இலங்கை தேசிய இனப்பிரச்சினையும் பௌத்த தீவிரவாதத்தின் உபாயமும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் பௌத்தம் மேலான நிலையை பெற்று வருகின்றமையை வரலாறுகள் தொடர்ச்சியாக உணர்த்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே தேசிய இனப்பிரச்சினை உருவாக்கம் மற்றும் தொடர்கையிலும் இலங்கை அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேலதிக்கமே மைய காரணமாகும். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே அரசியலமைப்புக்களுக்கூடாக ஜனநாயகமயப்படுத்தலும், பேரினவாதமயப்படுத்தலும் சமாந்தரமாகவே வளர்ந்து வந்து பின்னர் ஒரு கட்டத்தில் பேரினவாதம் மேலாட்சிக்கு வந்து தானே ஜனநாயகமயப்படுத்தலையும் தீர்மானிக்குமொன்றாக நிலைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலில் 13ஆம் சீர்திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தேசிய இனப்பிரச்சினை தீர்வில் பௌத்த மேலாதிக்கத்தின் ஆதிக்கத்தை மீண்டுமொரு தடவை உணர்த்தியுள்ளது. இக்கட்டுரை இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பௌத்தத்தின் மேலாதிக்க விளைவுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், இலங்கையின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்குள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக உறுதியளித்த ரணில் விக்கிரமசிங்கா தேசிய இனப்பிரச்சினை தீர்வு உள்ளடக்கங்கள் தொடர்பாக எவ்வித அறிவித்தல்களையும் ஆரம்பத்தில் மேற்கொண்டிருக்கவில்லை. எனினும் ஜனவரி-26அன்று நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்தில், அரசியலமைப்பின் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மேலும், பெப்ரவரி-8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் போது, 13வது சீர்திருத்தம் தொடர்பாக தேசத்திற்கு உறுதிமொழி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் 13ஆம் சீர்திருத்தம் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினர் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக, 13ஆம் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கைத்தீவின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்குமென மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன் 13வது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பில் பெப்ரவரி-08அன்று பௌத்த பிக்குகளும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கொழும்பு - பத்தரமுல்லை பகுதியில் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் உள்ளிட்ட ஐயாயிரம் பிக்குகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே பெப்ரவரி-08அன்று கொள்கை பிரகடன உரையில் 13வது அரசியமைப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பை முற்றாக தவிர்த்திருந்தார். மேலும், காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி கீழிறங்கியிருந்தார்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் ஆட்சித்துறை தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்னகர்வுகளை வெளியிடுவதும், உரையாடல் களத்திலேயே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பினை தொடர்ந்து இடைநழுவுவதும் தொடர் அவலமாக நீள்கிறது. இதன் வரலாற்று பின்புலத்தை அவதானித்தல் அவசியமாகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பௌத்தத்தின் மேலாதிக்கம் கி.பி ஆறாம் நூற்றாண்டு சிங்கள இலக்கியங்களிலேயே முதன்மைப்படுத்தப்படலாயிற்று. குறிப்பாக இலங்கையின் வரலாற்று நூலாக முதன்மைப்படுத்தப்படும் மகாவம்சம் சிங்கள பௌத்த புணைகதைகளின் தொகுப்பு என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றது. புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் கூறப்படும் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களை மகாவம்சம் விவரிக்கிறது. மகாவம்சத்தின் நாயகனான  விஜயனை சிங்கள மக்களின் தந்தையாகவும் அடையாளப்படுத்துகிறது. புத்தர் இறந்த நாளில் வங்காளத்தில் உள்ள சிங்கபுரத்திலிருந்து லங்கா தீவில் விஜயன் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. புத்தர் தனது மரணப் படுக்கையில், இலங்கைக்கான தனது வரலாற்றுப் பணியில் விஜயனைப் பாதுகாக்குமாறு சக்ரா கடவுளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் புத்த மதம் 5,000 ஆண்டுகளுக்கு செழிக்கும் என்று கணித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனது தமிழ் எதிரிகளை தோற்கடித்து, தனது தலைமையில் முழுத் தீவுகளையும் ஒன்றிணைத்த பண்டைய சிங்கள பௌத்த மன்னன் துட்டகைமுனுவின் இறையச்சத்தையும் மகாவம்சம் போற்றுகிறது. பௌத்தத்தை மையப்படுத்திய தேசிய அடையாளம், பிரதேச ஒருமைப்பாடு மற்றும் மதக் கடமை ஆகியன மகாவம்சத்தின் வழி நவீன சிங்கள அரசியலில் எதிரொலித்தது. இப்பின்னணியிலுமேயே சிங்கள தேசியவாதிகள் பௌத்தத்தின் இருத்தலியல் அச்சுறுத்தலைக் கூட்டாட்சி அல்லது அதிகாரப் பகிர்வைக் கெடுக்கும் ஒரு தந்திரோபாயமாகப் பயன்படுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கையின் பௌத்தத் தலைவர்கள் அரசியல் அரங்கில் தங்களுக்குப் பொருத்தமானதாக உணர்ந்த போதெல்லாம், குறிப்பாக பௌத்த நம்பிக்கையின் முதன்மையை பிரதானப்படுத்தி தீவிரமாகச் செயற்பட்டுள்ளனர். 1951இல், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் பிரதமரின் தீர்மானங்களில், 'பௌத்தத்தையும் பௌத்த நிறுவனங்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அரசாங்கம் சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளது' என்ற அறிக்கையை உள்ளடக்கியது. அத்துடன் பௌத்த மதத்தை அதற்கு உரிய கௌரவத்தின் முதன்மையான நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது. அதே ஆண்டில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை அடையாளம் காட்டி, சிங்கள பௌத்த நலன்களை மேம்படுத்துவதற்கான சபதத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டதிலிருந்து மாறி மாறி அரசாங்கத்தினை உருவாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சிங்கள பௌத்த ஸ்தாபனத்திற்கும் அதன் மிகப் பெரிய மக்கள் தொகுதிக்கும் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது. இலங்கை பௌத்தர்கள், இலங்கை மீதான தமது நம்பிக்கையைப் பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான பௌத்த துறவிகள் அதற்காக சபதம் எடுத்துள்ளனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். பௌத்தத் தலைவர்கள் நம்பிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குரல் கொடுக்கும்போது, இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிகரமான செய்தியாகும். அதன் வரலாறே பௌத்த மகாசங்கங்களின் அறிவிப்புக்களை இலங்கையின் அரசியலமைப்பை மீறிய உயர் சட்டமாக தென்னிலங்கை அரசாங்கங்கள் செயற்படுத்தி செயற்பட்டு வருகின்றது.

புத்தபெருமானின் புனித நம்பிக்கையை மதிக்க ஒரே மதம் மற்றும் ஒரு மொழி கொண்ட ஒற்றையாட்சி நாடு தேவை என்ற வாதம் சிங்கள பௌத்தர்களிடையே நிறைந்து உள்ளது. இந்த வாதத்தின் தொடர்ச்சியாகவே கூட்டாட்சி பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதுவும் காணப்படுகின்றது. இது தொடர்பில் பிக்குகள் மற்றும் சாதாரண இலங்கை பௌத்தர்களாலும் குரல் கொடுக்கப்படுகிறது. கூட்டாட்சிக்கான உள்ளடக்கங்கள் சிறிதளவேனும் பகிரப்படக்கூடாது என்பதில் சிங்கள பௌத்த தேசியவாதம் உறுதியாக உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கூற்றுப்படி, இலங்கையில் வாழும் ஏனைய தேசிய இனங்கள் இலங்கையில் சிங்கள பௌத்த கலாசாரத்தின் ஆதிக்கத்திற்கு மதிப்பளித்து அதனுள் இணைய வேண்டும் என்பதாகவே காணப்படுகின்றது. 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் 1957ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்ட நெருக்கடியை தொடர்ந்தே 1958இல் பண்டாரநாயக்காவால் கிழிக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தை தொடர்ந்து அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டது. மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சை பெற்றுக்கொண்டார். உள்ளூராட்சி அமைச்சுக்கு உட்பட்ட விதத்தில் திருகோணமலை பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த மு.திருச்செல்வம் முயற்சி எடுக்கையில் தம்மன்கடுவைச் சேர்ந்த மங்கள  தர்மகீர்த்தி ஸ்ரீ டமஸ்கசரே ஸ்ரீ சுமேதங்கர நாயக்க தேரர் பிரதமர் சேனாநாயக்கவிடம் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிரதமரின் நேரடி தலையீட்டில் உள்ளூராட்சி அமைச்சர் மு.திருச்செல்வம் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. டட்லி-செல்வா ஒப்பந்தமும் முழுமையாக சிதைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு சந்திரிக்காவின் தீர்வு பொதி உள்ளடக்கங்களுக்கு எதிராகவும் சிங்கள பௌத்த தேசியவாதம் கடுமையான எதிர்வினையாற்றியது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிங்கள தேசியவாத அமைப்புகளை உள்ளடக்கி சிங்கள ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 1997-செப்டம்பரில் சிங்கள ஆணைக்குழு பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அரசியலமைப்பு வரைவுக்கு எதிரான இடைக்கால அறிக்கை வெளியிட்டது. இடைக்கால அறிக்கை முதன்மையாக சிங்கள சார்பு மொழியில் பேசப்பட்டு, அது ஈழவாதிகளை கண்டித்தது. மேலும், 'மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதால், இந்த நாட்டில் பௌத்தத்தின் எதிர்காலம் உண்மையில் இருண்டதாக இருக்கும்' என்று அது கூறியது. குறித்த இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகள் எவையும் முழுமையான தீர்வாக அமையாத போதிலும் பகுதியளவிலும் அதிகார பகிர்வு சார் உள்ளடக்கங்கள் அமையக்கூடாது என்பதில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உறுதிப்பாட்டையே எதிர்ப்புகள் அடையாளப்படுத்துகிறது. இத்தொடர்ச்சியே 13ஆம் சீர்திருத்த எதிர்ப்பிலும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கூட்டாட்சி அல்லது அதிகாரப் பகிர்வுக்கான முன்மொழிவுகளை நிராகரிப்பதில் பலர் போர்க்குணமிக்கவர்களாக மாறினர். ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி - ஜேவிபி) அதன் ஆயுதமேந்திய உடன்படிக்கைக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவாக பிக்குகளை ஆட்சேர்ப்பதில் இந்த நேரத்தில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. 1995ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிந்ததன் பின்னர் இராணுவத்தில் இணைந்த ஜேவிபி பிக்குகளும், பிக்குகளும் பௌத்தத்தை சமாதானம் மற்றும் அகிம்சையின் தத்துவமாக உணர்ந்தவர்கள் மத்தியில் ஆழ்ந்த குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். எவ்வாறாயினும், உறுதியான சிங்கள பௌத்த சித்தாந்தவாதிகளுக்கு, இலங்கையின் நிலம், இனம் மற்றும் மதத்தின் ஒற்றுமைக்கு இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கு வன்முறையை நியாயப்படுத்த முடியும் என்ற கருத்தை போதித்தனர். இன்றுவரை அவ்வன்முறை நீள்கிறது. ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர் என்பதனை தற்போது ஆட்சியில் உள்ள மொட்டுக் கட்சியினர் மறந்துவிடக்கூடாது எனவும், இதனை மீறி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், நாட்டில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என எல்லே குணவங்ச தேரர் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிப்புக்களே ரணில் விக்கிரமசிங்காவின் கொள்கை பிரகடன உரையில் 13ஆம் திருத்தத்தை நீக்கியது.

எனவே, இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான கூட்டாட்சியை சிங்கள அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக பலர் தொடர்ந்து சமன்படுத்தும் அதே வேளையில், அதிகாரப் பகிர்வு என்பது தீவின் பிளவைக் குறிப்பதாகவே பிரச்சாரம் செய்து வருகின்றனர். பௌத்த ஐதீகமான தம்மதீப கோட்பாட்டில் கட்டுப்பட்டுள்ள இலங்கையானது, அதிலிருந்து விடுதலை பெறாது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளக பொறிமுறைக்குள் அடையப்படுமென்பது தென்னிலங்கை அரசாங்கங்களில் தொடர்ச்சியான ஏமாற்று உரையாடலாகவே அமையப்பெறும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-