யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும் இவ்சனத்தொகை விகிதாசாரத்தின் மாறுபாடுகள் தொடர்பான அச்சங்களும் வலுவான செல்வாக்கு செலுத்துகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான இனமுரண்பாடாக தமிழ்-சிங்கள முரண்பாடே விவாதிக்கப்பட்டு வந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் சிங்கள-முஸ்லீம் கலவரங்கள் பிரதான விவாதப்பொருளை உருவாக்கியிருந்தது. இதன் பின்னணியில் முஸ்லீம் சனத்தொகையின் அதிகரிப்பு தொடர்பில் சிங்கள பேரினவாதத்திடம் மேலெழுந்த அச்சங்களும் வலுவான காரணமாகியது. எனினும் மறுமுனையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் சனத்தொகை விகிதம் குறைவடைந்து செல்வது தொடர்பில் எவ்வித கரிசணையும் அற்ற நிலையே அச்சமுகத்தில் காணப்படுகின்றது. இதில் யாழ்ப்பாண வைத்தியத்துறை நவீன பாய்ச்சலை உள்வாங்கியுள்ளது. கரு வளர்ச்சி சிகிச்சை பணக்காரர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்ற நிலையை மாற்றி ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான நிறுவன ஒத்துழைப்பை இலங்கையின் தமிழர் நிலப்பரப்பில் அறப்பணிகளை மேற்கொள்ளும் சிவபூமி அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5000இற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். எனினும் இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை தமிழர் தரப்பில் சரியாக கொண்டு செல்லப்படவில்லையோ என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது.
இக்கட்டுரை சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவத்துறை மற்றும் யாழ்ப்பாணப் போதன வைத்தியசாலை இணைந்து மேற்கொள்ளும் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தின் முக்கியத்துவத்தினை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் போர்கள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நேரடி மட்டத்தில், போர்கள் நோயுற்ற தன்மை, இறப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார அமைப்புகளின் அழிவு மற்றும் மக்கள் இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும். இருப்பினும், அவற்றின் விளைவுகள் பெரும்பாலும் உடனடி பின்விளைவுகளுக்கு அப்பால் நீண்டுள்ளன. தேவகுமார் (2014) மற்றும் பேடெரா (2021) ஆகியோரின் ஆய்வுகள், தலைமுறைகளுக்கு இடையேயான சுகாதார விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன. இதன் தாக்கம் ஆழமாகச் சென்று தலைமுறைகள் முழுவதும் தொடர்கிறது என்பதைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் உலகளாவிய ஸ்திரமின்மையுடன், மக்கள்தொகை மாற்றங்களில் போரின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. கருவுறுதலில் மோதல் வெளிப்பாட்டின் விளைவு குறித்து முந்தைய ஆய்வுகள் கலவையான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளன. இலங்கையின் மோதல்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சராசரியாக 1000 பேருக்கு 5.42 பிறப்புகள் குறைந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் பகுதிகளில் பெண்களின் திருமண வயது அதிகரிப்பது கருவுறுதல் குறைவதற்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இலங்கை தமிழர்கள் ஆயுத மோதலுக்கு ஆளானதால் 1000 பேருக்கு 0–4 உயிருள்ள பிறப்புகள் குறைத்ததாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
1881ஆம் ஆண்டில் மலையகத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் பிரித்தானிய சனத்தொகை கணக்கெடுப்பில் ஒரே இனக்குழுமமாகவே உள்வாங்கப்பட்டிருந்தார்கள். இந்தப்பின்னணியில் இலங்கைத்தமிழர்களின் சனத்தொகை விகிதம் 24.9சதவீதமாக அமைந்திருந்தது. 1911ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் இரண்டு வகை தமிழர்களையும் தனித்தனியாகக் கணக்கிடத் தொடங்கினர். அப்போது இருவரும் தலா 12.9 சதவீதமாக இருந்தனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சதவீதம் 11.2 ஆகவும், இந்தியத் தமிழர்களின் சதவீதம் 4.2 ஆகவும் இருந்தது. 1981ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழர்கள் 12.6 சதவீதமாக இருந்தனர், இது 1911 இல் இருந்ததை விட சற்று குறைவாகும். 1983 இல் பிரிவினைவாத பிரச்சாரம் வெடித்ததிலிருந்து பல தசாப்தங்களில் 1.5 மில்லியன் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய சனத்தொகை மதிப்பீடுகள் நடைபெறுகின்றது. இதில் இன்னும் வீழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈழத்தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சியில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றது. சுகாதாரம் சார்ந்த பிரச்சினையில் ஒன்றாகவே கருத்தரித்தல் அமைகின்றது. மோதல்கள் பெண்களின் உளவியல் அழுத்தங்களையும் மோசமான ஊட்டச்சத்து நிலையையும் ஏற்படுத்தக்கூடும், இதனால் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கும். இந்தப்பின்னணியிலேயே கருவள சிகிச்சையின் முக்கியத்துவத்துவம் ஈழத்தமிழர்களுக்கு அவசியமாகின்றது. கருவள சிகிச்சையின் மிகவும் மதிப்புமிக்க நன்மைகளில் ஒன்று, கருவுறாமைக்கான பல்வேறு காரணங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை வழங்குவதாகும். கருத்தரிக்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு உதவ கருவுறுதல் சிகிச்சையே பெரும்பாலும் ஒரே வழியாக அமைகின்றது. கருவுறுதல் சிகிச்சைகளின் குறிக்கோள் வெற்றிகரமான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் அடைவதாகும்.
இனப்பெருக்கம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இன சிறுபான்மையினர் கருவுறுதல், பராமரிப்பு மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பத்தை அணுகுவதில் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் உள்ளன. வைத்தியத்துறையில் கரு வளர்ச்சி சிகிச்சை நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அதேவேளை நீண்ட காலமாக ஈழத்தமிழர்களிடமும் பணம் படைத்தோருக்கே அதற்குரிய வாய்ப்புக்களும் காணப்பட்டது. குறித்த மருத்துவத்திற்கு இந்தியாவிற்கு செல்ல வேண்டிய தேவை காணப்பட்டது. பின்னாளில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் சில தனியார் மற்றும் கூட்டுறவு வைத்தியசாலைகளில் கரு வளர்ச்சி சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையிலும் கரு வளர்ச்சி சிகிச்சைகள் நடைபெறுகின்றன. எனினும் பணச்செலவு அனைவரும் பெறுவதில் தொடர்ச்சியான தடையாகவே இருந்து வந்தது. இப்பின்னணியிலேயே யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையிலும் இலவச சேவையாக கரு வளர்ச்சி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வளப்பற்றாக்குறை நிறைவான சேவையை வழங்குவதில் இடர்பாடுகளை உருவாக்கியிருந்தது. இந்நிலையிலேயே சிவபூமி அறக்கட்டளையின் ஈடுபாடும் பங்களிப்பும், யாழ்ப்பாண போதன வைத்தியசாலையின் கரு வளர்ச்சி சிகிச்சைக்கு தனியான நிலையம் உருவாகவும், தேவையான தொழில்நுட்ப வளங்களை கொண்டு வந்து சேர்ப்பதிலும் பயனுடைய பங்காளராக அமைந்துள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு சென்றிருந்த வேளை, மூத்த வழக்கறிஞர் புகழ்பெற்ற செனற்றர் கனகநாயகம் தம்பதிகளின் மகள் வைத்திய நிபுணர் பாலசுப்பிரமணியம் தம்பதிகள் எட்டு கோடி மதிப்பிலான தமது வீட்டுக் காணியை அறப்பணியினை மேற்கொள்ள சிவபூமி அறக்கட்டளைக்கு வழங்கியிருந்தார்கள். இக்காணியை தமிழ்த்தேசியத்தின் உன்னதப் பணிக்கு சிவபூமி அறக்கட்டளையும் பயன்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக, சிவபூமி அறக்கட்டளை அவர்களுடன் இணைந்து ஏப்ரல்-21, 2024அன்று இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் பாரமரிப்பற்றிருந்த காணியை கொள்வனவு செய்து யாழ்ப்பாணப் போதன வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ சிகிச்சை நிலையம் உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கான பெரும் ஈடுபாட்டையும் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கியிருந்தார். எனினும் அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமையால் குறித்த செயற்பாடு அடுத்த கட்ட நகர்வின்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் கடந்த ஒரு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்கி வருவதுடன், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 5000இற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். வடமாகாணம் மட்டுமல்லாது ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பல ஏழை குடும்பங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகை தந்து இங்கு சேவை பெற்றுக் கொள்கிறார்கள். இவ் இலவச கருவளர்ச்சி சிகிச்சை நிலையத்தில், நவீன தரத்தில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் சேவைகள் வழங்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் (17.07.2024) மூன்றரைக் கோடி ரூபா செலவில் அல்ட்ராச வுண்ட் ஸ்கான் இயந்திரம் சிவபூமி அறக்கட்டளை ஏற்பாட்டில், இங்கிலாந்து அபயம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது. இதற்கான ஒழுங்குபடுத்தல்களை அபயம் அமைப்பின் நிறுவுநர் வைத்திய நிபுணர் பார்த்தீபன் அவர்கள் வழங்கி இருந்தார். இவ்இயந்திரத்திற்கான முழுச்செலவையும் திரு சதா. மங்களேஸ்வரன் சகோதரர்கள் அபயம் அமைப்பு ஊடாக வழங்கியுள்ளனர். மங்களேஸ்வரன் மற்றும் அவர் சகோதரர்கள் தமிழ்த்தேசியப் பணியில் எல்லையில்லா ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அபயம் அமைப்பு தொடர்ச்சியாக மருத்துவ செலவுகளுக்கான ஒரு தொகை பணத்தை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம், சேவை பெற வருகிறவர்களின் தரவுகளை உரிய முறையில் பாதுகாத்து மிகச் சிறந்த வைத்திய நிபுணர்களின் உதவியுடன் நிறைவான சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. வைத்திய சேவை திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரையும், சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரையும் இங்கு நடைபெறுகிறது. மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவ அவர்களை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரையும், மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராமன் அவர்களை புதன்கிழமை மதியம் 1.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரையும், மகப்பேற்று வைத்திய நிபுணர் கஜேந்திரன் அவர்களை வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரையும், சேவை பெற விரும்புபவர்கள் சந்திக்கக் கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து சிவபூமி அறக்கட்டளை மேற்கொள்ளும் இலவச கருவள சிகிச்சை சேவை தமிழ்த்தேசியத்துக்கு தேவையானதொரு உன்னத பணியாகும். ஈழத்தமிழரசியல் தமிழ்த்தேசியத்தை வெறுமனவே தேர்தல் அரசியலுக்கான பிரச்சார சொல்லாக மாத்திரமே பயன்படுத்தி வருவதனால், அதன் ஆணிவேர் அரிக்கப்படுவதில் எவ்வித கரிசணையுமற்று உள்ளார்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பொறுத்த வரையிலேயே கடந்த ஆண்டு ஏழாக இருந்த பாராளுமன்ற ஆசனம் ஆறாக குறைவடைந்துள்ளது. அடிப்படையில் இலங்கை மக்கள் தொகையில் ஈழத்தமிழர்களின் விகிதம் குறைவடைந்துள்ளமையே பாராளுமன்ற ஆசனக்குறைவிற்கு காரணமாகின்றது. எனினும் அதுசார்ந்த விழிப்போ கரிசணையோ இன்றி குறைவடைந்த ஆறுக்குள் தமது ஆசனத்தை உறுதிப்படுத்த போட்டியிடுபவர்களாகவே ஈழத்தமிழரசியல் இருப்பது அவலமானதாகும். இவ்வாறான பின்னணியில் வைத்தியத்துறை சமூக செயற்பாட்டாளர்களுடன் ஒன்றிணைந்து தமது எல்லைக்குட்பட்டு ஈழத்தமிழர்களின் இனப்பரம்பலை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். இதனை இதன் முக்கியத்துவத்தை தமிழ்ப் பரப்பில் விதைக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் காணப்படுகின்றது. மேலும், குறித்த இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தில் சில மருந்து பொருட்களை வெளியே வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் காணப்படுகின்றது. இதனை எதிர்காலங்களில் நிவர்த்தி செய்யக்கூடிய ஒத்துழைப்பை புலம்பெயர் சமுகம் வழங்க வேண்டும்.
எனவே, தமிழ்த்தேசிய இருப்பு என்பது வெறுமனவே அரசியல் வார்த்தை பிரயோகமாக அமைவதில்லை. மண், மக்கள், மாண்பின் இருப்பிலேயே தமிழ்த்தேசிய இருப்பும் பாதுகாக்கப்படுகின்றது. அந்நிய மோகங்களில் மாண்பை இழக்கிறோம். எல்லையோர ஆக்கிரமிப்புக்களால் மண்ணை இழக்கிறோம். இடப்பெயர்வு மற்றும் சமுகவியல் தாக்கங்களால் மக்களையும் இழக்கிறோம். இதில் வைத்தியத்துறை சிவபூமி, அபயம் போன்ற சமுக நிறுவனங்கள் மற்றும் கலாநிதி ஆறு திருமுருகன், வைத்திய நிபுணர் பாலசுப்ரமணியம் தம்பதியினர், வைத்திய நிபுணர் பார்த்தீபன், சதா. மங்களேஸ்வரன் சகோதரர்கள் போன்ற சமூக செயற்பாட்டாளர்களின் ஈடுபாட்டுடன் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்கள். இதனை அரவணைத்துக் கொள்வதும் வளர்த்துச் செல்வதும் தமிழ்த்தேசியத்தின் பணியாகும். இதனை முன்னுதாரணமாக கொண்டு மக்கள் இருப்பை பெருக்கக்கூடிய முறைகளை கண்டறிவதும், தேசியத்தின் பிற தூண்களான மண் மற்றும் மாண்பை பாதுகாக்கும் செயற்பாடுகளிலும் தமிழ் சமுகத்திடம் விழிப்பு வரவேண்டியது அவசியமாகும்.
Comments
Post a Comment