ஐ.நா. 75வது பொதுச்சபை விவாதங்கள்; இருதுருவ உலக ஒழுங்குக்கு வித்திடுமா? -ஐ.வி.மகாசேனன்-
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் இலக்கு 75 ஆண்டுகளாகியும் அடையப்படவில்லை என்பதையே, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட காணொளி பேச்சு தெளிவாக புலப்படுத்துகிறது. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆதங்க உரையும் 75ஆம் ஆண்டுக்கான சிறப்புரையாக அமையவில்லை என்ற விமர்சனமே மேலோங்கி காணப்படுகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை ஐ.நா.வின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெற்ற அரச தலைவர்களின் உரையை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் அழிவு முதலாம் உலகப்போரின் முடிவில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின் தோல்வியை வெளிப்படுத்தி நின்றது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் பேரழிவின் பின்னர் மீள ஓர் போர் மூண்டு விடக்கூடாது என்பதை உலகம் இலக்காக்கியது. அவ்இலக்கை நிறைவேற்றுவதற்காக கட்டமைக்கப்பட்ட நிறுவனமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமாகும்.
1945ஆம் ஆண்டில், 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைப்பு தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை வரைந்தனர். இந்த சாசனம் 26 ஜூன் 1945 அன்று 50 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. மாநாட்டில் குறிப்பிடப்படாத போலந்து, பின்னர் அதில் கையெழுத்திட்டு அசல் 51 உறுப்பு நாடுகளில் ஒன்றாக மாறியது. பெரும்பான்மையான கையெழுத்திட்டவர்களால் இந்த சாசனம் அங்கீகரிக்கப்பட்டபோது, அக்டோபர் 24, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
2020ஆம் ஆண்டு, இந்நடப்பு ஆண்டில் ஐ.நா. தனது 75ஆம் ஆண்டை கொண்டாடுகிற போதிலும், 75 ஆண்டுகளில் உருவாக்க இலக்கை பூர்த்தி செய்துள்ளதா? என்ற கேள்விக்கு பதில், வினாக்குறியுடனேயே தொடர்கிறது. உலகம் பெரும்போரை ஒத்தி வைத்துக்கொண்டு செல்கின்ற போதிலும் ஐ.நா.வின் ஆதரவாலும், மௌணத்தாலும் பல நாடுகளில் போர்க்காற்று வீசவே செய்துள்ளது. வீசிக்கொண்டே தான் இருக்கிறது. அதிலும் 75ஆம் ஆண்டில் பெரும்போருக்கான அறிகுறிகள் புலப்படுவதாகவே ஐ.நா. கூட்டத்தொடரில் அரச தலைவர்களின் உரையாடல் அமையப்பெற்றுள்ளது.
சமகாலத்தில் உலகை உலுக்கும் கொடிய கொரோனா வைரஸ் பேரழிவால், ஐ.நா. கூட்டத்தொடரின் வடிவமும் 75ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் மாற்றமுற்றுள்ளது. அதன் வருடாந்தக் கூட்டம் வழமையாக களைகட்டும். உலகத்தலைவர்கள் நியுயோர்க் வருவார்கள். ஒவ்வொருவருக்கும் மேடையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தமது நாட்டைப்பற்றியும், உலகப்பொது விடயங்கள் பற்றியும் பேசுவார்கள். அரங்கில் இருப்பவர்கள் கைதட்டுவார்கள். அரங்கிற்கு அப்பால் உரைகள் பற்றிய விமர்சனங்கள் நிகழும். மேடையில் இருந்து இறங்கிய தலைவர்கள் மற்றவர்களை சந்திப்பார்கள். கைகுலுக்கிக்கொள்வார்கள். பேசுவார்கள். புதிய உறவுகளும், பகைகளும் உருவாகும். 75ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவை ஏதுமில்லை. பொதுச்சபையின் வரலாற்றில் முதற்தடைவயாக, உலகத் தலைவர்களின் நேரடிப் பிரசன்னம் இல்லாமல் பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது. பிரசன்னம் மாத்திரமன்றி உரைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவர் காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து ஏற்கனவே பதிவு செய்து அனுப்பப்பட்ட காணொளியே அந்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திரையிடப்பட்டது.
காணொளிகளூடான மெய்நிகர் ஒன்றுகூடலில் உலக தலைவர்கள் தமது எதிர்நாடுகளை வசைபாடுவதற்கான களமாகவே ஐ.நா. ஸ்தாபன பொதுச்சபையை 75ஆம் ஆண்டில் பயன்படுத்தியுள்ளார்கள். உலக மோதல் தொட்டு பிராந்திய மோதல் வரை சகலவற்றினையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
உலக வல்லாதிக்கத்திற்கு முட்டிமோதும் அமெரிக்க – சீன மோதல்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்களுடடைய பேச்சுக்களில் தெளிவாக அறிய முடிகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இன்று உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் அழிவிற்கு காரணமென சீனா மீது குற்றஞ்சாட்டி, கொரோனா வைரஸை சீன வைரஸ் எனக்குறிப்பிட்டு உரையாற்றியமை சீனா மீதான அமெரிக்க வன்மத்தையே வெளிப்படுத்தியது. மாறாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது உரையில் சற்று மென்வலுவாகவே தனது கருத்துக்களை முன்வைத்தார். வேறு எந்த நாட்டினருடனும் 'ஒரு பனிப்போர் அல்லது கொதிநிலை ஒன்றை' எதிர்த்துப் போராடும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என்பதை வலியுறுத்தினார். ஆயினும் 'தொற்றுநோயை அரசியலாக்கும் முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும்' எனக்கூறி ட்ரம்பின் கொரோனா அரசியலை கடுமையாக சாடியிருந்தார். இது அமெரிக்க – சீன மோதலில் உள்ள சீன ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க – சீன முறுவலை எதிர்த்து கருத்திட்டிருந்தார். 'ஐக்கிய நாடுகள் சபையே சக்தியற்ற தன்மையை அபாயப்படுத்தியது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், ஒரு மனிதாபிமான உடன்படிக்கைக்கு உடன்பட போராடியது, நாங்கள் எங்களது முழு பலத்துடனும் அதை ஆதரித்தோம். ஆனால் நிரந்தர உறுப்பினர்களால், இதுபோன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில், நாங்கள் விரும்பியபடி ஒன்று சேர முடியவில்லை, ஏனென்றால் அவர்களில் இருவர் திறம்பட ஒன்றிணைந்து செயல்படுவதை விட தங்கள் போட்டியை அறிவிக்க விரும்பினர். தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த எலும்பு முறிவுகள் அனைத்தும் - அதிகாரங்களின் மேலாதிக்க மோதல், பலதரப்பு முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் மற்றும் கருவியாக்கம் மற்றும் சர்வதேச சட்டத்தை மிதித்தல் - தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட உலகளாவிய ஸ்திரமின்மை காரணமாக துரிதப்படுத்தப்பட்டு ஆழமடைந்தது.' எஎன அமெரிக்கா – சீன மோதலால் ஐ.நாவால் கொரோனாவினை கட்டுப்படுத்த ஆரோக்கியமாய் செயற்பட முடியவில்லை என்ற தமது கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.
அமெரிக்க – சீன வல்லாதிக்க முரண்பாட்டுடன் இந்தியா - பாகிஸ்தான் பிராந்திய முரண்பாடும் ஐ.நாவின் 75ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத்தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ வெளிநடப்பு செய்திருந்தார். அவ்வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது, 'சர்வதேச சட்டரீதியின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது. மேலும், பாதுகாப்பு சபையில் ஒரு பேரழிவு மோதலைத் தடுக்க வேண்டும். கிழக்கு திமோர் விடயத்தில் செய்ததைப்போலவே அதன் சொந்த தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும். என காஷ்மீரை மையப்படுத்தி அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா எப்படி சிறுபான்மையினரை நடத்துகிறது எனவும், இந்தியாவில் அரசே தூண்டிவிட்டு இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்களை வஞ்சிக்கும் விரோதம் இருப்பதாக இம்ரான் பேசினார். இம்ரான்கானின் விமர்சனம் இந்தியா அரசை சினப்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்ட, இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ, 'பாகிஸ்தான் தலைவர் இன்று வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை சட்டவிரோதிகள் என்று அழைத்தார். ஆனால், அவர் தன்னைக் குறிப்பிடுகிறாரோ? என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். தன்னிடம் உள்ள சிறப்பு என்று காட்டுவதற்கு ஒன்றும் இல்லாத, பேசுவதற்கு எந்த சாதனைகளும் இல்லாத மற்றும் உலகிற்கு வழங்குவதற்கான நியாயமான ஆலோசனை எதுவும் இல்லாத ஒருவரின் இடைவிடாத கூச்சலை இந்த அவை கேட்டது. இந்த மன்றத்தின் மூலம் பொய்கள், தவறான தகவல்கள், போர்க்குணம் மற்றும் வன்மம் பரவுவதை நாங்கள் கண்டோம்.' என தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் எர்டோகன் ஐ.நா பொதுச்சபையில் இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்துரைத்துள்ளார். 'தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு காஷ்மீர் விவகாரம் முக்கியமானதாகும். இந்த பிரச்னையை ஐ.நா.,வின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்' என துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார். துருக்கி அதிபரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், பாகிஸ்தானின் கூட்டாளியான துருக்கி, சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
இம்மோதல்சார் கருத்தாடல்களிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸின் பனிப்போருக்கான அபாய எச்சரிக்கை ஐ.நா. தனது உருவாக்க இலக்கை இழந்து ஊசலாடுவதையே உறுதி செய்கிறது. ஐ.நா.வின் 75 வருடகால வரலாற்றில் அது சாதித்த விடயங்கள் பற்றியே செயலாளர் நாயகம் பெருமை பேசியிருக்க வேண்டும். எனிலும், மாறாக செயலாளர் நாயகம் அதன் எதிர்காலம் தொடர்பாக அச்சம் தொனிக்கவே உரையாற்றியிருக்கிறார்.
ஐ.நா. 75வது ஆண்டு பொதுச்சபைக்கூட்டம், அரச தலைவர்களின் உரைகள் மற்றும் மோதல்சார் கருத்தாடல்கள் 1945ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐ.நா தனது இலக்கை பேண வேண்டுமாயின் துரிதமான ஆரோக்கியமான மாற்றம் காலத்தின் அவசியமாகும். இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜேர்மனிய சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கெல் அவர்களும் ஐ.நாவின் சீர்திருத்தம் தொடர்பிலே வலியுறுத்தியிருந்தனர். குறிப்பாக இந்தியா தன்நலன் சார்ந்து பாதுகாப்பு சபையில் இந்தியாவை உள்நுழைப்பு தொடர்பிலேயே தன் கருத்தை முன்வைத்தது. எனிலும் ஐ.நாவின் சீர்திருத்தமானது கடந்த காலங்களின் பலவீனங்களை பகுப்பாய்வு செய்து தனி அரசுகள் ஐ.நாவில் அதிகாரத்துவம் செய்வதனை களையக்கூடிய வகையில் ஆரோக்கியமான சீர்திருத்தமாக அமைதல் வேண்டும். தவறும் பட்சத்தில் ஐ.நாவே போருக்கான களமாக மாறுவது தவிர்க்க முடியாததாகும்.
Comments
Post a Comment