தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடியும் தமிழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசம் மற்றும் பிராந்திய ரீதியில் பலமான பிணைப்பை கட்டமைக்க முடியவில்லை என்பது நீண்டகால உரையாடலாகவே காணப்படுகின்றது. மறுதளத்தில் பலமான உறவுகளை ஈழத்தமிழரசியலின் முதிர்ச்சியற்ற நகர்வுகளால் இழக்கின்ற பரிதாபங்களும் அரங்கேறுவது தமிழர்களின் துர்ப்பாக்கியமாக காணப்படுகின்றது. கைக்கெட்டும் நிலையில் தன்னியல்பாக கிடைப்பவை மீது காணப்படும் அலட்சியப் போக்கானது, அது பிறர்வசமாகின்ற போது, அதனை எண்ணி வருத்தப்படுவது மனித இயல்பாகும். ஈழத் தமிழர்களது தொப்புள்கொடி உறவின் வழியே, மிகப்பெரும் ஆதரவு தளமாக காணப்படும் தமிழ்நாட்டை நோக்கி இலங்கை அரசின் பார்வை பதிந்துள்ளதை தொடர்ந்து, ஈழத்தமிழர் பரப்பிலும் அவ்வாறானதொரு வருத்தப்பாடு மேலோங்கி வருவதனையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மீனவர்களை மையப்படுத்தி தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமான நெருக்கடியே, தமிழக-ஈழத்தமிழர்கள் உறவின் பின்னடைவுகளுக்கும் ஆதாரமாகின்றது. இக்கட்டுரை தமிழக-ஈழத்தமிழ் மீனவர்களுக்கிடையிலான நெருக்கடிசார் அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றின் பிணைப்புகள் பல நூற்றாண்டுகளாக தமிழக மற்றும் ஈழத்தமிழரிடையே இணக்கமான சகவாழ்வை வாழ உதவியது. எனினும் சமகால மீனவ சமூகங்களின் வாழ்வாதார நெருக்கடி இரு சமூகங்களிடையேயான நெருக்குவாரங்கள் தமிழக மற்றும் ஈழத்தமிழர்களிடையே பிளவுகளையே உருவாக்கி வருகின்றது. இலங்கையில் வடக்கு மாகாண மக்களுக்கு மீன்பிடித்தல் மிக முக்கியமான வருமான ஆதாரமாகும். நீடித்த இனமோதல்களின் போது மீன் பிடித்தல் வெகுவாகக் குறைவடைந்திருந்தது. பாக்கு நீரிணையின்  இலங்கைப் பகுதியில் மீன்பிடிக்கத் தடை, இலங்கை மீனவர்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்றமை, இந்திய இழுவைப்படகு உரிமையாளர்களுடன் அவர்கள் வேலை செய்தல், புலிகளுடன் தொடர்புபட்டிருப்பதான குற்றச்சாட்டுடன்  இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுதல் என்பன   இரு தரப்பு உறவுகளில் கணிசமான அழுத்தங்களைக் கொண்டுவந்திருந்தது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில், ஈழத் தமிழ் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிப்பதை  ஆரம்பிக்க  விரும்பினர். ஆனால் இந்திய மீனவர்களின் கண்மூடித்தனமான ஊடுருவல்  மற்றும் அவர்களின் ஆபத்தான நடைமுறைகள் குறிப்பாக இழுவைப்படகின் பயன்பாடு என்பன தொடர்ந்து ஈழத்தமிழ் மீனவர்களின் மீன்பிடி செயற்பாடுகளுக்கு பெருந்தடைகளாக காணப்படுகின்றது. 

இந்நெருக்கடிக்கு தீர்வைக் கண்டுபிடிப்பது பெரும் இழுபறியாக காணப்படுகின்றது. நோர்வே மத்தியஸ்தத்துடன் போர்நிறுத்தம் அமுலிலிருந்த  காலத்தில், கலாநிதி விவேகானந்தன் தலைமையில்  அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டணி(யுசுஐகு) எனும் அமைப்பு இரு நாட்டு மீனவர்களிடையே ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. முதன்முறையாக, 2004இல்,   இழுவை படகு மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டது. எனினும் இரு தசாப்தங்களை அண்மிக்கும் சூழலிலும் புரிந்துகொண்ட யதார்த்தத்தை நிறைவேற்ற இந்திய மீன்பிடி முதலாளிகள் தயாராகவில்லை. இழுவை படகு  மீன்பிடி இன்னும் தொடர்கிறது. 2005ஆம் ஆண்டு கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை தனது கடற்பரப்பில் அனுமதி பெற்ற மீன்பிடித்தலுக்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க முதன்முறையாக ஒப்புக்கொண்டபோது, இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தமிழக அரசு அதை வரவேற்று விரிவான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். இரு திராவிடக் கட்சிகளும் தீர்வு காண்பதை விட ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிடும் சூழலே காணப்படுகின்றது. கடந்த பெப்ரவரி(2023) மாதம் ஈழத்தமிழர்களும் தமிழக மக்களும் ஒன்றுசேரும் கச்சதீவு அந்தோனியர் தேவாலய திருவிழாவில் தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர்களுக்கிடையிலான குழும சந்திப்பு வழமை போல் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஈழத்து மீனவர் ஒருவர் இந்திய இழுவை மீன்பிடி முதலாளிகளின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதரம் சிதைக்கப்படுவதாக அழுது கெஞ்சிய நிகழ்வும் அரங்கேறியது. எனினும் குறித்த சந்திப்பு அன்றைய உரையாடலுடன் நீர்த்து போவதே வழமையான நிகழ்வாகின்றது. மறுதலையாய் தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடி ஆழமாக தமிழத்தையும் ஈழத்தமிழர்களையுமே பிளவுபடுத்தி செல்கின்றது. இதனை நுணுக்கமான அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, ஈழத்தமிழருக்கான நாடுகடந்த பெரும் ஆதரவுத்தளம் தமிழகத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. குறிப்பாக இலங்கை அரசு கட்டமைப்புக்குள் தமிழர்களின் இறைமைப்போராட்டம் குறுகிய தளத்திலேயே பயணிக்கக்கூடிய நிர்ப்பந்தத்துக்குள் காணப்படுகின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் பரந்த தளம் தமிழகத்திலயே வரலாற்றுரீதியாக ஒருங்கிணைக்கப்படுகின்றது. செல்வநாயகம் காலத்து அரசியல் தொடக்கம் இயக்கங்களின் ஆயுதப்போராட்டம் தொட்டு தற்போது 2009களுக்கு பின்னரான புலம்பெயர் அரசியலுக்குமான பரந்த தளத்தை தமிழகமே ஒருங்கிணைத்து வருகின்றது என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும். இப்பின்னணியில் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் சக்திகள் தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவை பிளவுபடுத்துவதனை முதன்மையான நோக்கமாக கொண்டு செயலாற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதனை மையப்படுத்தியே தமிழக-ஈழத்தமிழ் மீனவர்களுக்கான நெருக்கடியும் தென்னிலங்கை அரசாங்ககங்களால் கையாளப்படுப்படுகின்றது. ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசியலில் உரிய வகிபாகத்தை வழங்க மறுக்கும் தென்னிலங்கை அரசாங்ககங்கள் தொடர்ச்சியாக மீன்பிடித்துறை அமைச்சை தனது அசைவுக்குள் இயங்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒப்படைப்பது அது வழி தென்னிலங்கை இராஜதந்திர நகர்வாகவே காணப்படுகின்றது.

இரண்டு, கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் உணர்வுபூர்வமாக ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் தமிழகத்தை இணைத்தவர்களாவார்கள். குறிப்பாக ஆயுதப்போராட்ட காலங்களில் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தற்கு ஆதரவளித்தோர் என்ற குற்றச்சாட்டிலேயே பல தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இன்று ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக கூறியே தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டு கொலை செய்வதுடன், கைது செய்து துன்புறுத்துகிற நிலைமை காணப்படுகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துக் கொண்டு சென்று இலங்கை சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 இலட்சம் பெறுமதியானவை. தமிழக மீனவர்களும் வாழ்வாதார தேவைகளுக்காகவே மீன்பிடி தொழிலை உயிர் அச்சுறுத்தலுடன் மேற்கொள்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. இது கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிய ஆதரவை மலினப்படுத்துவதுடன், தமிழக மீனவர்களின் எண்ணங்களில் ஈழத்தமிழர்களை எதிரிகளாக்கும் செயலாக அமைகின்றது. மீனவர்களுக்குள் பகைமை அதிகரிப்பது என்பது அதுவழி தமிழகம் ஈழத்தமிழர்களை தூரப்படுத்தவே வழிசெய்யும்.

மூன்று, ஈழத்தமிழரசியல் தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் எண்ணங்களுக்குள் தமிழகத்தை பார்க்காது ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவாக தமிழகத்தை அணுகவேண்டிய தேவை காணப்படுகின்றது. சமீப காலங்களில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் ஈழத்தமிழ் மீனவர்களை குளிர்விக்கும் பிரச்சாரமாக கருதி தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் ஒடுக்க வேண்டும் என சாரப்பட பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள். இதில் ஈழத்தமிழ் மீனவர்களும் கடந்த கால அனுபவங்களுடன் நிதானமாக ஈழத்தமிழ் அரசியல் தரப்பினரின் பிரச்சாரங்களை அணுக வேண்டும். ஈழத்தமிழர் அரசியல் தரப்பின் பிரச்சாரங்கள் செயற்hடுகளற்ற தேர்தலை மையப்படுத்திய பிரச்சாரங்களேயாகும். அண்மையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், 'வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில்  அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது' எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும்,  'ஒரு நாட்டின் மீனவர்களை இன்னொரு நாட்டின் எல்லைக்குள் தொழில் செய்ய அனுமதிப்பதாயின், மீனவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, கலந்தாலோசித்து, ஆராய்ந்து, அதன் பின்னரே இது தொடர்பில்  முடிவெடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினை நீண்ட வரலாற்றை கொண்டுள்ள போதிலும் நீண்டகாலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் ஏக பிரதிநிதித்துவத்தை பேணும் தமிழரசுக்கட்சியினர் குறித்த பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட வினைத்திறனான பேச்சுவார்த்தை முயற்சிகள் தேடலுக்குரியதாகவே காணப்படுகின்றது. எனவே ஈழத்தமிழ் அரசியல் தரப்பினரின் உரையாடல்கள் தேர்தல் பிரச்சாரங்களா அமைகின்றனவே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வையோ அல்லது தீர்வுக்கான முன்னாயர்த்தங்களையே கொண்டிருக்க போவதில்லை.

எனவே, தமிழக-ஈழத்தமிழ் மீனவர் விவகாரத்தை நுட்பமாக கையாள வேண்டிய தேவை தமிழ் தரப்புக்கு காணப்படுகின்றது. தமிழக மீனவர்களுக்கு ஈழத்தமிழ் மீனவர்கள் எதிரிகள் கிடையாது. இழுவை படகில் வந்து, பெரும் வலைகளை வீசி மீன் வளத்தை அழிக்கும் மீன் பிடி முறையைத்தான் கடுமையாக எதிர்க்கும் நிலை காணப்படுகின்றது. ஆக, இரு பகுதி மீனவர்களும் தங்களது பாரம்பரிய மீன் பிடி உரிமை குறித்து தெளிவாகவே இருக்கிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளாக நிம்மதியாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த ஈழத்தமிழ் மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன் பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பல தமிழக மீனவர்களும் தங்கள் முதலாளிகளின் தூண்டுதலிலேயே தாங்கள் செயற்படுவதாக வாக்குமூலங்களை பகிர்ந்துள்ளனர். அதிகார சக்திகளின் நலனுக்குள்ளேயே தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடி பிணைபட்டு தமிழக-ஈழத்திழர் உறவை சிதைக்க வழிசெய்கின்றது. தமிழக, ஈழத்தமிழ் மீனவர்களுக்கு இடையே அல்ல பிரச்சனை. எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதும் அல்ல பிரச்சனை. தொழில் நுட்ப ரீதியாக பெரிய அளவில் வலைகளைப் போட்டு, இருக்கும் மீன் வளத்தை அள்ளிக்கொண்டு போகும் பெரு நிறுவன மீன் பிடித்தல்தான் இரு பகுதி மீனவர்களுக்கும் எதிரான பிரச்சனை. இதனை நுட்பமாக கையாள்வதிலேயே தமிழர்களின் உரிமைப்போரட்டத்தின் இருப்பின் தளம் பாதுகாக்கப்படக்கூடியதாக அமையும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-