ஈழத்தமிழர் அரசியலுக்கு மத அடையாளம் அல்ல தமிழ்த்தேசிய அடையாளமே அவசியம்! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் என்பது மொழியால், இனத்தால், பண்பாட்டால் மற்றும் நிலத்தால் கட்டியெழுப்பப்பட்டதாகும். மாறாக மதப்பல்வகைமை என்பது தமிழ்த்தேசியம் அரவணைத்து சென்ற ஜனநாயக விழுமியமாகவே அமைகின்றது. எனினும் சமகாலத்தில் தமிழ்த்தேசிய எல்லைக்குள் மதப்பிரிவுகளால் பிளவுகள் அதிகரித்து செல்கின்றது. அதேவேளை மேய்ப்பானற்ற மந்தைகளாக நம்பிக்கைகள் மீதான விமர்சனங்களாலும் தமிழ்த்தேசியம் சுருங்கிச்செல்லும் நிலைமைகளே ஈழத்தமிழ் அரசியல் அரங்கில் சமீபத்திய முதன்மையான வெளிப்பாடாக காணப்படுகின்றது. குறிப்பாக, சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்த்தேசியத்தின் மீதான ஆக்கிரமிப்பாக சைவ சமயத்தின் மீது ஆக்கிரமிப்பை நிகழ்த்துகையில், சைவ சமயம் தன் தற்காப்புக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தேசியத்திற்கு எதிரானதாக சாடுவது, சைவ சமய நம்பிக்கை உடையவர்களை தமிழ்த்தேசியத்திலிருந்து விலக வழிகோலுகிறது. மாறாக தமிழ்த்தேசியத்துக்குள் இந்து எதிர் கிறிஸ்தவ மோதல் உக்கிரம் பெற்று வருகின்றமையும் மறுக்க இயலாத யதார்த்தமாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரை பன்முக கலாசாரத்தினூடாக தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தேசியவாத கருத்தியல்கள் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் சமகால அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளுக்கு தீர்வை மையப்படுத்தி புதிய பரிமாணங்களில் எழுச்சி பெற்றுள்ளது. எனினும் தேசியத்தை முன்னிறுத்தி சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களிடையே தேசியம் தொடர்பான போதிய தெளிவு காணப்படுவதில்லை. அதுவே தமிழ்த்தேசியத்துக்குள் எழும் உள்ளக பிரிவினை முரண்பாடுகளுக்கும் காரணமாகின்றது. இன்று நவ-தேசியவாதம் அல்லது தேசியவாத ஜனரஞ்சகவாதம் என்று அடிக்கடி விவரிக்கப்படுவது பழைய தேசியவாதத்தைப் ஒத்ததாக புலப்படினும், உண்மையான புதியதாக வெளிப்படுவது மைய இடதுசாரிகளின் அடையாள அடிப்படையிலான தேசியவாதங்கள், சில நேரங்களில் 'தாராளவாத தேசியவாதம்' அல்லது 'முற்போக்கு தேசபக்தி' என்று அழைக்கப்படுகின்றன. அதுவே சில அரசியல் ஆய்வாளர்களால் 'பன்முக கலாச்சார தேசியவாதம்' என்றும் அழைக்கப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் இனத்தால் மொழியால் பொதுமையை கொண்டிருப்பினும் மதம் என்ற அடிப்படையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் எனும் மதக்கூறுகளை கொண்டுள்ளது. இம்மதங்களிடையேயான முரண்பாடுகள் தமிழ்த்தேசியத்துக்கு சவாலானதாக அமைகின்றது. எனவே தமிழ்த்தேசியத்தின் புரிதலிற்கு நவ-தேசியவாதமாகிய பன்முக கலாசார தேசியவாதம் என்ற எண்ணக்கருசார் உள்ளடக்கங்களை தமிழ்த்தேசியத்துடன் பொருத்தி பரிசீலிப்பது பயனுடையதாக அமையக்கூடியதாகும்.

பன்முக கலாசார தேசியவாதத்தை முதன்மைப்படுத்தும் அரசியல் ஆய்வாளரான பாகிஸ்தானிய பிரித்தானியர் தாரிக் மூடூத்தின் பன்முக கலாசார தேசியவாதம் தொடர்பான வரையறைகளிலிலிருந்து பன்முக கலாசார தேசியவாத இருப்பிற்கு பிரதானமாக நான்கு விடயங்களை அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. ஒன்று, ஒருங்கிணைப்பு அணுகுமுறை. இரண்டு, சமத்துவம். மூன்று, புரிதல். நான்கு, தேசிய அடையாளத்தை உருவாக்குதல் என்பன முதன்மைப்படுகின்றது. இப்பண்புகளை தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாடுகளுடன் நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, ஒருங்கிணைப்பு அணுகுமுறையின் தேவைப்பாட்டை தாரிக் மூடூத் வலியுறுத்துகின்றார். பன்முக கலாச்சாரம் என்பது சிறுபான்மை குழு அடையாளங்களின் மையத்தை மட்டும் வலியுறுத்தாமல், தேசிய அடையாளத்தை மீண்டும் உருவாக்காமல் ஒருங்கிணைப்பு முழுமையடையாது என்று தாரிக் மூடூத் வாதிடுகின்றார். பன்முக இன மதங்களை கொண்ட சூழலில் ஒவ்வாரு இனங்களும் மதங்களும் ஏனைய இன மற்றும் மத சமூகங்களுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது அவசியமாகின்றது. ஒருங்கிணைவு என்பது ஒன்றை ஒன்று மதித்தல், அனுசரித்தல், விட்டுக்கொடுப்பு மற்றும் புரிந்து கொள்ளலை சார்ந்தாகும். ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் கடந்த காலங்களில் அவ்வாறானதொரு ஒத்திசைவே மதங்களிடையே காணப்பட்டது. குறிப்பாக, இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களிடையே மதங்களைக்கடந்த ஒருங்கிணைவு பேணப்பட்டது. அதன் சாட்சியமாகவே இந்து மக்கள் அதிகமாக அதிகமாக காணப்படுகின்ற போதிலும், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழ்த்தேசியத்தின் தந்தை என புகழாரம் சூடப்பட்டார். அவ்வாறே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. புpரபாரகன் இந்து மதமாக காணப்படுகின்ற போதிலும் அவரினை பல கிறிஸ்தவ திருத்தந்தைகள் தேசியத்தலைவராக ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்ஒருங்கிணைவே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அதன் சாட்சியமாகவே திருக்கேதீச்சர விவகாரம் காணப்படுகின்றது. இங்கு மதங்களை மையப்படுத்தி பிளவுகளை உருவாக்குபவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக தமிழ்த்தேசிய பற்றாளர்கள் மதங்களிடையேயான ஒருங்கிணைவை உருவாக்கும் உத்திகளையே கட்டமைக்க வேண்டும். இந்து-கிறிஸ்த மதங்களிடையே ஒருங்கிணைவை பேணுவதனூடாகவே தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாக்க இயலும். 

இரண்டாவது, பன்முக கலாச்சாரம் இன, மத சமத்துவத்திற்கான ஆரம்ப அர்ப்பணிப்பு என தாரீக் மூடூத் வாதிடுகின்றார். பிரித்தானிய மரபில், வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிரான வெள்ளை பாகுபாட்டை நீக்குதல், சிறுபான்மையினர் நேரான சுய-வரையறை மற்றும் நிறுவன இடவசதிக்கு ஆதரவாக தங்களைப் பற்றிய எதிரான படங்களை பகிரங்கமாக எதிர்க்க அனுமதிக்கும் முன்னோக்கினாலேயே பன்மைத்துவ கலாசார தேசியவாதம் வளர்கிறது எனச்சுட்டிக்காட்டுகின்றார். 'தேசியக் கதையை மறுபரிசீலனை செய்தல்' என்பது பல இன பிரித்தானியாவின் ஆணையத்தின் அறிக்கையின் சமத்துவத்திற்கான மிக முக்கியமான செய்தியாகும். குடியேற்றத்திற்குப் பிந்தைய சவால் வெறுமனே இனப் பாகுபாடுகளை நீக்குவது அல்லது இனப் பாதகத்தைப் போக்குவது அல்ல. இவை சமத்துவ உத்திக்கு முக்கியமானவை என அது வாதிட்டது. இது நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம், வரலாறு நம்மை எவ்வாறு ஒன்றிணைத்தது, மற்றும் நமது பகிரப்பட்ட எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியது. ஆணையம் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வெளிர் வண்ணங்களில் சித்தரிக்க விரும்பவில்லை. மோதல்கள் மற்றும் கதைகளின் போட்டிகளை எப்போதும் இருப்பதைப் போல அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் உரையாடல் மற்றும் சமத்துவ அர்ப்பணிப்பு மூலம் ஒரு துடிப்பான, புதிய பிரிட்டிஷ் தன்மையினை வெளிப்படுத்துகிறது என்று வலியுறுத்துகிறது. தமிழ்த்தேசிய பரப்பிலும் மதங்களிடையேயான பிளவுகளில் ஏனைய மதங்களின் முக்கியத்துவத்தினை மலினப்படுத்துவதும் காரணமாகின்றது. மதங்களிடையே சமத்துவமான எண்ணங்கள் களையப்பட்டு வருகின்றன. இயல்பாக ஒரு மதத்தை பெரும்பாண்மை மதமாக கருதி அதன் செயல்களை தேசியவாதத்துக்கு அச்சுறுத்தலானது என்ற விமர்சனப்போக்குகள் மேலோங்கும் சூழல் காணப்படுகின்றது.  உண்மையில் தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள மதங்களை சமத்துவமின்மையுடன் நோக்குவதென்பது, ஒரு தரப்பை தமிழ்த்தேசத்துக்கு வெளியே புறந்தள்ளும் செயலாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இந்து மதச்செயற்பாடுகள் மீது அதிக விமர்சனங்கள் தமிழ்த்தேசியம் என்பதனை முன்னிறுத்தி சமகாலத்தில் உரையாடப்படுகின்றது. மறுதளத்தில் தமிழ்த்தேசத்தின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பு என்பது வெளிப்படையாக இந்து மதம் மீதான ஆக்கிரமிப்பாகவே காணப்படுகின்றது. எனவே இந்து மதம் தன்னை சுயபாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இயல்பாக மேலெழுகின்றது. அந்த சூழல்களையும் கவணத்திற்கொள்ளல் வேண்டியது அவசியமாகின்றது.

மூன்றாவது, புரிதலிலேயே பன்மைத்துவ தேசியவாதத்தின் இருப்பினை  தாரிக் மூடூத் அடையாளப்படுத்துகின்றார். பல்வேறு அடையாளங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில், பன்முக கலாச்சாரம் ஒருங்கிணைக்கும் கொள்கையுடன் முரண்படலாம். ஆனால் ஒருங்கிணைப்பு முறையாக புரிந்து கொள்ள வேண்டும்.  புரிதலற்ற செயற்பாடே தமிழ்த்தேசிய வரலாற்றை திசைதிருப்பியுள்ளது. கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்துக்குள் மதங்களிடையே இருந்த புரிதலின் காரணமாகவே தேசியம் பிளவற்று உயிர்ப்புடன் பேணப்பட்டது. அதற்கு தமிழ்த்தேசிய தலைவர்களின் செயற்பாடுகளும் கனதியான பங்கு வகித்தது. எனிலும் இன்று மதங்களிடையே புரிதல் குறைவடைந்து செல்கின்றது. மதங்களை மையப்படுத்தி வியாபாரம் செய்யும் ஒரு சிலர் தங்கள் மதங்களை பெருமைப்படுத்துவதாக ஏனைய மதங்களை கொச்சைப்படுத்த முயலுகின்றனர். இதுவழி மதங்களை பின்பற்றுபவர்கள் உணர்வுகளால் பினைந்தவர்களாக மத வியாபாரியின் பின்னால் செல்லும் நிலைகள் காணப்படுகின்றது. இதுவே புரிதலை குறைத்துள்ளது. இவ்வியாபாரிகளை அடையாளங்கண்டு மக்கள் முன்னிலையில் முற்படுத்துவதே தமிழ்த்தேசியத்தை பாதுகாப்பவர்களின் கடமையாக அமைய வேண்டும். மாறாக மத வியாபாரியின் செயலால் மதத்தை கொச்சைப்படுத்துவதோ அல்லது ஒரு தரப்பின் நிலைப்பாட்டில் மறுதரப்பினை முழுமையாக குற்றஞ்சாட்டுவதோ தவறான முன்னுதாரணமாக அமைகின்றது.  

நான்காவது, பன்முக கலாச்சார தேசியவாதம் தேசிய அடையாளத்தை உருவாக்க பரிந்துரை செய்கின்றது. ஈழத்தமிழர்கள் மத்தியில் மதங்கள் தத்தமது அடையாளத்தை முன்னிறுத்துவதும் பரப்ப முற்படுவதுமே நெருக்கடியாக அமைகின்ற சூழலில் தமிழ்த்தேசியத்திற்கான பொதுமையான அடையாளத்தை முன்னிறுத்த கலந்துரையாடல்களை முன்னகர்த்தலாம். தேசிய அடையாளங்களை பல்கலாச்சாரமயமாக்கும் திட்டமானது மதங்களின் கூட்டுத் தன்மையை அங்கீகரிக்க முடியும். அடையாளங்களின் நெறிமுறை மற்றும் அரசியல் முக்கியத்துவம் மற்றும் அடையாளங்களின் பன்மை தன்மை ஆகியவற்றிற்கு இந்தத் திட்டத்தின் உணர்திறன் காரணமாக, அடையாள மாற்றத்தைப் பற்றி பெரும்பான்மையினர் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதையும், அடையாளத்தை உள்ளடக்கிய தேசியத்திற்காக வேலை செய்வதில் இது எடுக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். இத்தகைய பன்முக கலாச்சார தேசியவாதம் தற்போது பெரும்பான்மை தேசியவாதத்திற்கு அனுதாபம் கொண்ட சிலரது மற்றும் பன்முகத்தன்மை மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பவர்களின் கவலைகளை ஒன்றிணைக்கிறது. எனவே, இது ஒரு கலாச்சார தேசியவாதத்திற்கு சாத்தியமான மாற்று அணிதிரட்டல் புள்ளியை வழங்குவதற்கான அரசியல் யோசனை மற்றும் போக்கை பிரதிபலிக்கிறது. பன்முக கலாசார தேசியவாதத்தில் தேசியவாதத்தை பாதுகாக்க பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர் இருவழி அல்லது பலவழி தழுவலில் ஒரு உரையாடல் உறவில் தொடர வேண்டும். இதில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர் இருவரும் தங்களின் மைய கலாச்சார அடையாளங்களின் அம்சங்களைப் பாதுகாக்க முற்படலாம்; மற்ற அடையாளம் இணைந்து வாழ அனுமதிக்கப்படாத வகையில் இதை மற்றவர் மீது பிரத்தியேகமாக திணிக்க ஒருதலைப்பட்ச உரிமையும் இல்லை.

எனவே, தமிழ்த்தேசியம் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌணிப்புக்கு பின்னர் பல நெருக்கடிகளை எதிர்கொண்டே சுழலுகின்றது. அதிலோர் நெருக்கடியாகவே இவ் மதங்களிடையேயான முரண்பாடும் என்பதே நிதர்சனமாகும். எனினும் மத நெருக்கடியை மதங்களினூடாக பூதாகரமாக்கி மதங்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தானது என்ற உரையாடலில் மதங்களை புறக்கணித்து அல்லது இழிவுபடுத்தி உரையாடல்களை பரப்புரை செய்வது இன்னொரு தளத்தில் தமிழ்த்தேசியவாதத்தின் இருப்பிற்கு சவாலான விடயமாகவே அமையக்கூடியதாகும். தேசியம் என்பது திரள் என்ற அடிப்படையில் முரண்நகைகளுக்குள்ளும் திரட்சியை உருவாக்க வேண்டுமேயன்றி ஒரு தரப்பினரை ஒதுக்கி திரட்சியை உருவாக்குவது தேசியமாகாது. மதங்கள் மீதான விமர்சனம் ஒரு தரப்பினரை ஒதுக்கும் செயலாகவே அமைகின்றது. பல்வகைமைகளுக்கிடையிலான சமத்துவத்திலேயே தேசியத்தை கட்டியயெழுப்பலாம். மாறாக ஒரு மதத்தின் ஆதிக்கமோ அல்லது ஒரு மதத்தினை புறந்தள்ளியோ தேசியத்தினை கட்டமைக்க இயலாது. அதேவேளை ஈழத்தமிழர்களின் பண்பாட்டுக்கு புறத்தே இருந்து வரும் சிந்தனைகளை உள்வாங்குவதும் தமிழ்த்தேசிய இருப்பில் ஆபத்தை உருவாக்கும் என்ற உண்மைகளையும் மதங்களை மையப்படுத்தி செயற்படுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-