நினைவேந்தலின் பெயரில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தமிழரசியல்? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் தேசிய அரசியலின் முக்கிய. விடயங்கள் யாவும் பருவ கால அரசியலாகவே நகர்த்தப்படுகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிச்சினை தீர்வுக்கான களமாக தற்போது காணப்படும் சர்வதேச அரங்கான ஜெனிவா சார்ந்த உரையாடல்கள் அதன் கூட்டத்தொடரை அண்டிய மார்ச், செப்டெம்பர் மாதங்களிலேயே மேற்கொள்ளப்படும். அவ்வாறே தமிழ்த்தேசிய இருப்பு சார்ந்த பேணுகைக்கு அவசியமான கடந்த கால வரலாற்றை கடத்தும் நினைவுகளும் பிரதான நினைவேந்தல்களான மே-18 தமிழின படுகொலை நினைவு நாள், செப்டெம்பர் பின்னரைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவு தினம் மற்றும் நவம்பர்-27 மாவீரர் நாள் என அன்றைய காலப்பகுதிகளில் மாத்திரம் அதில் விளக்கேற்றுவதற்கான மோதலாகவே நினைவு தினங்கள் உரையாடப்படும். தேசிய இனங்களின் விடுதலை போராட்டமானது பருவ கால அரசியலுக்குரியது அல்ல. குறிப்பாக நினைவு தினங்கள் தேசிய அரசியலுக்கான களங்களாக முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் ஈழத்தமிழ் அரசியலில் தேசியம் பேணுகையும், அடைவும் பூச்சிய நிலைமையிலேயே காணப்படுகிறது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியல் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தை நினைவு கூருதல் தேசிய அரசியலில் முக்கியமான எண்ணக்கருவாக காணப்படுகிறது. கடந்த காலத்தை கடத்துவதனூடாகவே நிகழ்காலத்தை வடிவமைக்கலாம் என்பதுவே இதன் மையப்பொருளாக உள்ளது. குறிப்பாக தேசிய இனங்களின் கடந்த கால வரலாற்றை கடத்துவதில் கூட்டு நினைவகம் எனும் பொறி ஆழமான நிலையை பெறுகிறது. தேசியம் என்பது மக்கள் குவியத்தை குறித்து நிற்பதனால் அதன்வழி, கடந்த காலத்தை கடத்தும் நினைவகமும் கூட்டை மையப்படுத்துகிறது. கூட்டு நினைவகத்தின் முன்னுதாரணமானது போர்களுக்கு இடையேயான பிரெஞ்சு சமூகவியலாளர் மாரிஸ் ஹால்ப்வாச்ஸின் முன்னோடி பணியை உருவாக்குகிறது. சமுகவியலாளரான எமிலி துர்கெய்மின் மாணவராக, ஹால்ப்வாச் சமூகவியலைப் பற்றிய தனது வழிகாட்டியின் புரிதலை, தனிநபர்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்வது என்பது 'குழு மனதின் ஒரு குறிப்பிட்ட நிலையை வெளிப்படுத்துகிறது'. சமூகத்தின் விளைவுகளிலிருந்து தனிப்பட்ட நினைவுகளைப் பிரிப்பது சாத்தியமில்லை என்று வாதிட்டார். சமுகவியலாளர்களான ஹென்றி பெர்க்சன் மற்றும் சிக்மண்ட் பிராய்ட் உட்பட முந்தைய சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட தனிமனித நினைவாற்றலை ஹல்ப்வாச்ஸ் எதிர்த்தார். கூட்டு நினைவகம் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். ஹால்ப்வாச்ஸின் கூற்றுப்படி, கூட்டு நினைவகம் எப்போதும் உயரடுக்கினரால் நனவான கையாளுதலின் சிக்கலான வழிமுறைகள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்களால் சுயநினைவின்றி உறிஞ்சுதல் மூலம் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்புகள் தனிப்பட்ட நினைவுகளுக்கு மட்டும் அர்த்தம் தருவதில்லை. அவை உருவாக்கும் நிகழ்வுகளின் தேர்வு மற்றும் விளக்கத்தை வடிவமைக்கும் பரந்த வரலாற்று கற்பனையையும் வழங்குகின்றன.

தேசத்தின் நினைவுகளை அந்தோனி ஸ்மித், நிகழ்காலத்தை உருவாக்குவதில் கடந்த காலத்தின் வலுவான பங்காக அடையாளப்புடத்துகின்றார். பகிரப்பட்ட வரலாறு மற்றும் அந்த பகிரப்பட்ட வரலாற்றின் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டையும் குறிக்கும் 'இன-வரலாறு'(நுவாழெ-ர்ளைவழசல), ஸ்மித்துக்கு தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. கடந்த காலத்தின் தொடர்ச்சி உணர்வு, பகிரப்பட்ட தோற்றத்தின் உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது இன அடையாளங்களின் அடித்தளம் மற்றும் கூட்டு விசுவாசத்தின் மிக முக்கியமான உருவாக்கியாகவும் மற்றும் பகிரப்பட்ட தனித்தன்மையின் நம்பிக்கை என்று அவர் சக்திவாய்ந்த முறையில் வாதிட்டார். ஷஇனத் தேசியவாதம் மற்றும் சிறுபான்மையினரின் அவலநிலை' என்ற தலைப்பில் ஸ்மித், கூட்டு நினைவகத்தினூடாக நாடுகளின் உலகத்திற்கு அப்பால் செல்ல முடியும். என்ற நம்பிக்கையையும் அவை உள்ளடக்கிய விலக்கு வழிமுறைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்மித்தின் 'நாடுகளின் உலகத்திற்கு அப்பால் நகரும்' சிரமத்தை அங்கீகரிப்பது அவரது புத்தகம் வெளியிடப்பட்ட இருபது ஆண்டுகளில் மட்டுமே பொருத்தமாக வளர்ந்துள்ளது. தடுமாறிக்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு, இன-ஜனரஞ்சகத்தின் எழுச்சி மற்றும் புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களின் பின்னணியில், இனவரலாறு இனி தேசிய அடையாளத்தின் குறியீடாக இல்லை: இது மாற்றத்திற்கு எதிரான அரணாக மாறியுள்ளது. பிரச்சனையின் முக்கிய அம்சம், ஸ்மித் பார்த்தது போல், இனவரலாற்றின் பிரத்தியேகமான தன்மையில் உள்ளது. இது ஒரு குழுவை மற்றொரு குழுவிலிருந்து பிரிக்கிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் தங்கள் பகிரப்பட்ட கடந்த காலத்தைப் பற்றி விவாதித்து அவ்வப்போது அதை மறுவிளக்கம் செய்யலாம். இனவரலாறு அடிப்படையில் மாற்ற முடியாதது. ஒரு குறிப்பிட்ட குழுவின் பகிரப்பட்ட வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் கடந்த காலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட வரையறையின்படி, அதை புதியவர்களுக்கு நீட்டிக்க முடியாது. பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் வரலாற்று வேறுபாடுகளின் அடைப்புக்குறிக்குள் அமைதியான சகவாழ்வை உருவாக்குவதே இன்றைய சிக்கலான சமூகங்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த விடயம் என்று அவர் முடித்தார்.

அரசியலின் ஒரு கருவியாக நினைவகத்தை அணிதிரட்டுவதற்கு அரசியல்வாதிகள் பெரும்பாலும் கடந்த காலத்தின் கூட்டுப் புரிதலைப் பெறுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் முக்கியமான பிரச்சினைகளை உருவாக்க மற்றும் சிந்திக்க வரலாற்று ஒப்புமைகளை வரைகிறார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் கடந்த காலத்தை மூலோபாயமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் சமூகத்தின் கூட்டு நனவில் உருவான நிகழ்வுகளைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்களின் செயல்களை சட்டப்பூர்வமாக்க நினைவகத்தை கையாளுகிறார்கள். இந்த விவாதங்கள் பொதுவாக உள்நாட்டு பிளவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், அவை பெரும்பாலும் சர்வதேச உறவுகளில் பரவுகின்றன. கடந்த காலத்தின் அர்த்தத்தின் மீதான இத்தகைய சர்ச்சைகள் 'கதை சொல்லுதல் அரசியலின் வலிமையான கருவிகள்' என்பதை நிரூபிக்கின்றன.

1960களின் பிற்பகுதியிலிருந்து கூட்டு நினைவகத்தில் ஆர்வம் பரவலடைந்தது. ஏனெனில் வரலாற்று விவரிப்புகள் மீதான மோதல்கள் கடந்த காலத்தை அக்கறையுள்ள குடிமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என அறிஞர்களுக்கு பொருத்தமானதாக ஆக்கியது. ஷநினைவக ஏற்றம்' வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. பரந்த அளவிலான நினைவூட்டல் மீதான இந்த ஆர்வம் மூன்று பரந்த சமூக இயக்கங்களுடன் தொடர்புடையது: ஒன்று, 1960களின் மாணவர் கிளர்ச்சிகளில் இளைஞர்கள் தங்கள் முன்னோர்களின் போர்க்கால நடவடிக்கைகளில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டு, காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் எழுச்சி மற்றும் மூன்று, 1989க்குப் பிறகு இரும்புத்திரையின் இருபுறமும் கீழ்ப்படுத்தப்பட்ட ஐரோப்பிய மக்களிடையே ஒடுக்கப்பட்ட தேசிய கவலைகள் மீண்டும் தலைதூக்குதல் ஆகிய சந்தர்ப்பங்கள் கூட்டு நினைவகத்தை ஆழப்படுத்திய சர்வதேச நிகழ்வுகளாகும். 

சர்வதேசரீதியாக எண்ணக்கருவாயும் செயற்பாட்டுரீதியும் தேசிய பொறிமுறையில் கூட்டு நினைவகம் ஆழமான நிலையை பெற்றுள்ளது. எனினும் ஈழத்தமிழர் தொடர்ச்சியாக கடந்த காலத்தை பேணும் கூட்டு நினைவகத்தில் தொடர்ச்சியான இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாறுகள் பலவும் திட்டமிட்ட முறையில் பேரினவாத தரப்புக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது. மீதமாக உள்ள கடந்த கால வரலாறுகளையும் தமிழ் அரசியல் தரப்புக்கள் தங்களுக்குள் மோதி வரலாற்றை அழிக்கும் அல்லது வரலாற்றின் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். ஈழத்தமிழர் தமிழ் அரசியல்வாதிகளின் நினைவு கூரும் நிகழ்வுகளில் ஏற்படுத்தும் குழப்பங்களிலிருந்து வெளியே வர சிவில் சமூகங்கள் கடந்த காலத்தை கடத்தும் செயலொழுங்கிற்கு பொறுப்பேற்க வேண்டும். எனினும் ஈழதமிழ் அரசியல் பரப்பில் தமிழரசியல்வாதிகளின் குழப்பமும் சிவில் சமுகத்தின் சோர்வுமே மிதமிஞ்சி உள்ளது. 

சமகாலம் ஈழத்தமிழரசியலில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மையமான அரசியலாக உள்ளது. இங்கு பொதுவெளியில் தமிழ்த்தேசியத்தை முடமாக்கும் பல கேளிக்கை உரையாடல்களும் முதன்மை பெறுகின்றது. அவற்றினை நுணுக்கமான அவதானிக்க வேண்டி உள்ளது.

ஒன்று, நினைவேந்தலில் அரசியல் செய்யக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நினைவு தினத்தை உண்மையாகக் கொண்டாடுவது என்பது அரசியலை மீண்டும் முன்னகர்துவதற்கு ஒப்பானது. திலீபனின் தியாகம் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை இந்தியா தனது விருப்பத்தின் பேரில் திணிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது. எனினும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசியலின் வடிவம் பற்றியதாகும். தமிழ் தேசம் கொண்டாடும் நினைவுகளை தமிழ்த்தேசிய அரசியலே புரிதல் வேண்டும். எனினும் திலீபன் நினைவுத்திடலில் கட்சி அரசியல் அரங்கேற்றப்படுவது அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடாகும். இது தேசியம் சார்ந்த ஆர்வமுள்ள தரப்பினரையும் பின்வாங்க செய்யும் செயலாகவே அமைகின்றது. பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தி உரையாடுவதே நினைவேந்தலின் தாற்ப்பரியத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கடந்த காலத்தை கடத்தி நிகழ்காலத்தை வடிவமைக்க ஏதுவாக அமையும். எனினும், இங்கு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அரசியல் நலனை முன்னிறுத்திய பிரச்சாரங்களை நினைவேந்தல் திடலில் மேற்கொள்வது தமிழ்த்தேசியத்தையும் வரலாற்றை கடத்தும் பொறிமுறையையுமேயே பலவீனப்படுத்துகின்றது. தியாகி திலீபனின் நினைவு என்பது ஈழத்தமிழரின் அரசியல் நினைவு என்பது மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எனது கட்சி, உனது கட்சி, எதிரிக்கட்சி என்ற உரையாடல் நினைவுத்திடலில் அரங்கேற்றப்படுவது தேர்தல் அரசியலுக்கான வடிவமேயன்றி தேசிய அரசியல் வடிவம் இல்லை. ஈழத்தமிழர்களின் அரசியல் வேறு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும் மணிவண்ணன் அணியினதும் தேர்தல் அரசியல் வேறு. அத்தகைய விடயத்தை முன்னிறுத்துவதை நிராகரிப்பது தவிர்க்க முடியாது.

இரண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தேசியத்தையும் நினைவேந்தல்களையும் தாங்கள் மட்டுமே அனுசரிக்க தகுதி உள்ளவர்கள் என்று கூறுவது தேசியமாக கொள்ள முடியுமா? அதிலும் பிறரை புறந்தள்ளுவது தேசியத்துக்கு உரியதா? தேசியம் என்பது மக்கள் குவியத்தை குறிப்பதாகும். தேசியத்தின் இருப்பு மக்களின் திரளிலேயே தங்கியுள்ளது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் தேர்தல் கட்சி நலன் அடிப்படையாய் கொண்டு பிறரை புறந்தள்ளுவது நியாயமானதாக கொள்ள முடியாது. தேசத்தின் நினைவுகளை அடையாளப்படுத்தும் சர்வதேச அறிஞர்கள் பலரும் கூட்டு நினைவகத்தையே முதன்மைப்படுத்துகின்றார்கள். தனியன்களை தாண்டி கூட்டு நினைவகத்தினூடாகவே வரலாற்றை பேண முடியும் என்பதே அவதானமாகும். அதற்காக துரோகிகளை கூட்டு நினைவுகளுக்குள் உள்ளடக்க முடியாது. 

மூன்று, தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலை தமிழரசியல் தரப்பினர் அரங்கேற்றுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் தமிழரசியல் தரப்பின் முரண்பாடுகள் ஏற்படுத்துகின்றது. தமிழினம் கடந்த காலத்தை கடத்துவதும், கூட்டு நினைவுகளை நெறிப்படுத்துவதும் ஒடுக்க நினைக்கும் பெருந்தேசியத்துக்கு சவாலானதாகும். தமிழினம் அவ்வாறானதொரு நிலைக்கு செல்வதற்கு அது ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டதும் யுத்த வெற்றி நினைவுச்சின்னங்களை வடக்கு-கிழக்கில் நிறுவிய பெருந்தேசியவாதம் மறுபக்கத்தில் தமிழ் மக்களின் நினைவுச்சின்னங்களை, மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததுடன் நினைவேந்தல்களை நிகழ்த்த விடாது தடுத்து நிறுத்தி வந்துள்ளார்கள். தாரளா ஜனநாயக அரசுகளின் இயல்பு வேறுபட்டது. நினைவேந்தல்களுக்கான அனுமதியளிக்கும். எனினும் நினைவேந்தலின் வடிவத்தை அது மாற்றிவிடும். குறிப்பாக அமெரிக்காவில் அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின் உடனடியாக 'அலங்கார நாள்' (னுநஉழசயவழைn னுயல) என்று நினைவு தினம் அனுஷ;டிக்கப்படுகிறது. விடுதலையைக் கொண்டாடுவதற்கும் அந்த காரணத்திற்காக இறந்தவர்களை நினைவுகூருவதற்கும் முன்னாள் அடிமைகளால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரியமாக இது காணப்படுகின்றது. தற்போது நினைவு நாள் என்பது அரசியல் இல்லாத நாளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து வீரர்கள் மற்றும் படைவீரர்களின் அவர்கள் எந்தப் போர்களில் பங்கேற்றார்களோ அதைப் பொருட்படுத்தாமல் பொதுவான தேசபக்தி கொண்டாட்டமாக மாற்றப்படுகிறது. இது தாரண்மையின் இயல்பு. இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான பொறிமுறைக்குள் பயணிக்கக்கூடியது. கடந்த காலங்களில் நினைவேந்தல் தடுக்கப்பட்ட நிலைமை மாறி தற்போது அனுஷ;டிக்க தடை இல்லாத சூழலில் தமிழரசியல் தரப்பின் முரண்பாடு நினைவேந்தலின் வடிவத்தை மாற்ற அரசு நினைக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிக்கிறது. இதனைத்தான் மோதிக்கொள்ளும் இருதரப்பினரும் விரும்புகின்றனர்.

எனவே, ஈழத்தமிழ் மக்கள் அரசியல்வாதிகளின் குறுகிய வட்டத்தை கடந்து தமிழ்த்தேசியத்தின் கூட்டு நினைவகத்தை கடத்தும் தேசிய அரசியலில் ஒன்றிணைய வேண்டும். மாறாக தொடர்ச்சியாக தமிழரசியல்வாதிகளிடம் அனைத்தையும் பாரப்படுத்திவிட்டு தொடர்ச்சியாகவே ஒதுங்கி இருப்பார்களாயின் வெகுவிரைவில் தேசியம் என்பது தமிழரசியல் உரையாடலில் மட்டுமே நீடிக்க கூடியதாகும். அது தமிழர் வாழ்வியலில் இருந்து வெகு தொலைவில் சென்றாக காணப்படும். வேண்டுமெனில் தேர்தல் அரசியலுக்கா இரு அணிகளாக பிரிந்து பந்தல் போட்டு மோதிக்கொள்ளலாம். அதனை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் தேசியமாக சிந்திக்கும் ஈழத்தமிழருக்கு தேவையற்றது. ஆனால் கடந்த கால தியாகங்களை வீதியில் நினைவு கொள்ளுதல் என்ற அர்த்தத்தில் வியாபாரமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-