அமெரிக்க –சீன வல்லரசுப் போட்டியில், கொரோனா வைரஸ்: உயிரியல் போரின் ஆரம்பமா? -ஐ.வி.மகாசேனன்-

ஆயுதமுறுகல்கள் இல்லை ஆனாலும் உலகநாடுகள் யாவும் போர்க்கால அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளது. சமீபகால நிகழ்வுகள், இன்னுமோர் உலகப்போராயின் அங்கு ஆயுதங்களாய் உயிரியலும் இலத்திரனியலுமே ஆதிக்கம் செலுத்துமென போரியல் நிபுணர்கள் கூறும் கூற்றுக்களையே ஞாபகப்படுத்துகின்றது. கொரோனா “COVID19” இன்று உலகை உலுக்கி வரும் வைரஸ் தொற்று. அதன் உருவாக்கம் மற்றும் பரவுகை தொடர்பிலே அவிழ்க்க முடியாத மர்மங்களே நிறைந்து காணப்படுகின்றது. ஆரம்பத்தில் வெளவாலால் பரவியது என உறுதிப்படுத்தாத தகவலை சீனா தெரிவித்திருந்த போதிலும் இது ஓர் உயிரியல் கசிவு என்பதாயும் செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையிலேயே இன்று வல்லரசுபோட்டியில் மோதிக் கொள்ளும் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாக கொரோனா பரவுகை தொடர்பிலே ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இது கொரோனாவின் அரசியலை தெளிவாக உணர்த்துகின்றது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை அமெரிக்க–சீனாவை மையப்படுத்திய கொரோனாவின் அரசியலையும் அதுவழிசதிக் கோட்பாடுகளையும் தெளிவாக விபரிக்கின்றது.

ஒருபுறம் அனைத்து நாடுகளிலும் கொரோனாவினால் மரணங்கள் குவியும் அதேவேளை, மறுபுறம் கொரோனாவினை மையப்படுத்திய அமெரிக்க–சீனா முரண்பாட்டு கருத்துக்களும் அதுவழி அரசியல் சதிக்கோட்பாடுகளும் வைரஸ் பரவுகையிலும் அதிவேகமாக அரங்கேறிய வண்ணமே காணப்படுகின்றது.

2020இன் வருட ஆரம்பத்தில் சீனாவின் வூஹான் பிரதேசத்தை மையமாய் கொண்டு கொரோனாவின் மரணவேட்டை ஆரம்பிக்கையில், சீனாவினை குற்றஞ்சாட்டுவதாக அமெரிக்க மற்றும் அதன் நட்புநாடுகளால் பலசதிக் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இஸ்ரேலிய உயிரியல் விஞ்ஞானியும் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியுமான டேனி ஷோஹம் என்பவர், “உலகநாடுகளுக்கு தெரியாமல் சீனா உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடங்களை வூஹான் நகரில் நடாத்தி வந்தன. ஒருகட்டத்தில் சீனாவின் உயிர் ஆயுத தயாரிப்பு தொடர்பிலே உலக நாடுகளுக்கு தெரிய வந்ததும், உயிர் ஆயூதங்கள் தயாரிக்கும் ஆய்வுகூடங்கள் எங்களிடம் இல்லை என்று சீனா தெரிவித்தது. ஆனால் இந்த ஆய்வுகூடங்களில் இருந்தே கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை.” எனக்குற்றம் சுமத்தினார். அவ்வாறே அமெரிக்காவில் குடியரசுக்கட்சியை சேர்ந்த செனட்டர் ரொம் காட்டன், “சீனாவின் இராணுவத்தால் தயாரிக்கப்படும் ஓர் உயிரியல் ஆயூதமே வைரஸ். சீனா ஆரம்பத்தில் இருந்தே பொய் சொன்னது, அவர்கள் இன்றும் பொய் சொல்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார். சீனா பெரும் ஆபத்திற்கு முகங்கொடுத்து வந்த சூழலில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியர்களின் கருத்திற்கு பெரிதாக ஆரம்பத்தில் எதிர்வினையாற்றவில்லை. அமெரிக்காவிற்கான சீனத் தூதர் குய் தியான்காய், “சந்தேகம், மற்றும் வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்புவது மிகவும் ஆபத்தானது" என்பதுடன் கருத்தை மட்டுப்படுத்தினார்.

அமெரிக்காவினை இயல்பாய் எதிரியாய் கருதும் ரஷ்யா மற்றும் மேற்கு ஆசியா நாடுகள் கொரோனா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதி என எதிர்வினையாற்றி இருந்தார்கள். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் ஓர் ஊடக அமைப்பான ஸ்வெஸ்டா ஜனவரி மாதம் “கொரோனாவைரஸ்: ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்க உயிரியல் போர்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். சீனாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் வகையில் இந்த வைரஸ் அமெரிக்காவால் கட்டவிழ்த்து விடப்பட்டது என கட்டுரை சென்றது. அவ்வாறே மேற்கு ஆசியாவில் சவுதி நாளேடான அல்-வத்தானில் வந்த ஒரு கட்டுரை, “கோவிட்-19 என்பது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மருந்து நிறுவனங்களின் லாபவரம்பை அதிகரிப்பதற்கான ஒரு சதி” என்று கூறுகிறது.

கொரோனாவைரஸ் தொடர்பில் தொடர்ச்சியாக அமெரிக்கா கையாளும் முறைமை சீனாவை சீண்டுவதாகவே அமைந்தது. எனிலும் இதுவரை அமைதியாய் இருந்த சீனா, தனது நாட்டில் கொரோனாவைரஸை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தததன் பிற்பட அமெரிக்காவின் மீது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவின் வெளியுறவுசெய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன், “வூஹானுக்கு தொற்றுநோயைக் கொண்டுவந்தவர் அமெரிக்க இராணுவமாக இருக்கலாம். வெளிப்படையாக இருங்கள்! உங்கள் தரவை பகிரங்கப்படுத்துங்கள்! அமெரிக்கா எங்களுக்கு ஒருவிளக்கத்தைக் கொடுக்க வேண்டும்!" என டுவிட்டரில் பதிவேற்றி புது சதிக்கோட்பாட்டை உருவாக்கி உள்ளார். இதற்கு உடனடியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்காவிற்கான சீன தூதரை அழைத்து கண்டனத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனிலும்  வெளியுறவுச்செய்தித் தொடர்பாளர் சாவோ அமெரிக்காவில் தான் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்களை குறிப்பிட்டு தொடர்ச்சியாக வெளியிட்ட கட்டுரையின் உள்ளடக்கம் கொரோனோ அரசியல் பற்றி சில புதிய தளப்பார்வைகளை திறந்து விட்டுள்ளன.



பிரதானமாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையங்களின் அதிகாரி மார்ச் 11 அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய உரையில், “நம் நாட்டில் பல இறப்புகள் வந்தன. இறப்புகள் எல்லாம் பருவநிலை காய்ச்சலால் ஏற்பட்டதாக கருதினோம் ஆயினும் அவை கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ளது.” எனக்குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பருவநிலை காய்ச்சலானது ஆரம்பமாகி ஏறத்தாழ 5 மாதங்களாகி உள்ளதுடன் 16000 பேர் இறந்துள்ளனர். ஆதலால் சீனாவில் கொரோனாதாக்கம் பரவுவதற்கு முன்னரே அமெரிக்காவில் பரவ ஆரம்பித்ததோ என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் 2019இல் ஜோன் ஹொப்கின்ஸ், உலக பொருளாதார பேரவை ஆகியன இணைந்து ஒரு வைரஸ் பரவுகை தொடர்பில் அபாய முன்னெச்சரிக்கை செய்தி விடுத்தனர். அதேகாலப்பகுதியில் அமெரிக்காவின் 300இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இராணுவ விளையாட்டு தொடர் ஒன்றிற்காய் சீனாசென்றுள்ளனர். அதற்கு பிற்பட டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கொரோனாவைரஸ் நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அமெரிக்க இராணுவத்தினரின் சீனா வருகை கொரோனாவைரஸ் பரவுகை தொடர்பில் தாக்கம் செலுத்தி இருக்கும் என்ற கோட்பாட்டையே சீனவெளியுறவுச்செய்தி தொடர்பாளர் முன்வைக்கின்றார்.

அமெரிக்கா மீதான சீனாவின் வெளியுறவுச்செய்தி தொடர்பாளரின் சதிக்கோட்பாட்டை வலுப்படுத்தம் மற்றொரு காரணியாய் கொரோனாவைரஸின் இழப்பு அதிகமாக தாக்கப்பட்டுள்ள தேசங்களுக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான உறவுநிலைப்பாடு காணப்படுகின்றது. சீனாவிற்கு அடுத்து தற்போது விரைவாக கொரோனா தாக்குதல் பரவிவரும் ஐரோப்பிய நாடாக இத்தாலி காணப்படுகின்றது. இத்தாலி சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சியில் இணைந்த முதலாவது G7நாடாக காணப்படுகின்றது. சீனா அமெரிக்காவின் வல்லரசுபோட்டியில் சீனாவின் பலத்தை மெருகூட்டுவதற்கான முயற்சியே பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் இணைவு அமெரிக்காவுக்கு சவால் விடும் செயல் என்ற ரீதியில் சீனாவிலிருந்து இத்தாலிக்கு திசை திருப்பப்பட்டுள்ள கொரோனா சுழலிற்கு அமெரிக்காவின் பொருளாதார போட்டி காரணமாகுமோ என்ற ஐயப்பாடும் உருவாகுகின்றது.

மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுடன் பகைமை பாராட்டும் ஈரானும் கொரோனாவின் தாக்கத்தில் முன்னணியில் உள்ளது. அதிலும் ஈரான் பாரளுமன்ற உறுப்பினர்களை கொரோணா அதிகளவில் தாக்கியுள்ளது. 23 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதுடன் இருவர் இறந்துள்ளார். மேலும் ஈரானின் சுப்ரீம் லீடர் அலிகாமினியின் ஆலோசகர் 78 வயதான அயதுல்லா ஹஷேம் பதாயிகோல்பாயேகனியும் கொரோனாவைரஸ் பரவுகையால் இறந்துள்ளார். ஈரானின் ஒரு முன்னணி பழமைவாத சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினருமான ஹெஷ்மதுல்லா பலாஹத்பிஷேயும் அமெரிக்காவுக்கு எதிரான சதிக்கோட்பாட்டை முன்வைத்துள்ளார். “டிரம்பும் பாம்பியோவும் கொரோனாவைப் பற்றிபொய் சொல்கிறார்கள். இது ஒரு சாதாரண நோய் அல்ல. இது ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான ஒரு உயிர் பயங்கரவாத தாக்குதல்" என்று அவர் கூறினார். நடைமுறைகள் சதிக்கோட்பாடுகள் உண்மையாய் இருக்குமோ என்பதையே உறுதி செய்கின்றது.

மேற்கு ஊடகங்களும் அமெரிக்க அரசியல் தலைமைகளும் கொரோனாவைரஸை சீனாவை சாடி சீனவைரஸ் அல்லது வூஹான் வைரஸ் என மீளமீள செய்தியிடுவது கொரோனா சீனாவில் உருவாக்கம் பெற்றது தான் என்பதை வலிய உறுதிப்படுத்த அமெரிக்க முயல்வதனையே உறுதி செய்கின்றது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளப்பதிவொன்றில் சீனவைரஸ் எனபதிவிட்டுள்ளார். மேலும் குடியரசுக் கட்சியின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, மக்கள் பிரதிநிதிகள் சபை சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் பால் கோசர் போன்றோரும் வைரஸை வூஹான் வைரஸ் மற்றும் சீனவைரஸ் எனக்குறிப்பிட்டுள்ளனர். எவ்வகையில் உருவாகியது என உறுதிப்படுத்தப்படாத போதிலும் சீனாவில் பரவிய கொரோனாவை வலிந்து சீனவைரஸாக உறுதிசெய்யும் அமெரிக்க முயற்சி எதனையோ இலாபகரமாய் மறைக்கமுயல்கிறதா? என்ற ஐயப்பாட்டையே மேலும் மேலும் வலுப்படுத்துகின்றது.

எதுஎவ்வாறாயினும் கண்ணுக்கு உறுதியான சாட்சியங்களாய் புலப்படாத வகையில் சதிக்கோட்பாடுகள் குறித்த தரப்பின் கருத்தாகவே தோன்றி மறைந்து விடுகின்றது. COVID-19 ஒரு தொற்று நோயாக வளர்ந்து வருவதால், ஒருவருக்கொருவர் எதிரான குற்றச்சாட்டுகளையும் தாக்குதல்களையும் சமன் செய்வதற்குப் பதிலாக உலகம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அதுவே ஆக்கபூர்வமானதாகும். அவதானிப்பாளர்கள் சத்தமின்றி நிகழும் உயிரியல் மற்றும் இலத்திரனியல் யுத்தங்களை கட்டுரைகளுடன் மட்டுப்படுத்தி கடந்து செல்வதே எதிர்காலம். எனிலும் வல்லரசு போட்டிக்குள் இலங்கை போன்ற சிறுநாடுகள் சிக்குண்டு அழிவதும் தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது. எனிலும் பரவுகையை தவிர்க்கும் வகையில் தனித்து வாழுதல் மூலம் இயன்றளவு கொரோனாவையும் கட்டுப்படுத்தலாம். அதேவேளை எதிர்கால வல்லரசு போட்டிகளில் ஏற்படும் பாதிப்பினையும் கட்டுப்படுத்தலாம்.



Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-