நினைவேந்தலின் பெயரில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தமிழரசியல்? -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர்களின் தேசிய அரசியலின் முக்கிய. விடயங்கள் யாவும் பருவ கால அரசியலாகவே நகர்த்தப்படுகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிச்சினை தீர்வுக்கான களமாக தற்போது காணப்படும் சர்வதேச அரங்கான ஜெனிவா சார்ந்த உரையாடல்கள் அதன் கூட்டத்தொடரை அண்டிய மார்ச், செப்டெம்பர் மாதங்களிலேயே மேற்கொள்ளப்படும். அவ்வாறே தமிழ்த்தேசிய இருப்பு சார்ந்த பேணுகைக்கு அவசியமான கடந்த கால வரலாற்றை கடத்தும் நினைவுகளும் பிரதான நினைவேந்தல்களான மே-18 தமிழின படுகொலை நினைவு நாள், செப்டெம்பர் பின்னரைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவு தினம் மற்றும் நவம்பர்-27 மாவீரர் நாள் என அன்றைய காலப்பகுதிகளில் மாத்திரம் அதில் விளக்கேற்றுவதற்கான மோதலாகவே நினைவு தினங்கள் உரையாடப்படும். தேசிய இனங்களின் விடுதலை போராட்டமானது பருவ கால அரசியலுக்குரியது அல்ல. குறிப்பாக நினைவு தினங்கள் தேசிய அரசியலுக்கான களங்களாக முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் ஈழத்தமிழ் அரசியலில் தேசியம் பேணுகையும், அடைவும் பூச்சிய நிலைமையிலேயே காணப்படுகிறது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியல் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந...