பௌத்தத்தினூடாக வலுப்பெறும் சீன-இலங்கை உறவும்! நெருக்கடிக்குள் நகரும் இந்திய-இலங்கை உறவும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை பல கோணங்களில் இலங்கை அரசாங்கம் அலசி வருகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாடல்களும் அதனோர் பகுதியாகவே அமைகின்றது. மேலும், பொருளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலான வாய்ப்புக்களையும் உருவாக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே கடந்த வாரம் பாராளுமன்ற விவாதத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பற்றிய ஆய்வுகளில், தென்னிலங்கை புத்திஜீவிகளே அச்சட்டமூலம் இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான தாக்கத்தை உருவாக்கக்கூடியதென்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகார பகிர்வினையான 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாதம், நாட்டின் இறைமைக்கு சவால் ஏற்படுத்தக்கூடிய துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் சலன...