ஜெனீவா மனித உரிமை களமும் ஈழத்தமிழர்களின் நீதி போராட்டமும்! -ஐ.வி.மகாசேனன்-
2012களுக்கு பிறகு ஈழத்தமிழரசியல் செப்டெம்பர் மாதம் ஜெனிவா அரசியல் கள உரையாடல்களையே நிரப்பியுள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர்-12அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது. இலங்கை தொடர்பான ஒரு வரைவுத் தீர்மானம் செப்டம்பர்-23அன்று கூட்டத்தொடரில் வாசிக்கப்படுவதுடன், உறுப்பு நாடுகளால் அக்டோபர்-06அன்று வாக்களிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக செப்டம்பர்-06அன்று திகதியிடப்பட்டு ஓய்வுபெறும் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையரின் அதிகாரப்பூர்வ அறிக்கை அதிக ஊடக கவனத்தைப் பெற்றுள்ளது. அதனை தழுவியதாக செப்டெம்பர்-12அன்று மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைக்கூட்டத்தொடரிலும் சமர்ப்பித்தார். இது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவில் 'பொருளாதார குற்றங்கள்' இழைக்கப்படுவது பற்றி விரிவான குறிப்புகளை அளித்தது. மேலும் மனித உரிமைகளுக்கான பொறுப்புக்கூறலையும் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் இணைத்தவாறு விளக்கியுள்ளது. இது ஈழத்தமிழர்களின் சர்வதேச பொறிமுறையுடன் கூடிய இனப்படுகொலைக்கான நீதியை வெகுவாகவே கரைத்துள்ளது என்ற விமர்சனம் ஈழத்தமிழ் அரசியல் ஆய்வாளர்களிடம் முதன்மையான உரையாடலை பெற்றுள்ளது. இக்கட்டுரை ஐ.நா மனித உரிமைகள் 51வது கூட்டத்தொடரை மையப்படுத்தி ஐ.நா உயர் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள உள்ளடக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
முதலாவது, ஐ.நா. மனித உரிமைப்பேரவை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தினை மனித உரிமைசார் விடயமாகவே தொடர்ச்சியாக பேண முற்படுகின்றமையை ஆணையாளரது அறிக்கை வெளிப்படுத்துகின்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கை இனப்படுகொலைக்கான பரிகார நீதியாகவே அமைகின்றது. எனினினும் ஐ.நா மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டை மனித உரிமை விவகாரமாகவே மட்டுப்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் குறிப்பாக 46ஃ1 தீர்மானத்தில் சாட்சியங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தமை போர்க்குற்றமாக ஆயினும் ஏற்றுக்கொண்டு செயற்படுவதை வெளிப்படுத்தி இருந்தது. எனினும் இவ்வாண்டு முழுமையாக மனித உரிமை விவகாரமாகவே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதனை அறிக்கையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. செப்டெம்பர்-06அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள, 'உயர் ஸ்தானிகர், இலங்கையை மீட்பதற்கு சர்வதேச சமூகத்தை ஊக்குவிப்பதோடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு உட்பட நெருக்கடியின் அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்வதிலும் ஊக்குவிக்கிறார்.' எனும் விடயம் மற்றும் அதன் சாரம்சம் ஈழத்தமிழர் விவகாரத்தை மனித உரிமை விவகாரத்துக்குள் முடக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் 2021ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட 'தமிழர் தாயகத்தின் இழப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்குபற்றியிருந்தார். குறித்த நிகழ்வில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை சார்ந்து ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுக்காமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், 'மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமே நாங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமம் என்று நாங்கள் கூறுகிறோம். அடிக்கடி, நாங்கள் அடையாளம் காண்கிறோம்.' என்று நவநீதம்பிள்ளை அம்மையார் கூறினார். இது ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஜெனிவா களத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டிய தேவையையே உணர்த்துகின்றது.இரண்டாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பரிகாரம் கோரும் தரப்பாக கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்தரப்பே காணப்பட்டனர். தமிழ் மக்கள் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய ஒடுக்குமுறைகளே முதன்மையாக காணப்பட்டது. எனினும் இவ்வாண்டு இலங்கை முழுமைக்குமான மனித உரிமை விவகாரமாக மாறியுள்ளது. இது தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகளை மங்கச்செய்வதுடன், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைப்போராட்டத்தின் தேசியத்தை நீக்கி ஒட்டுமொத்த இலங்கைக்குள் பயணிக்க செய்யும் நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாராண்மை முகத்துடன் ஜெனிவாவை கையாளும் தரப்புக்களின் நீண்ட கால நிகழ்ச்சி நிரலாக தமிழ்த்தேசியத்தின் தேசியக்கோரிக்கைகளை தளர்த்தி தாராண்மைவாதிகளுடன் தமிழர்களை இணைத்து விடுவதாகவே காணப்படுகின்றது. அவ்வாறான நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட பலரும் காணப்படுகின்றார்கள். கடந்த காலங்களில் ஜெனிவா கூட்டத்தொடர் காலங்களில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் மக்கள் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. அவை தமிழ்த்தேசியத்தின் கோரிக்கையாக வெளிப்பட்டன. எனினும் இவ்வாண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடருக்கு சமாந்தரமான காலப்பகுதியில் காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை என பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளார். இது இச்செயற்பாட்டாளர்கள் தங்களை இலங்கைத் தேசியத்தின் காவலனாகக் காண்பிக்க முற்படும் செயற்பாடாகவே அமைகின்றது. மாறாக தமிழ்த்தேசியத்துக்கான களத்தை விற்கும் துரோகச்செயலாகவும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மூன்றாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையும் அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதில்களும் இலங்கை விவகாரத்தை பொருளாதார குற்றச்சாட்டுக்குள் சுருக்க முற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றது மற்றும் மனித உரிமைகள் பிரிக்கப்படாமையை கூர்மையாக கவனத்தில் கொண்டு அதன் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதாகவே ஆணையாளரின் அறிக்கையின் முன்னுரையும் ஆரம்பிக்கிறது. மேலும், இலங்கை தொடர்பான அறிக்கையை கூட்டத்தொடரில் சமர்ப்பித்த பதில் ஆணையாளர் அல் நஷிப், சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். ஆணையாளரின் அறிக்கையில் பொருளாதார பிரச்சினைக்கான காரணங்களாக நிறைவேற்றுத்துறையின் எதேச்சதிகாரம், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விளைவு, கொரோனா நெருக்கடி மற்றும் சர்வதேச அரசியலில் நெருக்கடியை உருவாக்கியுள்ள ரஷ்சியா-உக்ரைன் போர் என்பனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, அதனால் கடந்த முப்பாதாண்டு காலமாக இடம்பெற்ற போர் மற்றும் பாதுகாப்பு செலவீனங்களின் அதிகரிப்பு என்பதனை குறிப்பிட தவறியுள்ளது. இது ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தவிர்த்து செல்லும் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதனையே வெளிப்படுத்துகின்றது.
நான்காவது, தமிழர்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வரும் சர்வதேச நீதிப்பொறிமுறையையும் ஆணையாளரின் அறிக்கை தவிர்த்துள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் முன்னேற்றம் பெற்று வந்த நீதிப்பொறிமுறை கட்டமைப்பையும் இம்முறை தவிர்த்துள்ளது. ஆணையாளரின் அறிக்கை முழு நிறை நியாயாதிக்க விசாரணை முறையை (ருniஎநசளயட துரசளைனiஉவழைn) புதிதாக அறிமுகம் செய்கின்றது. சர்வதேச விசாரணை என்பதிலிருந்து முழுநிறை நியாயாதிக்கம் எனப்படுவது வேறுபட்ட விசாரணை பொறிமுறையாகவே காணப்படுகின்றது. உண்மையான சர்வதேச விசாரணை என்பது ஒரு சர்வதேச நீதிமன்றத்தால் நடத்தப்படுவது அல்லது சர்வதேச சிறப்பு நீதிமன்ற முறை ஒன்றை உருவாக்கி நடத்துவது ஆகும். எனினும்;, முழுநிறை நியாயாதிக்க விசாரணை முறை என்பது, போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டு அந்தந்த நாட்டுச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்யப்படுவதைக் குறிப்பதாகும். தடை விதிக்கப்படுபவர்கள் அந்தந்த நாடுகளுக்கான பயணத்தை தவிர்க்கையில் இங்கு நீதி நீர்த்துப்போகும் நிலையையே உருவாக்கும். இது ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விசாரணைக் கேரிக்கைகள் மாத்திரமல்ல, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக்கூட நீத்துப் போகச் செய்யும் செயற்பாட்டையே அடையாளப்படுத்துகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முழு நிறை நியாயாதிக்க விசாரணை முறைமை தொடர்பில் கருத்துரைத்துள்ள கூர்மை இணையத்தள ஆசிரியர் நிக்சன், 'இம்முறையைக் காண்பித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துத் தமது புவிசார் அரசியல் நோக்கங்களை அடைந்ததும், அந்த விசாரணையைக் கூடப் பின்னர் அமெரிக்கா கைவிடும். ஏனெனில் காஷ்மீரை மையப்படுத்தி மனித உரிமை விவகாரங்களால், எந்த ஒரு விசாரணைக்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்காது. அமெரிக்காவும் இந்தியாவைக் கடந்து இலங்கை விவகாரத்தில் தலையிடாது.' எனக்குறிப்பிட்டுள்ளார். இப்பார்வையில் மனித உரிமை பேரவை விசாரணைப்பொறிமுறைக்கான எத்தனத்தையே முழுமையாக வீச்சில் வழங்க தயாரில்லை என்பதே அடையாளப்படுத்தப்படுகின்றது.
எனவே, கடந்த பத்தாண்டு காலமாக ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் தக்கவைத்துள்ள ஜெனிவா களத்தை தமிழர்கள் கடந்து செல்ல வேண்டிய தேவையையே ஆணையாளரின் ஈழத்தமிழர் விவகார தவிர்ப்பு வெளிப்படுத்துகின்றது. கடந்த காலங்களில் பூச்சிய வரைபில் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி, இறுதி வரைபில் அரசாங்கத்துக்கான காலநீடிப்புடன் தமிழ் மக்களை ஏமாற்றும் படலத்திலிருந்து இம்முறை பூச்சிய வரைபு வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. ஆரம்பத்திலேயே ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய இயலுமை ஐ.நா மனித உரிமை பேரவைகளிடம் காணப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நீதிப்பொறிமுறையினை முன்னிறுத்திய மனித உரிமை பேரவை சர்வதேச சமூகத்திடம் பொறுப்பை கைமாற்றி முழு நிறை நியாயாதிக்க விசாரணைக்கான நெறிமுறையை பரிசீலிப்பது மனித உரிமை பேரவையின் இயலுமையை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. ஈழத்தமிழர் அரசியல் உரிமைப்போராட்டம் தனது அஞ்சலோட்டத்தில் ஜெனீவா களத்திலிருந்து அடுத்த நகர்விற்குள் பயணிக்க வேண்டும்.
Comments
Post a Comment