கொரோனா வைரஸை வடக்கு மக்களால் எதிர்கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப்போரின் வடுக்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத சூழலில் இன்னுமோர் போர்க்கால சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது வடமாகாண தமிழ் சமூகம். உலகையை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தொற்று இலங்கையினையும் பெரும் உலுக்கு உலுக்கி வருகின்றது. இலங்கையில் 100இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 22ஆம் திகதி இலங்கையின் வடபுலத்தே யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து மாவட்டங்களுக்கிடையிலான நகர்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளது. எனிலும் தமிழ் சமூகம் கொரோனா பற்றிய போதிய விழிப்புணர்வினையோ, நிலைமையின் முழுமையான வீரியத்தையோ உணராத சமூகமாகவே காணப்படுகின்றார்கள் என்பது துயரமான பதிவாக உள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை தமிழ் சமூகத்தின் பார்வையிலான கொரோனாவினை விபரிப்பதோடு ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களையும் விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பற்றிய செய்திகள் பரவுகையில் யாழ்ப்பாண மக்களின் முதல் செயற்பாடாய் பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க உணவுப் பொருட்கள் மற்றும் பெற்றோலிய பொருட்களின் விற்பனை நிலையங்களில் பெருந்திரளானார்கள். இது பலராலும் நகைச்சுவையாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது. அயினும் இதன் பின்னுள்ள யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் உளவியல் பிரச்சினையை ஆராயவோ அதனை தீர்க்கவோ யாரும் முன்வரவில்லை. இலங்கையில் யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளவியலை ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய பாதிப்புக்கள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடுநோய் 13 வீதமாகவும், பதகளிப்பு நோய் 48.5 வீதமாகவும், மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே ஈரானின் இராணுவ தளபதி அமெரிக்காவால் கொலை செய்யப்பட்ட போதோ, கொரோனா பற்றிய செய்திகள் பரவுகையிலேயோ யாழ்ப்பாண மக்கள் எரிபொருளுக்காயும் உணவுப் பொருளுக்காயும் திரள காரணமாகியது. கடந்த 10ஆண்டுகளில் யுத்தத்துக்கு பின்னரான சமூகத்திற்கான சரியான உளவள ஆற்றுகை அளிக்காதது எம் தலைமைகளினது தவறே ஆகும். எனிலும் கொரோனா என்பது எமது உயிரை காவு கொல்லும் ஓர் வைரஸ் நோய் என்ற ரீதியில் அதுதொடர்பான நிலைமையை புரிந்து செயற்பட வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகிறது.

கடந்த ஞாயிறு வரை நாம் கொரோனா வைரஸ் தொற்றை பார்வையாளர்களாகவே பார்த்து வந்தோம். அதில் அது தொடர்பான விழிப்புணர்வை பெறாவிடில் பெரும் அழிவில்லை. எனிலும் கடந்த ஞாயிறு எம்முள்ளும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாம் அதன் நிலையை முழுமையாய் புரியாவிடில் மீண்டுமோர் முள்ளிவாய்க்கால் அவலம் தவிர்க்க முடியாதது என்பதே யதார்த்தம்.

சுவிஸிலிருந்து கடந்த 10ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் இலங்கை வந்திருந்த மதப்போதகர் ஒருவர் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆராதனை நடத்தி விட்டு சுவிஸ் திரும்பியுள்ளார். சுவிஸ் திரும்பியதும் மதப்போதகர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அவருடன் தனிமையில் உரையாடிய கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி காரணமாய் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டது. குறித்த நோயாளி உடனடியாக IDH தொற்று  நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் 15ஆம் திகதி சுவிஸ் மதப்போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை வடமாகாண சுகாதார பணியகம் மற்றும் யாழ் சுகாதார பணியகம் என்பன மேற்கொண்டுள்ளன. மேலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரின் தாவடி பிரதேசம் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கண்காணிக்கப்படகின்றது. 02.02.2020 தொடக்கம் 23.03.2020 வரையான காலப் பகுதியில் வடமாகாணத்தில் 21பேர் சந்தேகத்தில் பேரில் பரிசோதிக்கப்பட்டு 15பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். 5 பேர் இன்னும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கொரோனா தொற்று உள்ளவராக இனங்காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்று அடையாளங் காணப்பட்டுள்ளமை என்பது வடமாகணத்திற்கு ஓர் அபயாகரமான செய்தியே ஆகும். இலங்கையில் இதுவரை தொற்றுக்கு உள்ளான வெளிநாட்டு நபர்களிடமிருந்தே உள்ளூர்வாசிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுகையின் மூலம் இலகுவாக கண்டறியக்கூடியதாக இருப்பதுடன், வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதும் இலகுவாகின்றது. மாறாக வைரஸ் தொற்று சமூக பரவுநிலை அடையுமாயின் தடுப்பது இயலாத காரியமாகின்றது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் சமூக பரவுநிலை ஏற்பட்டமையே அழிவின் அதிகரிப்புக்கு காரணமாகியது. யாழ்ப்பாணத்திலும் ஆராதனையில் பங்குபற்றியவர்கள், போதருடன் தொடர்புடையவர்கள் மற்றும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபருடன் அண்மையில் சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தவோ அல்லது தாமாக அடையாளப்படுத்தி பரிசோதனைக்கு ஒத்துழைக்கவோ தவறின் யாழ்ப்பாணத்தில் சமூக பரவுநிலை ஏற்படுவதனையும் அதனால் ஏற்படக்கூடிய அழிவினையும் தவிர்க்க முடியாது போய்விடும். மருத்துவர்கள் சங்கம், அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என விடப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி அதனையே உறுதிசெய்கின்றது. அத்துடள் வடமாகாணத்தில் நோயாளிகளின் அளவு அதிகரிக்கப்படுமாயின் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதிகள் வடமாகாணத்தில் காணப்படுகின்றதா என்பதும் பெரும் கேள்விக்குரிய விடயம் என்பதை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

மேல்மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவுகையை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை சனாதிபதி செயலகத்தினால் மேல்மாகாணம் அபாயகரமான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு மீள்அறிவிப்பு வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண மக்கள் கொரோனா பற்றிய விழிப்பினையும் நிலைமை புரிதலும் ஏற்படாவிடின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா எச்சரித்ததை போன்றே யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கை தொடர்ந்து முடக்குவதே தீர்வாகும். வடமாகாணத்தில் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த அடிப்படையில் பிரதானமாக மூன்று விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

பிரதானமாக வடக்கு மக்களின் உணவுப்பொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு நெரிசலற்ற வகையில் உபாயம் காணப்பட வேண்டும். போர்க்கால ஊரடங்கில் உணவுப்பொருள் தேவையில் சிரமப்பட்ட அனுபவமுடைய வடக்கு மக்கள், கொரோனாவின் பரவுகையை தடுப்பதற்காக மக்களுக்கான இடைவெளியை உறுதிப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்படுகையில் உணவுப் பொருட்களுக்காக சந்தை மற்றும் கடைகளில் சனத்திரட்சியாகி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் தேவையை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதற்கான சரியான உபாயத்தை திட்டமிட வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக ஊடரங்கு நேரத்தில் கிராமசேவையாளர்கள் பொறுப்பெடுத்து பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினூடாக சுழற்சி முறையில் மக்களை அழைத்து பொருட்களை விநியோகிக்கலாம். இதனை காரைநகர் பிரதேசத்தில் ஓர் கிரமசேவையாளர் முன்மாதிரியாக செயற்படுத்தி காட்டியுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்வு காலத்தில் சந்தை சேவையை பரவலடைய செய்யலாம். ஓர் இடத்தில் சந்தை காணப்படுகையிலேயே அங்கு மக்கள் திரட்சி அதிகரிக்கப்படுகின்றது. மாறாக சந்தை சேவையை பரவலடைய செய்கையில் மக்கள் திரட்சியை குறைக்கலாம்.



இரண்டாவது அடித்தட்டு மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தியை கொண்டு செல்ல வழிவகை செய்தல். அடித்தட்டு மக்களுக்கே பிரதானமாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு சரியாக சென்று சேரவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை வடமாகாணத்தில் ஊடரங்கு தளர்த்தப்பட்ட போது கிராமங்களில் மற்றும் சந்தைகளில் மக்கள் சனநெரிசலுடன் காணப்பட்டதுடன், நகரங்களில் மற்றும் சொகுசு பல்பொருள் அங்காடிகளில் மக்கள் சீரான வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றார்கள். இக்காட்சி அடித்தட்டு கிராம மக்களுக்கு அவர்களுக்கு புரியும் வகையிலே கொரோனா பற்றிய விழிப்புணர்வு வழங்கப்படவில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதனை உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கவணத்தில் கொள்ள வேண்டும். வடமாகாண அச்சு ஊடகங்கள் தினசரி மின்னிதழாக ஸ்மாட் போன் பாவனையாளர்களின் பார்வைக்கே செல்கின்றது. சமூக வலைத்தளசார் விழிப்புணர்வுகளும் அதே தரப்பிற்கே மீளமீள செல்கின்றது. அடிமட்ட மக்களுக்கு செய்தியை கொரோனா சார்ந்த விழிப்புணர்வுகளாயினும் கொண்டு செல்ல ஊடகம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தவற விட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அதனை சீர்செய்வது வடமாகாணத்தின் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவதில் அவசியமாகின்றது. பயனாளிகளின் தன்மை உணர்ந்தே அவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொள்வதும் அவசியமாகின்றது.



மூன்றாவது வடமாகாணத்தில் காவல்துறையினரின் செயற்பாட்டில் உயிரோட்டம் காணப்பட வேண்டும். இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி அடையாளங் காணப்பட்டதிலிருந்தே, இலங்கையில் சகல பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் விபரங்களை தொகுக்குமாறு காவல்துறைக்கு பணிக்கப்பட்டிருந்து. யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவுகைக்கு காரணமான போதகர் சுவிஸிலிருந்து கடந்த 10ஆம் திகதி வந்ததிலிந்து காச்சலோடு காணப்படுகையில் காவல்துறையினர் அதனை பொருட்படுத்தாமல் விட்டது அவர்களின் அசண்டை தனத்தையே வெளிப்படுத்துகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர், “சுவிஸிலிருந்து வந்த மதபோதகர் பதிவுகளை மேற்கொள்ளாது எப்படி தப்பித்தார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், “சுவிஸிலிருந்து வந்த மதபோதகரை பாதுகாத்தது பொலிஸாரே!” என அளித்த பதில் காவல்துறையின் அசன்டையை உறுதி செய்கின்றது. எனிலும் இவ்வாறான அனர்த்த காலங்களில் காவல்துறையின் செயற்பாடு உயிரோட்டமானதாக அமைய வேண்டும். இதனை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்.

எது எவ்வாறாயினும் கொரோனாவின் பரவுகை வடமாகாணத்தில் அதிகரிக்குமாயின் அதனால் ஏற்படப்போகும் இழப்புக்களை சந்திக்கப்போவது ஒட்டுமொத்த தமிழ் சமூகமே ஆகும். இனியும் அரசியல்வாதிகள் தான் செய்யனும் அவர்கள் இது செய்தது பிழை அது செய்தது பிழை என தனியாக விமர்சித்து கொண்டே இருப்பதில் பயனில்லை. இளைஞர்கள் பலர் முன்வந்துள்ளனர். இன்னும் பல இளைஞர்கள் சமூக பொறுப்புணர்ந்து முன்வந்து, சமூக கட்டமைப்பின் நிலைகளை உணர்ந்து அவர்கள் விளங்கி கொள்ள கூடிய வகையில் தமிழ் சமூகத்துக்கான கொரோனா சார்ந்த விழிப்புணர்வை அளித்து இன்னுமோர் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெறாது தடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். இளைஞர்களுக்கான ஒத்துழைப்புக்களை ஊடகங்களும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் வழங்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-