சவால்கள் நிறைந்த அமெரிக்க-தலிபான் ஒப்பந்தம் யாருக்கானது? -ஐ.வி.மகாசேனன்-


நீண்டகாலமான போர்வாடை வீசப்பட்ட ஆப்கானிஸ்தான் தளத்தில் கடந்த வாரத்தில் அமைதிக்கான சமிக்ஞைகளும் பேசப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகு, அமெரிக்காவும் தலிபானும் கடந்த பெப்ரவரி 29அன்று ஒரு உடன்பாட்டை எட்டினர். தலிபான்களின் நீண்டகால கோரிக்கையான ஆப்கான் மண்ணிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறுதல் என்பதுடன், ஆப்கான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறாது என்பதற்கான தலிபான்களின் உத்தரவாதம். என்பவற்றை மையப்படுத்தி குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அயினும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாட்களுள்ளேயே ஆப்கான் இராணுவ தளங்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதோடு அதற்கு பதிலீடாக அமெரிக்க தலிபான் நிலைகளில் வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமெரிக்க-தலிபான் ஒப்பந்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த கட்டுரையானது அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தம் உருவாக்க பின்னணியையும் ஓப்பந்தத்தின் ஈடேற்றத்தில் உள்ள சவால்களையும் விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.


செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா அல்கொய்தாவை அழிக்க பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடுத்தது. 1996 முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த இஸ்லாமிய அடிப்படைவாத குழுவான தலிபான், அல்-கொய்தாவுக்கு அடைக்கலம் அளித்தது. மற்றும் பயங்கரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க மறுத்துவிட்டது. அதன்மூலம் அல்கொய்தாவவுக்கு எதிரான போர் தலிபான்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் போராக உருமாறியது. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இழந்தனர்.  அமெரிக்க படையினரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்தது. போர் என்பது ஆப்கானிஸ்தானின் இயல்பாக மாறியது. இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் அமைதியை நிறுவ அமெரிக்க-தலிபான் ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.

அமெரிக்க-தலிபான் ஒப்பந்த உருவாக்கத்தின் பின்னணியை அறிவதாயின்இ அமெரிக்காவின் சமகால இராஜதந்திர நகர்வுகளை தெளிவாக அறிந்திருக்க வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வாய் காணப்படுகின்றது. எனிலும் அவ்வெளியேற்றத்தினை கௌரவத்துடன் நிகழ்த்தவே குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வெளியேறுவதற்கான அடிப்படையை நான்கு காரணங்கள் ஊடாக அவதானிக்கலாம்.

முதலாவது, அமெரிக்க இராணுவ இழப்பை தவிர்த்தல். சமீபகாலமாக அமெரிக்காவிற்கு வெளியேயான போர்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் இறப்பு அதிகரித்து வருவது அமெரிக்க மக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அமெரிக்க பெருமளவில் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள இராணுவ படைகளை குறைத்து வருகின்றது. அதனடிப்படையிலேயே கடந்த ஆண்டு சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறப்போவதாக அறிவித்திருந்தது. அவ்வாறானதொரு சூழலியே ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்க படைகளை வெளியேற்ற அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இரண்டாவது, தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலப்பகுதியில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அழித்ததன் பின்னர் அமெரிக்க ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்படியாக இராணுவத்தினை குறைத்து வந்தது. 2010ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தை தொட்டிருந்த ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையானது 2017ஆம் ஆண்டு ஏறத்தாழ 8000பேரே இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அமெரிக்க படையினர் குறைக்கப்பட்ட பிறகு தலிபான்களின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதுடன் தலிபான்களின் எல்லைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதனால் தற்போதைய சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 3000 இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி இருந்தார். எனிலும் தலிபான்களால் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தானில் இழப்பு அதிகரிக்கப்பட்டே வருகிறது. மீள வியட்நாம் வரலாறு அமெரிக்காவிற்கு திரும்புவதை விரும்பாத அமெரிக்க ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளது.

மூன்றாவது, ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான முரண்பாடுகள் அதிகரிக்கின்றமை ஆகும்.  அமெரிக்கா ஈரானுடன் ஏற்கனவே உரசி கொண்டிருந்த போதிலும் வருட ஆரம்பத்தில் ஈரான் இராணுவ தளபதியினை கொலை செய்ததன் மூலம் பகைமைய அதிகரித்துள்ளது. மேலும் துருக்கி ரஷ்யாவிடமிருந்து ‘எஸ்400’ரக எவுகணைகளை வாங்க தொடங்கியதிலிருந்து துருக்கி-அமெரிக்க உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிராந்தியத்தில் பாதுகாப்பில்லாத சூழலில் தொடர்ச்சியாக அமெரிக்க இராணுவபடை ஆப்கானிஸ்தானில் இருப்பது ஆபத்து என்ற சூழலில் இராஜதந்திரமாக அமெரிக்க வெளியேறுகிறது.

நான்காவது, நவம்பர் நடைபெற உள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற தீர்மானித்ததில் செல்வாக்கு செலுத்தி உள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் போட்டியிடுககையில் அமெரிக்காவின் “முடிவற்ற போர்கள்” என்று அழைப்பதை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார். மீள இவ்வருடம் நடைபெற உள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த ஆப்கானிஸ்தான் களத்தை பயன்படுத்தி உள்ளார்.

மேற்குறித்த பின்னணியில் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தானை விட்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. ஆயினும் அது இலகுவானதல்ல என்பதையும் அமெரிக்க புரிந்து கொள்ளும். அதனாலேயே இராஜதந்திர நகர்வாய் அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தை கையாண்டுள்ளனர். எனிலும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அமெரிக்க இருந்துள்ளதே தவிர ஈடேற்றத்தினை கருத்திற்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. 



ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து இஸ்லாமிய அடிப்படைவாத குழுவாகிய தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடரும் என ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான்களும் கையெழுத்திட்டுள்ளனர். எனிலும் இந்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஒரு ஆபத்தான தொடக்கத்தில் உள்ளது. அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தில் ஆயிரம் ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கு ஈடாக ஐந்தாயிரம் வரை தலிபான் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டனஇ ஆனால் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அத்தகைய இடமாற்றத்திற்கு உறுதியளிக்கவில்லை என்று கூறி வருகின்றது. ஆப்கான் சனாதிபதியின் விடுதலை மறுப்பை அடுத்து தலிபான்கள் ஒருவாரத்திற்கு மேலாக நீடித்த அமைதியை முடிவுக்கு கொண்டு வந்து ஆப்கான் அரசு மற்றும் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இது பேச்சுவார்த்தையை முடக்குவதாக காணப்படுகின்றது.

சமாதான முன்னெடுப்புகள் பெரும்பான்மையான ஆப்கானியர்களால் ஆதரிக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தானுக்குள்ளான பேச்சுவார்த்தைகளின் போது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாதவையாக உள்ளன. அவற்றில் அதிகாரத்தைப் பகிர்வது, தலிபான்களை நிராயுதபாணியாக்குவது, தலிபான் போராளிகளை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் மற்றும் நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தல் மற்றும் அரசியலமைப்பு மாற்றம் என்பன சர்ச்சைக்குரியதாக காணப்படுகின்றது. எனெனில் தலிபான்களை பொறுத்தவரை  சனநாயகத்தை நம்புவதில்லை, பெண்களின் சுதந்திரத்தை கூட மதிப்பதில்லை, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை எதுவுமே இல்லாதவர்கள். கடந்த 2ஆம் திகதி வெளிநாட்டு படையினரை தாக்க வேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவை அமெரிக்க போட்டிருந்தது. உத்தரவு வந்து ஒரு மணி நேரத்திற்குள் தெற்கு ஆப்கானிஸ்தானில் கால்பந்து போட்டி ஒன்றின் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்த குண்டு ஒன்று வெடித்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவ்அமைப்பிடம் சனாநாயக விழுமியம் தழுவி ஒப்பந்தம் மூலம் அமைதி ஏற்படுத்துவது புதிரானதே. 

மேலும் ஆப்கானிஸ்தானின் அரசியலும் குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதி தேர்தல் பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட 9 மில்லியன் வாக்காளர்களில் 1.8 மில்லியன் பேர் மட்டுமே வாக்களித்தனர். வாக்குச் சாவடிகள் தாக்கப்பட்டன, பல மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோதும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா அதனை ஏற்க மறுத்துள்ளார். தனது சொந்த அரசாங்கத்தை அமைக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான  பலவீனமான மத்திய அரசாங்கத்தால் அமெரிக்க-தலிபான் ஒப்பந்த செயல்முறையை தொடர்வது சிக்கலானதாகலே காணப்படும்.

அதே நேரத்தில், கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இருந்ததை விட இப்போது தலிபான் வலுவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அறுபதாயிரம் போராளிகளுடன்இ நாடு முழுவதும் பல மாவட்டங்களை கட்டுப்படுத்துகின்றது. காபூல் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தளங்கள் உட்பட பெரிய தாக்குதல்களைத் தொடர்கிறது. மேலும் ஓபியம் பாப்பி சாகுபடி மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறது. இது சமாதான முன்னெடுப்புகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சில ஆய்வாளர்கள் தலிபான் போராளிகள் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்றும் கவலைப்படுகிறார்கள்.

முழுமையாக அமெரிக்க-தலிபான் ஒப்பந்த பின்னணி மற்றும் சவால்களை தொகுத்து நோக்குகையில், அமெரிக்காவின் வெளியேற்றம் கௌரவமாக இடம்பெறுவதை மையப்படுத்தியே இடம்பெற்றுள்ளதே தவிர ஆப்கானிஸ்தானின் அமைதி கணிக்கப்படவில்லை என்பதுவே நிரூபணமாகின்றது. ஆயினும் ஏதோ ஓர் வகையில் அழையா விருந்தாளி வெளியேறுவது ஆப்கானிஸ்தானின் சூழலை மாற்ற ஏதுவாக அமையலாம்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-