வலுவற்ற உள்ளகபொறிமுறையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும் -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள், 2009ஆம் ஆண்டில் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேச திணிப்பாக தொடர்ச்சியாக நிலைபெற்று வருகின்றது. எனினும் நல்லிணக்கத்தின் செயற்பாடற்ற நிலைமையையே, அரச ஆதரவுடனான சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்க செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றது. அரசிற்கு தனித்துவமான இறைமை எனும் மேலான அதிகாரத்தை கூறிக்கொண்டு சிங்கள பௌத்த அரசு மேற்கொள்ளும் இனமேலாதிக்க செயற்பாடுகளை சர்வதேச அரசுகளும், மனித உரிமை நிறுவனங்களும் மௌனித்து அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தி கடந்து செல்வது, இலங்கை ஏனைய தேசிய இனங்கள் வாழத்தகுதியற்ற நிலைமையையே உணர்த்துகின்றது. அரசு தனது முழுமையான கட்டமைப்பினூடாகவே இன ஒடுக்குமுறை வரலாற்றை தொடர்கின்றது. கடந்த வாரம் நீதிமன்ற தீர்ப்பை மீறி இராணுவ பொலிஸ் ஆதரவுடன் வெடுக்குநாறி மலை மீதான விகாரை நிர்மாணிப்பு அதனையே உறுதி செய்கின்றது. எனினும் மறுதளத்தில் வடக்கிற்கு விஜயம் செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழர்கள் உள்ளக பொறிமுறையை ஏற்பதாக அறிக்கையிட்டுள்ளமை முரணாகவே அமைகின்றது. இக்கட்டுரை சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீதித்துறை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை பாராமுகமாக செயற்பட்ட சூழலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு தாராளவாத ஜனநாயக அரசியலமைப்பு உள்ளது. கோட்பாட்டு வடிவத்தில் தாராள ஜனநாயகம், இன தோற்றம் அல்லது மதம் பாராமல் அனைத்து தனிநபர்களுக்கும் சமமான குடியுரிமை உரிமைகள் வழங்கப்படுகின்றன மற்றும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. ஆனால் தாராள ஜனநாயகமாக முன்னிறுத்தப்படும் இலங்கையின் அரசியலமைப்பு, பௌத்தத்தின் பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட உள்ளடக்கங்களை இணைத்துள்ளது. இதன் விளைவாக நடைமுறையில், சிலர் மற்றவர்களை விட மேலானவர்களாக இருக்கிறார்கள். சமத்துவத்தை பொறிக்கும் நீதித்துறை விதிகள் பெரும்பாலும் நடைமுறையில் அவ்இயல்பை இழந்து விடுகின்றது. ஏனைய தேசிய இனங்களின் சம உரிமைகளை நிலைநிறுத்துவதில் அல்லது பாதுகாப்பதில் அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் பல சமயங்களில் பயனற்றது என நிரூபிக்கப்பட்டு, அதற்கு மாறாக, பாகுபாடான உடந்தையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களும் முஸ்லிம்களும் குறைந்த குடிமக்களாக இருப்பதன் சுமையை வழக்கமாக உணர்கிறார்கள். மொழி, கலாச்சாரம், மதம், நிலம், பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுச் சேவைகளுக்கான அணுகல் அல்லது பாதுகாப்புப் படைகள், நீதித்துறை மற்றும் அரசின் பிற ஆயுதங்களால் அவர்கள் நடத்தப்படும் விதத்தில் தேசிய இனங்கள் உணரும் பல பரிமாணங்கள் உள்ளன.
இலங்கை அரசியலமைப்பு மற்றும் அரச இயந்திரங்கள் கட்டமைக்கப்பட்ட இன ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாகவே நிறுவப்பட்டுள்ளது. 'பெரும்பான்மை தேர்தல் நடைமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிப்பட்ட குடியுரிமை உரிமைகளுக்கான மரியாதை மற்றும் ஒரு சமூகத்தின் மீது பெரும்பான்மை இனக்குழுவின் நிறுவனமயமாக்கப்பட்ட மேலாதிக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அரசின் ஒரு வடிவம்' இன ஜனநாயகத்தின் சுருக்கமான வரையறையை வழங்குகிறது. இந்த ஏற்பாட்டில், பகுதியளவு ஜனநாயக அம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு மேலாதிக்க இனக்குழு அரசைப் பெறுகிறது. இந்த மேலாதிக்கக் குழுவிற்கு வெளியில் இருப்பவர்கள் சமமான குடியுரிமை உரிமைகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள், மேலும் இது நடைமுறையில் தெளிவாகத் தாழ்ந்த உரிமைகள் மற்றும் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. இதனை சீர்செய்யக்கூடிய கட்டமைப்பை இன ஜனநாயகத்தின் நீதித்துறை கொண்டிருப்பதில்லை.
இலங்கை அரசின் இனஒடுக்குமுறை செயற்பாடுகளும் நீதித்துறையின் மௌனமும் இலங்கை இன ஜனநாயக அரசு என்பதையே அடையாளப்படுத்துகிறது. சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கையின் நீதித்துறை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், 'மோதலைத் தணிப்பதற்குப் பதிலாக, இலங்கையின் நீதிமன்றங்கள் சட்டத்தின் ஆட்சியை சிதைத்து இனப் பதட்டங்களை மோசமாக்கியுள்ளன.' எனக்குறிப்பிடுகின்றது. மேலும், 'இலங்கையின் நீதித்துறை இராணுவமயமாக்கலைக் கட்டுப்படுத்துவதற்கும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பதிலாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஆதரவான கூட்டாளிகளை நிலைநிறுத்தியுள்ளது. இராணுவ வெற்றி நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றால் நீதித்துறையின் விரிவான சீர்திருத்தம் மற்றும் எதிர்விளைவு அவசர சட்டங்களை மாற்றியமைப்பது அவசியம்.' எனக்குறிப்பிடுகின்றது. இலங்கையின் நீதித்துறை இனப்பிரச்சினையில் தேசிய இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது என்பதனை அறிவது அவசியமாக உள்ளது.
முதலாவது, சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பதிவாகியுள்ள இனக்கலவரங்கள் பலவும் தமிழர் மற்றும் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையாகவே அரங்கேற்றப்பட்டுள்ளது. வெளிப்போர்வையில் சிங்கள பௌத்த பேரினவாத காடையர்களால் தமிழர் மற்றும் முஸ்லீம்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ள போதிலும், பின்புலத்தில் குறித்த வன்முறைகளுக்கு இலங்கை அரசின் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் 1958, 1977, 1983, 2000, 2001, 2006, 2018ஆம் ஆண்டுகளில் தமிழர் மற்றும் முஸ்லீம்கள் மீது பாரபட்சமற்ற வகையில் சிங்கள பேரினவாதிகளால் மிலேச்சத்தனமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு வன்முறைக்கு எதிராகவும் உரிய விசாரணைகளை நிகழ்த்தி, சீரான தண்டனை முறைமையை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. இலங்கையின் நீதித்துறையும் குறித்த வன்முறைகளை சுயாதீனமாக விசாரிக்கவோ தண்டனைகளை உறுதிப்படுத்தவோ முன்வரவில்லை. 1977ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15-16 ஆம் திகதிகளிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட கலவரம் தொடர்பில் 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' என்ற நூலில் எட்மண்ட் சமரக்கொடி எழுதியுள்ளார். 'முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள-தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல. மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். ஏறத்தாழ 75 000 பேரை அகதிகளாக்கிய 1977 இனக்கலவரத்தின் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்' என எட்மண்ட் சமரக்கொடி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இனவழிப்பு செயல்களை இலங்கை அரசு சரியான நீதிப்பொறிமுறைக்குள் அணுகாமையே பேரழிவு யுத்தத்திற்கு வழிவகுத்தது. 1977 இனவன்முறை முற்றியிருந்த வேளையில் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னாள் பிரதம நீதியரசரான மிலானி க்ளோட் சன்சொனி தலைமையில் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். 'சன்சொனி ஆணைக்குழு' தன்னுடைய விசாரணைகளை 1978 பெப்ரவரி 8ம் திகதி ஆரம்பத்தது. மொத்தம் 298 அமர்வுகளின் பின்னர் 1979 ஒக்டோபர் 12ம் திகதி ஆணைக்குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டது. பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பது சன்சொனி ஆணைக்குழுவோடு நின்றுவிட்டது. சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதுவே கலவரங்கள் என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்புகளுக்கு எதிரான இலங்கையின் உச்சபட்ட நீதிப்பொறிமுறையாக அமைந்தது.
இரண்டாவது, சிறைக்கூடங்களில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள படுகொலைகள் நீதியற்ற பட்டியலின் பெரும்பகுதியை நிரப்புகின்றது. 1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக நீதிமன்றத்தில் இறுதி ஆசையாக தனது கண்ணை தானம் செய்த குட்டிமணியின் கண்களை தோண்டி எடுத்த அவலத்துக்கு இதுவரை உகந்த நீதிப்பொறிமுறை வழங்கப்படவில்லை. கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நின்றிருந்தவர்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் 10 பேர் மரணித்தனர். அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர். 2000ஆம் ஆண்டு அக்டோபர்-25அன்று பிந்துனுவேவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர். 2012ஆம் ஆண்டு ஜூலை-04அன்று வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் பொலிசாராலும், இராணுவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும் 2021இல் முன்னாள் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத் தொனியோடு, இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தார். லொஹான் ரத்வத்தேயும், அவரது சகாக்களும் துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எனினும் லொஹான் ரத்வத்தேக்கு எதிராக எவ்வித நீதிப்பொறிமுறைகளும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே லொஹான் ரத்வத்தே தனது சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சை இராஜினாமா மாத்திரமே செய்திருந்தார். எனினும் தொடர்ச்சியாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவியை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, நில ஆக்கிரமிப்புக்கள் தமிழர்கள் மீதான தொடர்ச்சியான இனஅழிப்பின் படிமங்களாக காணப்படுகின்ற போதிலும், நீதித்துறையால் இலங்கை அரச இயந்திரத்துடன் துணையில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பினை தடுக்க திராணியற்ற நிலையில் காணப்படுகின்றது. அதன் சாட்சியமாகவே குருந்தூர் மலை விவகாரம் காணப்படுகின்றது. 2022, ஜூன்-12அன்று, குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி கபோக் கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்த தேரர்களும், இராணுவத்தினரும், தென்னிலங்கையைச் சார்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கைக்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஜூலை-19அன்று இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், குருந்தூர்மலைக்கும் நேரில் வந்து நிலமை களைப்பார்வையிட்டதுடன், 12.06.2022 அன்று எவ்வாறு அந்த விகாரையின் கட்டுமானப்பணிகள் காணப்பட்டதோ, அவ்வாறே இருக்கவேண்டும். அதற்குமேல் எவ்வித கட்டுமானப்பணிகளும் இனி மேற்கொள்ளக்கூடாதென உத்தரவிட்டிருந்தார். அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு பொலிஸாரிடமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பொலிஸாரின் பாதுகாப்புடனேயே இராணுவத்தினர் குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் மிக வேகமாக முன்னெடுத்து, பௌத்த விகாரை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற கட்டளைக்கு இலங்கை அரச இயந்திரம் உட்படாது என்பதை வெளிப்படுத்தும் சமீபத்திய பதிவாக அமைகின்றது. இவ்வாறே, முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 2019, செப்டம்பர்-23அன்று இடம்பெற்ற நிகழ்வும் நீதிமன்ற கட்டளையை மீறியதாக அமைந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி ஒருவர், பல நூற்றாண்டு வரலாறு கொண்ட முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியை ஆக்கிரிமிக்கும் முயற்சியை மேற்கொண்டார். குறித்த பௌத்த துறவி கொழும்பில் காலமாகிய நிலையில் அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, செப்டம்பர்-22, 2019அன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னரும் 23-செப்டம்பர், 2019அன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதனை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.
இவ்வாறாக இலங்கையின் வரலாறு தோறும் இலங்கையின் நீதிப்பொறிமுறை சிங்கள பேரினவாத அரசியல் செயற்பாட்டுகளுக்கு பின்னால் வலுவிழந்ததொரு பொறிமுறையாகவே நிலைபெற்று உள்ளது. எனினும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் கடந்த பெப்ரவரி 16-18ஆம் திகதி வரை வடக்கு வந்து பல தரப்பினரை சந்தித்து வெளியிட்ட அறிக்கையில், பொறுப்புக்கூறல்-நல்லிணக்கத்துக்கு சர்வதேச பொறிமுறையை வடக்கு மக்கள் கோரினாலும், அவர்கள் ஓர் உள்ளக பொறிமுறைக்கு ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர். இது ஈழத்தமிழர்களின் எண்ணங்களை இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் போர்வையில் மலினப்படுத்துவதாகவே அமைகின்றது.
Comments
Post a Comment