள்ள நீண்ட காலத் தணிப்பு உத்தியாகும். திட்டமிட்ட கொள்கை நடவடிக்கை இல்லாமல், அந்தச் சார்பு மேலும் ஆழமாகும். வழக்கமான அளவுசார் வர்த்தக மாதிரிகள், அனைத்து இடைநிலை உள்ளீடுகளையும் எளிதாக மாற்றக்கூடியவையாகக் கருதுவதன் மூலம், எரிசக்தித் தடைகளால் ஏற்படும் உணவுப் பாதுகாப்பு விளைவுகளைத் திட்டமிட்டு குறைத்து மதிப்பிடுகின்றன. எரிவாயுவிலிருந்து உரம், உரத்திலிருந்து உணவு வரையிலான தொடர் நிகழ்வுகளைக் கவனிக்கத் தவறும் மாதிரிகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தவறான மீள்திறன் உணர்வை அளிக்கும்.

அரசாங்கம் தம்மை பாதுகாத்துக்கொள்ள, இலங்கையில் ஏற்படக்கூடிய உணவுப்பிரச்சினையை மேற்காசிய போரின் நெருக்கீட்டால் உலகப் பிரச்சினையாக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பகுதியளவில் அல்லது உடனடி காரணமாக மேற்காசிய போர் அமைகின்ற போதிலும் கடந்த ஆண்டு இறுதியில் முழு இலங்கைத் தீவையும் பேரிடருக்குள் தள்ளியிருந்த டித்வா புயலின் தாக்கமும் இலங்கையின் உணவு நெருக்கடியை துரிதப்படுத்தக்கூடிய அல்லது அதிகரிக்கக்கூடிய காரணியாக அமைகின்றது. இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி சமூகத்தினரின் வாழ்வாதாரம் விரைவில் மீள்வதற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் ஆதரவளிப்பதற்காக 16.5 மில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச உதவியைக் கோரி, ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகம் இவ்ஆண்டின் ஆரம்பத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது. டித்வா புயலானது, கடந்த பல பத்தாண்டுகளில் நாடு சந்தித்த மிகக் கடுமையான காலநிலை அதிர்ச்சிகளில் ஒன்றாகும். இது நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்து, 22 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. நீடித்த பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே பாதிப்புகள் அதிகரித்திருந்த ஒரு காலகட்டத்தில், 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தற்போது உணவுப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து உதவிகளுக்காக அவசரமாகத் தேவைப்படுகிறார்கள் என்ற அறிவிப்பையும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கியது. 

இலங்கை 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீட்சி பெற்று வருகின்ற காலப்பகுதியிலேயே டித்வா புயல் மீளவொரு சரிவை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவுகளை மெல்ல மெல்ல அனுபவிக்கும் காலப்பகுதியில் மேற்காசிய போரும் எரிபொருள் நெருக்கடியும் உரத்தட்டுப்பாடும் மீள சடுதியான நெருக்கடியை விவசாய உற்பத்தியிலும் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியிலும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான நெருக்கீடுகளும் ஏனைய அரசுகளிடம் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் தங்கி எழும் சூழல் இலங்கைக்கு நிலையான தீர்வை வழங்கப் போவதில்லை. இது இலங்கையின் மீட்சிக்கான தற்காலிக நடவடிக்கைகளாகவே அமைகின்றது. தற்காலிக நடவடிக்கை என்பதாலேயே இன்னொரு நெருக்கடி வருகையில் கடந்த நெருக்கடியின் அமிழ்ந்து போயுள்ள தாக்கங்கள் மீள சடுதியாக அதிகரிக்கும் நிலைமைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கை தற்காலிக நடவடிக்கைகளுக்கு அப்பால் சிந்தித்துச் செயல்பட வேண்டியதுடன், நீண்டகாலக் கட்டமைப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை உரத்தட்டுப்பாடுடனேயே ஆரம்பமாகியது. இவ்அனுபவம் மற்ற எல்லாவற்றையும் விட ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. திட்டமிட்ட மாற்றத்திற்கும் திட்டமிடப்படாத சரிவுக்கும் உள்ள வேறுபாடு நாம் அடையும் இலக்கில் இல்லை. 2022ஆம் ஆண்டு செயற்கை உர இறக்குமதியை நிறுத்தும் திட்டத்தை கோத்தபாய அரசாங்கம் பரீட்சித்தது. 2026ஆம் ஆண்டு திட்டமிடாத வகையில் மேற்காசிய போரின் விளைவு செயற்கை உர இறக்குமதியை கட்டுப்படுத்துகின்றது. எனவே இரண்டுமே இறுதியில் இரசாயன உரப் பயன்பாடு குறைக்கப்படும் ஒரு இடத்தில்தான் முடிவடைகின்றன. இது செயற்கை இரசாயண உரப் பயன்பாடு கட்டுப்படுத்த வேண்டிய தேவையை இனங்காட்டுகின்றது. உர விநியோகம் கட்டமைப்பு ரீதியான அழுத்தத்தில் உள்ளது என்பதையும், வரவிருக்கும் காலத்திலும் அவ்வாறே நீடிக்கும் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொள்வதில் இருந்து ஒரு திட்டமிட்ட மாற்றம் தொடங்குகிறது. இரசாயண உர இறக்குமதியை கட்டுப்படுத்தும் கோத்தபாய அரசாங்கத்தின் எண்ணம் சரியானதாக அமைந்த போதிலும் அணுகுமுறை தோல்வியே பாரிய உணவு நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருந்தது. வேறுபாடு என்பது முற்றிலும் அதற்கான தயாரிப்பு, செயல்முறைகளை வரிசைப்படுத்துதல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு, மற்றும் என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பது குறித்த தகவல்தொடர்பின் நேர்மை ஆகியவற்றில்தான் உள்ளது. இதனை திறனாக ஆய்வு செய்வதும் நடைமுறைப்படுத்துவதும் திட்டமிடலில் முக்கியமாகிறது. இலங்கை ஒரு விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட நாடாக காணப்படுகின்ற போதிலும், உலக நெருக்கடி இலங்கையின் விவசாய உற்பத்தியில் நெருக்கீட்டை உருவாக்குவது இலங்கையின் பொருளாதார கொள்கை தோல்வியையே அடையாளப்படுத்துகின்றது. இது வினைத்திறனுடனான திட்டமிடலுடன் சீர்செய்யப்பட வேண்டிய தேவையை சமகால நெருக்கடி உறுதி அடையாளப்படுத்துகின்றது.

எந்தப் பயிர்களும், எந்த விவசாய முறைகளும் செயற்கை உள்ளீடுகளை அதிகம் சார்ந்துள்ளன. எனவே மிகவும் பாதிக்கப்படக்கூடியவை எவை என்பதை இது பட்டியலிடுகிறது. குறுகிய காலத்தில் இயற்கை விவசாய முறைகளுக்கு மாறுவது மிகவும் கடினமானது. எனினும் சாத்தியமான விவசாயிகள், பகுதிகள் மற்றும் பயிர்களை அடையாளம் காண்பதும் அதனை இயற்கை விவசாய முறைமைக்கு மாற்றுவதும் அவசியமாகிறது. பொதுவாக மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் உள்ள தரம் குறைந்த மண்ணில் விளையும் மானாவாரிப் பயிர்கள் மற்றும் திடீர் மாற்றம் கடுமையான உணவுப் பாதுகாப்புச் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ள, நீர்ப்பாசனம் செய்யப்பட்ட, அதிக மகசூல் தரும் முறைகளிலிருந்து இவற்றைத் தெளிவாக வேறுபடுத்துகிறது. ஏற்கனவே இருந்தும் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை விவசாயப் பயிற்சியாளர்கள், வேளாண் அறிவியல் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில விரிவாக்க அமைப்புகளின் வலையமைப்பை இது திரட்டுகிறது. மேலும் இது உடனடியாகத் தொடங்க வேண்டும்.  2026 மேற்காசிய நெருக்கடி காலப்பகுதிக்குள் இந்த மாற்றம் நிறைவடைந்துவிடும் என்பதற்காக அல்ல. மாறாக, இந்த மாற்றம் குழப்பமானதாக இல்லாமல் ஒழுங்கானதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான தயாரிப்புகள் இப்போதே தொடங்க வேண்டும்.

எனவே, மேற்காசிய போர் எரிபொருள் நெருக்கீட்டை மாத்திரம் ஏற்படுத்தவில்லை. அதற்காக மாத்திரம் முழு அரசியல் கட்டமைப்பும் செயற்படுவது தவறானதாகும். இலங்கையின் உணவுப் பிரச்சினையை துரிதப்படுத்தக்கூடிய அபாயத்தையும் மேற்காசிய போர் கொண்டுள்ளது. அதனை சீர் செய்யக்கூடிய வழிமுறைகைளையும் இலங்கை சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. அதேவேளை அச்சிந்தனையும் செயற்பாடும் குறுகிய கால பொறிமுறையாக அமைந்து விடக்கூடாது. நீண்ட கால விளைவுகளை உறுதி செய்ய வேண்டும். அதுவே நிலையான மாற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும். குறைந்தபட்சம் இலங்கையின் விவசாய பொருளாதாரத்தின் தன்னிறைவையாவது பாதுகாக்க முடியும். இது தொடர்பில் இலங்கை அரசியல் ஆழமான சிந்தனையையும் செயற்பாட்டையும் விரிவுபடுத்த வேண்டும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும் தமிழரசுக்கட்சியின் நிராகரிப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-