ஆதரிப்போரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; அமைதியை கொண்டு வருமா சிரியாவில்? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியலில் அதிகாரத்தை மையப்படுத்தி பூகோள அரசியல் கையாள்கையும் அதுவழி போர்களும் முடிவின்றி தொடர்வனவாகவே உள்ளது. அவ்வாறானதொரு பூகோள அரசியல் போட்டியின் விளைவுகளில் ஒன்றே சமீபகாலத்தில் உக்கிரமடைந்துள்ள சிரியா உள்ளக போரும் இரு தரப்பிற்குமான சர்வதேச நாடுகளின் ஆதரவு நிலைப்பாடுகளும். சிரியாவின் உள்ளக போருக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த 6ஆம் திகதி ரஷ்யா மற்றும் துருக்கி அரச தலைவர்களுக்கிடையிலே நடைபெற்ற கலந்துரையாடலின் நிறைவில் சிரிய உள்ளக மோதலை மையப்படுத்தி ரஷ்யா – துருக்கி நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனிலும் குறித்த ஒப்பந்தத்தின் வலு தொடர்பிலே அரசியல் பார்வையாளர்களிடம் பல ஐயப்பாட்டுடனான கேள்விகளே தொடர்கின்றது. அதனை மையப்படுத்தியே குறித்த கட்டுரையானது சிரியாவின் உள்ளக போரையும் அதுசார் ரஷ்யா – துருக்கிக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வலுவையும் விளக்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் உள்ளக போர் வரலாறு ஓர் தசாப்தத்தினை தொடுகிறது. 2000ஆம் ஆண்டில் ஹபீஸிற்கு பின்னர் ஆட்சிப்பீடமேறிய அவரது மகனான அல்-அசாத்தினுடைய ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வேலையின்மை, ஊழல் அரசியல் சுதந்திரமின்மை போன்ற காரணிகளை மையப்படுத்தி 2011ஆம் ஆண்டில் அல்-அசாத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான அமைதியின்மை கிளர்ச்சிபடைகளை உருவாக்கி உள்நாட்டு போராக பரிணமித்துள்ளது. சிரியா உள்ளக போரில் சர்வதேச நாடுகளின் அதிகார போட்டியை அடிப்படையாய் கொண்ட தலையீடும் ஆரம்பமாகியது. அரசின் ஆதரவு படை மற்றும் எதிரான படைகளுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துமைப்பு கிடைக்கப்பெறலாயிற்று. ரஷ்யா அல்-அசாத்தினுடைய அரசுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா அசாத் தான் அனைத்து அத்துமீறலுக்கும் காரணம் என கூறி அரசுக்கு எதிரான படைகளுக்கு ஆதரவை அளித்தது. சர்வதேச நாடுகளின் தலையீடுடன், சிரிய போரானனது உள்ளக போர் வடிவில் பூகோள அதிகார போராக பரிணமித்தது.
சிரியா போரில் துருக்கியின் தலையீடு அமெரிக்க சார்புடையதாகவே ஆரம்பமாகியது. எனிலும் துருக்கி ரஷ்யாவிடமிருந்து ‘எஸ்400’ரக எவுகணைகளை வாங்க தொடங்கியதிலிருந்து துருக்கி மற்றும் அமெரிக்க உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் துருக்கியின் தனியான பாதையில் சிரிய அரசு எதிர்ப்பை தொடர்ந்தது. எனினும் தற்போது சிரியாவின் குர்து மக்கள் மீதான துருக்கியின் தாக்குதல்களுக்கு பின்னால் பாரமுகமான அமெரிக்க ஆதரவு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு சிரிய உள்ளகப்போர் தொடர்பில் ரஷ்யா, இரான் மற்றும் துருக்கிக்கு இடையே அஸ்தானாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிரியாவில் நான்கு விரிவாக்க இடங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. சமீப கால உக்கிரப் போர்கள் குறித்த விரிவாக்க தளங்களிலேயே இடம்பெறுகின்றது.
2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிரியாவை மையப்படுத்தி நிகழ்ந்த சிரியாவிலிருந்தான அமெரிக்காவின் வெளியேற்றம், அமெரிக்க சார்பு நிலையிலிருந்த குர்துக்களை அமெரிக்க கைவிட்ட நிலையில் சிரியா எல்லையில் உள்ள குர்துக்கள் மீதான துருக்கியின் தாக்குதல், அதன் தொடர்ச்சியாய் அசாத் அரசுக்கு எதிராக இருந்த குர்துக்கள் துருக்கிக்கு எதிராக போராட அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு மாறினர். என்பவற்றின் பின்னணியிலேயே சிரியா போரின் உக்கிரதன்மையும் ஆரம்பித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த சிரிய பிரதேசங்களை ரஷ்யாவின் ஆதரவுடன் அரசு படைகள் துடைத்து எறிந்து விட்டன. மீதமுள்ள பிரதேசமாக சிரியாவின்; இட்லிப் மாகாணத்தின் வடமேற்கு பகுதியே காணப்படுகின்றது. துருக்கியின் 12 விரிவாக்க தளங்கள் குறித்த பிரதேசத்திலேயே காணப்படுகின்றது. சிரிய உள்ளக போர் வடிவில் சிரியாவின் ஆதரவு நிலைப்பாட்டில் ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாய் துருக்கியும் போர்க்களத்தில் உள்ளன. இட்லிப் மாகாணத்தின் வழியேயே சிரிய போரினால் மக்கள் அகதிகளாக துருக்கிக்கு தஞ்சம் புகுந்தனர். மேலும் 1.2மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சிரியாவின் வேறு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்கின்றனர்.
சிரியாவில் நடைபெறும் யுத்தத்தின் மூலம் குழந்தைகள், பெண்கள் என தினசரி பல மக்கள் சாகடிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தீர்க்க ஐ.நா தலையிட்டும் சுமுகமான தீர்வினை பெற முடியவில்லை. இந்நிலையிலேயே சிரிய உள்ளகப்போரை மையப்படுத்தி ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ரஷ்ய அதிபர் புடினுக்குமிடையிலே 6 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் போர்நிறுத்தத்தை புடினும் ஏர்டோகனும் அறிவித்திருந்தனர்.
ரஸ்யாவும் துருக்கியும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதான உள்ளடக்கமாய், துருக்கி மற்றும் ரஷ்யாவும் சர்ச்சைக்குரிய இட்லிப்பில் ஒரு முக்கிய கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையான எம்4/5 நெடுஞ்சாலையின் இருபுறமும் 6கி.மீ தூரத்தில் ஒரு பாதுகாப்பான நடைபாதையை நிறுவவும், மார்ச் 15 ஆம் தேதி வரை கூட்டு ரோந்துப் பணிகளை நடத்தவும் ஒப்புக்கொண்டன. இது ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பாகும்.
குறித்த போர்நிறுத்தத்தின் வலு தொடர்பிலே பிரதானமாக மூன்று கேள்விகள் ஊடாக சர்வதேச அரசியல் அவதானிப்பாளர்களிடம் ஐயப்பாடு காணப்படுகின்றது.
பிரதானமானது, சிரிய உள்ளக போரின் பிரதான தரப்புகளான சிரிய அரசு ஆதரவு படை மற்றும் எதிர்ப்படைகள் அற்றதொரு யுத்த நிறுத்த பேச்சுவார்த்தை எவ்வகையில் வலுப்பெறும்? ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சிரிய போரின் தரப்புகளின் ஆதரவாய் களமிறங்கியுள்ள நாடுகளாயிளும் நேரடியாய் போரில் ஈடுபடும் தரப்புக்களின் விருப்பு வெறுப்பு வேறுபட்டதாக காணப்படும். அதனைப் பொருட்படுத்தாது சார்பு நிலை தேசங்கள் மேற்கொள்ளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது ஓர் எழுத்துரு கோவையாகவே காணப்படும். மாறாய் சிரிய மக்களுக்கு வரமளிக்க கூடிய தீர்வாய் அமைய போவதில்லை.
இரண்டாவது குறித்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் துருக்கியின் கோரிக்கையில் ரஷ்யாவில் இடம்பெற்றாலும், துருக்கி முழு விருப்புடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவில்லையோ என்பதை போர் நிறுத்தத்திற்கு பின்னரான துருக்கி அதிபரின் ஊடக கருத்துக்களிலிருந்து ஐயத்தை ஏற்படுத்துகின்றது. “மிகச்சிறிய தாக்குதலை எதிர்கொள்வதில், நாங்கள் பதிலடி கொடுப்போம், ஆனால் நாங்கள் மிகவும் கடுமையாக பதிலளிப்போம்" என்று புதன்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவில் ஒரு உரையில் எர்டோகன் கூறினார். இப்பேச்சானது போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையான விருப்பம் இல்லை என்பதையே உறுதி செய்கின்றது.
மூன்றாவது குறித்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது போரின் தந்திரோபாய பின்வாங்கலாகவே காணப்படுகின்றது. இத்தந்திரோபாய பின்வாங்கல் எவ்வகையில் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும்? துருக்கி பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றமையால் ஒரு பின்வாங்கல் உத்தியையே மேற்கொள்ள ரஷ்யாவிடம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கோரியிருந்தது. மறுபுறம் ரஷ்யாவிற்கும் அத்தேவைப்பாடு இருந்துள்ளது. இதனை நேட்டோ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி, “ஒரு நேரடி மோதலில், துருக்கியின் வான் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை உடைக்க ரஷ்யா தனது விமான சக்தி மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தலாம். ஆனால் இட்லிப் மீதான மோதலில் நினைத்துப் பார்க்க முடியாத செலவில் துருக்கியை கட்டுப்படுத்த முடியாது என்று தெரியும். ரஷ்யா அவர்கள் விரும்பும் அளவுக்கு சிரியாவிலிருந்து வெளியேறியது. ஆனால் புடினும் அசாத்தும் துருக்கியை இட்லிப்பிலிருந்து வெளியேற்ற முடியாது என்பதை அவர்கள் வலுப்படுத்தினர். எனவே இது இப்போது ஒப்பந்தங்களுக்கும் விவாதங்களுக்கும் திரும்பியுள்ளது." எனக் கூறியுள்ளார். இரண்டு தரப்பினருக்கும் யுத்தத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் தேவைப்பட்டதுவே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த காரணமாகியுள்ளது. இது நீண்ட அமைதியை தராது.
சிரிய உள்ளக போரை மையப்படுத்திய ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, தினசரி கொத்தாய் சாகும் சிரிய மக்களுக்கு ஒரு பேச்சளவிலாவது மனநிறைவை அளிக்க கூடியதாக காணப்படும். மாறாக அது முழுமையான அமைதியை சிரிய மக்களுக்கு வழங்க போவதில்லை. நவகாலணித்துவம் மற்றும் பூகோள அரசியல் போட்டியை நீக்கி நேரடி சிரிய உள்ளகப்போரின் தரப்பினரான அரசு படையும், அரசுக்கு எதிரான கிளர்ச்சி படைகளும் நேரடியாய் பேச்சுவார்த்தை நடத்துவதனூடாவே தீர்வுக்காக நகர முடியும். மறுதலையாய் நவகாலணித்துவம் மற்றும் பூகோள அரசியல் போட்டி தொடரும் வரை சிரியாவில் இறக்கும் குழந்தைகளினதும் பெண்களினதும் எண்ணிக்கையை குறைக்க முடியாது. நவகாலணித்துவ மற்றும் வல்லாதிக்க போட்டி நாடுகளின் சுயரூபத்தை அண்மைய வரலாற்றில், குர்து மக்களை பயன்படுத்தி விட்டு அமெரிக்க தூக்கி எறிந்த வரலாற்றிலிருந்து பாடம் கற்கா விடில் சிரியாவை கடவுள் தான் காக்க வேண்டும் என கூறி கடந்து செல்ல வேண்டியது தான்.
Comments
Post a Comment