திலீபனின் தியாகம் கட்சி அரசியலால் பலியிடப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் அண்மைய நாட்களில் பேரினவாதத்தின் இனவன்முறைகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்திய புலனாய்வுத்துறையும் இனவன்முறைக்கான சூழலை இலங்கையில் எதிர்வுகூறியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். அண்மைய பேரினவாதத்தின் இனவாத பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் வடக்கில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பை மையப்படுத்திய அதிகம் சுழன்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் திருகோணமலையில் கப்பல் துறைமுக பகுதியில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த வன்முறை தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைக்கு சிங்கள பேரினவாதம் ஏற்படுத்தும் தடையாக அவதானிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்ப்பரப்பில் போதிய அரசியல் எதிர்விளைவுகளை அடையாளங்காண முடியவில்லை. அத்துடன் கலவையான கருத்துக்களையே பொதுவெளியிலும் அறியக்கூடியதாக காணப்பட்டது. இந்நிலையில் இக்கட்டுரை தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் அரசியல் சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையில் வடக்கு-கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி ஒழுங்;கமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஊர்திப்பயணத்தின் மூன்றாம் நாள் செப்டெம்பர்-17அன்று திருகோணமலை கப்பல்துறை முக சந்திக்கருகில் சென்றவேளை சிங்கள பேரினவாத குழுவினரலால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் சிங்கள பேரினவாத காடையினரால் தாக்கப்பட்டார். வாகனங்களில் இருந்தவர்களும் இழுத்து வீழ்த்தப்பட்டு தாக்கப்பட்டார்கள். காவல்துறை மற்றும் 25இற்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் இருக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த தாக்குதலுக்கு எதிர்வினையாக கலவையான கருத்துக்கள் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது. சிலர் சிங்களப்பேரினவாதத்தின் செயற்பாட்டை கண்டித்து கருத்துரைத்தனர். இன்னும் சிலர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி செயற்பாட்டை கண்;;டித்துள்ளனர். இம்மாறுபட்ட கருத்தாடலுக்கு தியாக தீபம் திலீபன் நினைவு நாளை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள அரசியலே பிரதான காரணமாகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, தியாக தீபம் திலீபன் நினைவு நாள் கட்சி அரசியலாக்கப்பட்டு, கட்சி அரசியல் போட்டிகளினூடாகவே தியாக தீபத்தை நோக்கும் நிலை தமிழ்ப்பரப்பில் உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தியாக தீபத்தை நினைவு கூரும் செயலொழுங்கு பாராட்டிற்குரியது. குறிப்பாக, தியாக திலீபன் நினைவேந்தல் கட்டுரைப்போட்டி, திருவுருவப்பட ஊர்திப்பவனி மற்றும் நல்லூரின் நினைவேந்தல் ஒழுங்குகள் அவசியமான விடயமாகவே அமைகின்றது. எனினும் இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எனும் ஒரு கட்சி தலைமையெடுத்து நெறிப்படுத்துவது தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்குள் தள்ளியுள்ளது. ஏனைய கட்சிகள் புறமொதுங்குவது மாத்திரமின்றி தியாக தீபத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியலுக்குள் பார்த்து விமர்சிக்கும் நிலை காணப்படுகின்றது. கடந்த ஆண்டு மாநாகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் திலீபன் நினைவு நாளை முதன்மைப்படுத்திய போது, இறுதி நாள் கட்சி அரசியல் மோதுகைக்குள் நல்லூர் களம் காணப்பட்டது. இவை திலீபனின் தியாகத்தை மலினப்படுத்துவதாகவே அமைகின்றது. திலீபனின் நினைவேந்தலை தமது கட்சியின் செயற்பாடாக ஒரு தரப்பினரும், தமிழ்த் தேசிய அரசியலை நீக்கம் செய்யும் செயற்பாடாக மறுதரப்பினரும் மாற்ற முனையும் நிகழ்ச்சியே கட்சி அரசியல் போட்டிக்குள் திலிபனின் நினைவேந்தலில் காணப்படுகிறது. இதில் நினைவேந்தலை வெறும் அஞ்சலி நிகழ்வாக சித்தரித்து, தமது கடமை முடிந்து விட்டதாக கருதி தாங்கள்தான் தமிழ் தேசியத்தின் காவலர்கள் என்று சொல்லித் திரியும்  கட்சிகள் தொடர்பாகவும், நினைவேந்தலை தமது கட்சியின் ஏகபோக உரிமையாக காட்ட முனையும் கட்சிகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நினைவேந்தல்கள் பொதுவான கட்டமைக்குப்புக்குள் நெறிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு நீண்ட காலமாக தமிழரசியல் பரப்பில் உரையாடப்பட்டு வருகின்ற போதிலும், அதன் செயற்றிறன் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. திலீபனின் நினைவேந்தல் அரசியல் அடையாளப்பொருள். அதன் அரசியல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். எனினும் கட்சி அரசியலுக்குள் மட்டுப்படுத்துவது திலீபனின் மக்கள்மயப்படுத்தப்படும் அரசியலை புறமொதுக்க காரணமாகின்றது. தேசிய அரசியலைப்பொறுத்தவரை கட்சி அரசியல் மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியலின் அரணாகவே அமைய வேண்டும். 

இரண்டாவது, திலீபனின் அர்ப்பணிப்பு மற்றும் தியாக நிலைப்பாடு இன்றைய சமுகத்திடையே சரியான முறையில் கொண்டு செல்லப்படவில்லை. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காவும் உயிர்த்தியாகம் செய்தவரின் நினைவேந்தல் பற்றிய எண்ணங்கள் இன்றைய தமிழ் சமூகத்தில் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றதென்பது தேடலுக்குரிய பொருளாக அமைகின்றது. திருகோணமலையிலிருந்து ஊர்திப்பவனி கட்சி அரசியல் நலனுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்சி அரசியல் போட்டிக்குள் தேசிய அரசியலை நகர்த்துகின்றமை தமிழ் மக்களிடையே அரசியல்சார் வெறுப்புக்களையே உருவாக்கியுள்ளது. 1987ஆம் ஆண்டு திலீபன் உண்ணாநோன்பு இருந்த காலத்திலும், அதற்கு பின்னரான அவருடைய நினைவேந்தல் காலங்களிலும் மக்கள் எழுச்சி சுயமாக காணப்பட்டது. கடவுள்களுக்கு நிகராக வணங்கப்பட்ட பதிவுகள் காணப்படுகின்றது. இன்று திருகோணமலையில் திலீபன் திருவுருவப்ட ஊர்திப்பவனி தாக்கப்பட்ட போதும், தமிழ் மக்களிடையே ஆரோக்கியமான எழுச்சி உருவாகவில்லை. இதன் பின்னால் மக்கள் கட்சி அரசியல் சார்ந்துள்ள வெறுப்பே காரணமாகின்றது. தமிழினமே ஓரணியாக அணிதிரண்டு போராடவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். நினைவெழிச்சி நிகழ்வுகள் எந்தவொரு அரசியல் கட்சியினதும் தனியுரிமை சொத்தல்ல. இவ்நிகழ்வுகள் மக்கள்மயப்படுத்தப்பட்டு மக்களின் முன்னெடுப்பில் நடைபெறுவதாகவே அமைய வேண்டும். தடைகள் தளர்த்தப்பட்டு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நினைவேந்தல்களை தமது கட்சிச் செயற்பாடாக கருதாமல் மக்களின் செயற்பாடாக மாற்ற அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அப்படி இருந்தால் தான் மக்களும் அதிகளவில் பேரெழுச்சியுடன் திரள்வார்கள். கட்சிகளும் வேறு தரப்புகளும் பிழையான வழியில் நினைவேந்தலை கொண்டு செல்லும் முயற்சியை மக்கள் தடுப்பார்கள். அதனூடாக தமிழ்த்தேசத்தின் விடுதலை அரசியல் மக்களாலேயே முன்னெடுக்கப்படும். அவ்வாறான சூழலிலேயே நினைவேந்தல்களின் தார்ப்பரியங்கள் பாதுகாக்கப்படும். மறுபுறத்தில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கும் அவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மூன்றாவது, கட்சி அரசியல் மனநிலைக்குள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை விமர்சிப்பதாக கருதி தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் தாயகக்கோட்பாட்டை மறுதலிப்பது தமிழ்த்தேசிய கொள்கைக்கு முரணானதாகும். திருகோணமலையில் சிங்கள காடையர்கள் மேற்கொண்ட இழிவான செயலுக்கு ஒப்பானதாகவே தமிழ்ப்பரப்பில் சில நாகரீகமற்ற விமர்சனங்கள் முதன்மைப்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு-கிழக்கை முழுமைப்படுத்தி இடம்பெறும் திலீபன் திருவுருவப்பட ஊர்திப்பவனி தேவையற்றதாகவும், திருகோணமலைக்கு சென்றது தவறெனவும் சில தமிழ் அரசியல் ஆதரவாளர்களே பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இது வன்மையான கண்டனத்துக்குரிய பிரச்சாரமாகும். திலீபனது கோரிக்கைகளும் உயிர்த்தியாகமும் தமிழ்த்தேசிய கோட்பாட்டுக்கானது. குறிப்பாக திலீபனது ஐந்து அம்சக்கோரிக்கைகளில் தமிழர்களின் வடக்கு-கிழக்கு மரபுவழித்தாயகத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிங்கள பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கள பிரதேசமாகவும் அதற்குள் நினைவேந்தல் ஊர்திப்பவனி சென்றது தவறெனவும் சித்தரிப்பது தமிழ்தேசிய கோட்பாட்டை, தியாக தீபத்தின் கோரிக்கைகளை மலினப்படுடுத்தும் செயலாகவே அமைகின்றது. சிங்கள வரலாற்று பேராசிரியர் சு.ஆ.னந. சில்வா 'தமிழர் தாயகம் ஒரு மாயை' என்ற நூலில் தமிழரின் மரபுவழி தாயகக்கோட்பாட்பாட்டை மாயையானதென விமர்சித்தார். சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் திட்டமிட்டு மேற்கோள்ளப்படும் குடியேற்ற திட்டங்களும் தமிழர்களின் மரபுவழி தாயகத்தை சிதைப்பதற்கான ஏற்பாடேயாகும். இந்நிலையில் தற்போது திருகோணமலையிவ் சிங்கள காடையார்கள் கூட்டம் மேற்கொண்ட காண்டுமிராண்ட்டித்தனமான தாக்குவதல் தொடர்பில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஒரு சிலர் தெரிவிக்கின்ற கருத்துக்கள் சிங்கள தரப்பின் தமிழர் மரபுவழித்தாயகத்துக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு ஒப்பானதாகவே காணப்படுகின்றது.

நான்காவது, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அரசியல் விழிப்புணர்வுக்கான அரங்கு மாத்திரமின்றி, இன்றைய இளைஞர்களின் சமூக சீர்கேடுகளுக்கு விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய திறனையும் கொண்டமைந்துள்ளது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் ஒழுங்கமைப்பட்ட நினைவேந்தலில் ஓர் மாணவன் தனது உரையில் தியாக தீபத்தை இன்றளவும் இளைய சந்ததி அண்ணா என்று அழைப்பதை சுட்டிக்காட்டி இளைஞர்களின் அடையாளமாக விழித்திருந்தார். அதுவே நிதர்சனமானதாகும். பல்கலைக்கழக மருத்துவ கற்கையை புறந்தள்ளி தேசிய போராட்டத்திற்கு வலுச்சேர்க்க சென்றதொரு இளைஞன் 1987ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய பாதுகாப்புக்காக ஐந்து அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி 12 நாட்கள் உணவை தவிர்த்து உயிர்தியாகம் செய்தான் என்பது அன்றைய இளைஞர்களின் அரசியல் ஞானத்தையும் தேசம் மீதான தன் சமுகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்துகின்றது. எனினும் இன்று இளையோர் போதைப்பயன்பாட்டு அதிகரிப்பில் சமுகத்தை அழித்து வருகின்றார்கள். இன்றைய இளையோரிடம் திலீபன் போன்ற இளையோரின் உன்னத செயல் சரியான முறையில் கடத்தப்படுவதில்லை. அரசில் தரப்பினரும் இதனை முக்கியமான விடயமாக மாற்றவில்லை. ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்15-26க்கு இடைப்பட்ட காலங்களில் மாத்திரம் நினைவுகூரப்படும் பொருளாக திலீபன் எனும் இளைஞனின் தியாகம் மாற்றப்பட்டுள்ளதும் இன்றைய இளைய சமுக கட்டமைப்பின் சிதைவுக்கான காரணங்களில் ஒன்றாக அமைகின்றது. இவ்விடயத்தில் இவ்வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் செப்டெம்பர்-20அன்று 'மீண்டழும் பார்த்தீபம்' எனும் தலைப்பில் விளக்கேற்றும் நினைவேந்தல்களுக்கு அப்பால் அரசியல் சமுக விழிப்புணர்வு உரையாடலை ஆரம்பித்தமை பாராட்டத்தக்கதாகும்.

எனவே, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் அரசியல்-சமூக முக்கியத்துவம் தமிழரசியல் பரப்பில் கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியல் நலன்களுக்குள் சிக்குப்பட்டு அதன் தார்ப்பரியத்தையும் மகிமையையும் இழந்து வருகின்றமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிங்கள பேரினவாதம் தமிழர்களின் நினைவுகூரல் உரிமைகளை தடுக்க முற்படும் சமதளத்தில் தமிழரசியல் பரப்பில் நிகழும் கட்சி அரசியல் போட்டிகள் நினைவுகூரல்கள் மக்கள்மயப்படுத்தப்படும் அரசியலை தொடர்ச்சியாக தவிர்த்து வருகின்றது. அரசியல் மக்கள்மயப்படுத்தலுக்கு பலமான அரசியல் செயற்பாடே அவசியமானதாகும். இன்று அதற்கான காலங்கள் கனிகின்ற போதிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலை முன்னிறுத்துவதனால் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்திய மக்கள்மயப்படுத்தல் பெரியதொரு இடைவெளியாக காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-