இந்தியா- இந்து தேசியவாதத்தால் தமிழ்த்தேசியம் திசைதிருப்பப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக இயல்பு தொடர்ச்சியாக இலங்கை மீது ஏதொவொரு வகையில் தாக்கத்தை செலுத்தும் காரணியாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவின் இத்தாக்கங்கள் வரலாற்றுரீதியாகவே இலங்கையில் வடக்கினூடாகவே நகர்த்தப்பட்டு வந்துள்ளது.  இலங்கையில் பௌத்தத்தின் வருகையும் இவ்வாறான வரலாற்று முன் அனுபவத்தையே கொண்டுள்ளது. இவ்வரலாற்று முன் அனுபவங்களின் தொடர்ச்சியாகவே, இந்தியாவின் தற்போதைய ஆளும் அரசாங்கமான பாரதீஜ ஜனதாக்  கட்சி, தாம் முதன்மைப்படுத்தும் இந்து தேசியவாதத்தை இலங்கையில் நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சமகாலத்தில் இலங்கை-இந்திய உறவில் இந்து தேசியவாதம் முதன்மையான பகுதியாக இருப்பதனை, இந்திய தலைவர்களின் உரையாடல்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை இந்தியாவின் இந்து தேசியவாதம், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியவாதத்துக்குமிடையிலான முரண்நகைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி-9 முதல் 12ஆம் திகதி வரை நான்கு நாட்கள் விஜயமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் இந்திய மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். குறித்த வருகையின் பிரதான விடயமாக, இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கிய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு காணப்பட்டது. இதனை தவிர யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு, சிவில் சமுகத்தினருடனான சந்திப்பு மற்றும் சில தமிழ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். குறிப்பாக அண்ணாமலையின் யாழ்ப்பாண வருகையின் சமாந்தர காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழாவிற்கு சிறப்பு அதிதியாக அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார். குறித்த நிகழ்வில் அண்ணாமலை பலாலி பெயர் உருவாக்கத்தின் பின்னால் இராமரை இணைத்து உரையாற்றியிருந்தார். இவ்உரையாடல் சமுக வலைத்தளங்களில் கேலிக்கைக்கு உள்ளாகி வருகின்றது. கேலிக்கைகளுக்கு அப்பால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாலையின் உரை பா.ஜ.க அரசாங்கம் ஈழத்தமிழர்களை அணுக முயலும் முறைமையையே அடையாளப்படுத்துகின்றது. குறிப்பாக, பா.ஜ.க அரசாங்கம் ஈழத்தமிழர்களினை தமது இந்து தேசியவாதத்திற்கு ஊடாக அணுக முயலும் போக்கினையே அரசியல் அவதானிகள் அடையாளப்படுத்துகின்றனர்.

ஈழத்தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற சுலோகத்துடன் நீண்ட பிணைப்பை கொண்டவர்கள், இச்சூழலில் இந்தியாவின் ஆளும் அரசாங்கம் முதன்மைப்படுத்தும் இந்து தேசியவாதம் ஈழத்தமிழர்களிடையே சாத்தியமானதா என்பதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

ஒன்று, ஈழத்தமிழர்களிடேயே தமிழ்த்தேசிய கருத்தியல் சாதி மத பிளவுகளை கடந்த ஒன்றிணைந்த வரலாற்றை உருவாக்கியுள்ளது. தமிழர்களின் கிளர்ச்சியில் மதத்தின் பங்கைப் புரிந்துகொள்வதற்கு, பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்தியிலிருந்து சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் நவீன தேசியவாதத்தின் வளர்ச்சி பற்றிய புரிதல் அவசியமாகின்றது. காலனித்துவத்திற்கு முந்தைய இலங்கையில் சாதி மற்றும் பிராந்திய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக அடுக்கு வலுவாக இருந்தது. பின்னர் தீவின் குடிமக்களின் காலனித்துவ வகைப்பாடுகள் தீவிரமான மத மற்றும் இன அடையாளங்களுடன் புதிய அடையாளங்களை உருவாக்கியது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வடிவம் புதிய மாறுதல்களை பெறத்தொடங்கியது. குறிப்பாக தமிழ்த்தேசிய உரையாடல் என்பது பிளவுகளை கடந்த தமிழ் மக்களின் திரட்சியை வலியுறுத்தியது. வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மானிடவியல் நிபுணர் டீசலயn Pகயககநnடிநசபநச வாதிடுவது போல், '1960கள் மற்றும் 1970களில், இலங்கை தமிழரசு கட்சி தனது தமிழ் தொகுதியை சாதி போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகளிலிருந்து தமிழர்களை ஒன்றிணைக்கும் காரணங்களுக்குத் திருப்பியதன் மூலம் தனது அரசியல் இருப்பை பலப்படுத்தி கொண்டது. தமிழரசு கட்சியும் அதன் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஒரு அரசியல் குடையின் கீழ் ஒன்றிணைக்க முனைந்ததால், தமிழ் பேசும் குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. எனவே உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் சமூக மாற்றம் இரண்டும் தமிழ் தற்காப்பு இன தேசியவாதத்தை தீவிரப்படுத்தியது.' 

இரண்டு, ஈழத்தமிழரசியலில் 1980கள் தொடக்கம் 2009வரை நிலைபெற்ற ஆயுதப் போராட்ட வரலாறும் அதில் ஆதிக்கம் செலுத்திய விடுதலைப்புலிகள் இயக்கமும் தமிழ்த்தேசியத்துக்குள் மதங்களை கடந்த பிணைப்பின் தேவையையும் நிலைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தவாதியான அன்டன் பாலசிங்கம், தமிழ்த் தேசம் சிங்கள பௌத்த ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றும், ஒரு தேசமாக வாழ்வதற்கு விடுதலை தேவை என்றும் முடிவு பரப்புரை செய்தார். இதனடிப்படையில், 'தமிழீழம் ஒரு சுதந்திர, சோசலிச மற்றும் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்' எனும் எண்ணங்களை ஆயுதப்போராட்ட காலத்தில் முதன்மைப்படுத்தப்பட்ட அரச கட்டமைப்பாக காணப்பட்டது. அன்டன் பாலசிங்கம் மற்றும் தராகி சிவராம் போன்ற ஆயுதப்போராட்ட தமிழ்த்தரப்புடன் பயணித்த புத்திஜீவிகளின் எழுத்துக்களின் தேசியவாத உரையாடலில் மதம் வரையறுக்கப்பட்டிருந்தாலும் முக்கிய பங்கு வகித்திருக்கவில்லை.

மூன்று, ஈழத்தமிழரசியல் தமிழ்த்தேசியத்துக்குள் மதங்கள் மற்றும் பிரிவினைகளை கடந்தே தமது தலைமைகளை உருவாக்கி வந்துள்ளது. முதன்மையானதாக ஈழத்தமிழரசியலில் தந்தை என சிறப்பிக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் மற்றும் கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட போதிலும், இறுதி வரை யாழ்ப்பாண மாவட்டத்திலே தேர்தலை எதிர்கொண்டு மக்கள் ஆணையை பெற்று வந்தார். அதுமட்டுமன்றி மத அடையாளங்களை தாண்டி தமிழ்த்தேசியத்தின் தலைமையாகவே தமிழ் மக்களாலும் செல்வநாயகம் அடையாளப்படுத்தப்பட்டர். ஆதன் உயர்ச்சியே தமிழ்த்தேசியத்தின் தந்தை என்ற நிலைக்கு செல்வநாயகம் உயர்த்தப்பட்டார். அவ்வாறே 2009களுக்கு பின்னர் தமிழ் மக்கள் குரலற்றவர்களாக ஒடுக்கப்பட்ட சூழலில் தமிழ் மக்களின் குரலாக சர்வதேச அரங்கிற்கு தமிழ் மக்களின் உரிமை கோசங்களை நகர்த்தி சென்றவர்களில் மன்னார் ஆண்டகை இராஜப்பு ஜோசப் முதன்மையானவராக காணப்படுகின்றார். ஆண்டகை ஒரு மதத்தின் முதல்வராக இருந்த போதிலும் ஏனைய மதங்களுக்கும் சமபங்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி இருந்தார். தமிழ்த்தேசியம் என்ற ஒற்றை முனையிலேயே ஆண்டகை இராஜப்பு ஜோசப் அவர்களின் பணி முதன்மையாகியது. சுமகாலத்தில் தமிழ்த்தேசியத்தின் சில பகுதிகளில் மத முரண்பாடுகள் உரையாடப்படும் சமதளத்தில் பெப்ரவரி-04அன்று நடைபெற்ற கரிநாள் பேரணியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் தனது அங்கிக்கு மெலாக காவித்துணியை போர்த்தி கொண்டு சென்றிருந்தார். இந்நிகழ்வுகள் ஈழத்தமிழரசியலில் தமிழ்த்தேசியம் மதங்களை கடந்த புள்ளி என்பதையே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றது.

நான்கு, ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியவாதத்தின் மதச்சார்பின்மை நிலைப்பாடு தமிழகத்தாடு பிணைந்த வரலாற்றையும் கொண்டுள்ளது. 1950கள் மற்றும் 1960களில் இலங்கைத் தமிழ் தேசியவாதம் திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் இந்தி திணிப்புக்கு எதிரான தமிழ் பிரிவினைவாத அரசியலால் தாக்கம் செலுத்தப்பட்டது. தாராகி சிவராம், இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் திராவிட தேசியவாதத்தில் காணப்படும் நவீனத்துவ மற்றும் மிகை பகுத்தறிவு நீரோட்டங்களால் வலுவாக தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்குறிப்பிடுகின்றார். எனவே தமிழகத்தின் தமிழ்த்தேசியவாதத்தின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியவாதத்துக்குள் தாக்கம் செலுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இப்பின்னணியிலேயே தமிழகத்தில் இந்து தேசியவாதத்தை நிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கம் தமிழக பா.ஜ.க கிளையின் தலைவர் அண்ணாமலையினூடாகவே ஆளும் பாரதீஜ ஜனதா அரசாங்கம் ஈழத்தமிழர்களிடையே இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தலுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. எனினும் தமிழகத்தில் சீமான் போன்றவர்களின் தமிழ்த்தேசியவாத கருத்தாடல்கள் திராவிட அரசியலை முதன்மைப்படுத்திய திராவிட கழக அரசியலையும் தமிழ்த்தேசிய அலைக்குள் தள்ளியுள்ளது. இப்பின்னணியில் சமகால தமிழக அரசியல் 1950, 1960களில் காணப்பட்ட தமிழ்த்தேசியவாத அரசியல்  கொதிநிலையை பெற்றுள்ளது. எனவே இந்து தேசியவாதம் என்பது இலகுவில் சாத்தியமற்ற சூழலே தமிழகத்தை தழுவி ஈழத்திலும் காணப்படுகின்றது.

எனவே, இந்திய மத்திய அரசின் இந்து தேசியவாத அழுத்தம் ஈழத்தமிழரசியலில் மிக தொலைவாகவே உள்ளது. எனினும் ஈழத்தின் சில தளங்களில் தமிழ்த்தேசியத்தின் திரட்சியை சிதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் மறுக்க இயலாத வாதமாவே காணப்படுகின்றது. குறிப்பாக சாதிய உரையாடல்களும், மதப்பிளவுகளும் தமிழ்த்தேசிய விரோதிகளால் தமிழ்த்தேசியத்துக்குள் புகுத்தப்படும் அவலமும் ஒரு தளத்தில் இடம்பெறுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியாவும், இலங்கையும் நாகரிக இரட்டையர்' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது இலங்கைத்தீவை முழுமையாக இந்து தேசியவாதத்துக்குள் ஒன்றிணைக்கும் நிலைப்பாடாகவே காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகவே பௌத்தத்திற்கும் இந்துத்துவத்திற்கும் இடையிலான உறவை முகாமைப்படுத்தும் வகையிலேயே 2021 ஒக்டோபரில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குசிநகர் விமான நிலைய திறப்பு நிகழ்வு காணப்படுகின்றது. அதேவேளை வடக்கு-கிழக்கில் இந்து மதத்தை நேரடியாக முதன்மைப்படுத்தி இந்திய அரசு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகின்றது. இதனடிப்படையிலேயே பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்து தேசியவாதத்தை ஈழத்தமிழ்த்தமிழர்களிடம் பரிட்சீர்த்து பார்க்கும் களமாகவே ஈழத்தமிழர்களிடையே இந்துத்துவ நிலைப்பாடுடையவர்களை ஆரம்பத்தில் ஊக்குவித்தது. எனினும் அது முழுமையாக வெற்றியடையாத சூழலில், தற்போது நேரடியாக தமிழக பா.ஜ.க கிளை ஊடாக செயற்பாட்டில் இறங்கியுள்ளது. தமிழ்த்தேசியம் இந்து தேசியவாத சூழலுக்குள்ளும் தமது இருப்பை உறுதிப்படுத்துவதே அதன் தேவைப்பாடாகும்.



Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-