ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியல் களத்தில் தென்னிலங்கை அரசாங்க தரப்பினருக்கும் தமிழ் அரசியல் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும், ஏமாற்றுக்களும், முரண்பாட்டு முறிவுகளும் நீண்ட வரலாற்றை தன்னகத்தே பகிர்கின்றது. இந்த வருடத்தின் (2023) ஆரம்பத்திலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா 75வது சுதந்திரத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையை நகர்த்தியிருந்தார். எனினும் 75வது சுதந்திர தினம் பெப்ரவரி-04 நடைபெறுவதற்கு முன்னரே பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளுமின்றி இடைநிறுத்தப்பட்டது. தற்போது மீளவும் ஜனாதிபதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். கடந்தகால வரலாற்றின் நீட்சியாய் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தொடர்பில்; விழிப்புடன் இருக்க வேண்டியது தொடர்பில் தமிழ்த்தரப்பிடையே கருத்தாடல்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்புக்கு தமிழ்த்தரப்பில் உள்ள எதிர்வினைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் மே-11 மற்றும் 12ஆம் தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஜனாதிபதி வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் எதிர்ப்பு மற்றும் மே-09அன்று தமிழரசுக்கட்சியினருடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மே-09 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து கருத்துரைத்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட அடிப்படையில் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் உள்ளடக்கங்களை விபரித்திருந்தார். அதாவது, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாத தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேச்சுவார்த்தையின் உள்ளடகத்தை பெறுவதாகவும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் அடுத்த பேச்சுக்களில் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு-கிழக்கு அரசியல் பிரதிநிதிகளுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழரசுக்கட்சி, டெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இனப் பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் போது வட மாகாண அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதேவேளை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், அதில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை சமஷ்டி அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்தால் நாம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தயாராகவுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிபந்தனை விதித்துள்ளார்.
ஜனாதிபதியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைக்கான அழைப்பிற்கான பதிலளிப்பிலேயே வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவினை வெளிப்படுத்த முடியவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையை முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுள்ளனர். இருவினைகளுமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வியூகத்தை கொண்டிருக்கவில்லை என்பதே பொதுவெளியில் விமர்சனமாக காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.ஸ
முதலாவது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சுவார்த்தைக்கான நிராகரிப்பானது பல முனை கேள்விகளை உருவாக்குகின்றது. சமஷ்டி என்பதனையே பகிரங்கமாக அரசாங்கம் அறிவிக்கும் நிலையிலேயே பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாரென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அறிவிப்பது அரசியல் யதார்த்த புரிதலற்ற செயலாகவே அமைகின்றது. பேச்சுவார்த்தை களத்திற்கு செல்வதனூடாகவும், புறத்தே எமக்கான சூழலை உருவாக்குவதனூடாகவுமே பேச்சுவார்த்தை மேடையில் எமது இலக்குகளுக்கான பயணத்தை நகர்த்த முடியும். எமது இலக்கை தருவீர்களாயினேயே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கூறுவது முரண்நகையான செயற்பாடாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. மேலும், ஜனாதிபதியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பிரதான உள்ளடக்கங்கள் நடைமுறை அரசியல் ஆபத்துக்கள் சார்ந்ததாகவே அமைகின்றது. பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான அதிகார பகிர்வு உள்வாங்கப்படுகின்றது. நடைமுறையில் ஆக்கிரமிப்பு என்ற வடிவத்தில் தமிழ்த்தேசம் அழிக்கப்படுவதுடன், அரசியல் கைதிகள் மற்றும் காணமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்கள் உறவுகளுக்காக நீண்ட துயரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வு அவசியமாகின்றது. அதற்கான களமாக ஜனாதிபதியின் இப்பேச்சுவார்த்தை அழைப்பை பயன்படுத்துவதும், நிறைவேற்று ஜனாதிபதி இந்நடைமுறை பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வை வழங்க மறுக்கின்ற போது பேச்சுவார்த்தையை பலவீனமான பக்கத்தை பகிரங்கப்படுத்தி வெளிநடப்பு செய்வதே இராஜதந்திரமான அரசியல் நகர்வாகும். முhறாக பேச்சுவார்த்தைக்கான களத்தையே முழுமையாக நிராகரிப்பது நிராகரிக்கும் தரப்பின் பலவீனமான அரசியலையே வெளிப்படுத்துகின்றது. மேலும், இலங்கை ஒற்றையாட்சி தேர்தலில் பாராளுமன்ற அரசியலை முன்னகர்த்தும் தமிழ்க்கட்சிகளின் உயர்ந்தபட்ச உரிமைக்கோரிக்கையாக அதிகார பகிர்வே காணப்படுகின்றது. இலங்கைக்குள் அதிகார பகிர்வு என்கையில் தென்னிலங்கை அரசாங்கத்துடன் உரையாடுவது அவசியமானதொரு விடயமாகவே காணப்படுகின்றது. தென்னிலங்கையுடனான உரையாடலை நிராகரிக்கும் தமிழர் பிரதிநிதிகள் அதிகாரப்பகிர்வுக்கான தமது வியூகத்தையும் தமது செயற்பாடுகளையும் வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. எதிர்விமர்சனங்கள் மாத்திரம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை.
இரண்டாவது, ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ள தமிழ் அரசியல் தரப்பினரும் கடந்த கால அனுபவங்களை உள்வாங்க தவறியுள்ளனர். ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்கு முன்னரும் இன்றைய அரசியல் சூழலுக்கு ஒத்த பின்புலத்தில் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்களே அரசியல் தீர்வு காணப்படும் என்றும் தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி வழங்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பரில் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தைப்பொங்கலுக்குள் என்றும் 75வது சுதந்திர தினத்துக்குள் என்றும் அறிவித்தார். தொடர்ச்சியாக 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தனது தீர்வு திட்டம் என அறிவித்தார். எனினும் எதுவுமே அறிவிப்புகளுக்கு அப்பால் செயலாக்கத்தை பெறவில்லை. அதேநேரம் எவ்வித அரசியல் மாற்றங்களுமற்று அதே அரசியல் சூழலுடனே ரணில் விக்கிரமசிங்கா மீளவும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பின்னணியில் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தரப்பினரிடம் திரட்சியாக ஒருமித்த திட்டவரைபுகள் காணப்பட வேண்டும். மேலும் தமிழ் மக்களின் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக உரையாட செல்லும் தரப்பினர் சிவில் சமுகத்தினரிடம், புலமைசார் ஆளுமைகளிடம் சந்திப்புக்களை கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எனினும் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் யாவும் அறிந்தவர்களாகவே பேச்சுவார்த்தைக்கு செல்கின்றனர். பேச்சுவார்த்தை இடம்பெறும் சமதளத்தில் வடக்கு-கிழக்கின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் திரட்சியாக குரல் கொடுக்கும் ஓர் செயற்பாட்டை நெறிப்படுத்துவது இராஜதந்திர செயலாக அமையும். எனினும் அவ்வாறாக எவ்வித இராஜதந்திர வியூகங்களும் திட்ட வரைபுகளுமற்றே பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அழைப்புக்கு விரைந்து சென்றுள்ளனர். இதுவே ஒருவர் மாத்திரம் பிரகாசிப்பதும் அவ்ஒருவரின் எண்ணங்களே தமிழ் மக்களின் அபிலாசைகளாக தப்பான பொதுவிம்பம் உருவாக காரணமாகின்றது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையே தேசிய இனப்பிரச்சினை மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறும் சமகாலத்தில் குருந்தூர் மலை விவகாரமும் இடம்பெற்றது. எனினும் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் அவ்ஆக்கிரமிப்பை அப்பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டி அரசாங்கத்தின் இரட்டை முகத்தை பகிரங்;கப்படுத்தும் பொறிமுறையை மேற்கொள்ளவில்லை. இது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் திராணியற்ற நிலைமை என்பதற்கு அப்பால் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை முழுமையாக அறியாதவர்களாகவும், இராஜதந்திர நுட்பங்களற்றவர்களாகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உள்ளார்கள் என்பதே நிதர்சனமாகும்.
எனவே, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் எண்ணங்களின் பிரதிநிதியாக செயற்பட தவறுகிறார்கள். தங்கள் அரசியல் நலன்களுக்குள்ளேயே தமிழ் மக்களின் அபிலாசைகளை வளைத்து போடும் செயற்பாட்டை முதன்மைப்படுத்துகின்றார்கள். ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பின் பதிலுகளும் அதனையே வெளிப்படுத்தி வருகின்றது. பேச்சுவார்த்தை நிராகரிப்பும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்று சென்றமையானதும் தமிழ் மக்களின் நலனுக்கு அப்பாற்பட்டு அக்கட்சிகளின் நலன்களினுள்ளேயே வகுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் சாணக்கியத்தினுள் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் யாவுமே அகப்பட்டு திணறுகையில், தமிழ்க்கட்சிகள் விழிப்பாக இருப்பது அவசியமாகின்றது. தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி கட்சிகளை கடந்து மக்களுடன் பயணிக்கையிலேயே தமிழ் மக்களின் மீட்சியும் சாத்தியமான பயணத்தில் நகரக்கூடியதாக அமையும்.
Comments
Post a Comment