தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கையை தமிழ்த்தேசியம் பயன்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் மீளவும் பிரித்தானியாவின் சனல்-4இன் ஆவணப்படம் புதிய அரசியல் சச்சரவுகளை உருவாக்கி உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் தென்னிலங்கை பிரச்சாரத்தில் சர்வதேச விசாரணையைக்கோரும் சூழ்நிலைக்கு நகர்த்தியுள்ளது. இப்பின்னணியில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ராஜபக்ஷhக்களின் அரசியல் அதிகாரத்துக்கான வேட்கையுடன் தொடர்புபட்டதாக சனல்-04 ஆவணம் குற்றம்சாட்டு காணப்படுகின்றது. சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் இலங்கையிலிருந்து வெளிவருவது நீண்ட வரலாற்றை பகிர்கின்றது. எனினும், தற்போது சர்வதேச விசாரணை கோரிக்கை முன்வைப்பவர்களின் உருவம் மற்றும் விடயம் மாறியுள்ளது. ஈழத்தமிழர்கள் தமக்கெதிராக இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கெதிராக 2009களுக்கு பிற்பட சர்வதேச விசாரணை பொறிமுறையை தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். எனினும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையை இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானதாக பிரச்சாரப்படுத்தி நிராகரித்திருந்தார்கள். தற்போது தென்னிலங்கை அரசியல் மற்றும் சிவில் தரப்பினரிடமிருந்தே சர்வதேச விசாரணைக்கோரிக்கைகளை முன்வைப்பது ஈழத்தமிழரசியலுக்கான வாய்ப்பான களத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்களிடையே எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கை அரசியலின் ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்பை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர்-05அன்று பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'சனல் 4', இலங்கையில் பல கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து 260க்கும் மேற்பட்டவர்களை கொன்று நூற்றுக்கணக்கானவர்களை படுகாயத்துக்கு உட்படுத்திய 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான புதிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. 'இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்' என்ற தலைப்பிலான 50 நிமிட நீளமான காணொளி இலங்கையில் ஓர் வதந்தியாக அரசியல் பிரச்சாரமாக உரையாடப்பட்டு வந்த விடயத்துக்கு விசாரணையிலான சாட்சியங்களை தொகுத்து வழங்கியுள்ளது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷhவின் வெற்றிபெற வழிவகை செய்வதற்காக தற்போதைய கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் இராணுவப் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் பங்களிப்புடன் இடம்பெற்ற அரசியல் அதிகாரத்துக்கான கொலைவெறி தாக்குதலாகவே ஈஸ்டர் குண்டுவெடிப்பை சனல்-4 ஆவணம் அறிக்கையிட்டுள்ளது. ஆவணப்படத்தின் படி, மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோரிய மௌலானா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனது சாட்சியத்தை சமர்ப்பித்துள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனின் வழிகாட்டுதலின் பேரில், இராணுவப் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையில்இடம்பெற்ற சந்திப்பில் நாட்டில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக மௌலானா குறிப்பிட்டுள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற வழிவகை செய்வதற்காக 2-3 வருடங்கள் இச்சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

சனல்-4 ஆவணம் ராஜபக்ஷhக்கள் எதிர்மனோநிலையில் செயற்படுவதாகவும், அவ்ஆவண உள்ளடக்கங்கள் போலியானதெனவும் கோத்தபாய ராஜபக்ஷ, சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தாலும், இலங்கையிலும் சர்வதேச அரசியல் பரப்பிலும் சனல்-4 ஆவணக்காணொளி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சனல்-4இன் நம்பகத்தன்மை, அதன் நிகழ்ச்சி நிரல், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து கருத்துக்கள் பிரிக்கப்படலாம், ஆனால் பயங்கரவாத குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்ட அளவுக்கதிகமான தாமதங்கள் மன்னிக்க முடியாதவை என்பதும், நீதி நிலைநாட்டப்படாது என்ற கூற்றும் முதன்மைப்படுத்தப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் வீழ்ச்சியிலிருந்து பெரும் அரசியல் இலாபத்தைப் பெற்ற அரசாங்கத் தலைவர்கள், குண்டுவெடிப்புகளை முழுமையாக விசாரித்து நீதியை விரைவாக நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியதை நியாயப்படுத்த முடியாது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், பயங்கரவாதத் தாக்குதல்களில் அவர்களுக்குப் பங்கு உண்டு என்று குற்றச்சாட்டு பரவலாக எதிர்க்கட்சிகளால் பிரச்சாரப்படுத்தப்பட்டது. எனினும் சதிக்கோட்பாடாக அது கடந்து செல்லப்பட்டது. எனினும் சனல்-4 ஆவணக்காணொளியின் சாட்சியத்தொகுப்பு அரசியல் பூதாகரத்தை உருவாக்கியுள்ளது.

செப்டெம்பர்-06அன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த சனல்-4 நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, 'உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம்' என வலியுறுத்தினார். அவ்வாறே கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், 'சனல்-4 அலைவரிசையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசேட அறிக்கையின் உண்மைகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தயாராக உள்ள போதிலும், அந்த குழுவின் ஊடாக இந்த விசாரணைகள் பக்கச்சார்பற்ற மற்றும் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது' என சுட்டிக்காட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலை மையப்படுத்திய சர்வதேச விசாரணை தொடர்பான உரையாடல் இலங்கை களத்துக்கு வெளியேயும் உரையாடலை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (ஏழடமநச வுüசம) இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், '2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தமிழ்த்தரப்பிடமிருந்து மாத்திரம் வந்த இலங்கையின் உள்ளகநீதிப்பொறிமுறை மீதான நம்பிக்கையீனம், சமகாலத்தில் தென்னிலங்கையிலிருந்தும், சர்வதேசத்திலிருந்து வலியுறுத்தப்படுகின்றமை ஈழத்தமிழருக்கு சாதகமானதாகவே புலப்படுகின்றது. எனினும் அதன் வடிவம் மற்றும் உள்ளக நீதிப்பொறிமுறையின் நம்பிக்கையீனத்துக்கான உள்ளடக்கங்கள் வேறுபட்டதாக காணப்படுகின்றது என்பதை தமிழ்த்தரப்பு சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இப்பின்னணியில் சமகாலத்தில் வலுப்பெறும் சர்வதேச விசாரணை கோரிக்கையின் அரசியல் முக்கியத்துவத்தினை தந்திரோபாயமாக அணுகுவது அவசியமாகின்றது.

முதலாவது, இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையின் பலவீனத்தை பொது அரங்கில் பிரச்சாரப்படுத்த தென்னிலங்கை அரசியல் மற்றும் சிவில் தரப்பின் கருத்துக்கள் வலுவானதாக அமைகின்றது. கடந்த காலங்களில் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான நீதியை தமிழர்கள் சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் கோரிய போதெல்லாம், தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் ஒரே திரளாக உள்ளக நீதிப்பொறிமுறையையே ஆதரித்து வந்தார்கள். சர்வதேச நீதிப்பொறிமுறையை இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானதாகவும் பிரச்சாரம் செய்திருந்தார்கள். குறிப்பாக இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சர்வதே விசாரணை வலியுறுத்தும் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நீதிப்போராட்டத்தில் முன்னணியில் செயற்பட்ட ஆயர்களின் செயற்பாடுகள் மீது இடையூறுகளை விளைவித்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறான தரப்பினரே இன்று உள்ளக நீதிப்பொறிமுறையின் மீது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதை தமிழ்த்தரப்பு சுவீகரித்து கொள்ள வேண்டும். தென்னிலங்கையின் உள்ளகப்பொறிமுறையின் நம்பிக்கையீனத்தையும் சுட்டிக்காட்டுவதனூடாக தமிழ்த்தரப்பின் சர்வதேச நீதிவிசாரணைக்கான நியாயப்பாட்டை வலியுறுத்தல் வேண்டும். 

இரண்டாவது, ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கங்கள் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை கோரிக்கைகளை தென்னிலங்கையின் சர்வதேச நீதிக்கோரிக்கைக்குள் முதன்மையானதாக ஒன்றிணைக்க வேண்டும். தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ தனது ஒ தளப் பதிவில், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கிறிஸ்தவ தலைவர்களும் ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை புதிய ஆவணதிரைப்படம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இலங்கையில் இடம்பெற்ற  யுத்தகால அநீதிகள் ஏனைய பாரதூரமான குற்றங்கள் மனித உரிமைமீறல்கள் குறித்தும் இதேபோன்ற சர்வதேச விசாரணைக்கான  வேண்டுகோள்கள்  விடுக்கப்படவேண்டும். அவ்வாறான வேண்டுகோள்களை விடுக்காமல் இருப்பது கபடநாடகமாகும்' எனத் தெரிவித்துள்ளார். கலும்மக்ரேயின் சனல்-4 ஆவணப்படங்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சாக்களின் குற்றங்களை காண்பித்திருந்தன. குறிப்பாக இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் மரண கொடூரங்கள் சனல்-4 ஆவணக்கானொளி காட்சிப்படுத்தியிருந்தது. சமகாலத்தில் சர்வதேச விசாரணையை கோரும் தரப்பினரின் எண்ணங்கள் தூய்மையானதாயின், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை பொறிமுறையினூடாக நீதியை பெறுவதனூடாகவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கான நீதியையும் பெற இயலும் என்ற யதார்த்த புரிதலூடாக ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக்கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

மூன்றாவது, எதிர்க்கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூக கட்டமைப்பிலிருந்து சர்வதேச விசாரணை பொறிமுறை வலியுறுத்தப்படுகின்ற போதிலும், சிங்கள பேரினவாத தரப்பினரால் சனல்-4 ஆவணக் காணொளி விடயங்களை நிராகரித்து அதற்கெதிராக போராட்டங்களும் தென்னிலங்கையில் இடம்பெறுகின்றது. தென்னிலங்கை கடுமையாக சிங்கள பேரினவாத எண்ணங்களால் நிறைந்து உள்ளது. தென்னிலங்கையின் ஒருசிலரின் எண்ணங்களுக்குள் இலங்கையின் மாற்றங்களை எடைபோடுவது ஆபத்தானதாகும். அரகல்யா தொடர்பான பொதுப்பார்வையும் பல கோணங்களில் பிழையானது என்பதையே சமகால சிங்கள பேரினவாத செயற்பாடுகள் தோலுருத்து காட்டுகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் பாரர்ளுமன்ற உரைகளுக்குள் சர்வதேச விசாரணை கோரிக்கையை நிறைவு செய்துள்ளனர். எனினும் அதற்கான ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கவில்லை. எனினும் சிங்கள பேரினவாத தரப்பு சனல்-4 ஆவணக்கானொளியை மலினப்படுத்துவதில் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. பல சிங்கள ஊடகங்களும் சனல்-4 செய்திச்சேவையை விடுதலைப்புலிகளுக்கு விசுவாசமானதாக காட்சிப்படுத்த முயலுகின்றனர். அதுமட்டுமன்றி செப்டெம்பர்-07அன்று பிரித்தானிய தூதரகத்துக்கு முன்னால் சனல்-4 ஆவணக்காணொளி உள்ளடக்கத்தை கண்டித்து போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்தனர். இவ்வாறான பின்னணிகளுக்குள்ளேயே தமிழ்த்தரப்பு தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கையையும் அணுக வேண்டியது அவசியமாகின்றது.

எனவே, தென்னிலங்கையின் அரசியலில் சர்வதேச விசாரணை பொறிமுறை முதன்மையான பிரச்சாரத்தை பெற்றுள்ளமையானது தமிழர்களுக்கு வாய்;ப்பான களமாகும் என்பது உண்மை. எனினும் தமிழ் அரசியல் தரப்பு அக்களத்தை தந்திரோபாயரீதியாக பயன்படுத்துவதனூடாகவே தமிழர்களுக்கு சாதகமானதாக மாற்ற இயலும் என்பதுவே யதார்த்தமானதாகும். இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் போன்ற கடுமையான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதே சர்வதேச நீதிப்பொறிமுறையாகும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கான சர்வதேச விசாரணையை முதன்மைப்படுத்துவதனூடாக ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை மலினப்படும்போக்கே உருவாகும். சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்தும் தென்னிலங்கை இவ்வாறானதொரு சூழலை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. அரசியல் தந்திரோபாய, மூலோபாய நகர்வுகளின் விளையாட்டு களம் என்ற புரிதலுடன் தமிழ்த்தேசியம் பயணிக்கையிலேயே தேசிய கனவுகள் கட்டமைக்கக்கூடிய சூழல் உருவாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-