திலீபனின் தியாகம் கட்சி அரசியலால் பலியிடப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் அண்மைய நாட்களில் பேரினவாதத்தின் இனவன்முறைகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்திய புலனாய்வுத்துறையும் இனவன்முறைக்கான சூழலை இலங்கையில் எதிர்வுகூறியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். அண்மைய பேரினவாதத்தின் இனவாத பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் வடக்கில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பை மையப்படுத்திய அதிகம் சுழன்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் திருகோணமலையில் கப்பல் துறைமுக பகுதியில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த வன்முறை தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைக்கு சிங்கள பேரினவாதம் ஏற்படுத்தும் தடையாக அவதானிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்ப்பரப்பில் போதிய அரசியல் எதிர்விளைவுகளை அடையாளங்காண முடியவில்லை. அத்துடன் கலவையான கருத்துக்களையே பொதுவெளியிலும் அறியக்கூடியதாக காணப்பட்டது. இந்நிலையில் இக்கட்டுரை தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் அரசியல் சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தமிழ்த் தேசிய மக்கள் ...