இடைக்கால வரவு-செலவுதிட்டம் பொருளாதாராத்தை வலுப்படுத்துவதா? அரசியலை வலுப்படுத்துவதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் ஸ்திரமற்றதாகும், புதிய புதிய குழப்பங்களுக்குள்ளும் நகர்ந்து கொண்டு செல்கின்றது. வின்ஸ்டன் சர்ச்சில் சோவியத் ஒன்றியத்தை ஒரு புதிர்க்குள் ஒரு புதிர் மர்மத்தில் மூடப்பட்டுள்ளது என்று அழைத்தார். அவ்வாறே இன்றைய இலங்கையை ஒரு குழப்பத்திற்குள் ஒரு முரண்பாடான மெய்யுரை முரண்பாட்டில் மூடப்பட்டுள்ளதாகக் கூறலாம் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்ளுதலை கடந்து விட்டது. இது பகுத்தறிவின் முரண்பாடு அல்லது 'பகுத்தறிவின்மையின் பகுத்தறிவு' என்று அழைக்கப்படுவதை விட புதிராக காணப்படுகின்றது. அரகல்யாவின் வெற்றி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற உரையாடல்கள் முதன்மை பெறும் சமகாலத்திலலேயே, லிபரல் அடையாளத்தை நீண்ட காலமாக வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்து ஜனநாயக போராட்டக்களம் மீது எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தியிருந்தார். இடைக்கால அரசாங்கத்தால் இடைக்கால நிதியறிக்கை சமர்ப்பிக்கப்படும் சமகாலத்தில் இடைக்கால அரசாங்கத்துக்கான ஆதரவை வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் குழப்பமான நிலைமைகளை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை இடைக்கால நிதியறிக்கையையும் அதன் பின்னணியிலுள்ள அரசியல் குழப்பங்களுக்கான மையங்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தினை கடந்த ஆகஸ்ட்-30அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இலங்கை கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இடைக்கால வரவு செலவுத்திட்ட அறிக்கை பொருளாதாரரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டி மக்கள் போராட்டத்தினூடாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகி புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்று முதலாவது வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். அதில், 2048ஆம் ஆண்டளவில் நாட்டின் வங்குரோத்து பொருளாதாரத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நாடாக கட்டியெழுப்புவதற்கான தேசிய கொள்கையொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களும் அதன் சூழமைவும் இலங்கையில் ஏற்கனவே குழப்பம் நிறைந்துள்ள அரசியல் களத்தை மேலும் முரண் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, இடைக்கால வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு காலப்பகுதியில் பொதுஜன பெரமுனாவிற்குள் காணப்படும் குழப்பங்கள் காட்சிப்புலத்துக்கு வரத்தொடங்கி உள்ளன. கடந்த ஆகஸ்ட்-18அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார நெருக்கடி தீர்வு தொடர்பாகவும் அதற்கான முழு ஆதரவை ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்குவது தொடர்பான உத்தரவாதம் அளிக்கப்பட்டதாவும் செய்திகளில் வெளியிடப்பட்டது. உத்தியோகபூர்வ செய்திகளுக்கு அப்பால் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது சந்திப்பை மேற்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சா, பொதுஜன பெரமுன அணியினருக்கான அமைச்சுப்பதவிகளை இடைக்கால வரவு-செரவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முதல் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சந்திப்பை திட்டமிட்டிருந்தார் என்ற உரையாடல்களும் உத்தியோகபற்றற்ற செய்தியாக முதன்மை பெறுகின்றது. அது மறுக்க இயலாத கருத்து நிலையாகவே காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் கலாசாரமும் அதிகம் அதிகார அரசியல் நலன் சார்ந்ததாகவே தோடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இதனை மையப்படுத்தியே இலங்கையின் தேர்தல் செயல்முறையானது முரட்டுத்தனமான புழக்கம் என்று அழைக்கப்படுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான யஹபாலன கூட்டணியின் பிரதான பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று, மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் உள்ள ஊழல்வாதிகளை விசாரணை செய்து, அவர்களை கம்பிகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்து, திருடப்பட்ட பொது நிதியை மீட்டெடுப்பதாகும். ஊழலுக்கு எதிரான சிலுவைப்போர் என்று தங்களைப் பிரகடனப்படுத்தியவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட உடனேயே, அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக மீண்டும் அதிகாரம் தேடும் தங்கள் அரசியல் எதிரிகளுடன் வக்கிரமான ஒப்பந்தங்களைத் தாங்களே போடத் தொடங்கினர். அத்துடன் தாங்களே கொள்ளையர்களாக மாறினர். அதற்கு நேர்மாறாக, இன்று, அவர்கள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்க ஒன்று சேர்ந்துள்ளனர். இவ்வாறான பின்னணியில் பசில்-ரணில் சந்திப்பு பேரம்பேசலுக்கானது என்ற விமர்சனமும் ஏற்கக்கூடிய கருத்தாகவே காணப்படுகின்றது.

இரண்டு, இடைக்கால வரவு-செலவுத்திட்டத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு தளத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் முரண்நகையான கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்திற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைக் காண்பதற்கு தொடர்ச்சியான அழைப்புகளை விடுத்து வருகிறார். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சரவையில் இணையாமல் பாராளுமன்றக் குழுக்களின் மூலம் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளது. எவ்வாறாயினும், மூத்த உறுப்பினர்கள் இந்த விடயத்தில் இசைவாகவும் எதிராகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலர் இன்னும் அதிகாரத்தில் பங்கு வகிக்க ஆர்வமாக உள்ளமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா, 'பொருளாதார மீட்சிக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுகள் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது நல்லதாக இருந்தபோதும், தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மனப்பான்மை அதன் முற்றிலும் எதிர்க்கும் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று கற்பனை செய்வது கடினம்' என்று தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, 'ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர், அவரது பொருளாதார வல்லமைக்காக பரவலாக கருதப்படுகிறார். அவர் அதை விரும்புகிறார். ஆனால் அதை எடுக்க மிகவும் பயப்படுகிறார்.' எனத்தெரிவித்திருந்தார். ஹர்ஷ டி. சில்வாவின் கருத்துக்கள் ரணில் விக்கிரமசிங்கா மீதுள்ள ஆர்வத்தை அடையாளப்படுத்துகின்றது. இவ்ஆர்வம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை சஜித் பிரேமதாசாவின் தலைமைக்கு அச்சுறுத்தலாக கூடியதாகும்.

மூன்றாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இடைக்கால வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிப்பு தனது அரசியல் எதிர்காலத்திற்கான எதிர்பார்க்கைகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இலங்கை தனது மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியின் கஷ்டங்களை எதிர்கொள்கிறது. எனினும் வரவு-செலவுத்திட்ட அறிக்கையானது, பொருளாதாரத்தை சீர்செய்வதற்கான வினைத்திறனை வெளிப்படுத்த தவறி அரசியல் நலனுக்குட்பட்டதான விமர்சனம் காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்காவின் இடைக்கால வரவு-செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் ஆரியரத்ன ஹேரத் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், 'எனது பார்வையின்படி, 2048ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவது என்பது உண்மைக்கு மாறான வருடங்கள். நாங்கள் இன்னும் 2020களில் இருக்கிறோம், எனவே இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பரிந்துரையாக இருக்கலாம். உங்களிடம் ஏற்கனவே ஐந்து அல்லது 10 வருட பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் இருந்தால் இந்த வகையான இலக்கு முன்மொழியப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் இந்த இலக்குக்கான சாத்தியத்தை நான் காணவில்லை. இந்த பட்ஜெட் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே இயங்கும். இந்த குறுகிய கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் எங்களால் எதையும் கணிக்க முடியாது' என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏனைய கட்சிகளுக்குள் குழப்பங்களை உருவாக்குவதனூடாக பலவீனமான நிலையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டமைப்பதற்கான நகர்வுகளிலொன்றாக அரசியல் ஆதாயம் நிறைந்ததாகவே இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்தியுள்ளார்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாகி முதலாவதாக சமர்ப்பித்துள்ள 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் பின்புலம் அரசியல் பொருளாதார ரீதியான விளைவுகளை கணதியாக கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கு அரசியல் லிபரல் தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும், இயல்பில் தென்னாசிய அரசியல் கலாசாரத்தின் பிரதிவிம்பமாகவே காணப்படுகின்றார். தேசிய நலன், மக்கள் நலன் என்பதை கடந்து சுயநல அரசியலுக்கே ரணில் விக்கிரமசிங்க முதன்மை அளிப்பதனையே இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் அரசியல் பொருளாதார பின்புலங்கள் பறைசாற்றுகின்றது. பேராசிரியர் ஹேரத், இடைக்கால வரவு செலவுத் திட்டம் 'முதலாளித்துவ வரிச் சீர்திருத்தங்களைக் கொண்ட நலன்புரி வரவு செலவுத் திட்டம் இம்முறையும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து வருமானத்தைப் பெறுவதற்குப் போதுமான அதிகரிப்பைக் காணவில்லை' என்று கூறினார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சமாந்தர காலப்பகுதியிலும், வருமான அதிகரிப்பை அடையாளங்காட்டாது நலன்புரி வரவு-செலவுத்திட்டமாக வழமையை மீள செய்வது இலங்கையின் மாறா பாழடைந்த அரசியல் கலாசாரத்தின் தொடரியாக ரணில் செயற்படுவதையே உறுதி செய்கின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-