தேர்தலுக்கு தயாராகும் தென்னிலங்கையும் ஈழத்தமிரின் அபிலாசைக்கு முரணான தமிழரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தல் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த மோதல்கள் தென்னிலங்கையை ஆக்கிரமித்துள்ளது. எனினும், இலங்கையில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தேர்தல் காலத்தில் தென்னிலங்கை கட்சிகள் பிரச்சாரத்தில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை ஒழிப்பதாகவும், வெற்றியின் பின்னர் அவ்உரையாடல்களை தவிர்த்து செல்லும் நடைமுறையில் ஈடுபடுவதும் வழக்கமாயிருந்தது. எனினும் இம்முறை அதிகமாக அதிகாரத்துக்கான போட்டியை மையப்படுத்தியே தென்னிலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயர்த்தங்கள் காணப்படுகின்றது. மாறாக தமிழரசியல் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலை தென்னிலங்கை விவகாரமாக வழமைபோல் அதிக கரிசணையற்ற நிலைமையிலேயே காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களையும் தமிழ் அரசியல் இயங்குநிலையையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதின கூட்டாக இயங்கும் தரப்பினர் என பல முனைகளில் ஐனாதிபதி தேர்தலுக்கான முன்னாயர்த்தங்கள் செய்திகளை நிரப்பியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த உரையாடல்களுடன் கூட்டணிகள் பற்றிய உரையாடல்களும் முதன்மை பெறுகின்றது. முதன்மையானதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஒரு வேட்பாளராக இருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க முன்னணி வேட்பாளராக இருந்தாலும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் சில முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திரைக்குப் பின்னால் ஆலோசனைகள் நடந்துள்ளன. மேலும் பொதுஜன பெரமுனவின் ஒரு குழு பசில் ராஜபக்ஷhவினையும், நாமல் ராஜபக்ஷhவினை பிரேரிக்கும் மோதல்களும் காணப்படுகின்றது. அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை முன்னிறுத்துகின்ற அதேவேளை பொதுவேட்பாளர் பற்றிய முரண்பாடும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் முன்னணியினரே நேரடியாக அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் முன்னணியினர் நாட்டில் ஏற்பட்ட அரகல்யாவை தொடர்ந்து எதிர்பார்ப்புமிக்க கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதிகள் அவ்வப்போது ஊகிக்கப்பட்டபோது, தேசிய மக்கள் முன்னணி ஒட்டுமொத்த வெற்றியாளராக இருக்கும் என்று பலமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இது அநுர குமார திசநாயக்கவின் பிரபலத்தை உயர் மட்டத்திற்குத் தள்ளியது. எவ்வாறாயினும், தென்னிலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் நிச்சயமாக, முக்கிய கட்சிகள் அல்லது கூட்டணிகள் களத்தில் இருக்கும் என்பதையே இதுவரை வெளிப்படுத்தியுள்ளது. 

உத்தேச ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவதே தற்போது அரசாங்கத்தின் சிந்தனையாக அரசியல் தரப்பில் ஊகிக்கப்படுகின்றது. அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பற்றிய உரையாடலும், மாகாண சபைத் தேர்தலுக்கான வாய்ப்புகள் தடுமாற்றத்துடனும் காணப்படுகின்றது. எனவே, ஏதொவொரு வகையில் 2024ஆம் ஆண்டு இலங்கை தேர்தல் ஒன்றுக்கான பலமான எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றது. தென்னிலங்கையின் மோதுகையும் அதன்வழியே இயக்கப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பில் தேர்தல்களை கையாள்வது தொடர்பிலான எவ்விதமான அரசியல் உரையாடல்கள் கூட இதுவரை திறக்கப்படவில்லை. இப்பின்னணயில் தமிழரசியல் தரப்பின் போக்கு வழமை போன்ற இறுதிநிலை தீர்மானங்களுக்கும் வினைத்திறனற்ற இராஜதந்திர நகர்வுகளுக்குள்ளேயே தொடர்ச்சியாக நகர்த்தப்பட உள்ளதா என்பதே அரசியல் ஆய்வாளர்களின் விமர்சனமாக காணப்படுகின்றது. தமிழரசியல் தரப்பின் போக்கினை ஆழமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, கடந்த கால ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான தமிழரசியல் தலைமைகளின் நெறிப்படுத்தல்கள் பலவீனமான எதிர்விளைவுகளை தமிழரசியலில் உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2009களுக்கு பின்னர் தமிழரசியல், நடப்பில் உள்ள ஜனாதிபதி மீது நம்பிக்கையிழந்தவர்களாக பிரதான எதிர்ப்போட்டியாளர்களை ஆதரிக்கும் ஒழுங்கினையே பேணி வருகின்றனர். 2010ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இடம்பெற்ற முதல் ஜனாதிபதித்தேர்தலில் யுத்த கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷhவினை நிரகரிப்பதற்கு, யுத்தத்தின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவினை ஆதரித்து தமிழ் மக்களின் அன்றைய ஏக பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரம் செய்திருந்தது. இதில் போர்க்குற்றம் பற்றிய நீதிகோர் மலினப்படுத்தும் பிரச்சாரத்துக்கு வழிகோலுகின்றது. தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷhவை மீளவும் நிராகரித்து, 2009ஆம் யுத்தத்தின் இறுதிநாட்களின் பேரழிவு காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததுடன் அவருடன் இதயபூர்வ ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேனா தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதைத்து, 2018 அக்டோபரில், 'அரசியலமைப்பு சதி' என்று வர்ணிக்கப்படும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன, தான் தோற்கடித்த ராஜபக்சாவை பிரமராக்கி, ராஜபக்சாவை ஆதரிக்க மறுத்ததற்காக பாராளுமன்றத்தை கலைக்கவும் முயன்றார். அவ்ஒழுங்கிலேயே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷh நிராகரிப்பு, சஜித் பிரேமதாசா ஆதரவு எனவும்; 2022ஆம் ஆண்டு அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிட போட்டியில் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு, டலஸ் அழகப்பெருமா ஆதரவு என்பனவும் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவினைப்பெறுபவர்கள், தேர்தலுக்கு பிற்பட தங்களை சிங்கள பேரினவாதத்தின் பாதுகாவலர்களாக காட்சிப்படுத்தி தமிழினத்தை ஏமாற்றும் படலங்களே தொடர்;ச்சியான அனுபவங்களாகவே பதிவாகின்றது. இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் சிங்கள பேரினவாத உரையாடல்களுக்கு பின்னால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தெரிவில் ஆதரவளிக்கப்பட்ட டலஸ் அழகப்பெருமா அணியைச்சேர்ந்த உதய கம்மன்பிலவே முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்று அனுபவத்தினை தமிழரசியல் தரப்பு இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லையாயின் தமிழின அழிப்புக்கான பிரதான சூத்திரதாரிகளாக தமிழரியல் தரப்பினரே செயற்டுகின்றனர் என்பதே வெளிப்பாடாகும்.

இரண்டு, கடந்த கால தமிழரசியல் தரப்பின் வினைத்திறனற்ற செயற்பாடுகளின் பின்னணியில் தமிழரசியல் தரப்பின் மீதான நம்பிக்கையினை தமிழ் மக்கள் இழந்துள்ளார்கள். 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சவாலுக்குட்படுத்தப்பட்டமையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான வாக்குகளின் அதிகரிப்பானது மாற்றீட்டீற்கான நம்பிக்கையின் உதயமாகவே அமைந்தது. இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாத்துள்ளார்களா என்பதில் அதிக சந்தேகங்களே காணப்படுகின்றது. குறிப்பாக பிரதிநிதித்துவமற்ற சூழலில் கடைப்பிடித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீதான எதிர்ப்பரசியல் பொறிமுறையையே இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ள போதும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பேணுவது அதிக விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. வினைத்திறனான இராஜதந்திர பொறிமுறையினூடாக தமிழ் மக்களை வழிப்படுத்தக்கூடிய தலைமையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழங்க தயாரில்லாமையானது, ஒட்டுமொத்த தமிழரசியல் தரப்பினர் மீதும் தமிழ் மக்கள் நம்பீக்கையீனத்துடன் செயற்படும் நிலையை உருவாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பெற்றுக்கொண்டமையும், கிழக்கு மாகணத்தில் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டமையும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய அரசியல் முலாம் பூசப்பட்ட தலைமைகள் மீதான நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடுகளாகவே அமைகின்றது. இவ்நம்பிக்கையீனம் கடந்த கால தமிழ்த்தலைமைகளின் இராஜதந்திரமற்ற முடிவுகளின் விளைவிலானதேயாகும்.

மூன்றாவது, தமிழ் மக்கள் தமிழரசியலில் புதிய அணுகுமுறைகளை எதிர்பார்ப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தரப்பு தமிழ் வேட்பாளரை நிறுத்தி தமது அரசியல் கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற தந்திரோபாய உரையாடல் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முதலாகவே தமிழ் அரசியல் பரப்பின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் மீள மீள பிரேரிக்கப்படுகிறது. எனினும் தமிழரசியல் தரப்பினரால் அவ்தந்திரோபாய அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சிவில் குழு ஒன்று தமிழ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தி தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் அரசியல் கட்சிகளுடன் உரையாடலை மேற்கொண்டிருந்தனர். குறித்த உரையாடல் ஒன்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மூத்த அரசியல்வாதி அதன் தந்திரோபாய அணுகுமுறையை சற்றும் சிந்திக்காது தமிழ் வேட்பாளர் தோல்வியுறுவாரே எனக்கூறியிருந்தார். தமிழ் வேட்பாளரை நிறுத்துவது இலங்கை ஜனாதிபதி பதவியை பெறுவதற்காக அல்ல. மாறாக தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசியல் வாக்குறுதிகளை நிராகரித்து, தனித்தேசமாக வேறுபட்ட அபிலாசைகளுடன் பயணிக்கிறார்கள் என்பதை சொல்வதற்கானதே ஆகும். நடைமுறையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்புக்கான உரையாடல் புலம்பெயர் தமிழ் அரசியலில் முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. தாயகத்திலும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் பொதுவாக்கெடுப்பினை சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும் தாயகத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய பொதுவாக்கெடுப்பின் சாத்தியப்பாடு கேள்விக்குரியதே ஆகும். எனவே ஜனாதிபதி தேர்தலை அதற்கான முன்அடையாளமாக கொண்டு தமிழ் அரசியல் தரப்பு தமிழ் வேட்பாளரை முன்னிறுத்தி அவ்வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கையில், மூத்த அரசியல்வாதி கூறியது போன்று இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையலாம். எனினும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கை வலுவான வெற்றியை பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. தேர்தல்களை தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுடன் பொருத்தி தமிழ் மக்களின் பலத்தை கட்டமைக்கக்கூடிய அணுகுமுறையை கையாள வேண்டும்.

எனவே, இலங்கை ஜனாதிபதி தேர்தல் என்பது வெறுமனவே தென்னிலங்கை வேட்பாளர்களுக்கான களம் என்ற வழமையான எண்ணங்களுக்குள் தமிழரசியல் பயணிக்குமாயின், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்ய தொடர்ச்சியாக பேரினவாத தென்னிலங்கை தலைமைகளிடமே எதிர்பார்த்திருக்க வேண்டும். மாறாக இலங்கை தேர்தல்களை தமிழரசியல் புதிய அணுகுமுறைகளுடன் கையாள வேண்டும். இது தமிழ் மக்களின் விடுதலையை மாத்திரமின்றி தமிழரசியல் தரப்பு மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையையும் கட்டமைக்க ஏதுவாக அமையும். தொடர்ச்சியாக பேரினவாத தரப்பினருக்கான ஆதரவுகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை ஈடுசெய்யும் அவலம் தொடரின், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புதிய மாறுதல்களையே காலத்துக்கு காலம் பரிட்சிக்க வேண்டிய அவலநிலை உருவாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-