75வது சுதந்திர தினத்தில்; தென்னிலங்ககையின் ஜனநாயக மீட்பு போராட்டமும்! வடக்கு-கிழக்கின் சுயநிர்ணய உரிமைபோராட்டமும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை பெப்ரவரி-04(2023) அன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றது. குறிப்பாக 75வது சுதந்திர தினத்தை விமர்சையாகவும், நல்லிணக்க பொறிமுறையை ஒன்றிணைத்தும் கொண்டாட இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பெப்ரவரி-11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டங்களும், இந்தியாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையமும் திறந்து வைக்கப்பட உள்ளது. மறுதளத்தில் வடக்கு-கிழக்கில் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி ஒன்றும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பில் சிவில் சமூகங்களால் நடாத்தப்பட உள்ளது. அத்துடன் தென்னிலங்கையிலும் சிவில் சமுகத்தினர் மற்றும் எதிரக்கட்சிகள் அரசாங்கத்தின் சுதந்திர தின விழாவை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரை தென்னிலங்கையின் 75வது சுதந்திர தின நிலைப்பாடுகளினதும், வடக்கு-கிழக்கு கரிநாள் அரசியல் பிரகடனத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே ஏற்றுக்கொள்ளாத நிலைமைகளே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் மேற்கொண்ட அறறவழிப்போராட்டங்களில் காவல்துறையின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளது. 75ஆண்டு கால இலங்கையின் சுதந்திர வரலாற்றில் ஈழத்தமிழர்கள் மீது தென்னிலங்கை அரசாங்கங்கள் நிகழ்த்தி வரும் ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றது. குறிப்பாக 2022இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கையினை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ள போதிலும் ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை அரசு இயந்திரத்தினூடாக தங்குதடையின்றி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை வெளிக்காட்டும் வகையிலேயே தென்னிலங்கை வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ள 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஈழத்தமிழர்கள் அறவழிப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பேரணி பெப்ரவரி-04ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி-07ஆம் திகதி மட்டக்களப்பில் நிறைவடையும் எனத்தெரிவித்துள்ளனர். மாணவர் ஒன்றியங்கள் கடந்தவாரம் வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களுடன் மேற்கொண்டுள்ள கலந்துரையாடல்கள் மூலம் சிவில் சமூகங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளில் ரெலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இணைந்து உருவாக்கியுள்ள புதிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பேரணிக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழரசுக்கட்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையிலும் 75ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மத பண்பாட்டு விழுமியங்களுடன் பிணைந்ததாக இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளது. 'நமோ நமோ மாதா – ஒரு நூற்றாண்டை நோக்கி ஒரு படி' என்ற தொனிப்பொருளினை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுதந்திர தின விழாவின் பிரதான வைபவம் பெப்ரவரி-04 ஆம் திகதி மணிக்கு காலி முகத்திடல் மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் பெப்ரவரி-11ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனினும் தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமுகங்கள், நாட்டின் தலைமைப் பதவிக்கும் அல்லது சட்டமியற்றும் பதவிக்கும் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவரால் வழிநடத்தப்படுகிறது என்ற ஜனநாயக சிதைவை காரணங்காட்டி சுதந்திர தின விழாவை புறக்கணித்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ஒரு அரசாக, ஒரு நாடாக சுதந்திரம் கொண்டாடும் வடிவமும், அளவும், மக்களின் உணர்வுகளால் ஆதரிக்கப்படாமல் இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டி தற்போது அரசு இயந்திரத்தின் கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை அச்சுறுத்தலின் நிழலில் தமது எதிர்ப்பை அடையாளப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கையின் 75வது சுதந்திர தின விழா தென்னிலங்கை அரசாங்கத்துடன் மட்டுப்படுத்தியே கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போதும் இலங்கை இரு தேசமாகவே தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது என்பது கவனத்திற்குரியதாகும். தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினர் இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களையே புறக்கணித்துள்ளனர். மாறாக வடக்கு-கிழக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர். இது தென்னிலங்கை அரசாங்கங்களின் 75 ஆண்டு கால ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக அமைகின்றது. எனவே தென்னிலங்கை மற்றும் தமிழ் சமுகத்தின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டங்களின் அரசியல் வகிபாகம் தொடர்பில் தெளிவான பார்வை தேவைப்படுகின்றது. 

ஒன்று, தமிழ் தரப்பு இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஒடுக்குமுறைக்கு எதிரான தமது உரிமைக்கோரிக்கைகளை முன்னிறுத்துவது நீண்ட கால மரபுடையதாக அமைகின்றது. 1957ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர தினத்தின் போது திருமலை நடராஜன் என்பவர் தமிழரசுக்கட்சியின் இலங்கை சுதந்திர தினத்தை புறக்கணித்து இடம்பெற்ற போராட்டத்தில் இலங்கை தேசிய கொடியை இறக்க சென்ற போது இலங்கை அரச படையின் துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டார். கடந்த சில காலங்களில் தமிழரசியல் கட்சிகள் வௌ;வேறு நோக்கங்களில் மாறுபட்டு பயணித்தாலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இலங்கையின் சுதந்திர நிகழ்வுகளை புறக்கணித்தே வந்துள்ளார்கள். இப்பின்னணியில் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடுகையில் தமிழ்த்தரப்பின் அறவழிப்போராட்டத்துக்கு கனதியான அரசியல் வகிபாகமும் காணப்படுகின்றது. குறிப்பாக 75ஆண்டுகால இலங்கையின் சுதந்திர அரசியல் வரலாற்றில் பேரினவாத அரசாங்கங்களால் அரச இயந்திரத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படும் வரலாற்றை முன்னிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஈழத்தமிழ் சமுகத்திடம் காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கங்கள் தமது அரச இயந்திரத்தின் மூலம் மிகத்தெளிவாக தமது ஒடுக்குமுறைகளை மறைத்து தமது அரசியலை முன்னிறுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வருவதை காட்சிப்படுத்தவது என்பது பேரணியின் திரட்சியிலேயே தங்கியுள்ளது. கட்சி பேதங்களை கடந்து பேரணியை ஒழுங்குபடுத்துவதுடன் அதன் இலக்குக்கான பயணத்தில் ஈழத்தமிழர்களை ஒன்றிணைப்பது வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களின் பெரும் பொறுப்பாக காணப்படுகின்றது.

இரண்டு, யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாட்ட முயற்சிகள் ஜனாதிபதியின் நல்லிணக்க நாடகத்தின் மற்றொரு பகுதியாகும். தைத்திருநாளை யாழ்ப்பாணத்தில் கொண்டாட வந்த போது மக்களின் அறவழிப்போராட்டத்தை பொலிஸார் மிலேச்சத்தனமாக தாக்கியதுடன், போராட்டக்காரர்களை தொடர்ச்சியாக கைது நடவடிக்கைக்குள் உட்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மீள ஒருமாத இடைவெளியில் ஜனாதிபதியின் மீள்வருகை தமிழர்கள் மீதான பொலிஸார் வன்முறைக்கே வழிகோலக்கூடியதாகும். தேசிய இனப்பிரச்சினைத்தீர்வு, மக்களால் தேர்வு செய்யப்படாத மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவமற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் எட்டப்படுவது சிக்கலான பொறிமுறையே ஆகும். எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வை பெற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைக்குள் இணங்கி செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் நல்லிணக்க பொறிமுறை நாடகத்தை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது. வெளிப்போர்வையில் நல்லிணக்க உரையாடலை முன்னிறுத்தும் அரச இயந்திரம் அறவழிப்போராட்டக்காரர்கள் மீது நிகழ்த்தும் அடக்குமுறைகளை சர்வதேசத்திற்கு காட்சிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் சமுகத்திடம் காணப்படுகின்றது. கரிநாள் பேரணியின் வெற்றி அதுசார்ந்தே காணப்படுகின்றது.

மூன்று, சில தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கையின் ஜனநாயக பாதிப்பை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களின் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டத்துடன் தென்னிலங்கை போராட்டங்களை சமன் செய்ய முயலுகின்றனர். அதுதவறான முற்கற்பிதமாகும். தென்னிலங்கையில் எழுந்துள்ள சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் ஈழத்தமிழர்களின் கோரிக்கையுடன் பொருந்துவதாக காணப்படவில்லை. தென்னிலங்கை அரகல்யாவின் அடக்குமுறைக்கு எதிராகவும், அதிகரிக்கும் வரிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பாகவே மட்டுப்படுகின்றது. குறிப்பாக சிங்க கொடியின் கீழாகவே தென்னிலங்கையின் எதிர்ப்புக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றது. தென்னிலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான வாதங்களை முன்வைப்போர் கடந்த காலங்களில் வரிஎய்ப்புக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட புரட்சிகளையே முன்வைக்கின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜெயதிலக 75வது ஆண்டு சுதந்திர தினம் பற்றிய கட்டுரையில், '1848இல் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு வெளிநாட்டு அதிகாரியால் சுமத்தப்பட்ட தாங்க முடியாத சுமை வரிகளால் தூண்டப்பட்ட வீர பூரான் அப்புவையும் நாம் கௌரவிக்க வேண்டும். மேலும், முதல் ஜனநாயகப் புரட்சியான அமெரிக்கப் புரட்சி மற்றும் 1776 சுதந்திரப் போரின் அடிப்படையாக இருந்த 'பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை' என்ற முழக்கத்தை நாம் நினைவுகூர வேண்டும்' என தென்னிலங்கை சுதந்திர தினப்போராட்டத்தில் கொண்டுள்ள வரிசார்ந்த நிலைப்பாட்டை முன்னிறுத்தியுள்ளார். தென்னிலங்கையின் போராட்டங்கள் தமது குறுகிய பொருளாதார நெருக்கடி சார்ந்தும் நடைமுறை அரசாங்கம் மீதான எதிர்ப்பாகவே போராட்டத்தை ஒழுங்கமைத்துள்ளனர். எனினும் ஈழத்தமிழர்களின் கரிநாள் அறிவிப்பு நூற்றாண்டு கால ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை குரலாகும். எனவே தென்னிலங்கையின் போராட்டங்களுடன், தென்னிலங்கையின் ஜனநாயக சிதைவுகளுடன் ஈழத்தமிழர்களின் உரிமைக்கோரிக்கை போராட்டத்தை ஒன்றிணைப்பது தொடர்ச்சியாக தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிக்கும் ஏற்பாடாகவே அமைகின்றது.

எனவே, ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையின் அரசியல் நாடகங்களை களைந்து தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கான வலுவான தேவைப்பாட்டையும், தமிழர்கள் மீதான தென்னிலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையை சர்வதேச சமுகத்துக்கு உரத்து சொல்லக்கூடிய வாய்ப்பாக கரிநாள் போராட்டம் அமையப்பெற்றுள்ளது. அதன் வடிவமைப்பின் நேர்த்தியும், அரசியல் கட்சிகளின் இழுபறிக்குள்ளும், சுயநல தேவைகளுக்கும் சிக்கவைக்காது நகர்த்தவதிலேயே வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினதும் தமிழ் சிவில் சமூகங்களினதும் வெற்றி தங்கியுள்ளது. அதேவேளை தென்னிலங்கையின் சுதந்திர தின விழா புறக்கணிப்புக்களை தமிழர்களின் போராட்டங்களுடன் ஒருமித்து உரையாடுவதிலும் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் சமுகத்திடம் காணப்படுகின்றது. 75 ஆண்டுகளில் தென்னிலங்கை குடிமக்களுக்கும் ஆளும் உயரடுக்கினருக்கும் இடையே ஒருமித்த கருத்து குறைவாக இருந்ததில்லை. ஒருபோதும் அவர்களை பிணைக்கும் உறவுகள் சிதைந்ததில்லை. இன்றைய பொருளாதார நெருக்கடி சில பின்னடைவுகளை தந்தாலும் தென்னிலங்கையின் போராட்டங்கள் சிங்கக்கொடியின் கீழேயே வழிநடத்தப்படுகின்றது என்ற தெளிவினை தமிழ் சமூகம் முழுமையாக பெற்றிருத்தல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-