பௌத்தத்தினூடாக வலுப்பெறும் சீன-இலங்கை உறவும்! நெருக்கடிக்குள் நகரும் இந்திய-இலங்கை உறவும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை பல கோணங்களில் இலங்கை அரசாங்கம் அலசி வருகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாடல்களும் அதனோர் பகுதியாகவே அமைகின்றது. மேலும், பொருளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலான வாய்ப்புக்களையும் உருவாக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே கடந்த வாரம் பாராளுமன்ற விவாதத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பற்றிய ஆய்வுகளில், தென்னிலங்கை புத்திஜீவிகளே அச்சட்டமூலம் இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான தாக்கத்தை உருவாக்கக்கூடியதென்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகார பகிர்வினையான 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாதம், நாட்டின் இறைமைக்கு சவால் ஏற்படுத்தக்கூடிய துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் சலனமற்று உள்ளார்கள். இக்கட்டுரை 13ஆம் திருத்த நடைமுறைக்கு வலுக்கும் எதிர்ப்புக்கும், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கான அமைதிக்கும் தென்னிலங்கை கொண்டுள்ள நிலைப்பாட்டினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் பெப்ரவரி-22அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான ஒழுங்குமுறை மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்த யோசனையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கோத்தபாய ராஜக்ஷா தலைமையிலான அரசாங்க காலப்பகுதியில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அது இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாகக்கூடியது என்ற எச்சரிக்கையை தென்னிலங்கை புத்திஜீவிகள் வழங்கியிருந்தார்கள். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பொதுச் சட்டத்தின் வாழ்நாள் பேராசிரியர் சூரி ரத்னபால, முன்மொழியப்பட்ட கொழும்பு துறைமுக நகர ஆணைய சட்டமூலத்தின் கீழ் இலங்கையின் தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, துறைமுக நகர சட்டமூலத்தின் ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால், இலங்கையின் சட்ட மற்றும் அரசியல் இறையாண்மையை பல வழிகளில் சிதைக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தார். எனினும் எச்சரிக்கைகள் அனைத்தையும் மீறியே 2021ஆம் ஆண்டு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பெப்ரவரி-22அன்று கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. எனினும் குறித்த விவாதத்தில் கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் இறைமை மீது ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு அப்பால் தென்னிலங்கை அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரமற்ற நிலைப்பாடும் உள்ளூராட்சி சபைத்தேர்தல் பற்றிய விடயங்களே அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஒழுங்குமுறைகள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், துறைமுக நகரத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றிய போதிலும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரமாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், 'அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முடியாது, ஏனெனில் தேர்தல்களை இழக்க நேரிடும் என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் முயற்சிக்கிறது.' என உள்ளூராட்சி சபை தேர்தலை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வது தொடர்பான விசனத்தையே தென்னிலங்கை அரசியல் விவாதம் முன்னிலைப்படுத்தியிருந்தது.
சமகாலப்பகுதியிலேயே, பெப்ரவரியின் முற்பகுதியில் இனப்பிரச்சினை தீர்வாக இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தை உரையாடிய போது அரசாங்க தரப்பிலிருந்தே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் நாடு பிளவுபடப்போவதாக தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக 5000இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் இணைந்து பாராளுமன்ற வீதியில் போராட்டம் நிகழ்த்தியதோடு 13ஆம் திருத்த பிரதியை தீயிட்டு கொழுத்தியிருந்தார்கள். எனினும் துறைமுக நகரம் என்ற போர்வையில் இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட நிலப்பகுதி மீதான இறைமையை தென்னிலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்குவது தொடர்பில் பலமான எதிர்ப்பை காட்ட முன்வரவில்லை. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
சீனா-தென்னிலங்கை உறவானது, தென்னிலங்கையின் அதிகார பீடமான பௌத்த மார்க்கத்தால் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியின் அடிப்படையான சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சி ஏற்பாடுகள் பௌத்த இராஜதந்திரம் பற்றிய ஒரு வினோதமான ஏற்பாட்டுக்குள் இலங்கை பிணைக்கப்படுகின்றது. அமெரிக்க அரசறிவியலாளரான சாமுவேல் பி. ஹன்டிங்டன் பனிப்போருக்கு பின்னரான அரசியலை நாகரீகங்களின் மோதலாக 1990களில் அடையாளப்படுத்துகின்றார். புதிய உலக ஒழுங்கில் அரசுகளின் வெளியுறவுக்கொள்கையினை நாகரீகங்களின் பிணைப்பே தீர்மானிக்கும் சக்தியாக குறிப்பிட்டுள்ளார். சீனாவின் புதிய நூற்றாண்டுக்கான வெளியுறவுக்கொள்கைகளில் அமெரிக்க சிந்தனையாளர்களின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. குறிப்பாக சீனா முதன்மைப்படுத்தும் மென்அதிகாரம் என்பது அமெரிக்க அரசறிவியலாளரான ஜோசப் நை இனால் புதிய நூற்றாண்டுக்கான தேசிய அதிகாரமாக அடையாளப்படுத்தப்படும் கருத்தியலாகவே காணப்படுகின்றது. இவ்அனுபவங்களிலேயே சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் குறித்த அரசுகளுடனான நாகரீக பிணைப்பை அதிகம் உள்வாங்குவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவ்வகையிலேயே சீனா தனது பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை இலங்கையில் பௌத்த இராஜதந்திர பிணைப்புடன் இணைத்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான மத அடக்குமுறை மற்றும் சீனாவின் எல்லைகளுக்குள் கட்டுப்பாடு இருந்தபோதிலும், சீன அரசாங்கம் மதங்களுடன் அடையாளம் காணும் நாடுகளுடன் அதன் உறவுகளைப் பாதுகாக்க அல்லது மேம்படுத்துவதற்காக குறித்த நாடு பின்பற்றும் மதக் கொள்கைகளின் நேரான பார்வையை பரப்ப அதிகளவில் செயற்பட்டு வருகிறது. இந்த மூலோபாயம் வற்புறுத்தலைப் பயன்படுத்தாமல் சீன நலன்களுக்கு ஆதரவளிக்க மற்ற நாடுகளை தூண்டும் செயலாக அமைகிறது. இலங்கை போன்ற பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் இந்த அணுகுமுறையின் பிரதான இலக்குகளாக மாறியுள்ளன. இலங்கையில் பௌத்தம் முதன்மையான மதமாக இருப்பதால், இலங்கை அரசாங்கங்களின் வெளியுறவுக்கொள்கை தீர்மானங்களிலும் பௌத்த மதபீடங்களின் செல்வாக்கு உயரளவில் காணப்படுகின்றது. மேலும், பௌத்தத்தின் சிறப்புரிமை நிலை, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற ஏனைய தேசிய இனங்கள் மற்றும் மத குழுக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைகின்றது. இவ்வாறான சூழலில், சர்வதேச மனித உரிமைகள் முகவர் மற்றும் மேற்கத்திய சக்திகள் கடன்கள் மற்றும் முதலீடுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் அதன் தவறான மனித உரிமை கட்டமைப்பை நிவர்த்தி செய்யும் பணியை இலங்கைக்கு அதிகளவில் வழங்குகின்றன. ஆயினும், சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சி ஊடான கடன் வழங்குவதற்கான நடைமுறைகள், மேற்கு போன்ற உள்ளக முரண்பாட்டில் தலையீடற்று பௌத்த பேரினவாத செயற்பாட்டுக்கான ஆதரவை சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவதனால் சீனாவை இலங்கை அதிகளவில் சார்ந்துள்ளது. மேலும், பொருளாதார செல்வாக்கைத் தவிர, புத்த மதம் போன்ற சீன மதங்களில் வேரூன்றிய மூலோபாய விவரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம், சீனா தனது பொருளாதார கூட்டு நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக தன்னை நிலைநிறுத்த முயன்றது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று பௌத்த பிணைப்புகளை நினைவுகூருவதை மையமாகக் கொண்டது. அவை பகிரப்பட்ட பௌத்த விதி, உறவுகள் மற்றும் மதிப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 'மில்லினியம் பௌத்த விதி' (ஆடைடநnnரைஅ டீரனனாளைவ கயவந) போன்ற சொற்கள் பொதுவாக அவர்களது பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தையும் அவர்களது உறவுகளின் நீண்ட ஆயுளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் மூலம் இலங்கையின் இறைமை சீனாவினால் உள்வாங்கப்படுகின்ற போதிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர்வினையற்று அமைதியாக உள்ளது.
சீனா-இலங்கை உறவில் நேரான பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் இலங்கையின் பௌத்த கருத்தியல் இந்தியா-இலங்கை உறவில்; எதிர்வினையாற்றலை வெளிப்படுத்துவதையே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்துக்கான பௌத்த பேரினவாதத்தின் அமைதியும், 13ஆம் திருத்தத்திற்கான பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பலைகளும் உணர்த்தி நிற்கின்றது.
சமகாலத்தில் புதுடில்லி அரசாங்கம், இந்து மதம் மற்றும் பௌத்த மதத்தின் ஆரம்ப இணைப்புக்களை மையப்படுத்தி தென்னிலங்கையை இந்தியாவின் நாகரீகத்தின் பிணைப்பாக வெளிப்படுத்த முயலுகின்றது. குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தும் இலங்கையும் இந்தியாவும் நாகரீக இரட்டையர்கள் எனும் கருத்தாடல் அதன் தழுவலாகவே காணப்படுகின்றது. எனினும் சீனாவுடன் வெளிப்படுத்தும் நெருக்கத்தை இந்தியாவில் பதிலீடு செய்ய இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதம் தயாராக இல்லை. இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதம் மகாவம்ச மரபு நிலையில், இந்தியாவினை பௌத்தத்தின் அழிவு பாதையாகவே கருதுகின்றது. ஆதலாலேயே இந்தியா அரசாங்கம் தென்னிலங்கையுடன் வலிந்து உறவு கொள்ள முயலும் போதெல்லாம் தென்னிலங்கை அரசாங்கம் தெளிவான இராஜதந்திரத்துடன் தேவை கருதி உறவினை கட்டமைத்து வருகின்றது. தென்னிலங்கை இந்தியா இலங்கையை கையாள முற்படும் போதெல்லாம் பௌத்த மகா சங்கங்களின் தலையீட்டை முன்னிலைப்படுத்தி இந்தியாவை தவிர்க்கும் இராஜதந்திரத்தினை வினைத்திறனாக மேற்கொண்டு வருகின்றது. தேசிய இனப்பிரச்சினை தீர்வாக முன்மொழியப்பட்ட 13ஆம் திருத்தத்தினை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிராகரிப்பின் அடிப்படையிலும், இந்தியா சார்ந்த சிங்கள பௌத்தத்தின் எதிர்மனோநிலை காணப்படுகின்றமையை சிங்கள எழுத்துக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே, தென்னிலங்கையின் அரசியல் இருப்பும் நகர்வும் முழுமையாக சிங்கள பௌத்த பீடங்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. இலங்கை தீவுடன் புதிதாக இணைக்கப்பட்ட நிலப்பகுதியின் இறையாண்மையை சீனாவிற்கு வழங்க தயராக உள்ள தென்னிலங்கை அரசாங்கம் இலங்கையின் பூர்வக்குடியான தமிழினத்துடன் அதிகாரத்தை பகிர தொடர்ச்சியாக எதிர்நிலையினையை வெளிப்படுத்தி வருகின்றமை முழுமையாக சிங்கள பௌத்த பீடங்களின் எண்ணத்தை சார்ந்ததாகவே அமைகின்றது. இப்பின்னணியிலேயே இந்திய அரசாங்கம் இலங்கையை கையாள இலங்கையின் பௌத்தத்தை இந்துத்துவத்தினுள் காட்சிப்படுத்த முயலுகின்ற போதிலும், இலங்கையின் பௌத்த மகாவம்ச நிலைப்பாடுகள் இந்தியாவை தொடர்ச்சியாக தொலைவிலேயே பேண முயலுகின்றது. எனினும் சீனாவுடன் பௌத்தத்தால் இணைய தயார்நிலையை வெளிப்படுத்துகிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் துறைமுக நகர ஆணைக்குழு ஒழுங்கு தொடர்பான விவாதத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'நட்பு நாடுகளுடன் நல்லுறவு இல்லாதவரை சண்டையிட்டு பயன் இல்லை. நமது நாட்டிற்கு ஏற்ற, நாட்டின் தேசிய அடையாளத்தை பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும்' எனத்தெரிவித்துள்ளமையும் அதனையே உணர்த்துகிறது.
Comments
Post a Comment