ஈழத்தமிழர் அரசியலுக்கு மத அடையாளம் அல்ல தமிழ்த்தேசிய அடையாளமே அவசியம்! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் என்பது மொழியால், இனத்தால், பண்பாட்டால் மற்றும் நிலத்தால் கட்டியெழுப்பப்பட்டதாகும். மாறாக மதப்பல்வகைமை என்பது தமிழ்த்தேசியம் அரவணைத்து சென்ற ஜனநாயக விழுமியமாகவே அமைகின்றது. எனினும் சமகாலத்தில் தமிழ்த்தேசிய எல்லைக்குள் மதப்பிரிவுகளால் பிளவுகள் அதிகரித்து செல்கின்றது. அதேவேளை மேய்ப்பானற்ற மந்தைகளாக நம்பிக்கைகள் மீதான விமர்சனங்களாலும் தமிழ்த்தேசியம் சுருங்கிச்செல்லும் நிலைமைகளே ஈழத்தமிழ் அரசியல் அரங்கில் சமீபத்திய முதன்மையான வெளிப்பாடாக காணப்படுகின்றது. குறிப்பாக, சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்த்தேசியத்தின் மீதான ஆக்கிரமிப்பாக சைவ சமயத்தின் மீது ஆக்கிரமிப்பை நிகழ்த்துகையில், சைவ சமயம் தன் தற்காப்புக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தேசியத்திற்கு எதிரானதாக சாடுவது, சைவ சமய நம்பிக்கை உடையவர்களை தமிழ்த்தேசியத்திலிருந்து விலக வழிகோலுகிறது. மாறாக தமிழ்த்தேசியத்துக்குள் இந்து எதிர் கிறிஸ்தவ மோதல் உக்கிரம் பெற்று வருகின்றமையும் மறுக்க இயலாத யதார்த்தமாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரை பன்முக கலாசாரத்தினூடாக தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள...