தமிழரசியலும் தென்னிலங்கை அரசாங்கமும் பேரினவாதத்தோடு தமிழ்த்தேசியத்தை சமப்படுத்த முயல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்கள் கடந்த நூற்றாண்டுகால இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட சில போராட்ட நுட்பங்களும் வடிவங்களும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான உரிமைப்போராட்டத்தின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. எனினும் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்திற்கு பலமான கருத்தியல் தளத்தை சீராக கட்டமைக்கவில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் தலைமைகளின் உரையாடல்களும், சிங்கள பேரினவாத அரசாங்க செயற்பாட்டுக்கான தமிழரசியல் தரப்பின் எதிர்வினைகளும் ஈழத்தமிழர்களின் கருத்தியல்தள குறைபாட்டையே சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவை சிங்கள தேசியவாதியாக விழித்துள்ளமையும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த கால வன்முறைகளில் இறந்தவர்களுக்கான பொதுத்தூபி அமைத்தலும் பொதுநினைவு நாளை பிரகடனப்படுத்தலுமென எடுத்துள்ள தீர்மானமும் ஈழத்தமிழரசியலில் தரப்பிடையே இனவாதம் மற்றும் தேசியவாதத்துக்கு இடையிலான கருத்தியல் வேறுபாட்ட...