கொரோனா வைரஸை வடக்கு மக்களால் எதிர்கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப்போரின் வடுக்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத சூழலில் இன்னுமோர் போர்க்கால சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது வடமாகாண தமிழ் சமூகம். உலகையை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தொற்று இலங்கையினையும் பெரும் உலுக்கு உலுக்கி வருகின்றது. இலங்கையில் 100இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 22ஆம் திகதி இலங்கையின் வடபுலத்தே யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து மாவட்டங்களுக்கிடையிலான நகர்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளது. எனிலும் தமிழ் சமூகம் கொரோனா பற்றிய போதிய விழிப்புணர்வினையோ, நிலைமையின் முழுமையான வீரியத்தையோ உணராத சமூகமாகவே காணப்படுகின்றார்கள் என்பது துயரமான பதிவாக உள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை தமிழ் சமூகத்தின் பார்வையிலான கொரோனாவினை விபரிப்பதோடு ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களையும் விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா பற்றிய செய்திகள் பரவுகையில் யாழ்ப்பாண மக்களின் முதல் செயற்பாடாய் பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க உணவுப் பொருட்கள் மற்றும் பெற்றோலிய பொருட்களின் விற்பனை நிலையங்களில் பெரு...