தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-
தமிழகம்-ஈழத் தமிழர் உறவு தமிழ்த் தேசிய அரசியல் இருப்பில் அவசியமானதாகும். தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை இலங்கை இந்திய அரசுகள் பிரிவினைவாத சிந்தனையாக உருவகப்படுத்துவதனால், அவ்விரு நிலப்பரப்பின் இடைவெளியை மக்களுக்கிடையிலான இடைவெளியாகவும் பேணுவதில் விழிப்பாக உள்ளார்கள். சமகால நிகழ்வுகள், அரசுகளின் எதிர்பார்க்கைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழக-ஈழத்தமிழ் மக்கள் குழுக்களிடம் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் தமிழ் மொழி உரையாடலை, தமிழகத்தின் இளையவர்கள் 'சிங்கள தமிழ்' என்ற அடைமொழிக்குள் அழைக்கும் சூழலே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான முதல் எதிர்க்குரலும், மரண ஓலமும் தமிழகத்திலிருந்தே கிடைக்கும். ஆயினும் சமகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக தென்னிலங்கையையும் பொருத்தி பார்க்கும் நிலைமைகளையே தமிழகத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதில் கலை இலக்கிய வறுமையும் பாரிய செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமைகின்றது. இக்கட்டுரை தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர்களின் நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரை உருவாக்கத்திற்கான தூண்டுதலை அண்மையில் வெளிவந்து, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை உறுதி செய்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' (Tourist Family) எனும் தென்னிந்திய திரைப்படமும், அதனை தழுவி இடம்பெறும் உரையாடல்களே ஏற்படுத்தியிருந்தது. தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களான சசிக்குமார் மற்றும் சிம்ரன் அவர்களின் நடிப்பில், இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தின் மையக்கதை 'அன்பு பாராட்டுதலையே' வலியுறுத்துகிறது. அதற்கான களத்தை ஈழத்தமிழ் அகதி-தமிழக மக்களை மையப்படுத்தி நகர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஈழத்தமிழ் மொழி நடையிலேயே மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளமைக்கு இயக்குனரை பாராட்ட வேண்டும். ஈழத்தமிழ் கதைகளை தென்னிந்தியா சினிமா உள்வாங்குவதில், ஈழத்தமிழ் மொழி நடை வேறுபாட்டால் தமிழக இரசிகர்களை ஈர்க்க முடிவதில்லை, ஆதலால் வணிகரீதியாக வெற்றி பெற முடிவதில்லை என்றதொரு குறை காணப்படுகிறது. அதனை டூரிஸ்ட் பேமிலியின் கதை உருவாக்கத்தில் இயக்குனர் அபிஷன் சீர்செய்துள்ளார். வலிகள் நிறைந்த இலங்கை அகதிகள் கதையினை சிரிப்புடன் இழையோடும் அரசியலூடாக சிந்திக்க வைத்துள்ளார். படம் முழுமையாக பார்வையாளர்களை திரைக்குள் இழுத்து வைத்துள்ளது. இப்பத்தி எழுத்தாளர் ஈழத்தமிழர் என்பதால் இக்கதை ஈர்க்கப்படுகின்றது என்பதற்கு அப்பால், சமுகவலைத்தள பொதுப்பதிவுகளும் நேரான கருத்தையே கொண்டுள்ளது.
படத்தின் கதையை முழுமையாக கூறுவது பொருத்தமாக அமையாது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் இராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருவதிலிருந்து கதை ஆரம்பிக்கப்படுகின்றது. வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை ஆரம்பத்தில் மறைத்த போதிலும், நாளடைவில் சகஜமாக ஈழத்தமிழ் அகதி என்ற விபரணத்துடன் வாழத்தொடங்குகின்றார்கள். தாஸ் குடும்பம் இராமேஸ்வரத்திற்கு வந்த சமகாலத்தில், அங்கு நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தை காவல்துறை தேடுகிறது. இதில், தாஸ் குடும்பம் எவ்வாறு ஈழத்தமிழ் அகதி அடையாளத்துடன் தெருக்காரர்களுடன் சகஜமானார்கள் மற்றும் இறுதியில் காவல்துறையின் சந்தேகத்திலிருந்து எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பதாகவே கதை நகர்த்தப்படுகின்றது. இதற்குள், அரசியலாக ஈழ அகதிகள் தமிழகத்தில் அரச இயந்திரத்தின் உயர் அதிகாரிகளூடாக சந்திக்கும் பிரச்சினைகளை சொல்லி இருப்பதுடன், ஈழத்தமிழ் மற்றும் தமிழக மக்களிடையே எவ்வாறு அன்பு பகிரப்படுகின்றது என்பதையும் இயக்குனர் எடுத்துக் காட்டுகின்றார்.
இத்தகைய ஈழத்தமிழர்களை மையப்படுத்திய கதைகள் தென்னிந்திய திரைக்கலைப் படைப்பில் வெளிப்படுவது, வெறுமனவே திரைக்கதையுடன் ஈழத்தமிழர் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதில்லை. திரைப்படத்தை பற்றிய நிகழ்ச்சி சார்ந்த உரையாடல்களிலும் ஈழத்தமிழர்கள் பற்றிய கதைகள் விவாதத்துக்கு கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி நிகழ்வொன்றில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி தன்னுடைய அனுபவத்துக்குள் புலப்பட்ட ஈழத் தமிழர் கதையை குறிப்பிட்டிருந்தார். 'ஒரு மாசத்துக்கு முன்னாடி மதுரை பக்கத்துல திருப்பத்தூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்த போது, ஒரு பத்து-பதினைந்து பேர் வந்தாங்கள். '35 ஆண்டுகளாச்சு அண்ணா, நாங்க எல்லாம் இங்க வந்து, ஆனால் இன்னும் வேலிக்குள்ள தான் இருக்கோம். சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை. நீங்களும் எங்களுக்காக பேசுங்க அண்ணானு' சொன்னாங்கள். அதுக்கு அப்புறம் அது சம்பந்தமா விசாரிச்சு பார்க்கும் போது, தமிழ் நாட்டில பல இடங்களில இருக்காங்கள். தாய் மண்ணுனு சொல்றொம். இது தான் தாய் வீடுனு சொல்றொம். ஆனா எங்கோ ஒரு தேசத்தில கூட ஒரு சுதந்திரம் கொடுக்கப்படுது. ஒரு வாழ்க்கை கிடைக்குது. ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுறாங்கள். ஆனால், நம்ம தேசத்தில அது கிடைக்கல. அது மிகப்பெரிய வலியா இருந்தது' என சமுத்திரக்கனி குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் அகதிகளின் நிலை தொடர்பில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அது தொடர்பான ஆதங்கத்தையும் வெளிப்படுத்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் நிகழ்ச்சியே களத்தை உருவாக்கியது. சமுத்திரக்கனியை நேசிப்பவர்கள் மற்றும் தொடருபவர்கள் இந்நிகழ்வுக்கு பின்னர் ஈழத்தமிழ் அகதிகளின் நெருக்கடியான வாழ்க்கை தொடர்பாக சிறிதேனும் தேடுவார்கள். இது அவசியமானதாகும்.
அவ்வாறே ஈழத்தமிழர் கதையை குறிப்பாக ஈழத்தமிழர்களின் உரிமைசார் போராட்ட வரலாற்றை திரைப்படைப்பினூடாக சொல்வதில் உள்ள இடர்பாட்டை இன்னொரு டூரிஸ்ட் பேமிலி நிகழ்வில் கதாநாயகன் சசிக்குமார் பதிவு செய்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர், 'வல்வெட்டித்துறை அப்படி என்ற ஊரில இருந்து அந்த குடும்பம் (அகதி) வருதுனு வைச்சிருக்கிறீங்கள். அந்த வல்வெட்டித்துறை எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுனு எல்லோருக்கும் தெரியும். இந்த ஈழத்தமிழருடைய வலியை வேதனையை தமிழ் சினிமா சரியாய் பதிவு பன்னிருக்குனு நினைக்கிறீங்களா? நாங்க பேஸ்புக்லயோ சமுக வலைத்தளங்களிலையோ ஏதும் போட்டா முடக்கிடுறாங்கள். பெயரு போட முடியல, புகைப்படம் போட முடியல, அதற்கான வாய்ப்போ இல்லை. அதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்?' எனக்கேட்டிருந்தார். அதற்கு பதலளித்த சசிக்குமார், 'பதிவு பன்னல, பன்னவும் முடியாது சேர். நீங்க பேஸ்புக்ல போட்ட எழுத்தையே முடக்குறாங்கள்னா, படமா நாங்கள் எடுத்தால் காட்சிகளை வெட்டி தான் போடுவாங்கள். அக அது முடியாது. ஆதை இந்த மாதிரி படங்களூடாக கொஞ்சம் கொஞ்சமாக மென்மையான வழியில எடுத்திட்டுதான் வரமுடியும். நாங்க ரொம்ப உறுதியா நீங்க சொல்ற விடயங்கள ரொம்ப வலியா சொன்னம்னா, தனிக்கை குழுவின் தணிக்கைக்கு தான் உள்ளாகும். அது மாறினா தான் நாங்க எடுக்க முடியும்' எனக்குறிப்பிட்டிருந்தார். இது ஈழத்தமிழர்களின் துயரங்களை வீர வரலாற்றை தென்னிந்திய திரைக்காவியத்துக்குள் பதிவு செய்வதில் உள்ள இடர்களை விளக்கியது. மென்மையான அணுகுமுறையினை கொண்டுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திலேயே ஒரு சில காட்சிகள் தணிக்கைக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக படத்தின் முன்னோட்டத்தில் கதாநாயகன் புலியினுடைய பொம்மையை பார்ப்பது போன்ற காட்சிகள் காணப்பட்டிருந்தது. எனினும் முழுமையான படத்தில் அக்காட்சிகளை காண முடியவில்லை. அது தணிக்கைக்கு உள்ளாகியுள்ளது. ஈழத்தமிழர் கதையில் குறைந்தபட்சம் புலி பொம்மையைக் கூட இந்திய தணிக்கைக்குழு அனுமதிக்காத நிலைமைகளே காணப்படுகின்றது.
முழுமையாக ஏதுமே இல்லை என்ற நிலையில், சசிக்குமார் குறிப்பிட்டது போன்று இத்தகைய மென்மையான போக்கில் ஈழத்தமிழர் கதைகளை தென்னிந்திய திரைப்படக் கலை உள்வாங்குவதும், மக்களுக்கு கொண்டு செல்வதும் ஆரோக்கியமானதாகும். இது தமிழக-ஈழத்தமிழ் உறவை உயிர்ப்புடன் பேணுவதற்கான முதன்மையான கருவியாக அமைகின்றது. திரைப்படத்தில் மாத்திரமின்றி அதனை மையப்படுத்திய நிகழ்வுகளிலும் ஈழத்தமிழர் தமிழக அரங்குகளில் பேசுபொருளாகவும் விவாதப் பொருளாக மாறுகின்றனர். டூரிஸ்ட் பேமிலி படத்தை மையப்படுத்திய உரையாடல்களின் இதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான கதைகளை ஈழத்தமிழர்கள் ஊக்குவிப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தினை கொச்சப்படுத்தும் கதைகள் எவ்வித தணிக்கைகளுமின்றி வெளியாகின்றது. அதனை தமிழ்த்தேசியவாதிகள் கண்டித்தும் வருகின்றார்கள். எமக்கு எதிரானதை கண்டிப்பதற்கு சமாந்தரமாக எங்கள் கதைகளை வரவேற்பதுவே, இன்னும் பல கதைகளை தென்னிந்திய திரைக்கலை உலகு உள்வாங்க வாய்ப்பை உருவாக்கும். இதனூடாகவே தமிழகத்தின் புதிய தலைமுறைக்கும் ஈழத்தமிழ் தொப்புள் கொடி உறவை பாதுகாக்க முடியும்.
தமிழகத்தை ஈழத்தமிழருடன் பின்னிப் பிணைந்த புவியியல்-பண்பாட்டு-வரலாற்றுப் பின்னணியில் வைத்து யதார்த்த நிலமைகளுக்கு ஊடாக சரிவர அணுகவேண்டியதன் அவசியத்தை ஈழத்தமிழ் அரசியல் வரலாற்று ஆசிரியர் மு.திருநாவுக்கரசு அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவார். மனிதனது அரசியல் வாழ்வானது அவன் சார்ந்த சூழ்நிலைகளினால் மற்றும் பின்னணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது தெளிவானது. அப்படிப் பார்க்கையில் புவியியல் அமைவிடம் சார்ந்த தர்க்ரீதியான யதார்த்தபூர்வ நிலமைகளின் படி தமிழகம்தான் ஈழத்தமிழர்களின் குருவிக்கூடு. அதேவேளை ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான் இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் (Corner Stone) என்பதனையும் கருத்திற்கொள்ளத் தவறமுடியாது. ஆனால் இந்த இரண்டின் தர்க்கபூர்வ செயற்படு முறைமையையும் அதனது நடைமுறை சார்ந்த அர்தத்தையும் புரிந்துகொள்வதில் இந்திய அரசு தரப்பிலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பாரிய சிக்கல்கள் உள்ளன. இவ்புவிசார் அரசியல் முக்கியத்துவம் பற்றியும் அண்மைய தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஒன்று பதிவு செய்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்துள்ள கடைசி உலகப்போர், ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான் இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் என்பதையும், அதனை பாதுகாக்க தவறிய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பு இலங்கை இராணுவத்தால் நெருக்கடிக்கு உள்ளாகுவதாகவும் திரைக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.
எனவே, டூரிஸ்ட் பேமிலி போன்று ஈழத்தமிழர் கதையை வணிக நோக்கு நிலையிலும் வெற்றி பெறக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இதனை உலகத்தமிழர்கள் கொண்டாடுவதே, எதிர்காலத்தில் இத்தகைய படங்களை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் சூழலையும் உருவாக்கும். குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் இளம் இயக்குனராக முதற் படத்திலேயே ஈழத்தமிழர்களின் துயரை புதிய அணுகுமுறைக்குள்ளால் நகர்த்தியுள்ளமைக்கு ஈழத்தமிர்கள் பாராட்ட கடமைப்படடுள்ளோம். மேலும், டூரிஸ்ட் பேமிலி போன்று முழுமையாக ஈழத்தமிழர் கதைகளை வரவேற்பதுடன், ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் படங்கள் போன்று ஈழத்தமிழர் அரசியலை படத்தில் கதையில் இழையோடும் படங்களையும் வரவேற்பதுவும் அவசியமானதாகும். இதுவே ஈழத்தமிழர் எனும் குருவிக்கான குருவிக்கூட்டையும் பாதுகாக்கும். அவ்வாறே மூலைக்கல்லின் இருப்பின் ஊடாகவே தமிழகமும் பாதுகாக்கப்படும்.
Comments
Post a Comment