ஈழத்தமிழருடைய போராட்ட உத்திகள் பின்னோக்கி நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களிற்கெதிராக அண்மையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் கையறுநிலை தொடர்பில் மக்களிடையே விசனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த்தேசிய கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் பொதுமக்களிடையேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் காணப்பட்டது. தமிழ்த்தேசிய கட்சிகளின் பாதுகாப்பு வரையறையுடன் கூடிய போராட்டங்கள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விமர்சனங்களுக்கு மத்தியிலேயே அண்மையில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சட்ட மறுப்பு போராட்டத்துக்கு செல்ல வேண்டிய சூழல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். மேலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமது கட்சி சட்ட மறுப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருவாதாக தெரிவித்திருந்தார். இக்கட்டுரை தமிழ்த்தேசிய அரசியலில் சட்ட மறுப்பு போராட்டத்தின் நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழரசியல் அதிகம் கடினமற்ற பாதுகாப்பான போராட்ட முறைகளை அணுகிச்செல்கையில் சட்டமறுப்பு பற்றிய புதிய போராட்ட வடிவங்கள் தொடர்பான உரையாடலை முன்வைக்கிறார்களாயின், அப்போராட்டத்தின் அரசியல் விஞ்ஞான கருத்தியல் வடிவத்தினை ஈழத்தமிழர்கள் முழுமையாக அறிந்து கொள்ளல் அவசியமாகின்றது. கடந்த காலங்களில் தமிழ்ப்பரப்பில் இடம்பெறும் போராட்டங்கள் பலவும் அரசியல் விஞ்ஞான கருத்தியல் வடிவத்திலிருந்து வேறுபட்ட வகையிலேயே தமிழ் அரசியல் செயற்பாட்டில் இடம்பெற்றன. ஆதலாலேயே தமிழரசியல் போராட்டங்கள் பலவும் பத்திரிகை செய்திகளாகினதே தவிர, செயற்பாட்டு வெற்றியை பெற்றிருக்க முடியவில்லை.

சட்ட மறுப்பு போராட்டத்தின் தனித்துவமான வரலாற்றை மேலைத்தேய ஆட்சியாளர்களிற்கு எதிராக குறிப்பாக காலணித்துவ கால எதிர்ப்பு போராட்டங்களில் அடையாளங் காணக்கூடியதாக அமைந்தது. இந்தியாவில் காந்தி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தின் செயற்பாடும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலோவின் போராட்டங்களும் அதன்வழியேயே செயற்பட்டிருந்தது. சட்ட மறுப்பு போராட்டமானது, ஜனநாயகச் சூழலில் ஓர் அறவழிப் போராட்டமாக அமெரிக்க எழுத்தாளரான கென்றி டேவிட் தோரோ 1849இல் எழுதிய  Civil Government (Civil Disobedienceஎன்ற அங்கில நூலில் விபரிக்கிறார். தோரோ, 1846ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட மெக்சிகன் போர் அடிமை பிரதேசத்தின் விரிவாக்கத்தை விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்ட மறுப்பு போராட்ட முறைமைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்திருந்தார். அரசாங்கத்துக்கு கீழ்ப்படியாமை பற்றி தோரோ குறிப்பிடுகையில், 'அரசாங்கம் என்னைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. மேலும் நான் அதைப் பற்றி மிகக் குறைவான எண்ணங்களை வழங்குகிறேன்.' எனக்குறிப்பிடுகின்றார்.

சட்டமறுப்பு போராட்ட வடிவத்தின் பிரதான நிபந்தனையாக, 'ஒரு அரசு தனிநபர்களின் அல்லது ஒரு சமூகத்தின் உள்ளுணர்வுக்கும் அதனுடைய மனச்சாட்சிக்கும் எதிராகச் சட்டம் இயற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் துணை போவதைத் தவிர்ப்பது ஒருவரின் கடமை' எனவும் தோரோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தார்மீக பிரச்சினைகளை தனிமனிதனும் அவனது மனசாட்சியும் முடிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையினரின் அரசாங்கத்தின் மூலம் முடிவு செய்ய இயலாது என்கின்றார். மெக்சிகன் போர், நிறுத்தப்பட வேண்டும் என்று தோரோ நம்புகிறார். அது தனிப்பட்ட நடவடிக்கையால் நிறுத்தப்படலாம். ஆனால் அரசியல் செயல்முறை மூலம் அல்ல என உறுதிபடக்கூறினார். சிவில் ஒத்துழையாமை என்பது வரையறுக்கப்பட்ட அரசாங்கத்திற்கான அழைப்பாகும். வரி செலுத்தாததன் மூலம், தனிப்பட்ட அதிகாரம் இல்லாத பிரச்சினைகளில் அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்க்கிறார். இது ஒரு அமைதியான புரட்சி. வன்முறை அல்ல. இதனூடாக பரிசீலிக்கப் பொருத்தமாக இருக்கும் பிரச்சினைகளை முடிவெடுக்க வரையறுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தோரோ அழைப்பு விடுக்கிறார்.

தோரோவின் சட்ட மறுப்பு போராட்ட வடிவ கருத்தியலை ஈழத்தமிழரசியல் தரப்பினரால் முழுமையாக நகர்த்த முடியுமா என்பதை, தமிழரசியலின் கடந்த கால பயணங்களை நுணுக்கமாக அவதானிப்பதனூடாக விளங்கிக்கொள்ள முடியும்.

ஒன்று, சுதந்திர இலங்கையின் வரலாற்றில் தென்னிலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்களின் எண்ணங்களை முழுமையாக நிராகரித்தே வந்துள்ளார்கள். எனினும் ஈழத்தமிழரசியல் தலைமைகள் தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனை பாதுகாப்பதில் முன்னணியிலிருந்து செயற்பட்டு வந்துள்ளார்கள். கடந்த கால வரலாற்றை கடந்து இன்று ஈழத்தமிழரிசயலை வழிநடத்துபவர்களும் அவ்வாறானதொரு செயலொழுங்கிலேயே பயணித்து வருகின்றார்கள். குறிப்பாக, அண்மைய அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் இலங்கையின் அரசாங்கத்ததை பாதுகாப்பதை இலக்காக கொண்டே செயலாற்றி வருகின்றார்கள். அரசாங்கம் எம்மைப்பற்றி கவலைப்படாத போது நாம் அதனை பற்றிய எண்ணங்களை குறைப்பதையே சட்ட மறுப்பு போராட்டத்தின் அடிப்படையான ஒத்துழையாமையின் முன்நிபந்தனையாக தோரோ அடையாளப்படுத்துகின்றார். எனினும் ஈழத்தமிழரசியல் அரசாங்கம் பற்றிய கரிசணையினை தொடர்ச்சியாக பேணிக்கொண்டு சட்ட மறுப்பு போராட்ட உரையாடல்களை முன்வைப்பது கேள்விக்குரியதாகவே அமைகின்றது.

இரண்டு, அரசாங்கத்தின் நோக்கங்களிலிருந்து பிற நோக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அர்ப்பணிப்பதாக இருந்தால், முதலில் பார்க்க வேண்டும், குறைந்தபட்சம், அவ்அரசாங்கத்தின் தோள்களில் அமர்ந்து அவற்றைப் பின்தொடரவில்லை. அவ்அரசாங்கம் தன்னுனுடைய சிந்தனையைத் தொடர, முதலில் அதனை விட்டு விலக வேண்டும் என்பது சட்ட மறுப்பு பற்றிய தோரோவின் கருத்தில் ஓர் அம்சமாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் ஆதரவுடனான ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் கதவடைப்பு மற்றும் ஊடகங்களில் எதிர்ப்பறிக்கைகளை தெரிவித்த பின்னர் மீளவும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்குள் பிணைந்து செல்வதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக அபிவிருத்தி என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்குகெடுப்பதும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் இணைந்து செயலாற்றுவதென்பதுவும் சட்ட மறுப்பு கருத்தியல் வடிவத்தின் முரணானதாகவே அமைகின்றது. வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்யும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வவுனியா கொக்கச்சான் குளத்தை 'போபஸ்கம' என்ற சிங்களப் பெயருக்கு மாற்றி மூவாயித்து ஐநூறு சிங்களக் குடும்பங்களை மகிந்த ராஜபக்ஷா அரசாங்க காலப்பகுதியில் குடியேற்றியமைக்கு, ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கம் காணி உறுதி வழங்கும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூன்று, தோரோ 'என்னை விட உயர்ந்த சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களை மட்டுமே அவர்களால் வற்புறுத்த முடியும்' என்கின்றார். எனினும், சட்ட மறுப்பை பற்றி உரையாடும் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாகவே தென்னிலங்கையின் உயர் சட்டத்துக்குள்ளேயே தமது அரசியல் போராட்டங்களையும் முடக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. சட்டத்தினை பெரும்பான்மையாக உருவாக்கும் தென்னிலங்கையே சட்டங்களை புறந்தள்ளி, நீதிமன்ற தீர்ப்புகளை புறந்தள்ளி ஆக்கிரமிப்பினை உயர்வீச்சுக்குள் செய்கின்றது. எனினும் மக்கள்மயப்படுத்தப்பட்ட சட்ட மறுப்பு போராட்டங்களால் ஆக்கிரமிப்புகளுக்கு பதிலளிக்க வேண்டிய தமிழரசியல் தலைமைகள் தென்னிலங்கையின் சட்டத்துக்குள்ளேயே பயணிக்க முற்படுகின்றது. அத்துடன் மக்கள் போராட்டங்களை தாண்டி தென்னிலங்கை சட்டங்களை உயர்வாக சித்திரிக்க முனைகின்றது. காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் போன்ற இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு தமிழரசியல் தலைமைகள்  நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கலையே முதன்மையாக செயற்படுகின்றனர். குறிப்பாக அண்மையில் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிலைகள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டமையை தொடர்ந்து மீள்நிர்மாணிப்புக்கு பொலிஸார் தடைவிதிக்க தமிழரசியல் தலைமைகள் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றுள்ளனர். மறுதளத்தில் மக்கள் போராட்டமும் இடம்பெற்றது. எனினும் கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற செயற்பாட்டையே முதன்மைப்படுத்துகின்றார்கள். இது மக்கள் போராட்டத்தை மலினப்படுத்தி தென்னிலங்கை சட்டத்தை முதன்மைப்படுத்தும் செயலாகவே அமைகின்றது. எனினும் நீதிமன்ற தீர்ப்பை கட்சி நலனை அடிப்படையாக கொண்டு முதன்மைப்படுத்துபவர்கள் கின்னியா வெந்நீரூற்று விவகாரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரங்களை இலாபகரமாக மறந்து விடுகின்றனர்.

நான்கு, கடந்த கால தவறுகளை திருத்தி சட்ட மறுப்பு என்ற வடிவில் சிவில் ஒத்துழையாமை செயற்பாட்டை தமிழரசியல் நகர்த்த முற்படுமாயின், தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பு பொறிமுறைசார் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியமாகின்றது. தமிழ் மக்கள் முழுமையாக அரசாங்கத்தை நிராகரித்து தனித்து இயங்க தீர்மானமெடுப்பின் அவர்களது இருப்பு சார்ந்த பாதுகாப்பு உறுதிப்படுத்தல் அவசியமாகின்றது. எழுக தமிழ் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போன்ற ஒரு சில 1-3 நாட்கள் பேரணிகள் மக்கள் திரளுடன் இடம்பெற்ற போதிலும் மக்கள் திரட்சியான போராட்டங்கள் பெருமளவில் இடம்பெறாமைக்கு மக்களுக்கான அரசியல், பொருளாதார, சமூக இருப்பை பாதுகாக்கக்கூடியதொரு கட்டமைப்பு இன்மையே பிரதான காரணமாகும். எனவே, புலம்பெயர் ஆதரவுடன் பலமானதொரு பொதுக்கட்டமைப்பு பாதுகாப்புடன் சிவில் ஒத்துழையாமை செயற்பாடு மக்கள்மயப்படுத்துவதே ஈழத்தமிழர்களுக்கு பயனுடையதாக அமையும். ஆயினும் அவ்வாறானதொரு கட்டமைப்பு உருவாக்கத்திற்கு முன்னர் அரசியல் தலைமைகள் சட்ட மறுப்பினையும் சிவில் ஒத்துழையாமையையும் உயர்வீச்சில் கட்டமைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

எனவே, சட்ட மறுப்பு போராட்டம் பற்றிய உரையாடல் செயலூக்கம் பெறுவதும் குறிப்பாக அரசியல் விஞ்ஞான கருத்தியல் வடிவத்தில் சட்ட மறுப்பு போராட்டத்தை ஈழத்தமிழரசியல் தலைமைகள் நகர்த்துவதும் 2009களுக்கு பின்னர் மௌனிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் உரிமைப்போராட்டம் புதிய வீரியத்தைப் பெற வழிவகுக்கக்கூடியதாக அமையும். எனினும் தமிழரசியல் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் சட்டமறுப்பு போராட்ட உரையாடலின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்குவதும் வியப்பிற்குரியதல்ல. மேலும், சட்ட மறுப்பு போராட்டங்கள் மட்டும் வரலாறு தோறும் முழுமையான வெற்றிகளையும் பதிவு செய்யவில்லை. சட்ட மறுப்பு போராட்டத்துக்கு 19ஆம் நூற்றாண்டுகளில் விளக்கமளித்த தோரோ மெக்சிகன் அடிமை ஒழிப்புப் போராட்டம் மிகவும் அவநம்பிக்கையானதாக மாறியதால், தீவிரமான மற்றும் வன்முறை நடவடிக்கைகளைக் கோரும் விருப்பங்களுக்கு பின்னாளில் நகர்ந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தோரோ ஒரு வேண்டுகோளில், 'நான் கொல்லவோ கொல்லப்படவோ விரும்பவில்லை. ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் என்னால் தவிர்க்க முடியாததாக இருக்கும் சூழ்நிலைகளை என்னால் கணிக்க முடியும்.' என எழுதியுள்ளார். மனிதனுக்கும் அரசுக்கும் இடையேயான உறவைப் பற்றிய தோரோவின் பார்வை மாறவில்லை. ஆனால் தனிநபர்கள் நிறுவனமயமாக்கப்பட்ட அநீதியை எதிர்க்க வேண்டும் என்ற அவரது உணர்வு குறிப்பிட்ட தேசிய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவானது. ஈழத்தமிழர்களிடமும் ஈழத்தமிழர்களை நெறிப்படுத்துபவர்களிடமும் கால சூழலை உள்வாங்கி பதிலளிக்கும் திறன் உருவாக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-