தடுப்பு மருந்தை அரசியலாக்குவது கோவிட் தொற்றை அதிகரிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
முழுமையான உலகிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளிலுமே 2020ஆம் ஆண்டு முழுமையாக தவிர்க்க முடியாத சொல்லாக கொரோனா வைரஸ் வியாபித்திருந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிறைவடைகின்ற சூழலிலும் கொரோனா வைரஸின் தாக்கம் முற்றுப்பெறாத தொடராகவே நீள்கிறது. உலக நாடுகள் யாவற்றிலுமே இரண்டாம், மூன்றாம் அலைகள் என கொரோனா இடைவிடாது அழிவுகளை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. மறுபுறம் உலக நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைஸால் ஏற்படுத்தப்படும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் பரிசோதனைகளிலும் மும்மரமாக உள்ளனர். ஓராண்டு காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக தடுப்பு மருந்தை பூரண பரிசோதனை முறைகளினை பின்பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்பது தேடலாக காணப்படுகின்ற போதிலும் உலகின் பல நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். எனிலும் தடுப்பு மருந்து பிரயோகத்திலும் சர்வதேச அரசியல் போட்டி கடுமையாக தாக்கத்தை செலுத்தி வருகின்றது.
அதனடிப்படையிலேயே இக்கட்டுரையும் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்வதேச அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பு மருந்து ஆய்வில் உலக நாடுகள் காட்டும் முனைப்பை கருத்திற்கொண்டு உலகெங்கிலும் உள்ள கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு விரைவான, நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதிசெய்ய காவியின் கோவாக்ஸ் (COVAX) அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட் (ஏ.எம்.சி) எனும் தன்னார்வ கட்டமைப்பும் வடிவமைக்கப்ட்டுள்ளது. இதில் எழுபத்தைந்து நாடுகள் தங்கள் மக்களையும் பிற நாடுகளையும் பாதுகாக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. தங்களது சொந்த பொது நிதி வரவுசெலவுத் திட்டங்களிலிருந்து தடுப்பூசிகளுக்கு நிதியளிக்கும் 75 நாடுகள், காவியின் கோவாக்ஸ் அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட் (ஏ.எம்.சி)க்கு தன்னார்வ நன்கொடைகள் மூலம் ஆதரிக்கக்கூடிய 90 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுடன் கூட்டாளர்களாக உள்ளன. மொத்தத்தில், 165 நாடுகளைக் கொண்ட இந்த குழு உலக மக்கள் தொகையில் 60மூ க்கும் அதிகமானவர்களைக் குறிக்கிறது. குழுவில் ஒவ்வொரு கண்டத்தின் பிரதிநிதிகளும், உலகின் ஜி-20 பொருளாதாரங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர். 'கோவிக்ஸ் என்பது கோவிட் -19 தொற்றுநோய்க்கான உண்மையான உலகளாவிய தீர்வாகும்' என்று தடுப்பூசி கூட்டணியின் காவியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சேத் பெர்க்லி கூறினார்.
இப்போது, கோவிட்-19 இன் அனைத்து அம்சங்களையும் போலவே, அரசியலும் தடுப்பூசி உரையாடலில் நுழைந்துள்ளது, இது தொற்றுநோயைத் தடுப்பதற்கான சாத்தியமான சிகிச்சை விசையில் பொதுமக்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிடும்.
குறிப்பாக, பெரிய அரசுகளினுள்ளே அரசியல் நலன்சார் போட்டிக்காக கோவிட்-19 தடுப்பு மருந்தை பயன்படுத்தும் போக்கு சர்வதேச அரசியலில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே செப்டம்பர – ஒக்ரோபர் காலப்பகுதியில் தடுப்பு மருந்து ஆராய்வு முழுமை பெற முன்னரே மக்கள்மீது பரீட்சிப்பதில் துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே பிரேசிலிலும் பிரேசில் ஜனாதிபதி பொல்சனரோ தனது அரசியல் நலன் சார்ந்து கோவிட்-19 தடுப்பு மருந்து ஆய்வு பணிகளை கையாண்டு வருகின்றார்கள். கோவிட்-19 மீதான அரசியல்வாதிகளின் நலன்சார் இவ் அரசியல் தலையீடுகள் மக்களை கோவிட்-19 தடுப்பு மருந்தின் மீதான நம்பிக்கையிலிருந்து நகர்த்தி விடக்கூடியதாக உள்ளது.
கோவிட்-19 தடுப்பு மருந்து பிரயோகத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் அரசியல் செல்வாக்கு அதிகமாக பொருந்தியுள்ளதை அமெரிக்காவின் தேர்தல் அரசியல் காலப்பகுதியில் தடுப்பு மருந்து வருவதன் விளைவை ஆய்வு செய்த நிபுணர்கள் விளக்கியுள்ளார்கள். 'எந்தவொரு கோவிட்-19 தடுப்பூசியின் மதிப்பும் தடுப்பூசி போடுவதற்கான மக்கள் விருப்பத்தைப் பொறுத்தது, மேலும் ஒரு புதிய தடுப்பூசியின் தரத்தை பொதுமக்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதில் அரசியல் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை எங்கள் வேலை காட்டுகிறது' என்று இணை எழுத்தாளர் ஆலன் எஸ். கெர்பர், சார்லஸ் மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் யேலின் கலை மற்றும் அறிவியல் பீடத்திற்கான சமூக அறிவியல் பீடாதிபதி சி. டோரதியா எஸ். டில்லி ஆகியோர் கூறியுள்ளனர்.
அரசுகளின் உள்ளக அரசியல் மோதுகை மக்களிடம் தடுப்பு மருந்துக்கான ஆர்வத்தை குறைத்து செல்லும் அதேநேரத்தில் மறுபுறம் கோவிட்-19 தடுப்பு மருந்து பற்றிய அரசுகளுக்கிடையிலான சர்வதேச மோதுகை மக்களை தடுப்பு மருந்தின் மீதான நம்பிக்கையிலிருந்து முற்றாக நீக்கக்கூடிய வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் புதியதொரு உலக ஒழுங்கை வடிவமைத்து வருகிறது. பனிப்போருக்கு பின்னரான அமெரிக்காவின் ஒற்றைமைய அரசியலானது கொரோனா வைரஸால் தகர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகளாவிய சந்தையை கொண்டுள்ள உலகை உலுக்கும் கோவிட்-19இற்கான தடுப்பு மருந்தை அறிமுகம் செய்வதன் மூலம் உலக சந்தையை கைப்பற்றும் முனைப்பில் உலக நாடுகளும் தன்னார்வ நிறுவனங்களும் அதிகமாக களமிறங்கியுள்ளன. தற்போதைய நிலையில் இந்த மருந்து விற்பனை மூலம் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக சம்பாதிக்கலாம் எனத்தெரிகின்றது. இவ்வருமானத்தை மையப்படு;த்தியே உலக நாடுகள் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்திய அரசியலை கட்டமைத்து வருகின்றது.
அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜேர்மனியை சேர்ந்த பயோடெக் ஆகியவை இணைந்து தயாரித்த கோவிட்-19 தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பைசர் மற்றும் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. இது வெகுஜன தடுப்பூசிக்கு வழி வகுத்துள்ளது. பிரிட்டனின் மருந்து சீராக்கி, எம்.எச்.ஆர்.ஏ ஜப், கோவிட் -19 நோய்க்கு எதிராக 95மூ வரை பாதுகாப்பை வழங்கும்; என்கிறார். முதல் அளவுகள் ஏற்கனவே இங்கிலாந்துக்கு வந்து கொண்டிருக்கின்றன, வரவிருக்கும் நாட்களில் 800,000 செலுத்தப்பட உள்ளன என பைசர் கூறினார். டிசம்பர்-13ஆம் திகதி கனடாவும் பைசர் மற்றும் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்துள்ளது. மேலும் சுவிடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தும் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலக ஊடகங்களில் கொரோனா தடுப்பு மருந்து பற்றிய செய்திகளில் பைசர் மற்றும் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்து தொடர்பான உரையாடல்களே முதன்மையாக உள்ளது. எனிலும் ஆகஸ்ட் மாதத்திலேயே ரஸ்சியா அறிவித்திருந்த கோவிட்-19க்கான முதலாவது தடுப்பு மருந்து பற்றிய உரையாடல்கள் சர்வதேச அரசியலில் முற்றாக மறைக்கப்படாயிற்று. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 11 அன்று, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஸ்பூட்னிக் வி' என்ற பெயரில் பனிப்போர் அரசியல் அறிமுகத்தை ஞாபகமூட்டி அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மேற்குலகு தமது தயாரிப்பை முதன்மைப்படுத்தி ரஷ்சியாவின் அறிவிப்பை இருட்டிப்பு செய்துள்ளது. இதுவே கோவிட்-19 மருந்துசார் சர்வதேச அரசியல் மோதுகையை பறைசாற்றுகிறது.
விநோதமானது இயற்கை. வல்லரசு நாடுகள் தங்கள் வல்லாதிக்கத்தை பறைசாற்ற தடுப்பு மருந்து சார்ந்து முட்டிமோதிக்கொண்டிருக்கையில், மருந்து புழக்கத்துக்கு வர முன்பே மருந்துக்கு இயைபாக்கமடைந்து மரபணு மாறுபட்ட கொரோனா வைரஸிகள் சமூகத்திடையே பரவ ஆரம்பித்து விட்டன. பைசர் மற்றும் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை மக்களிடம் பயன்படுத்தும் இங்கிலாந்தின் சுகாதார அமைச்சே இதனை உறுதி செய்துள்ளது. பைசர் மற்றும் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளுக்கு இயைபாக்கமடைந்த மரபணு மாறுபட்ட கொரோனா வைரஸிகளின் பரவலும் கூட அரசியலாயும் இருக்கலாம். ஆக யேல் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் இயக்குனர் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியர் சாத் பி ஓமர் தெரிவித்துள்ள, 'தடுப்பூசிகளை அரசியல்மயமாக்குவது, கோவிட்-19 விஷயத்தில் மட்டுமல்லாமல், அம்மை மற்றும் பல நோய்களைப் பொறுத்தவரையில், பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சினையாகும்.' எனும் கருத்தே நிதர்சனமானதாகும். தடுப்பூசிகளை அரசியல்மயமாக்குவது நோய்களின் உற்பத்தியையே அதிகரிக்கும்.
Comments
Post a Comment