மீனவர் பிரச்சினையை பயன்படுத்தி தமிழக-ஈழத்தமிழ் தொப்புள்கொடி உறவு அறுக்கப்படுகிறதா! -ஐ.வி.மகாசேனன்-
தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினை சமகாலத்தில் பூதகரமான வளர்ச்சியை பெற்று வருகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் கரிசணையற்ற தரப்பினராலேயே இப்பிரச்சினையும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பிணக்கை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான வகையிலேயே நெறிப்படுத்தப்படுவதாக அமைகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலையில் காணப்படுகின்றார்கள். தமிழக-ஈழத்தமிழர் முரண்பாட்டின் அதிகரிப்பு, ஈழத்தமிழர்களின் அரணை சிதைக்கக்கூடிய செயலாக அமைகின்றது. அதேவேளை தமிழக மீனவர்களின் அத்துமீறலால் ஈழத்தமிழ் மீனவ சமுகத்தின் பொருளாதார இருப்பு சிதைக்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமானதாகும். இதனை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தந்திரோபாயமாக கையாள்வதிலேயே ஈழத்தமிழர்களின் அரண் பாதுகாக்கக்கூடியதாக அமையும். இக்கட்டுரை தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினையை முன்னிலைப்படுத்திய சமகால முரண்பாட்டு சூழலை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4-6 வரையான மூன்று தினங்கள் இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு தமிழகத்தில் இராமேஸ்வரத்திற்கு சென்று புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தில், 'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் நிகழ்த்தப்படும் அராஜகங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை' தமிழக அரசியலில் முதன்மையான உரையாடலாக காணப்படுகிறது. குறிப்பாக 1970களில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு நிலப்பரப்பை மீளப்பெறக்கோரி தமிழக சட்ட சபையில் ஏகமானதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வைகோ, 'கடந்த 40 ஆண்டுகளில், 843 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்...' எனக்குறிப்பிட்டிருந்தார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் பி.பி.சி-க்கு கருத்துரைத்த இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆரோக்கியமான தீர்வுகளை பற்றி உரையாடாது, தமிழக மக்களுக்கு எதிரான வன்மங்கள் நிறைந்த கருத்தையே தெரிவித்துள்ளார். 'தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொண்டு இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே எங்களுடைய வாழ்க்கையை நாசமாக்குகின்றார்கள். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல, பிறகு உங்களுடைய உடமையும் இல்லாது போகின்ற நிலைiமையே ஏற்படும்.' எனக்குறிப்பிட்டிருந்தார். மேலும், குறித்த காணொளியில் இலங்கை அமைச்சரின் உடல் மொழியும் பிற தரப்பை கேவலாமாக விளிப்பதாகவே அமைந்திருந்தது. பி.பி.சி தமிழ்ச்சேவை சமுக வலைத்தளத்தில் இச்செய்திக்கு இடப்பட்டுள்ள கருத்துக்களை உள்வாங்குதல் அவசியமாகின்றது. 'உங்களுக்கான தீ குளிச்சு உயிரூட்டும் எத்தனை பேர் தெரியுமா இங்க இவ்வளவு போராட்டம் பண்ணி இருப்போம்'; 'எங்கள் மீனவ மக்களையே மிரட்டுறீங்களா என்ன ...... உங்களுக்காக நாங்க போராடணும். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாராமே உங்களால்தான் சீர்குலைகிறது'; 'டேய் பாடு உன் நாட்டில் ஆபத்து எனில் உதவி மட்டும் வாங்கி தின்காதே. தமிழ் மக்கள் தான் வந்து நிக்கணும். சிங்களன் அடித்தால் இங்கு வந்து நிக்கதே ...... கோடி மக்கள் இங்குண்டு. வாயே மூடு' என்றவாறாக ஈழத்தமிழர்களுடன் பகைமை பாராட்டும் பல கருத்துக்களை தமிழகத்தை சேர்ந்தோர் இட்டுள்ளனர்.
இவ்வாறாக ஈழத்தமிழர்-தமிழக முரண்பாட்டு சூழலையே இலங்கை-இந்தியா அரசாங்கங்களும் வரவேற்பதாக அமைகின்றது. வரலாறுதோறும் ஈழத்தமிழர்களுக்காக பாதுகாப்பு அரணாக தமிழக மக்களும், இந்தியாவின் தமிழகத்துக்கான பாதுகாப்பாக ஈழத்தமிழர்களும் இருந்துள்ளார்கள். இந்தியா பிராந்தியத்தின் பெரிய அரசு என்ற அடிப்படையில், சிறிய தேசிய இனமான ஈழத்தமிழர்களின் அரணை உதாசீனப்படுத்துகின்றது. அதன் விளைவே 2009களுக்கு பின்னர் இலங்கை கடற்கரையில் இந்தியாவின் கோடிப்புரத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவாலும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியாவின் அந்நிய சக்திகளால் இந்து சமுத்திரத்தையும் இலங்கைத்தீவையும் தமது நலன்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியவில்லை. பனிப்போர்க் காலத்தில் சோவியத் நட்பு இந்தியாவிற்கு எதிர் முகாமான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் ஐக்கிய தேசிய கட்சி 1977-1994 காலப்பகுதியில் ஆட்சியை கைப்பற்றிய போது, ஈழத்தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதனூடாக, இந்திய அரசாங்கம் அமெரிக்க நட்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்துக்கு நெருக்கடியை வழங்கியிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே இலங்கை அரசாங்கமும் இந்திய-ஈழத்தமிழர் உறவை சீர்குலைப்பது தொடர்பில் அதிக கரிசணையை வெளிப்படுத்தி வருகின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினூடாக ஜே.ஆர் அரசாங்கம் அதில் வெற்றியும் பெற்றிருந்தது. எனினும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவு இலங்கைக்கு சவாலாகவே அமைந்திருந்தது. அதனை சீர்குலைப்பது தொடர்பில் தொடர்ச்சியாக வியூகங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசிற்கும் தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழ் மக்களிற்கிடையிலான பண்பாட்டு உறவு சில நெருக்கீடுகளை வழங்கி இருந்தது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை அழிவில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக்கழகம், அக்குற்றச்சாட்டினால் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இச்சினங்களின் பின்னணயில் இரு தரப்பு அரச இயந்திரமும், தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழ் மக்களிடையே பிணக்கை உருவாக்குவதில் முனைப்பாக செயற்படுகின்றார்கள்.
மீனவர் பிரச்சினை அதற்கான களத்தை அரசியல் தரப்பிற்கு வழங்கியுள்ளது. தமிழக மற்றும் இலங்கை அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினையை வெறுமனவே அரசியல் நலன்களுக்குள்ளேயே அணுகுகிறார்களேயன்றி, சுமுகமாக தீர்வு பற்றி இரு தரப்புமே ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கும் முன்வருவதில்லை. தமிழக தரப்பில் மீனவர் பிரச்சினை கடல் எல்லை பிரச்சினையாகவே முதன்மைப்படுத்தப்படுகின்றது. தமிழக அரசாங்கமும் அதனையே ஊக்குவிக்கின்றது. கடந்த ஏப்ரல்-02அன்று தமிழக சட்டசபையில் கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானமும் அதனுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது. கச்சதீவு விவகாரம் வெறுமனவே அரசியல் போட்டிக்கான பிரச்சாரமாகவே அமைகின்றது. குறிப்பாக 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல்களுக்கான முன்னாயர்த்தமாகவே அமைகின்றது. 1970களில் கச்சதீவை இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய போது மாநிலத்தில் மத்திய அரசின் கூட்டாக திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியே காணப்பட்டது. இது நீண்ட கால விவாதப் பொருளாக அமைகின்றது. இவ்விவாதத்திற்கு முற்று கொடுக்கும் வகையிலே தி.மு.க அரசாங்கம் தற்போது கச்சதீவை மீளப்பெறும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.
எனினும் கச்சதீவு மீட்பு நிலையான தீர்வை வழங்கப்போவதுமில்லை மற்றும் கச்சதீவு மீட்பும் சாத்தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கு மீனவர் மக்கள் ஒற்றுமையின் தலைவரான முகமது ஆலம் சவுத் பெஸ்ற்க்கு (South First) வழங்கிய நேர்காணலில், 'கச்சத்தீவை மீட்டெடுப்பது அங்கு பறக்கும் கொடியை மட்டுமே மாற்றும். அது இலங்கைக் கொடியை இந்தியக் கொடியுடன் மாற்றும். ஆனால் அதைத் தாண்டி, வேறு எதுவும் மாறாது. இலங்கை மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் மட்டுமே தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்கிறார்கள். எனவே, கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் என்ற கூற்று, தமிழக மக்கள் அங்கீகரிக்க வேண்டிய ஒரு நாடகமே தவிர வேறில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை இந்தியா மீண்டும் கைப்பற்றினாலும், அதன் பிராந்திய மீன்பிடிப் பகுதிக்கு ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும் என்று அவர் மேலும் விளக்கினார்.
பாக். விரிகுடா கடல் மீன்பிடித் தொழிலாளர் வரலாற்றை ஆய்வு செய்து கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்துடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர் பிரபாகர் தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினைக்கான அடித்தளத்தை இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் குறைகளுடனேயே விளக்கியியுள்ளார். குறிப்பாக தமிழக அரசியலில் முதன்மைபெறும் கச்சத்தீவு பிரச்சினை இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை மட்டுமே பாதித்தது என பிரபாகர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 'வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மீனவர்கள் அந்த சவால்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக, பெரிய இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது பாரம்பரிய மீன்பிடி முறைகளை நம்பியுள்ள இலங்கை மீனவர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது' என்று அவர் விளக்கியுள்ளார். இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவர் ஜஸ்டினும் இழுவை படகு பயன்பாட்டை குற்றம்சாட்டியுள்ளார். 'இந்திய மற்றும் இலங்கை மீனவ சமூகங்களுக்கு இடையிலான மோதலுக்கு காரைக்கால் மீனவர்கள்தான் முதன்மையான காரணம்' என ஜஸ்டின் தெரிவித்துள்ளார். 'காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி இழுவைப் படகுகளைப் பயன்படுத்துகிறார்கள், இலங்கைக் கடல் பகுதியில் ஏழு நாட்கள் வரை தங்குகிறார்கள். இது இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்துவதோடு அவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த மீனவர்கள் இந்த ஊடுருவல்களால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து பரவலாக நாகப்பட்டின ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகவே அமைகின்றது.
இப்பத்தி எழுத்தாளர் காங்கேசன்துறை-நாகப்பட்டினம் அங்குரார்ப்பண கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுகையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயணத்தின் நடுவே கடலில் தூரத்தே இழுவைப்படகு பயன்பாட்டை சுட்டிக்காட்டி, தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினைக்கான அடிப்படை என விழித்திருந்தார். மேலும் தமது மீன்பிடி சமுகத்தின் முதலாளிகளின் பேராசையே மீனவ சமுகங்களிற்கிடையிலாக முரண்பாட்டுக்கான காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், மீனவ சமுகங்களிற்கிடையிலான முரண்பாட்டின் ஆதாரமாக மீன் வளத்தை அழிக்கக்கூடிய இழுவைப்படகு பயன்பாட்டை சுட்டிக்காட்டி கட்டுரைகளை செய்திகளை வரைகையில், அது ஊடகங்களில் தவிர்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இது நிதர்சனமானதாகும். பி.பி.சி செய்தியும் இலங்கை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடைய தமிழக மக்களுக்கு எதிரான கருத்திற்க அழிக்கும் முக்கியத்துவம், பிரச்சினைக்கான அடிப்படையை இனங்காட்டுவதற்கு வழங்கப்படுவதில்லை. பி.பி.சி-யின் சமுக வலைத்தள செய்திக்கான கருத்துக்களிலேயே பல ஈழத்தமிழர்கள் இலங்கை அமைச்சரின் கருத்தை நிராகரித்து, ஈழத்தமிழருக்கு தமிழகத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் அது போதிய கவனத்தையும் பெறவில்லை. ஊடகமும் மக்களின் எண்ணங்களை செய்தியாக்க தயாராகவில்லை.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இப்பத்தி எழுத்தாளர் சென்னையில் வாடகை வண்டியில் பயணம் செய்கையில், சாரதியுடனான அறிமுகத்தின் போது மீனவ பிரச்சினை உரையாடலுக்கு வந்தது. ஆரம்பத்தில் சென்னையை சேர்ந்த சாரதி, ஈழத்தமிழர்கள் அன்பற்றவர்கள் என்ற சாரப்பட சினப்பட்டிருந்தார். குறிப்பாக 'மீன் வளம் இயற்கையானது தானே', 'கடலுக்குள் எல்லைசார் கோடு இல்லை தானே' மற்றும் 'இருவரும் தமிழர்கள் தானே' என்றவாறு ஈழத்தமிழர்கள் தமிழகத்தை எதிரியாக்குகிறார்கள் என சினந்து கொண்டார். எனினும் இப்பத்தி எழுத்தாளர் தொடர்ச்சியான உரையாடலில் ஆழமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தார். 'இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார பலமும், ஈழத்தமிழர்களின் சிறிய பொருளதாரமும்', 'இழுவைப்படகு பிரச்சினை', 'அரசியல் முதலாளிகளின் பேராசை வணிகச் செயற்பாடு' மற்றும் 'அரசியல் தலையீட்டால் சமுகங்களிடையே ஏற்படுத்தும் பிளவுகள்' என்றவாறு மீனவர் பிரச்சினை ஆழமாக விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாரதி மீனவ சமுகங்களின் பிரச்சினையின் ஆழமான பகுதியையும் ஈழத்தமிழர்களின் நியாயத்தையும் தமது மீன் வளமும் அழியும் அபாயத்தையும் புரிந்து கொண்டார். தொடர்ச்சியான உரையாடலில் தமது அரசியல் முதலாளிகளின் பேராசையால் கூலிக்கு வேலை செய்யும் மீனவர்கள் சிறை செல்வதையும் மரணிப்பதையும் வேதனையுடனும் தமது அரசியல்வாதிகள் மீதான சீற்றத்துடனும் உரையாடி இருந்தார்.
இவ்வாறான உரையாடல் களம் இரு மீனவ சமுகங்களிடம் மாத்திரமின்றி, தமிழக-ஈழத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். இரு மக்களுமே ஏதொவொரு வகையில் தமக்காக அரசற்ற அநாதைகளாகவே வாழ்கின்றார்கள். அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் தமது சுய நலன்களுக்குள் சிந்தித்து செயற்படுகின்றார்களேயன்றி, மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதாக அமையவில்லை. ஈழத்தமிழர் மீனவர் சமுகம், கச்சத்தீவைச் சுற்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் எவ்வித பிரச்சினையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் தமிழக மீனவர்கள் கரையிலிருந்து சிறிது தூரத்தில் ஆயிரக்கணக்கான படகுகளை இயக்குகிறார்கள். அவர்கள் தங்கள் மீன்பிடி நடைமுறைகளை சீர்திருத்த இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் இழுவைப்படகு பிரச்சினையை ஒப்புக்கொண்டு, அம்முறைமையிலிருந்து மாறுவதற்கு அவகாசம் கோரினர். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மீனவர்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளனர். எனினும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மீனவ பிரச்சினை இரு சமுகங்களிடையேயும் முதலாளிகளுடனுமான பேச்சுவார்த்தைகளூடாகவே சுமுகமான தீர்வை பெற முடியும். நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர மீன்பிடி மண்டலங்கள், நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
எனவே, தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினையை, தமிழக-ஈழத்தமிழர் பிரச்சினையாக மடைமாற்றுவதில் புதிய அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களையும் தாண்டி முனைப்புடன் செயற்படுவதனையே சமகால செய்திகள் உணர்த்தி நிற்கின்றது. மீனவ சமுகங்களிற்கிடையிலான பிரச்சினையை தீர்ப்தற்கு பதிலாக பிணக்குகளை அதிகரிக்கும் வகையிலேயே அரச இயந்திரங்களின் செயற்பாடுகள் அமையப் பெறுகின்றது. இது ஈழத்தமிழர்களின் அரணை சிதைக்கும் செயலாகவே அமைகின்றது. இதில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களும் மௌனித்திருப்பது வரலாற்று தவறாகும். ஈழத்தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் வெறுமனவே தேர்தல் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பதனால், கத்தி மீது நடக்கும் பலப்பரீட்சைகளில் இறங்க தயாரின்றி பார்வையாளர்களாக கடந்து செல்ல முற்படுகின்றார்கள். இது தவறான அணுகுமுறையாகும். ஈழத்தமிழ் மீனவ சமுகத்திடம் நியாயமான கோரிக்கை காணப்படுகின்றது. இந்நியாயப்பாட்டிற்கான ஆதரவு தமிழகத்திலும் காணப்படுகின்றது. இதனை ஒருங்கிணைப்பதனூடாக சுமுகமாக பேச்சுவார்த்தைகள் மூலமாக இரு சமுக முரண்பாட்டிற்கு தீர்வினைப் பெறலாம். இது வெறும் எல்லைப் பிரச்சினை. மீன்பிடி உரிமைப் பிரச்சினை. என்பதற்கு அப்பால் இரு சமுகங்களின் பண்பாட்டு உறவுக்குள் எழுந்துள்ள பிரச்சினை. பண்பாட்டை சீர்குலைக்க எண்ணுவோரிடம் இதற்குரிய தீர்வினை எதிர்பார்ப்பதும் மடமைத்தனமாகும். தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர்கள் இருவருக்கும் நீண்டகால நன்மைகளை வழங்கும் தீவிர பேச்சுவார்த்தைகளை வினைத்திறனுடனுன் தொடங்குவதே தமிழக-ஈழத்தமிழ் உறவை பாதுகாப்பதற்கு அவசியமானதாகும்.
Comments
Post a Comment