அமெரிக்கா மற்றும் சீனா; வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த போரை நாடுகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா வைரஸ் உலக ஒழுங்கில் ஓர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுதலிக்க முடியாத நிதர்சனமாகும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மாறுதலின் பின்னரான புதிய உலக ஒழுங்கில் தம்மை நிலைநிறுத்துவதற்கான மோதுகையையே உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. செப்டெம்பர் இறுதியில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் அரச தலைவர்களின் உரைகளும் அதனையே உறுதி செய்கின்றன. மாறும் உலக ஒழுங்கில் தம் மேலான நிலையை முன்னிறுத்த வல்லாதிக்க போட்டி அரசுகள் எடுத்துள்ள ஆயுதமும் போரே ஆகும். அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் போரினூடாக தம் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முற்படும் அரசுகளின் செயற்பாடுகளை தேடுவதாக உருவிக்கப்பட்டுள்ளது.

சமகாலம் கொரோனா வைரஸை மையப்படுத்தி கட்டமைக்கப்படவுள்ள உலக ஒழுங்கு பற்றியே அதிகம் உரையாடுகின்றது என்பதற்கு சான்றுபயிர்க்கும் விதத்திலேயே உலக தலைவர்கள் யாவருமே ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கொரொனா வைரஸை மையப்படுத்தியும் அதுசார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரசியல் சூழல் சார்ந்துமே தமது கருத்தாடல்களை பதிவு செய்துள்ளனர். 


குறிப்பாக நேரடியாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராகவும், சீனா அதிபர் ஷி ஜின்பிங் மென்வலு கருத்திடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பையும் சாடி கருத்துரைத்திருந்தனர். இந்நிலை கொரோனா வைரஸிற்கு பின்னரான உலக ஒழுங்கை கைப்பற்ற முனையும் அரசுகளை நேரடியாகவே அடையாளம் காட்டுவதாக அமைகின்றது.


நேரடியான வல்லரசு போட்டி அரச தலைவர்களின் கருத்துக்களுக்கு அப்பால் ஒரு சில அரச தலைவர்களின் கருத்துக்கள் அமெரிக்க மற்றும் சீனா வல்லாதிக்க போட்டியில் ஒரு போர்ச்சூழலை உருவாக்கும் பதட்டத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பிரான்ஸ்  ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க – சீன முறுவலை எதிர்த்து கருத்திட்டிருந்தார். “விதிவிலக்கான சூழ்நிலைகளில், நாங்கள் விரும்பியபடி ஒன்று சேர முடியவில்லை, ஏனென்றால் ஐ.நா பாதுகாப்புசபையில் இருவர் திறம்பட ஒன்றிணைந்து செயல்படுவதை விட தங்கள் போட்டியை அறிவிக்க விரும்பினர்.  தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த எலும்பு முறிவுகள் அனைத்தும்; அதிகாரங்களின் மேலாதிக்க மோதல், பலதரப்பு முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், கருவியாக்கம் மற்றும் சர்வதேச சட்டத்தை மிதித்தல் என்பன தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட உலகளாவிய ஸ்திரமின்மை காரணமாக துரிதப்படுத்தப்பட்டு ஆழமடைந்தது.” என கொரோனா வைரஸிற்கு பின்னரான உலக ஒழுங்கில் உருவாகியுள்ள  அமெரிக்கா – சீன மோதலால்  ஏற்பட்டுள்ள  பதட்ட நிலையை  கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் எதிர்காலம் தொடர்பாக எச்சரித்துள்ள பனிப்போர் பதட்டமும், அமெரிக்க – சீன மோதலின் அச்சத்தின் வெளிப்பாட்டு கருத்து நிலையேயாகும்.  குடெரெஸ், சீனா அல்லது அமெரிக்கா என்று பெயரிடாமல் "ஒரு புதிய பனிப்போரைத் தவிர்க்க எல்லாவற்றையும் செய்ய வேண்டும்" என்று எச்சரித்தார். மேலும் "நாங்கள் மிகவும் ஆபத்தான திசையில் நகர்கிறோம். இரண்டு பெரிய பொருளாதாரங்கள் உலகத்தை ஒரு பெரிய முறிவாகப் பிரிக்கும் எதிர்காலத்தை நம் உலகத்தால் வாங்க முடியாது. ஒவ்வொன்றும் அதன் சொந்த வர்த்தக மற்றும் நிதி விதிகள் மற்றும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களைக் கொண்டுள்ளன." என்று போர் அரசியலுக்கான அபாய சங்கினையே ஐ.நா 75வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் ஊதியுள்ளார்.


உலக நாடுகளின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமெரிக்க மற்றும் சீனாவினது செயற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன.


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினை பொறுத்தவரையில் கொரோனாவிற்கு பின்னர் மாறும் புதிய உலக ஒழுங்கிலும் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கு அப்பால் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன் வெற்றியை உறுதி செய்ய வாக்காளர்களை இலக்கு வைத்து 'America First' என்ற தமது மகுட வாசகத்தை சந்தைப்படுத்த அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் செயற்பட முனைகின்றார். அதன் கருவியே சீனா எதிர்ப்புவாதம் மற்றும் போருக்கான முன்னாயர்த்தங்கள்.


அமெரிக்கா போருக்கான முன்னாயர்த்தத்தை தன் எதிரி நாடாகிய ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2020இன் ஆரம்பத்திலிருந்தே ஈரான் மீதான போருக்கான முன்னாயர்த்தத்தை  ட்ரம்ப் முன்னெடுத்து வருகின்றார். ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது அழிக்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளார். "ஈரான் போராட விரும்பினால், அது ஈரானின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும்" என்று ட்ரம்ப் அவர்கள் மே மாதம் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.  "மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம்!" எனவும் எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் ஈரான் ஆதரவு குழுக்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரம் மீது  ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனால் ஈரானுடனான போர்ப்பதட்டம் ஈரானை தழுவி ஈராக்கை நோக்கி நகர்கிறது. ஈரான் அல்லது ஈராக்கில் ஈரானிய சார்பு போராளிகளை பலவீனப்படுத்த அமெரிக்க நிர்வாகம் "தங்கள் விருப்பங்களில் மட்டுப்படுத்தப்பட விரும்பவில்லை" என்று மேற்கத்திய தூதர்களில் ஒருவர் கூறினார். இந்நிலையில், ஈராக்கிலிருந்து அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அச்சுறுத்தல் போர் அச்சமாக அமெரிக்கா அதன் இராஜதந்திர இருப்பைக் குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஈரானுடனான அதன் மோதலின் விரிவாக்கமாகக் கருதப்படும்.


இவ்வாறாகவே சீனா எதிர்ப்புவாதத்திலும் போரை முன்னிலைப்படுத்தியே அமெரிக்கா செயற்படுகிறது. சீனாவினை பகைப்பவர்களுடன் அமெரிக்கா கைகுலுக்கிறது. அதன் சான்றே தென்சீனக்கடலில் சீனா உருவாக்கியுள்ள மோதல் பதட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்ககப்பலையும்  இராணுவப்பயிற்சிகளையும் தென்சீனக்கடலில் உள்ள சீன எதிர்ப்பு நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொள்கிறது. அத்துடன் சீனாவிற்கு எதிரான ஓர் சர்வதேச கூட்டை உருவாக்குவதிலும் ட்ரம்ப் மும்மரமாக உள்ளார். ஐ.நாவின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் ட்ரம்ப் சீனா மீது கொரோனா வைரஸ் பரவுகைக்கான குற்றத்தை சாட்டி சீனாவிற்கு எதிரான ஒரு சர்வதேச கூட்டை உருவாக்கவே முயலுகின்றார். "இந்த பிரகாசமான எதிர்காலத்தை நாங்கள் தொடரும்போது, இந்த பிளேக்கை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும்” என ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் சீனாவிற்கு எதிராக ஐ.நாவை ட்ரம்ப் அழைத்தமை குறிப்பிடத்தக்கது.


சீனா கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் தன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த போருக்கான களத்தை தேடுவதனையே சீன செயற்பாடுகளில் தெளிவாக அவதானிக்க முடிகிறது. கொரோனா அபத்தம் சீனாவில் குறைவடைந்து உலக அளவில் பரவலடைந்த காலப்பகுதியில் சீனா சந்தர்ப்பத்தை தனதாக்கி தென்சீனக்கடலில் தாய்வானுடனும் தெற்காசியாவில் எல்லையிலுள்ள இந்தியாவுடனும் போருக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இன்றுவரை இரு போர்ப்பகுதியும் முடிவற்ற நீள்ச்சியாகவே காணப்படுகிறது. ஏதோவொரு முனையில் போரினை நிகழ்த்தியே சீனா தனது மேலாதிக்க வலுவை பறைசாற்ற உவகை கொண்டுள்ளதே சர்வதேச அரசியல் அவதானிப்பாக உள்ளது.


இந்தியா எல்லை மீதான ஆக்கிரமிப்பு போர் முயற்சி சீனாவின் வல்லாதிக்கத்தை பறைசாற்றும் கூறாகவே காணப்படுகிறது. எனிலும் இந்தியாவுடன் மோதுவது என்பது அணு ஆயுத மோதலுக்கான அறைகூவல் என்பதால் பதட்டத்துடன் யுத்ததமின்றி இந்தியாவை வெல்லும் அணுகுமுறைக்கே சீனா நகர்கிறது. இதேவேளை சீனா போரின் மூலம் வல்லிதிக்கத்தை உறுதி செய்ய முனைவதால் தாய்வானுடனும் சமகாலத்தில் போருக்கான முன்னெடுப்புக்களை நகர்த்தி வருகிறது. தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகே சீனா மூன்றாவது சுற்று இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது, ஏனெனில் தைவான் பதட்டங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஒரு தைவான் நீரிணை மோதலுக்கு வழிவகுக்கும். தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பாரசெல் தீவுகளுக்கு அருகே செப்டெம்பர்-29 வரை மூன்று நாள் நேரடி-தீயணைப்பு பயிற்சிகள் தொடரும் என்று தினசரி தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.bஇந்த ஆண்டு மூன்றாவது முறையாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) தென் சீனக் கடலில் இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது, இது சீனா, அமெரிக்கா மற்றும் படுகையைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு இடையே பதட்டங்களைக் கண்டது.


கொரோனா வைரஸ் மாற்றும் உலக ஒழுங்கில்அமெரிக்க – சீனா வல்லாதிக்க போட்டிக்குள் போர் தவிர்க்க முடியாத விளைவு என்பது நிதர்சனமாகிறது. இதனுள் ஆயுதப்பலமிகு தேசங்கள் தப்பித்து கொள்ள வலிதான அரசுகளே தங்கள் நிம்மதியை இழக்கும் துர்ப்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. கொரோனா அழிவு முடிய போரின் இழப்புகள் சர்வதேச அரசியலின் பட்டியலில் இணையும் என்பதே சமகால அவதானிப்பாகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-