ஜெனிவா களத்தில் இலங்கை அரசியல்! உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழரியல்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் என்பதனூடாக சர்வதேச நெருக்குவாரத்தை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான மூலோபாய நகர்வுகளால் நெருக்கடிகளை கடந்து செல்லும் சூழலும் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்தங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வருடந்தோறும் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகளால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், தீர்மானங்களின் இயங்கு தன்மை தொடர்பில் சர்வதேச சக்திகள் இறுக்கமான முடிவுகளை தொடராமை என்பது இலங்கை அரசாங்கத்தின் மூலேபாய நகர்வின் வெற்றியாகவே அவதானிக்கப்படுகின்றது. மறுதளத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு என்பது சர்வதேச பொறிமுறையில் இலங்கையின் மனித உரிமை என்ற உரையாடலுக்குள்ளேயே பொதிந்துள்ளது. எனினும் இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் ஆரோக்கியமான அரசியல் விழிப்பினை கொண்டிருக்கவில்லை என்பதனையே கடந்த ஒரு தசாப்த கால நகர்வுகளும் உணர்த்தி உள்ளது. குறிப்பாக 2023இன் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால மீளாய்வு (UPR), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) மீளாய்வு மற்றும் 52வது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்களில் இலங்கை அரசாங்கம் வெளியுறவுத்துறை அமைச்சின் தலைமையில் மனித உரிமை நடவடிக்கைசார் அறிக்கையிடலை மேற்கொள்கிறது. எனினும் ஈழத்தமிழரசியல் பரப்பில் தேர்தல் பிரச்சாரங்களும் கூட்டுக்களின் பிளவுகளுமே முதன்மையான உரையாடலை பெற்றுள்ளது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் ஜெனீவா கையாள்கை நடவடிக்கைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஓன்று, இலங்கையின் மனித உரிமைகள் பதிவேடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால மீளாய்வு செயற்குழு நான்காவது முறையாக பெப்ரவரி-1, 2023அன்று ஜெனிவாவில் அதன் 42வது அமர்வின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. இலங்கை தூதுக்குழுவின் தலைவர் என்ற வகையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் இருந்து முன் பதிவு செய்யப்பட்ட காணொளி அறிக்கை மூலம் கருத்துக்களை வெளியிட்டார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தலைமையில், தனிப்பட்ட பிரதிநிதிகள் குழு ஜெனீவாவில் இந்த மதிப்பாய்வில் பங்கேற்றது. குறித்த மீளாய்வு கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையில் நல்லிணக்கம் தேசிய ஒற்றுமை போன்ற விடயங்கள் முதன்மையான நிலையை பெற்றிருந்தது. மேலும் நல்லிணக்கத்தை மையப்படுத்தி உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, சமூக நீதி ஆணைக்குழுவை நிறுவுதல், வெளிநாட்டு இலங்கையர்களுக்கான அலுவலகம் நிறுவப்படல் போன்ற விடயங்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும் ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை தொடர்பான உலகளாவிய கால மீளாய்வு அறிக்கையில் ஒரு சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்தை ஆதரித்திருந்தன. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவான கோர் குழுவின் பிரதிநிதி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜெனீவாவிற்கான இங்கிலாந்து தூதுவர் சைமன் மேன்லி விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் அரசியல் உள்வாங்கலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் தொடர்பான தீவின் மிக சமீபத்திய அர்ப்பணிப்புகளை கோர் குழு வரவேற்றது. மேலும், உலகளாவிய கால மீளாய்வு செயல்பாட்டில் இலங்கையின் நேரான ஈடுபாட்டையும் இது ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் 6வது காலமுறை மீளாய்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இலங்கை 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐந்து கால அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. மற்றும் 1983, 1991, 1995, 2003 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஐந்து மதிப்பாய்வுகளில் பங்கேற்றுள்ளது. ஆறாவது அறிக்கை பெப்ரவரி-22, 2019அன்று மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் குழு 18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை செயல்படுத்துவதை கண்காணிக்கிறது. மீளாய்வு கூட்டம் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தலைமையில் நடத்தப்படும். ஜனாதிபதி செயலகம், பொது பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுகாதார அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொழும்பில் இருந்து உயர் அதிகாரிகள் மீளாய்வுக்கு இணைவார்கள். குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மார்ச்-07அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் 2007ஆம் ஆண்டு 56ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை அரசியலபை;பினுள் சாதாரண சட்டமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இலங்கை அரசாங்கம் குறித்த சமவாயத்தின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை அங்கீகாரத்தை தவிர்த்திருந்தது. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றில் வாழும் மக்களிடையே இனக் குரோதங்கள், மதங்களிடையேயான வெறுப்புகள் போன்றவற்றை உருவாக்குதல் மற்றும் மனிதகுல விரோதங்களைத் தூண்டுதல் போன்ற குற்றங்களுக்குக் கடும் தண்டனை விதிக்கும் உறுப்புரைகள் சமவாயத்தின் பிரிவு 3(1)இல் உள்ளன. ஆனால் இலங்கையின் 56ஆம் இலக்கச் சட்டத்தில் உறுப்புரை 1 இல் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற பகுதி நீக்கம் செய்யப்பட்டே இணைத்துள்ளது. மேலும், சமவாயத்தின் பிரிவு 3இன் நடைமுறையாக்கம் என்பதும் இலங்கையில் இதுவரை சிங்கள பௌத்தத்திற்கான அரணாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிரிவின் கீழ் அமரசிங்க மற்றும் சத்குமார இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பௌத்தர்கள் வழிபடும் கண்டியில் உள்ள புனிதப் பல்லக்கு குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக 2023இல் அமரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டில், எழுத்தாளர் சக்திகா சத்குமார 'அர்தா' (பாதி) என்ற தலைப்பில் ஒரு கற்பனையான சிறுகதையை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார். பௌத்த விகாரைகளில் பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிப்பதால், இந்தக் கதை பௌத்தம் மற்றும் பௌத்த மதகுருமார்களை புண்படுத்துவதாகக் கருதப்பட்டது. பௌத்த மதத்தை புண்படுத்துவதாக கருதப்படும் பேச்சுகளை தண்டிக்கவே குறித்த சட்டம் நடைமுறையாக்கத்தை பெற்றுள்ளது. நிறைவேற்றப்பட்ட 15 ஆண்டுகளில், இலங்கையின் பிற தேசிய தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய ஒருவரைக் கூட தண்டிக்க வழிவகுக்கவில்லை. 2014இல் அளுத்கமவிலும், 2017இல் ஜிந்தோட்டிலும், 2018இல் திகன, அம்பாறையிலும், 2019இல் கம்பஹா மற்றும் குருநாகலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் 2019 நீராவியடி பிள்ளையார் கோவிலில் பௌத்த பிக்குவின் உடல் தகனம், 2022-2023இல் குருந்தூர் ஆதிசிவன் ஆலய மலையில் பௌத்த விகாரை நிர்மானம் ஆகியவற்றை நீதிமன்ற தீர்ப்புக்களை மீறி மேற்கொண்டவர்கள் எந்த விதமான பொறுப்புக்கூறலையும் எதிர்கொள்ளவில்லை. இவை உரிய முறையில் ஐ.நா மனித உரிமைகள் நிபுணத்துவ குழுவிற்கு உரிய தரப்பினரால் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது.
மூன்று, பெப்ரவரி-27 தொடக்கம் ஏப்ரல்-04 வரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றது. 51வது கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, 52வது கூட்டத்தொடரில், இலங்கை விடயம் முக்கிய நிகழ்ச்சி நிரலில் இடம்பெற மாட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா.வில் தமது வலுவான பரப்புரைகளை மேற்கொள்வதற்கான குழுவை ஒழுங்கு செய்துள்ளது. ஐ.நாவிற்கான இலங்கை வதிவிட பிரதிநிதியே இக்கூட்டத்தொடருக்கு இலங்கை சார்பான தலைமையை வழங்கியுள்ளார். அவர், நாட்டின் அனுமதியின்றி இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஐநா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றுவது பயனற்றது என ஜெனிவா கூட்டத்தொடரின் ஆரம்ப உரையாடலில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், 'சமீபத்திய தீர்மானம் 51ஃ1, சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் எங்கள் அனுமதியின்றி, தொடர்ந்து உதவாத தீர்மானங்களாக ஐ.நா மனித உரிமை பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் வெளிவிவகார அமைச்சர் கூறிய இலங்கையின் நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஆக்கபூர்வமான மனப்பான்மையில்தான், நாட்டில் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கடந்த மாதம் உலகளாவிய கால மீளாய்வு செயல்முறையில் இலங்கை பங்கேற்றது. அதனை ஒரு மிக முக்கியமான கருவியாக நாங்கள் கருதுகிறோம், ஆக்கபூர்வமான மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழ்நிலையில் சகாக்களுடன் ஈடுபடுவதன் மூலம் ஒருவருக்கொருவர் மனித உரிமைகள் நிலைமையின் முன்னேற்றத்தை பரஸ்பர மதிப்பீடு செய்ய நாடுகளுக்கு உதவுகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் எங்களின் 6வது காலகட்ட அறிக்கையை இந்த மாத இறுதியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது அர்த்தமுள்ள உரையாடலை இலங்கையும் எதிர்பார்க்கிறது.' எனத்தெரிவித்திருந்தார்.
ஐ.நாவின் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது, உலகளாவிய கால மீளாய்வு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் 6வது மீளாய்வில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளமையையே வெளிப்படுத்துகிறது. எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொடர்புறு நிறுவனங்களின் சாதகமான வெளிப்பாடுகளை கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவை களத்தையும் நீர்த்துப்போகச்செய்ய செய்யக்கூடிய உத்தியாகவே நிரந்தரப் பிரதிநிதியின் உரையாடலும் அமையப்பெற்றுள்ளது. சர்வதேச அரசியல் உரையாடல்களிலும் நெருக்கடி காலப்பபகுதியினுள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலப்பகுதியில் முன்னேற்றங்களான சமிக்ஞைகள் வெளிப்படுவதான கருத்துக்களை முன்வைப்பதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜப்பானிய தூதரக அரசியல் ஆலோசகரின் கருத்தாடலில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் கீழ் நல்லிணக்கத்துக்கான வாய்ப்பு காணப்படுவதாகவே அமைந்திருந்தது. மேலும் கோர் குழுவின் பிரதிநிதி சைமன் மேன்லியின் அறிக்கையில், இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் உள்ள உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாயினும், தேசிய இனப்பிரச்சினை சார் தளங்களில் முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை களத்தில் தமிழர்களின் கோரிக்கை வலுவிழக்கப்படுவதனையே உறுதி செய்கின்றது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச வெளியில் காணப்படும் மனித உரிமை நெருக்கடிகளுக்கு வினைத்திறனாக பதிலளிப்பதற்கு சமாந்தரமாக, தமிழரசியல் தாரப்பினர் இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இன ஒடுக்குமுறைகளை சரியான முறையில் காட்சிப்படுத்த தவறி வருகின்றார்கள். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தாம் உரிமைக்காக போராடும் ஓர் தேசிய இனத்தின் பிரதிநிதிகள் என்ற தளத்தினை மறந்து சுயநல அரசியல் தேவைகளுக்கும் தேர்தல் அரசியல் இலக்குகளை மையப்படுத்தியே வீரியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அபிவிருத்திக்கான களமாக உள்ள உள்ளூராட்சி கட்டமைப்பு தேர்தல் அரசியலுக்காகவே பல கூறாக உடைந்து அவதூறு பிரச்சாரங்களை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இத்தளத்திடம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை சார்ந்த நலனை தொடர்ச்சியாக தமிழர்கள் பாரப்படுத்துவது தமிழினத்தின் அழிவுப்பபாதையாகவே அமைகின்றது. தமிழ் சிவில் சமூகத்தினரின் செயற்பாடுகளும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒத்தனவாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பினாமிகளாக அவர்களது எண்ணங்களை பொது அரங்கில் சிவில் சமூக செயற்பாடு என்ற தளத்தில் சேர்ப்பிப்பவர்களா என்ற சந்தேகங்களும் பொதுத்தளத்தில் வலுக்கிறது. ஒடுக்குமுறை அரசாங்கத்தின் சிவில் சமூகம் வலுவான செயற்பாட்டாளர்களாக காணப்படுகின்றார்கள். உலகளாவிய கால மீளாய்வு அறிக்கையில் சிவில் சமூகத்தினரின் அறிக்கை பதினேழு பக்கங்கள் மற்றும் பத்திகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
எனவே, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை நெருக்கடிக்கு எதிரான வலுவான மூலோபாய நகர்வுகளும், தமிழ் தரப்பின் மெத்தனப்போக்கும் ஜெனீவா களத்தில் தமிழர்களின் வாய்ப்புக்களை மலினப்படுத்திக்கொண்டே தான் செல்கின்றது. இலங்கை தனது புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டு 'நாடு அணிசேராது அல்ல, மாறாக பல அணிசேர்க்கை' என்ற வெளியுறவுக்கொள்கையில் சர்வதேசத்தை கையாள்வதனூடாக மனித உரிமை நெருக்கடிகளையும் தேசிய இனப்பிரச்சினை விவகாரங்கiயும் இலாபகரமாக நகர்த்தி செல்கின்றது. தமிழரசியல் தரப்பினர் பிரதேச சபைகளுக்கும் மாநாகர சபைகளின் மேஜர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் போட்டிக்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச்செய்யும் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே பயணிக்கின்றார்கள்.
Comments
Post a Comment