எத்தியோப்பியா உள்ளக மோதல்; பிராந்திய மோதலாக பரிணமிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

உலகம் கொரோனாவிற்கு எதிரான போரை நிகழ்த்தி கொண்டிருக்கும் சமகாலப்பகுதியில் ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவின் வடக்கில் மோதல்கள் எல்லைகள் முழுவதும் பரவி, ஒரு மூலோபாய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றன. உள்நாட்டு ஆயுதப்போர் கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தி வருவதுடன் இலட்சக்கணக்கான மக்களை நாடற்ற அகதிகளாக இடம்பெயர செய்துள்ளது. எத்தியோப்பியாவில், டைக்ரேயின் வடக்கு பகுதியில், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF - Tigray People's Liberation Front) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான உள்நாட்டு பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் இருக்கும் 2.3 மில்லியன் குழந்தைகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையிலேயே சர்வதேச சமகால அரசியல் விவாகரத்தை ஆராயும் இக்கட்டுரை எத்தியோப்பியாவின் போரின் பின்னணியையும் அதன் விளைவையும் தேட முற்பட்டுள்ளது.


கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா தேசத்தில் எழுந்துள்ள போர் முழக்கம் ஆபிரிக்காவின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது. எத்தியோப்பியாவின் வடக்கே டைக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது. தன்னாட்சி பெற்ற இந்த மாகாணத்தில் டைக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். டைக்ரே மாகாணத்தை டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டு வரை எத்தியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். அபே அகமது 2018இல் எத்தியோப்பியாவின் பிரதமரானதிலிருந்து எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையே பதட்டங்கள் உருவாகி வருகின்றன. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக எத்தியோப்பியாவின் ஆளும் கூட்டணியில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி ஆதிக்கம் செலுத்தியது. எத்தியோப்பியாவின் 110 மில்லியன் மக்களில் 6மூ பேரைக் கொண்ட டைக்ரேயன்களை, அரசியல் மற்றும் வணிகத்தில் முக்கியமான பதவிகளில் அபே அகமது ஓரங்கட்டியதாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் எத்தியோப்பியாவை பிளவுபடுத்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

ஜூன் 2020இல் கொரோனாவை காரணம் காட்டி, பிராந்திய தேர்தல்களை அபே அகமது ஒத்திவைத்ததால் பிரச்சினை மோசமடைந்து விட்டது. எத்தியோப்பியாவின் மத்திய அரசு, ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என டீக்ரே மக்கள் இயக்கத்தினர் கூறுகிறார்கள். கடந்த செப்டம்பர் 2020இல், டைக்ரே மக்கள் இயக்கத்தினர், தாங்களே ஒரு தேர்தலை நடத்தினார்கள். அதை ஆளும் மத்திய அரசு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டது. இந்நிலையிலேயே மோதலின் உச்சக்கட்டமாக, நவம்பர் 4ஆம் தேதி மெக்கல்லுக்கு அருகிலுள்ள எத்தியோப்பிய தேசிய பாதுகாப்பு படை தளத்தை டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி போராளிகள் தாக்கியதாக பிரதமர் அபே அகமது கூறியதை அடுத்து போர் தொடங்கியது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தினரில் பெரும்பாலானவர்கள், துணை இராணுவப் படையில் இருந்து வந்தவர்கள். இவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். சுமாராக 2,50,000 பேர் அதில் இருக்கிறார்கள். டைக்ரே இயக்கத்தில் படை பலம் அதிகமாக இருப்பதால், இந்த பிரச்னை நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம் என்றும் இதில் ஏராளமான சேதாரம் ஏற்படலாம் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள் அவ்வாறானதொரு போக்கே எத்தியோப்பா போரில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அபே அகமதுவின் அரசாங்கம் டைக்ரேயில் ஆறு மாத கால அவசரகால நிலையை அறிவித்து இணையம் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை மூடியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு சண்டையால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சூடானுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். ஐ.நா. வின் கூற்றுப்படி, இந்த மோதல் குறைந்தது 20,000 பொதுமக்களை சூடானுக்குள் எல்லையை கடக்க நிர்ப்பந்தித்தது தெரியவந்தது. மேலும் இந்த மோதலால் ஒன்பது மில்லியன் பேர் இடம்பெயரக்கூடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

மோதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. ஆனால் யார் பொறுப்பு என்பதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியது. உள்ளூர் சாட்சிகள் டைக்ரேயன் படைகளை குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி எத்தியோப்பியன் அரசாங்கத்தை குற்றம் சாட்டியது. ஐ.நா. மனித உரிமைகள் தலைவரான, மிச்செல்லே பாச்செலெட் (Michelle Bachelet), 'இந்த நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறும் அபாயம் உள்ளது,' என்று கூறியதுடன், படுகொலை உறுதிசெய்யப்பட்டிருந்தால், ஏதேனும் போர்க்குணமிக்க படைகள் அதில் ஈடுபட்டிருக்குமானால், அது போர்க்குற்றங்களை விளைவிக்கும் என்று எச்சரித்தார். பழிவாங்கும் தாக்குதல்களுக்கான சான்றுகளும் உள்ளன: நவம்பர் 14ஆம் திகதி, மேற்கு எத்தியோப்பியாவில் பஸ்ஸில் பதுங்கியிருந்து தெரியாத துப்பாக்கிதாரிகள் 34 பேரைக் கொன்றதாக நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோன்ற வேலைநிறுத்தங்கள் எத்தியோப்பியாவின் பிற பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர். அமெரிக்க டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் தேசிய பாதுகாப்புக் குழுவும் சண்டையை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளனர். 'மெக்கெல்லைச் சுற்றியுள்ள சண்டையில் போர்க்குற்றங்கள் உட்பட பொதுமக்களுக்கு எதிரான வன்முறை ஆபத்து குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்' என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான பிடனின் தேர்வு ஜேக் சல்லிவன் கூறினார்.

எத்தியோப்பியா உள்நாட்டு மோதலானது எல்லை தாண்டி பிராந்தியத்தை சிதைக்கும் அபாயமும் அரசியல் ஆய்வாளர்களால் அவதானிக்கப்படுகிறது. குறிப்பாக எத்தியோப்பாவுடன் நீண்டகாலம் எல்லைப்போரை மேற்கொண்டு 2018ஆம் ஆண்டு ஆண்டு எத்தியோப்பா பிரதமர் அபே அகமது ஐ.நா. தீர்ப்பின்படி, மோதலின் மையப் பகுதியாகவுள்ள சர்ச்சைக்குரிய பிரதேசமான பேட்மேவை விட்டுக்கொடுக்க ஒப்புக் கொண்டதால், எத்தியோப்பாவுடன் நட்பாய் உள்ள எரித்திரியா மீதும் எத்தியோப்பியா உள்நாட்டு போர் விஷ்தரணம் பெற வாய்ப்பு காணப்படுகிறது. ஒரு டைக்ரேய செய்தித் தொடர்பாளர், மேலும் தொடரும் தாக்குதல்கள் எத்தியோப்பிய இலக்குகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், எரித்திரியாவுக்கு எதிராகவும் நிகழ்த்தப்படும் என்று எச்சரித்தார். இதில் ஈடுபட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கை விபரத்தைக் குறிப்பிடாமல், எரித்திரியா 16 படைப் பிரிவுகளை எத்தியோப்பியாவிற்கு அனுப்பியுள்ளதாக டைக்ரே பிராந்திய தலைவரான டிப்ரெட்சன் ஜெப்ரெமிக்கேல் (Debretsion Gebremichael) ராய்ட்டர்ஸூக்கு தெரிவித்தார். டைக்ரே மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய படையினர் எரித்திரிய விமான நிலையத்தைப் பயன்படுத்தினர் என்று கூறி, டைக்ரேயன் படைகள் எரித்திரியாவுக்குள் ராக்கெட்டுகளை வீசியதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னனியின் எத்திரியா மீதான மோதல் வாய்ப்புக்கு எத்தியோப்பிய உள்ளக முரண்பாட்டில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயற்படுவது மட்டும் காரணமாக அமைவதில்லை. உள்ளக முரண்பாட்டில் மத்திய அரசு சார்பு நிலை நேரடி காரணமாகின்ற போதிலும் பிரதான காரணமாக சர்ச்சைக்குரிய பேட்மேவ் நிலத்தை எத்தியோப்பியாக்கே சொந்தமானது என டைக்ரே மக்கள் விடுதலை முன்னனியினர் உரிமைகோரும் நிலையில் எத்திரியா பேட்மேயை தனது சொந்தம் என்று உரிமை கோருவதற்கான பழிவாங்கலாகவே எத்திரியா மீதான  டைக்ரே மக்கள் விடுதலை முன்னனியின் போர் முனைப்பு காணப்படுகிறது.  2018ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை என்பது டைக்ரேயை 'விற்றுவிடுவது' என்று டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி விமர்சித்து சமாதான உடன்படிக்கையை முற்றாக நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பா பிரதமர் அபே அகமதுவின் தலைமையின் கீழ் வல்லாதிக்க அரசுகளுடன் சமஅளவில் நட்பு பாராட்டும் அரசாகவும் காணப்படுகிறது. குறிப்பாக, உலக அளவில், எத்தியோப்பியா ஒரு முக்கியமான யு.எஸ். நட்பு நாடாக இருந்து வருகிறது, அதே நேரத்தில் எத்தியோப்பியாவில் அதிக நேரடி அந்நிய நேரடி முதலீட்டை சீனா கொண்டுள்ளது. எத்தியோப்பியாவின் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கை, போட்டி நாடுகளின் நலன்களை அதன் இயற்கை வளங்களில் சமநிலைப்படுத்துவதையும் அணுகல் மற்றும் முதலீட்டிற்கு ஈடாக மூலோபாய நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் வல்லாதிக்க அரசுகளின் ஆதரவில் உள்ளக மோதலை சீர்செய்யக்கூடிய வல்லமையை எத்தியோப்பியா கொண்டுள்ளது. எனிலும், உள்ளக மோதலின் பிராந்திய விஷ்தரிப்பு வல்லாதிக்க சக்திகளின் புகலிடமாக்குவதுடன் எத்தியோப்பியாவை தொடர்ச்சியான இருண்ட போர் தேசமாக மாற்றும் அபாயமும் சமகால போக்கில் அதீதமாக காணப்படுகிறது. 2019ஆம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரதமர் அபி அகமதுவின் இராஜதந்திர செயற்பாட்டிலேயே எத்தியோப்பியாவின் எதிர்கால செல்நெறி தங்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-