இடைக்கால நிர்வாக வாய்ப்பு கட்சி நலன் சார்ந்து நிராகரிக்கப்படுகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான வைகாசி மாத சந்திப்பு இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரனால் பரிந்துரைக்கப்பட்டு, வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்ட இடைக்கால நிர்வாகம் பற்றிய உரையாடல், ஜனாதிபதியால் சந்திப்பின் பிரதான உள்ளடக்கமாக இணைக்கப்பட்டது. எனினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் இடைக்கால நிர்வாகம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி-வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எவ்வித தீர்க்கமான முடிவுமின்றி நிறைவடைந்துள்ளது. மீள ஜுன் மாதம் சந்திப்புக்கான அழைப்பையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடைக்கால நிர்வாகம் பற்றிய உரையாடல் இலங்கை அரசியல் வரலாற்றில் பல சமாதான பேச்சுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னகர்வு என்ற அடிப்படையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால நிர்வாகத்தை ஆரம்ப நகர்வாக ஏற்று ஜனாதிபதியுடனான சந்திப்பை முன்னகர்த்தியிருக்கலாம் என்ற விமர்சனப்பார்வை ஈழத்தமிழ் சமூகப்பரப் பில் காணப்படுகின்றது. இக்கட்டுரை சமகால ஈழத்தமிழர்களின் அரசியல் செல்நெறியில் இடைக்கால நிர்வாகத்தின் அரசியல் வகிபாகத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாள் சந்திப்பு மே-15 அன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் அரசாங்கத்தரப்பின் சில தமிழ்ப்பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கையெழுத்துடனான ஓர் ஆவணத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் முன்மொழிந்துள்ளார். அந்த ஆவணம் தொடர்பில் ஜனாதிபதி நேரான பிரதிபலிப்பை வெளிக்காட்டி, அந்த ஆவணம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் தெரிவுக்குழுவொன்றை அமைக்கும் யோசனையையும் அறிவித்தார். எனினும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அதனை முழுமையாக எதிர்த்துள்ளனர்.

இடைக்கால நிர்வாக ஆவணம் பற்றி சி.வி விக்னேஸ்வரன் கருத்துரைக்கையில், 'நான் மாகாணசபைகளுக்கான இடைக்கால நிர்வாக முறைமை, மாகாணசபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் ஆவணமொன்றைத் தயாரித்து வாசித்தேன். இடைக்கால நிர்வாக முறைமை என்பது சட்டத்துக்கு முரணானதொன்றல்ல. மாறாக சட்டத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவானதொரு கட்டமைப்பேயாகும். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்குக் காலம் எடுக்கும் என்பதாலும், மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாகப் பல்வேறு செயன்முறைகளைக் கடக்கவேண்டியிருப்பதாலும் ஜனாதிபதி எனது யோசனையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காகக் குழுவொன்றை நியமிப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்' என்றார்.

மேலும் ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், 'சந்திப்பில் விக்கினேஸ்வரன் ஆவணமொன்றை சமர்ப்பித்தார். அந்த ஆவணம் ஏற்கனவே எம்மிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், நாமனைவரும் அதனை நிராகரித்திருந்தோம். மாகாணசபைகளுக்கான இடைக்கால நிர்வாகம் மற்றும் நிர்வாகச்சிக்கல்கள் பற்றி அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த யோசனைகளுக்கு நாம் இணங்கவில்லை. அதுபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் குழுவொன்றை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கும் நாம் இணங்கவில்லை. மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை உடனடியாகச் செய்யமுடியாது என்று கூறிய ஜனாதிபதி, அதற்கு இணங்கவில்லை. இரண்டாவதாக மாகாணசபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறும், அதுகுறித்து பாராளுமன்றத்தில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறும் வலியுறுத்தினோம். இருப்பினும் அதுகுறித்துப் பாராளுமன்றத்திலேயே ஆராயவேண்டும் என்று கூறப்பட்டது. எனவே எமது கோரிக்கைகளுக்கு அவர்கள் இணங்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு மீளவும் தமிழ் கட்சிகளின் தீர்க்கமான ஒற்றுமையின்மையால் சிதறடிக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமாகும். கடந்த வாரம் இப்பகுதியில், 'ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரசியலும்!' எனும் தலைப்பிலான கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள பேச்சுவார்த்தைக்கு சென்ற தரப்பினர் சரியான திட்டமிடலற்ற வகையிலும், திரட்சியான ஒருமித்த திட்ட வரைபுகளை உருவாக்காத போது மீள மீள சந்திப்புக்களில் எதிரான பிரதிபலிப்புக்களையே எதிர்கொள்ள வேண்டிவரும் எனும் கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே தமிழ்க்கட்சிகளின் சந்திப்பும் முடிவுகளும் உறுதி செய்துள்ளது. எனினும் ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவிலிருந்து நேரான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ள இடைக்கால நிர்வாகத்தின் அரசியல்வகிபாகத்தை ஆழமாக நோக்குவது அவசியமாகின்றது.

முதலாவது, இடைக்கால நிர்வாகம் தேசிய இனப்பிரச்சினைக்கான சமாதான பேச்சுவார்த்தைகளின் முன்னகர்விற்கான ஏற்பாட்டு உரையாடலாக அனுபவத்தை பகிர்கின்றது. ஒரு நிலையான இறுதி அரசியல் தீர்வு உருவாகும் முன், வழக்கமாக சில ஆண்டுகள் எடுக்கும். ஏற்கனவே இருக்கும் அமைப்புக்கும் உருவாக்கப்பட எதிர்பார்க்கப்படும் புதிய அமைப்புக்கும் இடையே பாலங்களை அமைப்பதில் இடைக்கால எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அனுபவத்தில், பப்புவா நியூ கினியின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக போகன்வில் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இடைக்கால நிர்வாக உருவாக்கம் முக்கியப் பங்காற்றியது. போகன்வில்லில் முழு சுயாட்சி மாகாண அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக பப்புவா நியூ கினி அரசியலமைப்பு மாற்றப்பட்டது. மேலும் 10-15 ஆண்டுகளில் போகன்வில்லியன்ஸ் பப்புவா நியூகினியுடன் இருக்க வேண்டுமா அல்லது முழுமையாக சுயாதீனத்தை பெறவேண்டுமா என பொது வாக்கெடுப்புக்கு இடமளிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. போகன்வில் விடுதலைக்குழுக்களின் ஆயுதங்களை நீக்குதல் மற்றும் பப்புவா நியூ கினி பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெறவிருந்தன. இறுதியாக போகன்வில் தன்னாட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து கூட்டு அமைதி முயற்சி 1994இல் தொடங்கப்பட்டது மற்றும் போகன்வில் தன்னாட்சிப் பகுதியை அடைவதற்கான சாலை வரைபடத்தின் இறுதி இலக்கு 2002இல் அடையப்பட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், இடைக்கால நிர்வாகத்தை நடத்துவதற்காக முதலில் போகன்வில் இடைநிலை அரசாங்கம் நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தில் அனைத்து போகன்வில் பிரிவுகளும் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்று பின்னர் உணரப்பட்டது மற்றும் புதிய போகன்வில் நல்லிணக்க அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இது திருப்திகரமாக இறுதி போகன்வில் தன்னாட்சிப் பிராந்தியத்தை அடைவதற்கான மாகாணத்தின் அன்றாட விவகாரங்களை நடத்தி வந்தது.

இரண்டாவது, இலங்கையின் சமகால அரசியல் சூழலில் புதியதொரு தேர்தலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள சூழலில் அரசாங்கத்தை உருவாக்க கிடைக்கும் வாய்ப்பை தமிழ்க்கட்சிகள் பலப்படுத்துவது அவசியமாகின்றது. இலங்கையில் இவ்ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்பு வர்த்தகமானி வெளியிடப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு செய்த பின்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி தேர்தல் பிற்போடப்பட்டுக்கொண்டே செல்கின்றது. தற்போது வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்கள் மீள அரச வேலைகளுக்கும் திருப்பியழைக்கப்பட்டுள்ளர். உள்ளூராட்சி சபை தேர்தலை நடாத்த முடியாதுள்ள அரசாங்கம் இன்னொரு தேர்தலுக்கான அறிவிப்பை மேற்கொள்ளும் என முரண்டுபிடிப்பது மடமைத்தனமாகவே பொதுவில் நோக்கப்படுகின்றது. சமகாலத்தில் வடக்கு-கிழக்கில் அரச திணைக்களங்களினூடான ஆக்கிரமிப்பு, கலாசார சீரழிவுகள் என உச்சம் பெற்று கொண்டு செல்கின்றது. இவ்நடைமுறை நாளாந்த நெருக்கடிகளை சீர்செய்யவாது வினைத்திறனான வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் தேர்தலுக்கான வாய்ப்புக்கள் அறவே அற்ற சூழலில் இடைக்கால அரசாங்கத்தை ஏற்று செயற்படுத்துவது தந்திரோபாயமான செயற்பாடாக அமைகின்றது.

மூன்றாவது, இடைக்கால நிர்வாக உருவாக்கத்தில் மாகாண சபை முறைமையில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டதொரு தற்காலிக நிர்வாக கட்டமைப்பை உருவாக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான கோரிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தமே காணப்படுகின்றது. எனினும் புதிய இடைக்கால நிர்வாகத்தை வடிவமைக்கையில் வடக்கு-கிழக்கு இணைந்ததொரு நிர்வாகத்தை உருவாக்கக்கூடிய உரையாடல்களை முன்னகர்த்தலாம். பிரதானமாக இலங்கை அரசாங்க தரப்பிலும் சமகால இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய வடக்கு-கிழக்கு பொருளாதார நிர்வாக கட்டமைப்பொன்றின் தேவை அவசியப்படுகின்றது. முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான பரிந்துரையில் வடக்கு-கிழக்கு மாகாணம் தனியானதொரு பொருளாதார பிராந்தியமாக உருவாக்கப்பட வேண்டுமென அடையாளப்படுத்துகின்றார். மேலும், இலங்கை ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உதவியை நாடும் தமிழ் புலம்பெயர் கட்டமைப்புக்களும் வடக்கு-கிழக்கு இடைக்கால நிர்வாகத்தை கோரியுள்ளனர். யு.எஸ்.டாக், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடிய தேசிய மக்களவை ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஓர் உச்சசபையின் அதிகாரத்தினுள் இடைக்கால நிர்வாகத்தினை கட்டமைப்பதற்கான கரிசனை கொண்டுள்ளதுடன் சில முன்னகர்வுகளையும் கடந்த வருடத்தில் மேற்கொண்டுள்ளனர்.

நான்கு, இடைக்கால நிர்வாகத்தை புறக்கணிக்கும் தமிழ் கட்சிகள் இடைக்கால நிர்வாகத்தை இறுதித்தீர்வாக பரிந்துரைக்கப்படுமென சந்தேகத்தினடிப்படையில் நிராகரிப்பார்களாயின், அவர்கள் வலியுறுத்தும் 13ஆம் திருத்தமும் முழுமையான தீர்வாக தமிழ் பரப்பில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும் 13ஆம் திருத்தத்தை முன்மொழிபவர்கள் தற்காலிக தீர்வாகவே முன்மொழிகின்றார்கள். 13ஆம் திருத்தத்தை நடைமுறை பிரச்சினைகளை கையாள பயன்படுத்திக்கொண்டு அதிகாரப்பகிர்வினை நோக்கிய தீர்வு திட்டத்துக்கு தந்திரோபாய நடவடிக்கையை கொண்டிருப்பார்களாயின் இடைக்கால நிர்வாக விடயத்திலும் அதனை கைக்கொள்ளலாம் என்பதுவே யதார்த்தமானதாகும். இங்கு அடிப்படையில் கட்சி அரசியல் நலன்களுக்குள் அரசியல் கட்சிகள் மோதிக்கொள்வதே இடைக்கால நிர்வாக நிராகரிப்பும் மாகாணசபை தேர்தல் கோரிக்கைகளும். தமிழ் அரசியல் கட்சிகளின் கட்சி நலன் மோதலை ரணில் விக்கிரமசிங்கா தனக்கு சாதுரியமாக கையாண்டு செல்கின்றார்.

ஐந்தாவது, இடைக்கால நிர்வாக உரையாடல் இலங்கை அரசியலுக்குப் புதியதல்ல. எனவே அதனை சமகால அரசியலில் புகுத்தி வென்றெடுப்பதற்கான இராஜதந்திர நுட்பங்களை தமிழரசியல் தரப்பினர் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலாதிக்கப் பங்கேற்புடன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், அத்தகைய நிர்வாகக் கட்டமைப்பின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் முன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் செயலிழந்தது. 1995இல் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் அரசியல் தீர்வுக்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது மீண்டும் இடைக்கால நிர்வாகம் முன்மொழியப்பட்டது. எனினும் அவர் வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்க பேச்சுவார்த்தை நீண்ட காலம் கூட நீடிக்கவில்லை. மீள 20003-ஜீலையில் இலங்கை அரசாங்கம் இடைக்கால நிர்வாக முன்மொழிவிற்கு நவம்பரில் விடுதலைப்புலிகள் வடக்கு-கிழக்குப் பகுதியில் வரி வசூல் செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ச்சிப் பணிகளுக்கு நேரடியாக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறவும் தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் நிராகரிப்பால் அவ்இடைக்கால நிர்வாக உரையாடலும் செயல் வடிவம் பெற இயலாதே நிறைவு பெற்றது. சமகாலத்திலும் தமிழ் அரசியல் கட்சிகளின் மோதலால் இடைக்கால நிர்வாகத்தின் வடிவமே உருவாக்கம் பெற இயலாத நிலைமைகளே காணப்படுகின்றது.

எனவே, இடைக்கால நிர்வாகம் அரசியல் எண்ணக்கரு ரீதியாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இடைத்தங்கல் முகாமாக முதன்மையான நிலை பெறுகின்ற போதிலும், இலங்கை அரசியல் களத்தில் இனப்பிரச்சினை தீர்வு முயற்சி என்பதே அதிகம் காலத்தை கழிக்கும் செயற்பாடாக அமைவதனால் இடைக்கால நிர்வாகம் உரையாடல் வடிவிலேயே முடிவுற்று போகும் நிலைமைகளே தொடர்கின்றது. சமகாலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகத்திற்கான தேவை உணரப்படுகின்ற போது, தமிழ்க்கட்சிகள் தங்கள் கட்சி நலனுக்குள் மோதுப்பட்டு இடைக்கால நிர்வாகத்தை புறந்தள்ளுவது தமிழினத்தின் துயரமே ஆகும். தேர்தல் அரசியலை மையப்படுத்தி செயற்படும் கட்சி அரசியல் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆபத்தான சூழலையே தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றது. அதனோர் பகுதியே இடைக்கால நிர்வாக சபை உரையாடல் முளையிலேயே தவிர்க்கப்பட்டமையாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-