மலேசியாவில் மாறும் கூட்டுகளும் அரசியல் உறுதிப்பாடும்? -ஐ.வி.மகாசேனன்-
“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை” என்ற அரசியல் தந்திரமே சமீபத்திய மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்கின்றது. ஆளும் கூட்டணியில் மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின் மாற்றம்; என்று தொடர்ச்சியான செய்திகளில் மலேசியாவின் அரசியல் கடந்த வாரங்கள் பெரும் இழுபறிக்குள் சிக்கி திணறி வருகின்றது. ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவால் அரசியலில் நீண்ட அனுபவத்தை கொண்ட டாக்டர் துன் மகாதீர் முகமட் பெப்ரவரி 24 அன்று தனது பிரதமர் பதவியையும் தனது ஐக்கிய மக்கள் கட்சியின் தலைமை பதவியையும் ராஜினாமா செய்தார். மலேசிய மன்னர் மகாதீரை இடைக்கால பிரதமராக நியமித்தார். மீள மகாதீர் ஆளும் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பிரதமராக முயலுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் முஹைதீன் யாசின் 8வது பிரதமராக பதவியேற்றுள்ளார். ஆயினும் பாராளுமன்றில் முஹைதீன் யாசினுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்தை பாக்காத்தான் கூட்டணி விமர்சித்து வருகிறது. இதனடிப்படையில் குறித்த கட்டுரை மலேசியாவின் அரசியல் ஸ்திரமின்மைக்கு காரணமான ஆளும் கூட்டணியின் பிளவு அதுசார் அரசியல் மாற்றங்களை விபரிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
1957ஆம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் 60ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த ஆளும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (அம்னோ-AMNO) ஆதிக்கம் செலுத்திய பாரிசன் நேஷனல் கூட்டணியின் ஆதிக்கத்தை உலகின் மிகப் பழமையான தலைவரான மகாதீர், மே 2018 இல் நடந்த பொதுத்தேர்தலின் வெற்றியைக் கொண்டு முடிவுக்குக் கொண்டுவந்தார். பிரதமராக தனது இரண்டாவது பதவியில் நுழைந்த அவர், முன்னர் 1981 முதல் 2003 வரை அம்னோ கட்சியின் உறுப்பினராய் பிரதமர் பதவியை வகித்தவர். தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவை ஒரு முக்கிய வர்த்தக மற்றும் பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் மகாதீர்.
2003ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஒதுங்கி இருந்த மகாதீர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஊழலாட்சியை எதிர்த்து 2016ஆம் ஆண்டில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியை உருவாக்கி 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி (நம்பிக்கை கூட்டணி) சார்பாக தேர்தலில் களமிறங்கி வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். பாரிசன் நேஷனல் கூட்டணியினை வீழ்த்த உருவாக்கப்பட்ட பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உறுதியற்ற தன்மையினால் அதனுள் ஏற்பட்டுள்ள பிளவு இன்று மலேசியாவின் அரசியலையே ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிளவினை ஆராய அதன் உருவாக்கத்தின் வரலாறு அறிய வேண்டியது அவசியமாகின்றது. நஜிப்பின் ஊழலாட்சியை வீழ்த்த முன்னர் நண்பர்களாய் இருந்து பின்னர் எதிரிகளாய் மாறிய மலேசிய அரசியலின் இரு பெரும் தலைவர்களான மகாதீர் மற்றும் அன்வர் 2018ஆம் ஆண்டில் பாக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உருவாக்கத்தில் மீள நண்பர்களாயினர். இதனடிப்படையில் மகதீரின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிஇ அன்வரின் மக்கள் நீதி கட்சிஇ தேசிய நம்பிக்கை கட்சி மற்றும் சனநாயக செயல் கட்சி ஆகியன ஒன்றினைந்து பாக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின. உருவாக்கப்பட்ட இக்கூட்டணியில் பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் மகாதீர் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்கப் போவதாகவும், நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர், சிறைச்சாலையிலிருந்து அன்வார் இப்ராகிமை விடுதலை செய்து, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டணியின் சார்பில் இது தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறானதொரு உடன்பாட்டிலேயே பாக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உருவாக்கப்பட்டது. எனிலும் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் ஆகும் நிலையிலும் 94 வயதுடைய மகாதீர், அன்வரிடம் ஆட்சி பொறுப்பை கொடுப்பதற்கான உறுதியான திகதி அறிவிக்காமையே கூட்டணிக்குள்ளான பிளவுக்கு அடிப்படையாகியது. பிளவுக்கான கொதிநிலை மகாதீரின் ஆதரவாளர்களால் அன்வருக்கு எதிரான ஆட்சியை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட மாற்று கூட்டணிக்கான கலந்துரையாடலை தொடர்ந்தே வெடித்து பூதாகாரமாகியது. அன்வாரின் மக்கள் நீதி கட்சியின் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலிதான் இந்த ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக அன்வார் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆட்சிக்காலம் முடியும் வரை மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும், அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் பல மாதங்களுக்கு முன்பே அஸ்மின் அலி வெளிப்படையாகக் கருத்துரைத்தார். அஸ்மின் அலி சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான அம்னோவைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் மார்ச் 1 அன்று இரவு மகாதீரின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியினரும், அன்வாரின் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்) உபதலைவர் அஸ்வின் தலைமையிலான சில உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான அம்னோ உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைநகர் கோலாலம்பூரின் புறநகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டம் கூட்டணி அரசாங்கத்தின் வரவிருக்கும் சரிவு மற்றும் மலேசியாவில் ஒரு அரசியல் மறுசீரமைப்பு பற்றிய ஊகங்களுக்கு தூண்டியது. அதற்கு உரம் போடக்கூடிய வகையில் பக்தாத்தன் கூட்டணியிலிருந்து மகாதீரின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி வெளியேறி உள்ளது.
மகாதீரின் கூட்டணி 2018ஆம் ஆண்டு ஏகோபித்த வரவேற்பை பெற்று ஆறு தசாப்த ஆட்சியாளர்களை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த போதிலும் மலேசிய மக்களின் மனங்களை ஏகோபித்து வெல்ல முடியவில்லை. தொடர்ந்து நடந்த உள்ளூராட்சி தேர்தலில் மலேய மக்களின் செல்வாக்கால் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தோல்வியுற்றுள்ளது. இதனை சீர்செய்ய மகாதீர் அனைத்து கட்சிகளையும் இணைத்து “ஒற்றுமை அரசாங்கத்தை” நிறுவுவதற்கான சாதகமான நிலையை உருவாக்குவதற்காகவே பிரதமர் பதவியை இராஜினாம செய்ததுடன் கட்சி தலைமை பதவியிலிருந்தும் விலகியதாகவும் நோக்கப்படுகின்றது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் மகாதீர் ஒரு “ஒற்றுமை அரசாங்கத்தை" வழிநடத்த முன்வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தை எந்த கட்சிகளும் ஏற்காத நிலையில் போட்டி ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் முஹைதீன் யாசின் மற்றும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சார்பில் அன்வருக்குமாய் மாறியது. எனிலும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கான ஆதரவு குறைவாக இருப்பதை அனுமானித்த அன்வர் மீள மகாதீரை பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில அழைத்தார். மகாதீரும் பிரதமருக்கான பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தும் பட்டியல் வேலைகளை மேற்கொள்கையிலேயே மகாதீர் உருவாக்கிய ஐக்கிய மக்கள் கட்சியிலிருந்து மகாதீரின் கீழ் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த முஹைதீன் யாசின் 113 பேர் அடங்கிய பட்டியலை மன்னரிடம் சமர்ப்பித்து மலேசியாவின் 8வது பிரதமராக மார்ச் 1 அன்று பதவியேற்றுள்ளார். அரசியல் முதிர்ச்சி அனுபவமிக்க மகாதீரின் தந்திரங்களை குழப்பியுள்ளது.
பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல்வேறு உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, முஹைதீன் தனது பக்கத்தில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. இது மலேசியாவில் அரசாங்கத்தை உருவாக்க தேவையான 112 சட்டமன்ற உறுப்பினர்களை விட அதிகம். ஆனால் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக முஹைதீனுக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் கட்சியை சேர்ந்தோர், மகாதீருக்கு ஆதரவளிப்பதாவும், மகாதீருக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக திரும்புவதற்கு தமது ஆதரவை உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது. இது மலேசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை மீளாததயே உணர்த்துகிறது. திங்கட்கிழமை, மார்ச் 9 ம் தேதி பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதும் புதிய அரசாங்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்துள்ளளது. பாராளுமன்றம் கூடும் போது இங்கு எண்களே முக்கியம். ஆதலால் மகாதீர் பெரும்பான்மையை வைத்திருப்பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யலாம். மீள ஆட்சி மாறலாம். எனிலும் அமைச்சரவை பதவிகளை இழக்க விரும்பாத சந்தர்ப்பவாதிகள் இப்போது கப்பலில் குதிக்க ஆசைப்படக்கூடும். இருதரப்பும் அரசியல் பேரங்களால் மலேசிய அரசியல் கலாசாரம் சிதையும் நிலையே ஏற்படும்.
முஹைதீன் யாசினின் ஆட்சி கூட்டை விமர்சித்த டச்சு வங்கி ஐ.என்.ஜி.யின் ஆசிய பொருளாதார நிபுணர் பிரகாஷ் சக்பால், “நாங்கள் இங்கே மற்றொரு பலவீனமான கூட்டணியைக் கையாள்வதால் மலேசியாவின் அரசியல் நெருக்கடி வெகு அருகில் இருப்பதாக நாங்கள் கருதுகிறௌம். இது முதலீட்டாளர்களுக்கும் சந்தைகளுக்கும் சாதகமாக இல்லை” என்று ஒரு குறிப்பில் எழுதியுள்ளார். மேலும் மக்களும் மலேசியாவின் அரசியல் குழப்பம் தொடர்பிலும் முஹைதீன் யாசினின் பதவியேற்பு தொடர்பிலும் மலேசிய மக்களும் விசனம் அடைந்துள்ளனர். மலேசிய சிவில் சமூகங்கள் பின்கதவு அரசியலை கடுமையாக எதிர்த்துள்ளனர். 2018ஆம் ஆண்டு மக்களின் வாக்கானது பாக்தாத்தான் கூட்டணிக்கும் அதன் கொள்கைக்குமே இடப்பட்டது. ஆக வேறொரு அரசியல் மாற்றத்தை உருவாக்குவாயின் மக்கள் நிலைப்பாட்டை அறிய வேண்டியது சனநாயக அரசின் கடமையாகும் என மலேசிய சிவில் சமூகம் அறிக்கை விட்டுள்ளது.
மலேசியா அரசியல் மகாதீர் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் மீள ஆட்சி ஏறுமா? எதிரர்க்கட்சிகளின் கூட்டோடு ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் முஹைதீன் யாசினின் ஆட்சி தொடருமா? என குழப்பத்தில் காணப்படுகின்றது. இதற்கான தீர்வினை வழங்க கூடிய அதிகாரம் தற்போது பாரளுமன்ற அமர்விற்கே காணப்படுகின்றது. எனினும் இரு தரப்புமே ஸ்திரமற்ற நிலையிலேயே காணப்படுவதனை அறிய முடிகின்றது. இதனால் மலேசியா ஒரு புதிய ஸ்திரமான அரசாங்கம் எவ்வாறு அல்லது எப்போது உருவாக்கப்படும் என்பது குறித்து தெளிவான முடிவின்றி, நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தில் செல்கின்றது.
Comments
Post a Comment