ஜெனிவா அரங்கில் தென்னிலங்கை உத்திகளும் ஈழத்தமிழரசியலின் எதிர்வினைகளும்! -ஐ.வி.மகாசேனன்-

2012ஆம் ஆண்டு ஐ.நா வெளிக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினை நகர்த்தப்பட்டது முதல் வருடாவருடம் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் ஈழத்தமிழரசியல் ஜெனிவாவை மையப்படுத்தி திருவிழாவை அரங்கேற்றி வருகின்றது. 2022ஆம் ஆண்டு செப்டெம்பர்-12அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சர்வதேச சமூகத்திடம் இலங்கையில் அடிப்படை உரிமைகள் மீறல்கள் சம்பந்தமாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையின் பின்புலம் 51வது அமர்வு இலங்கை அரசாங்கத்திற்கு அதிக நெருக்கடியை உருவாக்கலாமென்ற உரையாடல்களை ஆரம்பித்துள்ளது. அதேவேளை தென்னிலங்கை அரசியல் தேசிய நலன் என்பதை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடிகளை கையாள்வதற்கான உத்திகளையும் மூர்க்கத்தனமாக முன்னெடுத்து வருகின்றது. எனினும், ஈழத்தமிழரசியல் தரப்பு இலங்கை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத விடயங்களை முன்னிறுத்தி ஜெனிவாவிற்கான அரசியலை நகர்த்துகின்ற போதிலும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு வீரியத்துக்கு நிகரான எதிர்வினையை ஈழத்தமிழரசியல் தரப்பு வழங்கவில்லை என்ற விமர்சனங்களும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இக்கட்டுரை, ஜெனிவா தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஈழத்தமிழரசியல் தரப்பின் எதிர்வினைகளையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலாவது, இலங்கை அரசாங்;கம் தனது முழுமையான அரச இயந்திரக்கட்டமைப்பை ஜெனிவா அமர்வை கையாள்வதற்கான உத்தியாக பயன்படுத்தி வருகின்றது. இது இலங்கைக்கு சாதகமான சூழலை வழங்குகின்றது. சர்வதேச உறவுகளில், அரசுகள் அரசுகளுடனான உறவில் அதிகம் பிணக்குகளற்ற மென்அதிகார போக்கையே பேண முயலும். அவ்வகையிலேயே கடந்த பத்தாண்டுகளாக சர்வதேச சமூகமும் இலங்கை விவகாரத்தை கால இழுத்தடிப்பு செய்து வந்துள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்சேல் பச்லெட் இலங்கை மனித விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்க ஒத்துழைப்பு கோரி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்குமளவுக்கு இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச அரசுகள் நீர்த்துப்போகவே செய்து வந்துள்ளன. இது இலங்கை அரசாங்கம் அரச இயந்திரத்தினூடாக சர்வதேச சமூகத்தை கையாளும் சாதக திறனாகும். 51வது அமர்விற்கும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் தொடர்பான புதிய தீர்மானத்தை, குறிப்பாக வெளி விசாரணைப் பொறிமுறை தொடர்பில் கருத்துரைத்த அலி சப்ரி, 'மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான வெளிப்புற பொறிமுறையை இலங்கை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அது நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயலாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு, இறைமை மற்றும் தேசிய நலன் என்ற சொல்லாடல்களூடாகவும் இலங்கை அரசாங்கம் அரச இயந்திரத்தின் ஆற்றல்களை சர்வதேச உறவுகளில் முழுமையாக ஈடுபடுத்துகிறது.

இரண்டாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் சமகாலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னிறுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற உரையாடலுக்குள்ளால் இலங்கை அரசாங்கம் மழுப்ப முயன்றுள்ளது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் போலியான கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் இப்பகுதியின் முன்னைய இதழில், 'பயங்கரவாதம் – தேசிய பாதுகாப்பு போலி வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் இலங்கைத்தீவு!' எனும் தலைப்பிலான கட்டுரையில் விளக்கியுள்ளார். பயங்கரவாத சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற தலைப்பை பரிமாற்றுகின்ற போதிலும் அதன் உள்ளடக்கமும் பிரயோகமும் மாறாத நிலையில் அது தொடர்ச்சியாக மனித உரிமைகளுக்கு நெருக்கடியான சட்டமாகவே அமைகின்றது. இப்போலி மாற்றமும் அரச இயந்திரத்தின் ஆற்றலுக்குட்பட்டதாகவே அமைகின்றது. ஹம்சா அலாரி பின்காலனித்துவம் பற்றிய உரையாடலில் பின்காலனித்துவ அரச கட்டமைப்பின் தோல்விக்கான காரணங்களாக, ஊழலையும் அதிகார துஷ;பிரயோகத்தையும், அரச வன்முறையும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான இயல்புக்குள்ளேயே இலங்கைத்தீவின் பின்கலனித்துவ அரச வடிவம் தோல்வியடைந்துள்ளது. அதன் சாட்சியமாகவே போலி தேசிய பாதுகாப்பு சட்ட உரையாடலும் அமைகிறது.

மூன்றாவது, இலங்கையின் நிலையற்ற அரசாங்கம் தொடர்பிலும், ஸ்திரமற்ற தன்மை தொடர்பிலும் சர்வதேச நிறுவனங்களின் மற்றும் அரசுகளின் நம்பிக்கையை இலங்கை இழந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்களும் இதனால் இழுபறியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் இவ்ஸ்திரமற்ற சூழலுக்குள் ஜெனிவா கூட்டத்தொடரிலும் இலங்கைக்கான நெருக்கடியை அதிகரிப்பதற்கான பிரயத்தனங்களே சர்வதேச சக்திகளால் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதுவரைகாலம் சர்வகட்சி அரசாங்கத்தினை உருவாக்க தென்னிலங்கை அரசியல் கட்சிகள் முரண்பட்டு நின்ற போதிலும், ஜெனிவா நெருக்கடியை தளர்த்துவதற்காக தேசிய சபை உருவாக்கத்திற்கு இணங்கி வந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தணிக்கும் வகையில், 'தேசிய சபை' அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் தினேஷ; குணவர்த்தன தலைமையில் செப்டெம்பர்-09அன்று பாராளுமன்ற கட்டத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு,  37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய சபை உருவாக்கம் அதிகம் ஜெனிவா நெருக்கடியை கையாள்வதற்கான அரசாங்கத்தின் உத்தியாகவே காணப்படுகின்றது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச 'உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீட்டை சமகி ஜன் பலவேகய (ளுதுடீ) ஆதரிக்கவில்லை. எங்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டாம். உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை' மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தென்னிலங்கை கட்சிகளிடையே ஆட்சியதிகாரம் சார்ந்து முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பொது அரங்கில் இலங்கை சார்ந்த உரையாடலில் ஒருமித்து செயற்படுவதனையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

இலங்கை அரசாங்கம் அரச இயந்திரத்தின் ஆற்றலையும் தென்னிலங்கையின் இலங்கை சார்ந்த தேசியவாத சிந்தனைகளையும் பிணைத்து மூர்க்கத்தனமாக ஜெனிவாவை கையாளுத் உத்திகளை நெறிப்படுத்தி வருகின்றனர். இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் தென்னிலங்கை சிவில் சமூகங்களும் அரகல்யாவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் போர்க்குற்றத்துக்காக நீPதி கோரும் தமிழ்த்தரப்பின் செயற்பாடுகள் போதிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த தவறியுள்ளதாகவே புலப்படுகின்றது. 

ஒன்று, அரச இயந்திரத்திற்கு எதிராக போராடுகையில் தனக்குள்ளோர் செறிவான கட்டமைப்பை ஈழத்தமிழரசியல் தரப்பு கொண்டிருக்க வேண்டும். எனினும் ஈழத்தமிழரசியல் தரப்பு ஜெனிவாவை நீட்சியான அரசியல் செயற்பாடாக பயன்படுத்தாது பருவகால நிகழ்வாகவே கையாண்டு வருகின்றது. கடந்த பத்தாண்டு காலமாக ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் எதனையும் நிறைவேற்றியிருக்கவில்லை. இதற்கு எதிர்வினையாக ஈழத்தமிழரசியல் தரப்பு கடந்த கால ஜெனிவா தீர்மானங்களையும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் தரவுகளை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். எனினும் தமிழரசியல் தரப்பு புதிய அறிக்கை புதிய தீர்மானம் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டுள்ளார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நகர்த்துவது தொடர்பில் தமிழரசியல்வாதிகள் உரையாடுகின்ற போதிலும் அவை செயற்பாட்டுக்கான உள்ளடக்கமற்ற அரசியல் பிரச்சாரங்களாகவே காணப்படுகின்றது.

இரண்டு, தேசியத்தின் பலம் மற்றும் தேசியத்தின் அடையாளம் திரட்சி என்பதை இலங்கை பெருந்தேசியத்திலிருந்து தமிழ் அரசியல் தரப்பு புரிந்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கையின் பெருந்தேசியத்தை பாதுகாக்கும் நோக்கில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தங்கள் அதிகார மோதுகையை கடந்து ஒன்றிணைகின்றது. எனினும் தேசிய இனத்துக்கான சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழ்த்தரப்பு திரட்சிக்குள் செல்வது இயலாமையாக காணப்படுகின்றது. தமிழரசியலில் தேர்தல் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கான தலைமையை வழங்குவதனால் தேர்தல் போட்டி சார்ந்த சிந்தனையில் தேசியத்துக்கான ஒன்றிணைவில் பயணிக்க தவறுகிறார்கள். போட்டி அரசியலால் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் அடைய இயலாத பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றது. ஜெனிவா அரங்குக்குள் முன்னேற்றமின்றி தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் சுருங்கி இருப்பதற்கும் தமிழ்த்தேசியத்தின் திரட்சியற்ற தன்மையே காரணமாக உள்ளது.

மூன்று, தமிழரசியலில் கட்சிகள் தம் பணியை பூரணப்படுத்தாத போதிலும் புலம்பெயர் சமூக செயற்பாட்டாளர்களினதும், காணமாலாக்கப்பட்டோர் சங்க அன்னையர்களின் முடிவற்ற போராட்டங்களாலேயுமே தமிழ் மக்களின் உரிமைக்கோஷங்களும் அபிலாசைகளும் உயிர்ப்புடன் பேணப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  51வது கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், உள்நாட்டு மோதலின் போது (1983-2009) இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்ற பகுதிகளை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை கனடாவை சேர்ந்த பொதுநல பரப்புரை நிலையம் (வுhந Pரடிடiஉ ஐவெநசநளவ யுனஎழஉயஉல ஊநவெசந) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற ஆயிரக்கணக்கான மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்ற திகதிகள், பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களின பெயர்கள், இடம்பெற்ற இடம் போன்ற விவரங்களுடன் தெரிவிக்கும் வகையில் இந்த வரைபடம் காணப்படுகின்றது இந்த வரைபடம் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஐ.நாவின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு அவசியமான அடிப்படை ஆதரவை வழங்குகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினாலேயே ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் பொதுஅரங்கிலும் நிலைபெறுகின்றது.

எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடருக்கான சூழமைவை முழுமையாக நோக்குகையில், ஆரம்பம் இலங்கை அரசாங்கத்தின் இயல்பான அதிகார துஷ;பிரயோக செயற்பாடுகளால் மனித உரிமை விவகாரத்தில் நெருக்கடிக்கான சூழமைவே பிரதியீடு செய்கின்றது. குறிப்பாக செப்டெம்பர்-06அன்று வெளியிடப்பட்டுள்ள, இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்-இன் முன்கூட்டிய திருத்தப்படதா அறிக்கையின் உள்ளடக்கங்கள் இலங்கைக்கு நெருக்கடியை முன்னறிவிப்பதாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் ஜெனிவாவை கையாள்வதற்கான பொறிமுறையும் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ஈழத்தமிழரசியல் தரப்பின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் மீளவும் ஜெனிவா அரங்கை கடந்த காலங்கள் போல் அறிக்கையிடல் கட்டமைப்பாக கடந்து செல்லக்கூடிய எதிர்பார்க்கைகளேயே ஏற்படுத்துகிறது. மேலும் இம்முறை ஈழத்தமிழர்களின் போர்க்குற்ற நியாயாதிக்கத்தை கடந்து, அரகல்யாவுக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையே முதன்மை பெறுகின்றது. இது சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீளவும் ஒத்தி வைக்கக்கூடிய சூழ்நிலையையே அடையாளப்படுத்துகிறது.



Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-