கொரோனா பரவலை தடுக்க மக்களே விழிப்பாக இருக்க வேண்டும். -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா பதற்றம் உலகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலுக்கும் சமகாலப்பகுதியில் கொரோனாவிலிருந்து மழுமையாக விடுதலை பெற்ற நாடாக 'Corona Free' பலகையை மாட்டி தெம்பா இருந்த இலங்கையை செப்டெம்பர்-04 முதல் கொரோனா வைரஸ் மீளவும் பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை இலங்கையில் காணப்படும் கொரோனா வைரஸ் சூழல் மற்றும் அதுசார் மக்கள் விழிப்புணர்வு பற்றி தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா அபாயம் பற்றிய உரையாடல் மற்றும் அதுசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே உயரளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக மார்ச்-13ஆம் திகதி இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச்-20 இலிருந்து கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதற்காய் சமூக இடைவெளியை ஏற்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் பேண அது பெரிதும் உதவியது.


16 ஏப்ரல் 2020 நிலவரப்படி, வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய 16வது அதிக ஆபத்துள்ள நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.எம்.ஏ) தொற்று நோய்களுக்கான உலகளாவிய பதிலை வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் காட்டப்பட்டுள்ள பதிலையும் தலைமையையும் மதிப்பீடு செய்ய ஆராய்ச்சி ஆய்வை நியமித்தது. இந்த ஆய்வில் இலங்கை 9 வது இடத்தைப் பிடித்தது மற்றும் ஹாங்காங், யுஏஇ, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் தரவரிசையைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இராணுவ முகாமை சார்ந்து இலங்கை கொரோனா பெருவெடிப்பு ஒன்றை ஏப்ரல் இறுதியில் எதிர்கொண்டது. வெலிசரா கடற்படை முகாமில் இருந்து ஒரு மாலுமியாக இருக்கும் பொலன்னருவாவைச் சேர்ந்த COVID-19 நேர்மறை நோயாளியை அடையாளம் கண்ட பின்னர், முகாம் உடனடியாக தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டது.  கடற்படை முகாமில் சுமார் 4000 பேர் மாலுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளடக்கியவர்கள் முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 28 அன்று இயக்குநர் ஜெனரல் ஹெல்த் சர்வீசஸ் டாக்டர் அனில் ஜசிங்கின் கூற்றுப்படி, வெலிசரா கொரோனா வைரஸ் வெடிப்பில் மொத்தம் 209 பேர் முகாமிற்குள் 148 பேரும், வெளியே 45 பேர் விடுப்பில் இருந்தனர். இதன் தொடர்பாக, ஜூலை 7 முதல் காந்தகாடு மறுவாழ்வு மையத்திலிருந்து செயல்படுத்தப்பட்ட மற்றொரு கோவிட்-19 வெடிப்புடன், ஜூலை-10 அன்று 300ஐ எட்டி ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மேலும்,  14 ஜூலை 2020 அன்று 506 புதிய COVID-19 வழக்குகள் கண்டறியப்பட்டன. குறித்த கொரோனா வைரஸ் பரவலும் இராணுவ முகாம்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 


இவற்றை அடிப்படையாய் கொண்டே நீண்ட இடைவெளியின் பின்னர் ஒக்டோபரில் ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவுகையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் குணரட்ன மூன்றாவது அலையென விழித்துள்ளார். சமூகத்தில் ஒரு COVID-19 பாதிக்கப்பட்ட நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பல மாதங்களுக்குப் பிறகு, ஆடை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்த 39 வயது பெண் ஒருவர் கம்பஹாவில் SARS CoV-2 க்கு நேர்மறை சோதனை செய்தார்.  அவர் மினுவங்கோடாவில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அதனை தொடர்ந்தான கோவிட்-19 பரிசோதனையில் கொரோனாவின் மற்றொரு பாரிய வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கூறுவது போன்று கடந்த கால கொரோனா வெடிப்பை போன்று அதன் வரிசையில் மினுவங்கோட கொரொனா வெடிப்பு மூன்றாவது அலை என கடந்து செல்ல முடியாது. கடந்த கால கொரோனா வெடிப்புகளின் போது, சமூக பரவுகையை தவிர்ப்பதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னேற்றமான நாடாகவே காணப்பட்டது என்பதில் எவ்வித முரணான கருத்தும் இல்லை. எனிலும் முன்னைய கொரோனா வெடிப்பு காலசூழ்நிலையிலிருந்து மினுவங்கோட கொரோனா வெடிப்பு கால சூழல் பல மடங்கு வேறுபட்டதாகும். முன்னைய கொரோனா வெடிப்புக்களின் சமூக பரவுகையை சீர்செய்வதில் அரச இயந்திரம் காட்டிய அக்கறை மினுவங்கோட கொரோனா வெடிப்பிலும் நீடிக்குமா? என்பதே சமகாலத்தில் கேள்விக்குறியாகவும் முரணான எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது.


முன்னைய கொரோனா வெடிப்புக்களின் தாக்கத்திலும் பல மடங்கு அதிகமாகவே மினுவங்கோட கொரோனா வெடிப்பு காணப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுகை ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாத காலப்பகுதியில் 3000பேரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். எனிலும் மினுவங்கோட கொரோனா வெடிப்பு அடையாளம் காணப்பட்ட மூன்று நாட்களுக்குள் 1000இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னைய கொரோனா வெடிப்பில் இராணுவ முகாமுக்குள் பரவுகையை கட்டுப்படுத்தியது போன்று மினுவங்கோட ஆடைத்தொழிற்சாலைக்குள் கட்டுப்படுத்துவது கடினமாகும். மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதென தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இது சமூக பரவுகைக்கான எச்சரிக்கையாகவே அமைகின்றது.


இந்நிலையிலேயே மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கொரொனா வைரஸ் பரவுகை அரசியல் பிரச்சினை அன்று. அதுவோர் சமூகப்பிரச்சினையாகும். அரசியல் தரப்பினரே சர்வதேச ரீதியிலும் சரி, உள்ளூர் கட்டமைப்பிலும் சரி கொரோனா வைரஸை தமது அரசியல் நலனுக்கு ஏதுவாக பயன்படுத்தி கொரோனா அரசியல் வியூகத்தை உருவாக்குகிறார்கள். இலங்கை மக்கள் கொரோனா சார்ந்து விழித்து கொள்ள வேண்டிய தேவையும் அரசியல் தரப்பின் கொரோனா அரசியலை மையப்படுத்தியே ஏற்படுகிறது. கடந்த கால கொரோனா வெடிப்புக்களிலிருந்து மினுவாங்கோட கொரோனா வெடிப்பு வேறுபடுவதும் அரசியல் காலச்சூழ்நிலையிலேயாகும். முன்னைய கொரோனா வெடிப்புக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் என்ற நிலையில் தேர்தலை மையப்படுத்திய அரசியலில் அக்காலப்பகுதியில் மக்கள் நலன் பற்றிய சிந்தனை அரசியல் தரப்பிற்கு அதிகமாகவே காணப்படும். ஆளும் தரப்பும் சரி, எதிர்த்தரப்பும் சரி கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே முழுமையாக உரையாடி செயற்பட்டது. எனிலும் சமகாலத்தில் மினுவங்கோட கொரோனா பாதிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுகிற போதிலும் சமாந்தரமாக ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கள் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான உரையாடல் மற்றும் செயற்பாட்டை குறைத்தே உள்ளனர்.


மேலும், கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத 80வீதமான நோயாளிகள் சமூகத்தில் ஆங்காங்கே இருக்கலாம் எனவும், இதனால் இந்த நபர்கள் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால், நோயாளிகள் மீண்டும் பெருக கூடும் எனவும் கடந்த மே மாதப்பகுதியில் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயருவான் பண்டார திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாற்றம் கொரோனா பரவுகை கட்டுப்படுத்தல் தொடர்பான அரசாங்க செயற்பாட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.


கடந்த காலங்களிலும் இவ்அரசாங்கம் கொரோனா பரவுகையை காரணம்காட்டி வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை  அதிகரித்தல் மற்றும் தமிழர்களின் நினைவுகூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகளை தங்கள் அரசியல் நலனுக்காக முன்னெடுத்து இருந்தார்கள். அவ்வகையிலேயே தற்போது 20வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகளிடம் எழுந்துள்ள எதிர்ப்பை மக்கள் போராட்டமாக பரிணமிக்க விடாது தடுப்பதற்கான உத்தியாக அரசாங்கம் மினுவங்கோட கொரோனா வெடிப்பை பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாகவே அரசியல் அவதானிப்பாளர்களின் கருத்தாக அமைகிறது.


இந்நிலையில் மினுவங்கோட கொரோனா வெடிப்பை சமூகப்பிரச்சினையாக உணர்ந்து அதிலிருந்து தற்பாதுகாத்து கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு மக்களையே சாருகிறது. இலங்கையில் சுகாதார நடைமுறைகள் இலவசம் என்ற அடிப்படையில் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும், உயரளவில் பாதுகாப்பான சுகாதார வசதிகள் இலங்கையில் இல்லை என்பதுவே நிதர்சனமான உண்மையாகும். இலங்கை மக்களை பொறுத்தவரை ஒப்பீட்டளவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களாகவே காணப்படுகிறார்கள். அபிவிருத்தியடைந்த அமெரிக்க போன்ற வல்லரசு தேசமே கொரோனா சமூகப்பரவலால் மீள முடியாது தத்தளிக்கையில், இலங்கையில் கொரோனா சமூகப்பரவல் ஏற்படுமாயின், அதுசார்ந்த இழப்பு மதிப்பிட முடியாது என்பதே யதார்த்தமாகும்.


அச்சத்தை விளைவிப்பது என்பதற்கு அப்பால் இக்கட்டுரையின் உருவாக்கம் முன்னைய சூழலிருந்து சமகால சூழல் வேறுபடும் விதத்தை விளக்கி மக்களை விழிப்புடன் இருக்கச் செய்வதேயாகும். அரசியல் தரப்பினை நம்பி இராது கொரோனா வைரஸ் பரவுகை சமூக பிரச்சினை என்பதை இலங்கையர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து தமது பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதே சமூகத்திற்கு செய்யக்கூடிய பாரிய பணியாகும். 



Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-