தமிழரசியலும் தென்னிலங்கை அரசாங்கமும் பேரினவாதத்தோடு தமிழ்த்தேசியத்தை சமப்படுத்த முயல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்கள் கடந்த நூற்றாண்டுகால இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட சில போராட்ட நுட்பங்களும் வடிவங்களும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான உரிமைப்போராட்டத்தின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. எனினும் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்திற்கு பலமான கருத்தியல் தளத்தை சீராக கட்டமைக்கவில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் தலைமைகளின் உரையாடல்களும், சிங்கள பேரினவாத அரசாங்க செயற்பாட்டுக்கான தமிழரசியல் தரப்பின் எதிர்வினைகளும் ஈழத்தமிழர்களின் கருத்தியல்தள குறைபாட்டையே சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவை சிங்கள தேசியவாதியாக விழித்துள்ளமையும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த கால வன்முறைகளில் இறந்தவர்களுக்கான பொதுத்தூபி அமைத்தலும் பொதுநினைவு நாளை பிரகடனப்படுத்தலுமென எடுத்துள்ள தீர்மானமும் ஈழத்தமிழரசியலில் தரப்பிடையே இனவாதம் மற்றும் தேசியவாதத்துக்கு இடையிலான கருத்தியல் வேறுபாட்டை இனங்காணக்கூடிய தன்மை இன்மையையே அடையாளப்படுத்துகின்றது. இக்கட்டுரை இனவாதம் மற்றும் தேசியவாத கருத்தியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழர்கள் மீது தென்னிலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி குறிப்பிடுகையில், 'என்னுடைய பேச்சுக்கு பதிலளித்த சரத் வீரசேகரா அவர்கள் ஒரு சிங்கள தேசியவாதி. நான் அந்தவகையில் சிங்கள தேசியவாதியாக சிங்கள மக்களின் பிரதிநிதியாக நான் அவரை மதிக்கிறேன். ஆனால் நான் ஒரு தமிழ்த்தேசியவாதி. நான் என்னிடம் சார்ந்து பேச வேண்டிய உரிமையும் கடமையும் உள்ளவன். எந்த இனம் பாதிக்கப்பட்டதோ, எந்த இனம் அழிக்கப்பட்டதோ, எந்த இனம் இந்த இரசாயண குண்டுகளுக்கும் பொஸ்பரசு குண்டுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதோ அந்த இனத்தின் சார்பாக என்னுடைய கருத்தை முன்வைக்க வேண்டிய ஒரு தமிழ்த்தேசியவாதியாக நான் இந்த இடத்தில் என் பதிவை மேற்கொள்கிறேன். நான் அவர்களை இனவாதி என்று சொல்வதற்கு அப்பால் நீங்கள் ஒரு சிங்கள தேசியவாதியாக இருக்குறீர்கள்.' எனக்குறிப்பிட்டிருந்தார். அதேவேளை கடந்தவாரம் அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, 'சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபி ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக' தெரிவித்தார். மேலும் ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், இந்த நினைவுச்சின்னம் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கும் இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாகும் என பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிவஞானம் சிறிதரன் மற்றும் பந்துல குணவர்தன ஆகிய இருவரும் இரு வேறுபட்ட தளங்களில் செயற்படுபவர்களா, இவர்களது செய்திகள் வேறுபட்ட கோணங்களிலிருந்து வந்திருந்தாலும் அடிப்படையில் பொதுமையான அடிப்படையே கொண்டுள்ளது. குறிப்பாக தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கு நிகரானதாகவே சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையையும் கருதுவதாகவே ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையின் பாராளுமன்ற விவாத உள்ளடக்கமும் இலங்கை அமைச்சரவை தீர்மானமும் அமையப்பெறுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

ஒன்று, சிங்கள அரசியல் தலைவர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் இனவாத செயல்களையே முதன்மைப்படுத்துகின்றார்கள். அதனை வழிமொழிவதாகவே தமிழ் அரசியல் தலைமைகளின் உரையாடலும் காணப்படுகின்றது. எனினும் அரசறிவியல் கருத்தாக்க தளத்தில் அரசறிவியலாளர்கள் தேசியவாதத்துக்கும் இனவெறிக்கும் இடையே முழுமையான வேறுபாட்டை அடையாளப்படுத்துகின்றனர். ஆண்டர்சன் எனும் அரசறிவியலாளர், 'தேசியவாதமும் இனவாதமும் எதிரெதிர் உணர்வுகள்' என விளக்கமளிக்கின்றார். மேலும், 'தேசியவாதம் ஒரு நேர்மறையான உணர்வு. இது வரலாற்று விதிகளின் அடிப்படையில் சிந்திக்கிறது. அதே சமயம் இனவாத பேச்சு எதிர்மறையானது. இது காலத்தின் தோற்றத்திலிருந்து பரவும் நித்திய மாசுபாடுகளைக் கனவு காண்கிறது' என்கின்றார். கருத்தியலாய் மாறுபட்ட கோணங்களில் பயணிக்கும் தேசியவாதம் மற்றும் இனவாதம் வடிவ ஒற்றுமையால், வேறுபாட்டைக் கண்டறிவது சில சமயங்களில் கடினமாக உள்ளது. ஏனெனில் இரண்டும் ஏறக்குறைய ஒரே சிறந்த வகை, பாலின வேறுபாடுகள் மற்றும் தனித்தன்மையுடன் செயல்படுகின்றன. இங்கு தேசியவாதம் என்பது பழமைவாத, தாராளவாத அல்லது சோசலிசத்தின் ஒவ்வொரு அரசியல் அல்லது சமூக இயக்கங்களுடனும் கூட்டணிகளை உருவாக்கும் மிகவும் நெகிழ்வான சித்தாந்தமாக இருக்கின்றது. சில தீவிர தேசியவாதிகள், அவர்கள் இனவெறியைத் தழுவியபோதும் கூட, அதன் கடுமையான பயன்பாட்டைப் பற்றி தெளிவற்ற தன்மையைக் காட்ட தேசியவாதத்தின் நெகிழ்ச்சித்தன்மை காரணமாக இருக்கிறது. நாஜி ஜேர்மனி மற்றும் நிறவெறி தென்னாப்பிரிக்கா ஆகியவை தேசிய கலாச்சாரத்தின் முக்கிய மற்றும் வெறித்தனமான ஆக்கிரமிப்பாக மாறிய இரண்டு சர்வதேச எடுத்துக்காட்டுகள் ஆகும். இலங்கையின் சிங்கள பௌத்த இனவெறி ஆதிக்கமும் தேசிய கலாசார வடிவத்தை முதன்மைப்படுத்தி இனவெறி ஆக்கிரமிப்பு சக்தியாகவே இலங்கையில் காணப்படுகின்றது. இவ்அடையாள பாகுபடுத்தலை ஈழத்தமிழர்கள் கொண்டிருப்பது அவசியமாகின்றது. தேசியவாதத்தின் பெயரால் சிங்கள பௌத்த இனவெறியை தமிழர்கள் அனுமதிக்கையில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பையும் தமிழர்கள் நியாயப்படுத்துவதாகவே அமையக்கூடும்.

இரண்டு, தேசியவாதத்தின் போர்வையிலான இனவாதம் அழிவுகளையே முதன்மைப்படுத்துகின்றது. தேசியவாதத்திற்கும் இனவெறிக்கும் இடையே உறுதியான கூட்டணி இருந்த இடமெல்லாம் வரலாறு இரத்த களரிகளையே பதிவு செய்கின்றது. 1897இல் அல்ஜியர்ஸின் முதல் நவீன இனவெறி அரசாங்கத்தில் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது. அது யூத இரத்தத்தால் சுதந்திர மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை நோக்கமாகக் கொண்டது. தேசியவாதம் இனவாதத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும்போது பாகுபாடு இனி பிரச்சினையாக இருக்காது. மாறாக தேசம் மற்றும் இனம் இரண்டிற்கும் எதிரி என்று வரையறுக்கப்பட்ட வெளியாருக்கு எதிராக போர் தொடுக்கப்பட வேண்டும். இனவெறி என்பது ஜேர்மன் தேசியவாதத்தை பாகுபாட்டிலிருந்து வெகுஜன அழிப்பு வரை விளிம்பில் தள்ளும் ஊக்கியாக இருந்தது. அனைத்து தேசியவாதங்களையும் போலவே ஜேர்மன் தேசியவாதமும் இனவெறிக்கு மாற்று மரபுகளைக் கொண்டிருந்தது. மேலும் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மன் தேசியவாதத்தின் பெரும்பகுதி பேரினவாதமாக மாறியது. இலங்கையிலும் சிங்கள பௌத்த இனவெறிக்கு மகாவம்ச கால நீண்ட மரபு காணப்படுகின்றது. அது இலங்கை தேசியம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த இனவெறியையே வளர்த்துள்ளது. இனவெறிக்கு ஒரு திட்டவட்டமான உலகக் கண்ணோட்டம் மற்றும் அதன் சொந்த குறியீடுதல் உள்ளது. இது தேசியவாதத்துடன் செய்த கூட்டணியின் மூலம் பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. அரசியல் உயரடுக்குகளை அழிப்பதன் மூலம் தேசத்தை போருக்கு தயார்படுத்துவதும், பின்னர் தாழ்த்தப்பட்ட இனம் என்று அழைக்கப்படுபவர்களை தோற்கடித்து ஒழிப்பதும் உள்ளடங்கிய அதன் சொந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டது பேரினவாதம். இனவெறி அதன் முடிவை அடைவதற்காக ஒரே மாதிரியான வடிவங்களின் மூலம் செயல்படும் அதே வேளையில், அத்தகைய பதிவுகளையே இலங்கை தேசியவாதத்தின் போர்வையிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் அவற்றின் இருப்பும் வெற்றியும் அடையாளங்களாக இருக்க வேண்டும் எனவும், இனவாதம் தாக்க காத்திருக்கிறது என்பதை எச்சரிக்கும் எச்சரிக்கை சமிக்ஞையாக இருக்க வேண்டும் எனவும் பேரினவாத சக்திகள் செயற்படுகின்றன. அவர்கள் தேசியவாத உரையாடல்களூடாக இனவெறியை ஒரு உண்மையாக்கியுள்ளனர். இப்பின்னணியில் தமிழ் அரசியல் தரப்பும் தெளிவற்ற சிந்தனையில் சிங்கள பௌத்த இனவெறியை தேசியவாதமாக சித்தரிப்பது ஆபத்தான இருப்பையே உறுதிப்படுத்துகிறது. இனவாதத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வது, தேசியவாதம், தேசபக்தியாக, எப்போதும் இனவெறித் தூண்டுதலை எதிர்க்க முடிந்தது என்ற உண்மையைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும்.

மூன்று, தேசியவாதம் அடிப்படையில் பிற தேசியங்களின் உரிமைகளை மதிப்பதுடன் அங்கீகரிக்கக்கூடியதாகும். தேசியவாதிகள் தங்கள் தேசத்திற்கு விசுவாசமாக இருந்தபோதும், மனிதகுலம் முழுவதையும் கவனித்துக்கொள்வதற்கான ஒரு படியாக மட்டுமே கருதினர். இது இனவாதத்திலிருந்து வெகு தொலைவில் காணப்படுகின்றது. அத்தகைய தேசியவாதத்தின் யதார்த்தத்தைப் புறக்கணிப்பது ஆபத்தானது. ஈழத்தமிழர்கள் மீது தொடர்சியாக பேரினவாத ஒடுக்குமுறை பிரச்சாரங்களை மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சரத் வீரசேகர சிங்கள பௌத்த பேரினவாதியை அவர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் தலைமை சிங்கள தேசியவாதியாக விழித்து கொள்வது தேசியவாதத்தின் யதார்த்தத்தை புறக்கணிப்பதாகவே அமைகின்றது. இது சிறிதரன் தன்னை தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்துவதையும் கேள்விக்குட்படுத்தக்கூடியதாக அமைகின்றது. எனினும் தமிழ்த்தேசிய மரபில் தேசியவாதம் ஆழமாக பொதிந்துள்ளது சிறிதரனின் பாராளுமன்ற விவாத உரையிலேயே காணப்படுகின்றது. சிறிதரன், 'நான் அவர்களை இனவாதி என்று சொல்வதற்கு அப்பால் நீங்கள் ஒரு சிங்கள தேசியவாதியாக இருக்குறீர்கள். உங்களுடைய கொள்கையை உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்' எனக்கூறுவதனூடாக பிற தேசிய இனங்களை தமிழ்த்தேசியம் சமமாக மதிப்பதுடன் பிறதேசிய இனங்களின் உரிமைகளை தமிழ்த்தேசியம் அங்கீகரிக்கும் பண்பை   வெளிப்படுத்துகின்றது. எனினும் சரத்வீரசேகர போன்ற இனவாதிகளின் கருத்தை ஏற்றுக்கொள்வது தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தானதாகும். அவரை சிங்கள பேரினவாதியாக அடையாளப்படுத்துவதனூடாகவே அவரது இனவாத கருத்துக்களையும் மறுக்க வேண்டும்.

நான்கு, நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக பொதுத்தூபி நிர்மானம் என்பதும் இனவெறியாளர்களுடன் தமிழ்த்தேசிய போராட்டத்தை சமப்படுத்தும் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலாகவே அமைகின்றது. பொதுத்தூபி தொடர்பில், ஒரு தரப்பினர் என்று இல்லால் எல்லாத் தரப்பினரும் தத்தமது மனச்சாந்திக்கான அஞ்சலிகளைச் செலுத்துவதற்கும் வழி ஏற்படுத்தும். அடுத்து வரும் தலைமுறைகள் போர்களிலும் மோதல்களிலும் ஈடுபடாமல் விட்டுக்கொடுப்புடன் வளர்வதற்கும் அது இடமளிக்கக்கூடும் எனும் வெளிப்படையான பார்வைகள் காணப்படுகின்றது. எனினும் இலங்கை பேரினவாத அரசியல் கட்டமைப்பினுள் நல்லரசாங்க கருத்தியல்களை உள்வாங்க இயலாது. 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட முடிவிற்கு பின்னர் 2015-2019 பிரதமராகவும் 2022 தொடக்கம் ஜனாதிபதியாகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்கா தனது ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கத்தை பற்றி உரையாடுகின்ற போதிலும், நல்லிணக்கத்தின் முன்சமிக்ஞையாக பொறுப்புக்கூறலை ஏற்க தயாராகவில்லை. இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் செய்த இனஅழிப்புகளுக்கு பொறுப்புக்கூறி எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு கேட்க முனையவில்லை. ஆகக்குறைந்தது தனது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனஅழிப்பு விடயங்களுக்கு கூட பொறுப்புக்கூற தயாராகவில்லை. மன்னிப்பு கேட்பதனூடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய அச்சத்திலேயே ரணில் தவிர்த்து வருகின்றார். இத்தகைய இனவாத எண்ணங்களின் மரபுக்குள் பயணிக்கும் அரசாங்கத்தின் பொதுத்தூபி நிர்மானம் வெளிப்படையில் தமிழ்த்தேசியம் கோரும் இனவழிப்பு கோரிக்கையை பலவீனப்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இனவெறியில் ஒடுக்குமுறையை பிரயோகித்தவர்களுக்கும், தேசிய விடுதலைக்காக மரணித்தவர்களுக்கும் ஒரே நினைவுத்தூபி என்பதனூடாக தென்னிலங்கை அரசாங்கம் தனது இனவெறியுடன் தமிழ்த்தேசியத்தை சமப்படுத்த முயலுகின்றது.

எனவே, ஒருதளத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தேசியத்தின் கருத்தியல் தெளிவின்றி பேரினவாதத்துடன் தமிழ்த்தேசியத்தை சமப்படுத்துகின்றனர். மறுதளத்தில் தென்னிலங்கை அரச இயந்திரம் தெளிவான திட்டமிடலுடன் தனது பேரினவாதத்தை தமிழ்த்தேசியத்துடன் சமப்படுத்துகின்றது. தேசியவாதம் நவீன காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த சித்தாந்தமாக தன்னை நிரூபித்துள்ளது. மேலும் அதை வேறுபடுத்தாமல் கண்டனம் செய்வது அல்லது இனவெறியுடன் தானாகவே அடையாளம் காண்பது, ஒரு சித்தாந்தத்தை சமூகமயமாக்குவதற்கான எந்த வாய்ப்பையும் இழக்கிறது. இப்பின்னணியில் தமிழ்த்தேசியம் கருத்தியல் தளத்தை சீராக கட்டமைக்க தவறியதன் வினையாகவே, அகத்தாலும் புறத்தாலும் தமிழ்த்தேசியம் பலவீனமாக்கப்பட்டு கொண்டு செல்கின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-