நீளும் ரஷ்யா-உக்ரைன் போரும் மாறும் உலக அரசுகளின் போக்கும்! -ஐ.வி.மகாசேனன்-
உலகம் பெரும் போர் பதட்டத்துக்கான விழிப்புடன் ஓராண்டை கடந்துள்ளது. குண்டுவெடிப்புகள், கொலைகள், அழிவுகள் மற்றும் அரசியலை மாற்றியமைப்பது என்பன தொடர்ச்சியான போர் சோர்வுக்குள் அடிபணிவது எளிது. ஆனால் ரஷ்சியா-உக்ரைன் போர் ஒரு வருடத்திற்குப் பிறகும், முடிவின்றி பலம் பெறுவதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்துக்குச் செல்வதற்கு முன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக ஒரு திடீர் விஜயம் செய்தார். இது உக்ரைனை உளவியல்ரீதியாக யுத்தம் மீதான சோர்வை தளர்த்துவதாக அமைய கூடியது. அவ்வாறே பெப்ரவரி இறுதியில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பலத்தை அதிகரிப்பதைக் குறிப்பதாக ஒரு முரண்பாடான உரையை நிகழ்த்தினார். இவை போரின் நீடிப்பையே உறுதி செய்கின்றன. ரஷ்சியா உக்ரைன் போர் உலகெங்கிலும் தொடர்ச்சியாக அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது. எனினும் முழுமையாக உலகம் நாடுகள் ஒருங்கிணைந்து ரஷ்சியா-உக்ரைன் போரை தடுக்க முன்வர தயாரில்லாத நிலையிலேயே காணப்படுகின்றது. இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரில் உலக அரசுகளின் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவாக எரிசக்தி செலவுகள், உணவு விலைகள் மற்றும் பொருளாதாரங்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்சியா ஆகிய இரண்டு நாடுகளிலுமேயே 100,000க்கும் மேற்பட்டோர் உயிர்களை இழந்துள்ளனர். எனினும் போர் நிறுத்தத்துக்கான ஆரோக்கியமான நகர்வுகள் சர்வதேச அரசியல் களத்தில் அவதானிக்க முடிவதில்லை மாறாக துருவ காட்சிப்படுத்தல்களும், ஓர் தளத்துக்கான இராணுவ ஆயுத உதவிகளின் குவிப்புமே அதிகரிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்மையில், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உக்ரைனுக்கு இராணுவ போர் டாங்கிகளை அனுப்ப ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்சியா கோபமாக பதிலளித்து, இந்த முடிவை மிகவும் ஆபத்தானது என்று அழைத்தது மற்றும் மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்வதாக அறிவித்தது. இது போரினை நிறுத்துவதனை கடந்து அதிகரிப்பதாகவே அமைகின்றது.
மேலும், மார்ச்-01 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற சிறப்பு அவசர அமர்வில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு ரஷ்யா-உக்ரைன் தொடர்பான பார்வை உலக அரசியலில் சிதறி காணப்படுவதனை வெளிப்படுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம், 'ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 2, பத்தி 4ஐ மீறும் வகையில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்சிய கூட்டமைப்பின் ஆக்கிரமிப்பை வலுவான சொற்களில் கண்டிக்கிறது மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று முடிவு செய்கிறது.' குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 141 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. ஐந்து நாடுகள் எதிராக வாக்களித்தன. மேலும் 35 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐ.நா பொதுச்சபை தீர்மானம் ரஷ்யாவிற்கு தெளிவான அடையாள தோல்வியை விளைவித்த போதிலும், உலகம் ரஷ்சியா-உக்ரைன் போரில் ஒரே தளத்தில் இல்லை என்பதே உறுதி செய்யப்படுகின்றது.
சமகால சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தீர்மானத்திற்கு எதிராக இரண்டு நாடுகள் வாக்களித்தன. பத்து நாடுகள் வாக்களிக்கவில்லை. பதினான்கு நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. இம்முடிவுகள் பிராந்திய பிரிவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இப்பின்னணணியில் நீளும் ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில் உள்ள உலக நாடுகளின் போக்கினை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, ரஷ்சியா உக்ரைன் மீது படையெடுத்தபோது, மேற்கு நாடுகள் பெரும்பாலும் ரஷ்சியாவை நேரடியாக உறவுகளை பேணுவதிலிருந்து விலகின. படையெடுப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை ரஷ்சிய அதிகாரிகளுடனான பெரும்பாலான அரசாங்க-அரசாங்க தொடர்புகளை இரத்து செய்யும்படி துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. பைடன் நிர்வாகம் ரஷ்சியாவுடன் இருதரப்பு மூலோபாய ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தது. அமெரிக்காவை ஒத்த நடைமுறைகளையே ஐரோப்பாவும் பின்பற்றியது. பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களும் ரஷ்சியாவுடனான தங்கள் தொடர்புகளை தளர்த்தி கொண்டனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் போன்றவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அணுகுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக ஏளனம் செய்யப்பட்டார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் ஆரம்பத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அல்லாத மேற்கத்திய சக்திகளை தங்கள் நிலைப்பாட்டிற்கு மாற்ற வற்புறுத்தினார்கள். பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸை ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் சங்கடப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. எனவே ரஷ்சியாவுடனான மேற்கத்திய இராஜதந்திரம் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களில் பலதரப்பு ஈடுபாடு போன்ற சில விதிவிலக்கான பிரச்சினைகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் மறுதளத்தில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளதுடன், உக்ரைன் ஜனாதிபதியுடனான விசேட சந்திப்புக்களையும் தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தி வந்துள்ளனர்.
இரண்டாவது, மேற்கு அல்லாத நாடுகள் பலதும் உண்மையில் உக்ரைன் மீது அனுதாபத்தையே காட்ட முயலுகின்றனர். மாறாக ரஷ்சியாவிற்கு எதிரான விம்பத்தை உருவாக்க தயாரில்லை. கடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 193 உறுப்பினர்களில் 141 பேர் ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து வாக்களித்தனர். அந்த எண்ணிக்கையில் ஐ.நா.வில் உள்ள அனைத்து பிராந்திய குழுக்களின் பெரும்பான்மையினரும் அடங்குவர். இந்த எண்ணிக்கையானது ரஷ்சியா சுயமாக விவரித்த உக்ரைனிய பிரதேசங்களை இணைத்ததையே நிராகரித்துள்ளன. எனினும் பெரும்பாலான மேற்கு அல்லாத நாடுகள் ரஷ்சியா மீது பொருளாதார தடைகளை விதிக்கவில்லை. சீனா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட கிழக்கில் உள்ள சில பெரிய அரசுகள் ஐநா மன்றங்களில் ரஷ்சியாவை விமர்சிக்கும் தீர்மானங்களில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ரஷ்சியா வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 2023-ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்தபோது, உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள் வழங்குவது ரஷ்சியாவை மண்டியிட செய்யும் நோக்கத்துடன் இருப்பதாக தென்னாப்பிரிக்க பிரதிநிதி கூறினார். பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் ரஷ்சியாவிற்கு ஆதரவாக இல்லை. மாறாக, அவர்கள் ரஷ்சியாவுடனான தங்கள் உறவுகளை அடிப்படையில் முறித்துக் கொள்ளாமல், உக்ரைனுக்கு ஒரு அளவு ஆதரவை வழங்குவதன் மூலம், அவர்கள் போருக்கு எதிராக தங்கள் பந்தயங்களைத் தடுப்பதாகத் தெரிகிறது.
மூன்றாவது, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் போருக்குப் பிறகு உலக ஒழுங்கின் எதிர்காலத்தை உருவாக்க முயற்சிப்பதால், பனிப்போரின் போது அணிசேரா இயக்கத்தைப் போலவே மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் ஒரு புதிய கூட்டை உருவாக்குவதாக பலர் கருதுகிறார்கள். குறிப்பாக அணிசேரா இயக்கத்தின் தலைவர்களாக இருந்த எகிப்து, கானா, இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் ரஷ்யா-உக்ரைன் போரில் ஒதுங்கி நிற்கும் நிலை காணப்படுகின்றது. அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்சியாவிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், தென்பூகோளத்தில் உள்ள எந்த நாடுகளும் அவற்றில் கையெழுத்திடவில்லை. இந்நிகழ்வுகளின் பின்னணியில் சீரமைக்கப்படாத இயக்கத்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். நேட்டோவின் எழுச்சியை குறிப்பிட்டு கருத்துரைத்த சர்வதேச நெருக்கடி குழுவின் ஐ.நா. இயக்குநர் ரிச்சர்ட் கோவன், 'பனிப்போர் அரசியல் போன்ற தோற்றத்திற்கு திரும்புவதைப் பார்க்கும்போது, மக்கள் பனிப்போர் கருத்தியல் கருவிப்பெட்டியை அடையத் தொடங்குவது மிகவும் இயல்பானது' எனத்தெரிவித்துள்ளார். 1960களின் அணிசேரா இயக்கம் நடுநிலைமை பற்றியது அல்ல. போரிடும் வல்லரசுகளுக்கிடையில் சிக்கிய வளரும் நாடுகளுக்கு இது ஒரு ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரலை முன்வைத்தது. 21ஆம் நூற்றாண்டிற்கான இதேபோன்ற தளம் இன்னும் உருவாகவில்லை, ஆனால் உலகின் பெரும்பான்மையான மக்கள் உலகளாவிய தெற்கில் வாழ்கின்றனர் மற்றும் உக்ரைன் போர் உலகின் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையே பதட்டங்களை உயர்த்துகிறது. இப்பின்னணியில் அணிசேரா கருத்தியல் சாத்தியம் என்பதற்கான அறிகுறிகளையே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நான்காவது, 2022-பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சில ஆய்வாளர்கள் மேற்கு நாடுகளுக்கு வெளியே சில நாடுகள் உக்ரைனுக்கு உண்மையான ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். எனினும் யாதர்த்தமான பார்வையில் மேற்கு அல்லாத பல நாடுகள் இம்மோதலுக்கு வெளியே நிற்கவே விரும்புகின்றார்கள். இதை ஒதுக்கி வைத்துள்ளனர். உண்மையில், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உக்ரைனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவையே வழங்கியுள்ளனர். அதிலும் உக்ரைனின் இழப்பு சார்ந்த மனிதநேய ஆதரவு என்ற மட்டுப்பாட்டுடனேயே ரஷ்யா-உக்ரைன் போரில் தொடர்புறுகின்றனர். மற்றும் ரஷ்யாவின் போருக்கு மேற்கு நாடுகளே காரணம் என்று பரிந்துரைத்துள்ளனர். அமெரிக்க அரசறிவியலளர் மியர்ஷைமர் ஒரு வெளியுறவுக் கொள்கை யதார்த்தவாதி, அதாவது சர்வதேச அமைப்பில் அதிகாரம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதில் அவர் முதன்மையாக அக்கறை கொண்டுள்ளார். மியர்ஷைமரின் பார்வையில், புட்டினைப் பற்றி தனித்தன்மை எதுவும் இல்லை. அவரது பதவியில் இருக்கும் எந்த ஒரு பெரும் சக்தியின் தலைவரும் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அவர் நடந்துகொண்டது போல் நடந்து கொள்வார் என்பதாக குறிப்பிடுகின்றார். மேலும், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புடின் உக்ரைனின் மற்ற பகுதிகளை ஆக்கிரமித்தபோது, மேற்கு, குறிப்பாக அமெரிக்கா, நெருக்கடிக்கு முக்கியமாக பொறுப்பு என்று மீர்ஷெய்மர் வாதிட்டார். குறிப்பாக நேட்டோ விரிவாக்கத்தின் விளைவாக, ரஷ்சிய வன்முறையை வெறும் கணிக்க முடியாததாக ஆனால் தவிர்க்க முடியாததாக ஆக்கியது என்கின்றார்.
ஐந்தாவது, ரஷ்சியா, அது ஒதுக்கிவைக்கப்பட்ட நிறுவப்பட்ட இடங்களைத் தவிர்த்து புதிய இராஜதந்திர மன்றங்களைத் தேடியது மற்றும் சில சந்தர்ப்பங்களில் உருவாக்குவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. ரஷ்சியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பிரச்சாரத்தில் சுவிட்சர்லாந்து இணைந்தபோது இராஜதந்திரம் மாறுகிறது என்பது முதலில் தெளிவாகத் தெரிந்தது. ரஷ்சியா பாரம்பரியமாக நடுநிலையான நாட்டிற்கு எதிராக வசைபாடியது. பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுவிஸ் சலுகைகளை ரஷ்சியா மறுத்துவிட்டது. மேலும், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரஷ்சிய தூதர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரஷ்சியா கோபமடைந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை வேறொரு நகரத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியமற்ற யோசனையை மாஸ்கோ முன்வைத்துள்ளது. இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு வளர்ந்து வரும் நாடுகளின் ஆதரவைக் குறிக்கிறது. சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற சர்வதேச இராஜதந்திரத்திற்கான பாரம்பரிய இடங்களை ரஷ்சியா நிராகரித்தது புதிய இடைத்தரகர்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. ரஷ்சியா உக்ரைனில் போர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் துருக்கிய மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டது. உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான 2022-ஜூலை ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் முக்கியமானது. வசந்த காலத்தில், அங்காரா ஏற்கனவே ஆரம்ப ரஷ்சிய-உக்ரைனிய அமைதிப் பேச்சுக்களை நடத்தியது. 'இஸ்தான்புல் செயல்முறை' என்று பெயரிடப்பட்டது. இந்த மறுசீரமைப்பின் நீண்டகால விளைவுகள் மேற்குலகிற்கு சாதகமாக இருக்காது. மாஸ்கோ நீண்ட காலமாக சர்வதேச இராஜதந்திர விதிகளை மாற்ற முயன்று வருகிறது, மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான ஒரு மோசமான உறவு அவ்வாறு செய்வதற்கான வழியை வழங்குகிறது.
எனவே, ரஷ்சியா-உக்ரைன் போரின் போக்கு புதிய தளங்களை பல்வேறு கோணங்களில் உருவாக்குகின்ற போதிலும், போர் நிறுத்தத்துக்கான அரசுகளின் ஒருங்கிணைந்த முன்னகர்வுகளின்மை ரஷ்யா-உக்ரைன் போர் நீள்வதற்கான முனைப்புக்களையே வெளிப்படுத்துகின்றது. மேலும், உலகின் அமைதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஒற்றைமைய உலக ஒழுங்கில் உலகின் அமைதியை உறுதிப்படுத்துவதாக மார்தட்டும் அமெரிக்காவோ ரஷ்யா-உக்ரைன் போரை தடுத்து நிறுத்த இயலாத சூழல், சர்வதேச அரங்கின் போலிகளையும் மாற்றங்களையுமே அடையாளப்படுத்துகின்றது.
Comments
Post a Comment